முதுகுவலியைப் புறக்கணிப்பது ஆபத்தானது

by admin-blog-kh | November 6, 2026 12:23 pm

முதுகுவலி என்பது இளவயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது, தவறான உடல்தோரணை, அதிக உடல் எடை[1], பளுவான பொருட்களை தவறான முறையில் தூக்குவது அல்லது தசைப்பிடிப்பு போன்ற காரணங்களால் முதுகுவலி ஏற்படலாம்.

பெரும்பாலான நேரங்களில், சிறிது நேரம் ஓய்வெடுத்து உரிய பராமரிப்பு கொடுத்தாலே இந்த வலி குறைந்துவிடும். அப்படிக் குறையவில்லை என்றால் அது வேறு ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். வலி தானாகவே குறைந்துவிடும் என்று நினைத்து அதைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தால், அதற்கான அடிப்படைக் காரணமான நோயைக் கண்டறிவது மற்றும் அதற்குரிய சரியான சிகிச்சையைப் பெறுவது ஆகியவை இதனால் தாமதமாகும்

முதுகுவலிக்கான முக்கிய காரணங்கள்

முதுகெலும்பு, அதைச் சுற்றியுள்ள தசைகள், தசைநார்கள், நரம்புகள் மற்றும் இடையிலுள்ள வட்டுத் திசுக்கள் ஆகியவை முதுகின் இயல்பான இயக்கத்திற்கும் உடலின் எடையைத் தாங்குவதற்கும் உதவுகின்றன. இவற்றில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் முதுகுவலி ஏற்படலாம்.

1. தவறான உடல்தோரணை:

நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, முதுகுத்தண்டுக்கு போதிய ஆதரவு இல்லாமல் உட்காருவது, கைப்பேசியைப் பயன்படுத்தும்போது தலையைக் குனிந்தபடியே இருப்பது போன்ற சில பழக்கங்களால் முதுகின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படும். தொடர்ந்து தவறான உடல்தோரணை இருந்தால் தசைகளில் வலி மற்றும் இறுக்கம் உருவாகலாம்.

2. தசைப்பிடிப்பு மற்றும் தசைநார் பாதிப்பு:

திடீரென அதிக எடையைத் தூக்குவது, தவறான முறையில் உடலைத் திருப்புவது அல்லது உடல் தயார்நிலையின்றி கடினமான வேலைகளில் ஈடுபடுவது போன்றவற்றினால் முதுகுத் தசைகளில் பாதிப்பு ஏற்படலாம். இதன் விளைவாக குனிவது, நிமிர்வது, நடப்பது போன்ற அன்றாடச் செயல்பாடுகளின்போது வலி ஏற்படலாம்.

3. முதுகெலும்பு வட்டுத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்கள்:

முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள வட்டுத் திசுக்கள் உடல் அதிர்வுகளைத் தாங்க உதவுகின்றன. நமக்கு வயதாக ஆக இவற்றில் தேய்மானம் ஏற்படலாம். சிலருக்கு வட்டுத் திசு வெளியே பிதுங்கி நரம்பை அழுத்துவதால் முதுகுவலி ஏற்பட்டு அது கால்களுக்கும் பரவலாம், பாதங்கள் மரத்துப்போகலாம் அல்லது கூச்ச உணர்வு ஏற்படலாம்.

4. வயது தொடர்பான எலும்பு மற்றும் மூட்டு மாற்றங்கள்:

நமக்கு வயது அதிகரிக்கும்போது முதுகெலும்பு மூட்டுகளில் தேய்மானம் ஏற்படலாம். எலும்புகளின் வலிமை குறையலாம், குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்திக் குறைபாடு ஏற்படலாம், இதன் விளைவாக முதுகெலும்பில் முறிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. ஒரு சின்ன காயம் ஏற்பட்டால் கூட முதுகுவலி தோன்றினால் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

முதுகுவலியைப் புறக்கணிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

முதுகுவலி ஏற்பட்டாலே ஆபத்து தான் என்பதல்ல, ஆனால் அது தொடர்ந்து நீடித்தாலோ அல்லது தீவிரமடைந்தாலோ அதை அலட்சியம் செய்யாமல், தாமதிக்காமல், அதற்கான மூல காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.

1. நீண்டகால முதுகுவலி:

முறையான பராமரிப்பு இல்லாமை, தொடர்ந்து முதுகில் ஏற்படும் அழுத்தம் அல்லது அடிப்படைக் காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்பது போன்ற காரணங்களால் சிலருக்கு முதுகுவலி நீண்ட காலமாக நீடிக்கலாம். இது தூக்கம், வேலைத்திறன் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும்.

2. நரம்பு அழுத்தம்:

முதுகெலும்பில் உள்ள நரம்புகள் அழுத்தப்படும்போது, வலி இடுப்பிலிருந்து கால்களுக்குப் பரவலாம். இதனால் கால்களில் கூச்ச உணர்வு, மரத்துப்போதல் அல்லது தசை பலவீனம் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தாலோ அல்லது தீவிரமடைந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நரம்பு பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், அதற்குரிய சிகிச்சையைத் திட்டமிட்டு நன்கு குணமடைய உதவும்.

3. செயல்பாடுகளில் சிரமம்:

வலியின் காரணமாக ஒருவர் நடப்பதையும் உடற்பயிற்சி செய்வதையும் நீண்ட காலமாக தவிர்த்தால், உடல் இயக்கம் குறைவதன் விளைவாக தசைகளின் வலிமை குறையலாம் மற்றும் உடல் இயக்கத்திறன் பாதிக்கப்படலாம். அதனால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, உடல் செயல்பாடுகளை படிப்படியாக மீண்டும் தொடங்குவது நன்மை அளிக்கும்.

4. அடிப்படை நோயைக் கண்டறிவதில் தாமதம்:

சில சமயம் முதுகுவலியானது முதுகெலும்புத் தொற்று, எலும்பு முறிவு அல்லது புற்றுநோய் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம். முதுகுவலியுடன் காய்ச்சல், காரணமின்றி உடல் எடை குறைதல், இரவில் அதிகரிக்கும் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

முதுகுவலியுடன் பிற அறிகுறிகளும் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

முதுகுவலியுடன் கூட பின்வரும் அறிகுறிகளும் தோன்றினால், அதை அலட்சியம் செய்யாதீர்கள், அதற்கு அவசர மருத்துவக் கவனிப்பு தேவை:

முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்புகள் கடுமையாக அழுத்தப்படுவதன் காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்படலாம், அதனால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்[2].

Also Read: நடைப்பயிற்சி ஒரு வரப்பிரசாதம்![3]

முதுகுவலிக்காக எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

முதுகுவலி ஆரம்பித்த பிறகு சில நாட்களாகியும் வலி குறையாமல் தொடர்ந்து இருக்கிறது என்றாலோ, வலி மீண்டும் மீண்டும் ஏற்பட்டாலோ, அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்குத் தொந்தரவாக இருந்தாலோ, மருத்துவரை அணுகுவது நல்லது.

கால்களுக்குப் பரவும் வலி, மரத்துப்போகுதல், இரவில் தூக்கத்தைக் கெடுக்கும் அளவிலான வலி அல்லது காரணமின்றி எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

வலி எப்போது தொடங்கியது, எந்தச் செயலின்போது அதிகரிக்கிறது, வேறு அறிகுறிகள் ஏதும் உள்ளனவா என்பது போன்றவற்றை மருத்துவர் கேட்டறிவார். உடல் பரிசோதனையின் அடிப்படையில், தேவைப்பட்டால் எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. அல்லது பிற பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.

முதுகுவலியைத் தடுக்கவும் குறைக்கவும் உதவும் வழிகள்

முதுகுவலிக்கான காரணத்தைப் பொறுத்து அதன் சிகிச்சை மாறுபடும். முதுகுவலியைச் சமாளிக்கவும், அது மீண்டும் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் சில எளிய பழக்கங்கள் இதோ:

முதுகுவலியை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்! முதுகுவலிக்கான காரணம் சாதாரண தசைப்பிடிப்பாக இருக்கலாம் அல்லது அது தீவிரமான உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். வலியின் தீவிரம், அது எத்தனை காலம் நீடிக்கிறது மற்றும் அதனுடன் கூட ஏற்படும் பிற அறிகுறிகள் ஆகியவற்றை கவனிப்பது முக்கியம். குறிப்பாக, கால்களில் பலவீனம், சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவடை நாட வேண்டும்.

சரியான உடல்தோரணை மற்றும் செயல்பாட்டு பழக்கவழக்கங்கள் மற்றும் பொருத்தமான உடற்பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் முதுகை வலுவாக வைத்திருந்து, வலி குறைந்த சுகமான வாழ்க்கை வாழ முயற்சி செய்யலாம்.

Endnotes:
  1. அதிக உடல் எடை: https://www.nmcpondy.com/articles/family-general-medicine/the-link-between-diabetes-and-obesity/
  2. முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்புகள் கடுமையாக அழுத்தப்படுவதன் காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்படலாம், அதனால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்: https://www.nmcpondy.com/articles/orthopaedics-spine/understanding-lower-back-pain/
  3. நடைப்பயிற்சி ஒரு வரப்பிரசாதம்!: https://www.nmcpondy.com/articles/tamil-articles/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/

Source URL: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/ignoring-back-pain-is-dangerous/