by admin-blog-kh | October 10, 2026 6:17 am
முதுகுவலியைச் சகித்துக்கொண்டு காத்திருப்பதா, உடனே மருத்துவரைப் பார்ப்பதா? முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை என்றால் சக்கர நாற்காலிதானா?
முதுகுவலி என்பது வயதானவர்களின் பிரச்னை என்கிற காலம் மாறிவிட்டது[1]. இன்று இருபது, முப்பது வயது இளைஞர்களும் கழுத்துவலி, இடுப்புவலியுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஒருபுறம் ‘தானாகச் சரியாகிவிடும்’ என்கிற அலட்சியம், மறுபுறம் ‘ஆபரேஷன் என்றால் படுத்த படுக்கைதான்’ என்கிற பயம்… இந்த இரண்டுக்கும் நடுவே சரியான தகவல்தான் நம் முதுகைக் காக்கும்.
காலையில் எழுந்ததும் இடுப்பில் ஒரு பிடிப்பு, மாலையில் அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது கழுத்தில் ஓர் இறுக்கம்… ‘ஒருநாள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்’ என்று நம்மில் பலர் முதுகுவலியைக் கடந்துபோய்விடுகிறோம். ஆனால், உலக அளவில் அதிகம் பேரை இயலாமைக்கு (Disability) ஆளாக்கும் முதன்மைக் காரணமாக இருப்பது இடுப்புப் பகுதி முதுகுவலி (Low Back Pain[2]) என்கின்றன ஆய்வுகள். எந்த வலி சாதாரணமானது, எந்த வலி எச்சரிக்கை, இளைஞர்களின் முதுகுக்கு என்ன ஆகிறது? தொடர்ந்து அறிவோம்.
பெரும்பாலான முதுகுவலிகள் ஆபத்தானவை அல்ல. ஓய்வும் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய கவனிப்புமே போதும். ஆனால், சில அறிகுறிகள் உடல் நமக்கு அனுப்பும் அவசர எச்சரிக்கை மணி. இவற்றை மருத்துவ மொழியில் ‘ரெட் ஃப்ளாக்’ (Red Flag) அறிகுறிகள் என்கிறோம். முதுகுவலி அல்லது கழுத்துவலியுடன் காய்ச்சல், காரணம் தெரியாத எடை இழப்பு, பசியின்மை ஆகியவை சேர்ந்து வந்தால் அலட்சியம் வேண்டாம். ஓய்வில் இருக்கும்போதும் வலி அதிகரிப்பது, இரவில் தூக்கத்திலிருந்து எழுப்பும் அளவுக்கு வலிப்பது ஆகியவையும் கவனிக்க வேண்டியவை.
கால்களில் மரத்துப்போதல், கூச்ச உணர்வு, பலவீனம் தோன்றினால், அது நரம்பு அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் கழிப்பதிலோ மலம் கழிப்பதிலோ கட்டுப்பாடு குறைந்தால், அது மிக அவசரமான நிலை. தனக்கோ குடும்பத்தில் யாருக்கோ புற்றுநோய் வரலாறு உள்ளவர்களுக்கு முதுகுவலி அல்லது கழுத்துவலி வந்தாலும் உடனே நிபுணரைச் சந்திக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், ‘ஓய்வெடுத்தால் சரியாகும்’ என்று காத்திருக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
குழந்தைகள் எவ்வளவு கோணலாக உட்கார்ந்தாலும் அவர்களுக்கு முதுகுவலி வருவதில்லை. காரணம், 18 முதல் 20 வயது வரை நம் எலும்புக்கூடு வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில் இருப்பதால், எலும்புகளும் மூட்டுக்களும் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கின்றன. தவறான நிலையில் அமர்வதையும் திடீர் அதிர்வுகளையும் அவை தாங்கிக்கொள்கின்றன. ஆனால், இருபதுகளின் தொடக்கத்தில் எலும்புக்கூடு முழு முதிர்ச்சி (Skeletal Maturity) அடைகிறது. அதன் பிறகு முதுகுத்தண்டு இறுக்கமாகிறது… இயற்கையான தேய்மான மாற்றங்களும் (Degenerative Changes) தொடங்குகின்றன.
பதின்பருவத்தில் எதையும் பொறுத்துக்கொண்ட முதுகுத்தண்டு, இருபதுகளில் அலட்சியத்தைப் பொறுத்துக்கொள்வதில்லை. காலை முதல் இரவு வரை கணினி முன் அமர்ந்திருப்பவர்களும், மணிக்கணக்கில் செல்போனைக் குனிந்து பார்ப்பவர்களும் இளம் வயதிலேயே கழுத்துவலி, முதுகுவலியுடன் வருவதற்கு இதுதான் காரணம். இளம் அலுவலகப் பணியாளர்களுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான்… ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒருமுறை நாற்காலியை விட்டு எழுந்து நில்லுங்கள். ஒரே நிலையில் முதுகுத்தண்டு மீது தொடர்ந்து விழும் அழுத்தத்தை இந்தச் சிறிய பழக்கம் உடைத்து, பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை[3] செய்தால் கை கால் செயலிழந்துவிடும், வாழ்நாள் முழுவதும் அடுத்தவரைச் சார்ந்திருக்க நேரிடும் என்ற பயம் பல குடும்பங்களில் இருக்கிறது. இன்றைய தொழில்நுட்பத்தில் இந்தப் பயத்துக்குப் பெரிய அடிப்படை இல்லை. காரில் பயன்படுத்தும் ஜிபிஎஸ் (GPS) போல, அறுவை சிகிச்சையின்போதே எடுக்கப்படும் சிடி ஸ்கேன் (Intraoperative CT) மூலம் நோயாளியின் முதுகுத்தண்டை முப்பரிமாண வரைபடமாகப் பார்க்க முடிகிறது. இதனை நேவிகேஷன் (Navigation) தொழில்நுட்பம் என்கிறோம். எலும்பைப் பொறுத்து ஒவ்வொரு கருவியும் எங்கே இருக்கிறது என்பது அறுவை மருத்துவருக்கு அந்தக் கணமே துல்லியமாகத் தெரியும்.
இதோடு, அறுவை சிகிச்சை முழுவதும் தண்டுவடமும் நரம்புகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கும் நரம்புக் கண்காணிப்பு (Intraoperative Neuromonitoring) வசதியும் இருக்கிறது. நவீன கார்களில் உள்ள ADAS (Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு அமைப்பு ஆபத்து நெருங்கும்போது ஓட்டுநரை எச்சரிப்பது போல, கருவி நரம்புக்கு மிக அருகில் சென்றால் இந்த அமைப்பு உடனே எச்சரிக்கும். உயர்தர நுண்ணோக்கிகள் (Microscope), சுற்றியுள்ள திசுக்களைத் தொந்தரவு செய்யாமல் நுட்பமான வேலைகளைச் செய்ய உதவுகின்றன. இவற்றால், கடுமையான நரம்புப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இன்று மிகவும் குறைந்துவிட்டது.
எண்டோஸ்கோபிக் (Endoscopic) அறுவை சிகிச்சை, குறைந்த ஊடுருவல் அறுவை சிகிச்சை (Minimally Invasive Spine Surgery[4]) போன்ற நவீன முறைகளால் குணமடையும் காலமும் வெகுவாகக் குறைந்துள்ளது. அலுவலகப் பணியில் இருப்பவர்கள் பொதுவாக மூன்றாவது வாரத்திலேயே வேலைக்குத் திரும்பலாம். அதிக எடை தூக்கும் உடல் உழைப்பு வேலை செய்பவர்களும் ஒரு மாதத்துக்குள் பணிக்குத் திரும்பிவிட முடியும்.
Also Read: Yoga for Spine Health[5]
முதுகுத்தண்டு மருத்துவரைப் பார்க்கப் போனால் நேராக அறுவை சிகிச்சை அரங்கத்துக்குத்தான் அனுப்புவார்கள் என்று நினைப்பது தவறு. முதுகுவலியுடன் வருபவர்களில் சுமார் 5 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தீவிரமான பிரச்னை இருக்கும்… அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் 5 சதவிகிதத்துக்கும் குறைவுதான். அந்தச் சிலரைச் சரியாக அடையாளம் காண்பதுதான் நல்ல முதுகுத்தண்டு அறுவை மருத்துவரின் திறமை. பெரும்பாலானவர்களுக்கு முதலில் சிறப்புப் பயிற்சிகள், நரம்புத் தடுப்பு ஊசி (Nerve Block), ரேடியோ அலை சிகிச்சை (Radiofrequency Ablation) போன்றவற்றையே முயல்கிறோம்.
அறுவை சிகிச்சை தேவைப்படும் சூழலை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது, வாழ்க்கைத் தரத்துக்கான அறுவை சிகிச்சை. மற்ற சிகிச்சைகள் பலன் தராமல், தொடர் வலியால் கடைக்குச் செல்வது, பயணம் செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற அன்றாட மகிழ்ச்சிகளை இழப்பவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம். இரண்டாவது, தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை. கை கால்களின் இயக்கமோ உணர்வோ குறையத் தொடங்கும்போது, செயலிழப்பைத் தடுக்கவும் உடலின் அடிப்படைச் செயல்பாடுகளைக் காக்கவும் இது அவசியமாகிறது.
முதுகுத்தண்டு பக்கவாட்டில் வளைவதை ஸ்கோலியோசிஸ் (Scoliosis) என்கிறோம்[6]. சிறு குழந்தைகளுக்கு இது இருந்தால், வழக்கமான பரிசோதனையின்போது குழந்தை நல மருத்துவரோ, குளிப்பாட்டும்போது பெற்றோரோ கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், 10-11 வயதில் தோன்றும் வளைவு பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. அந்த வயதில் பிள்ளைகள் தாங்களே குளிக்கவும் உடை மாற்றவும் தொடங்குவதால், பெற்றோர் பார்க்கும் வாய்ப்பு குறைகிறது. 13-14 வயதில் தோள்பட்டைகள் சம உயரத்தில் இல்லாததையோ, முதுகில் ஒரு பக்கம் புடைத்திருப்பதையோ பார்த்த பிறகுதான் பலர் மருத்துவரிடம் வருகிறார்கள்.
வீட்டிலேயே ஓர் எளிய சோதனை செய்யலாம். இதனை முன்புறம் குனியும் சோதனை (Adam’s Forward Bend Test) என்கிறோம். பிள்ளையை முழங்கால்களை மடக்காமல் முன்னால் குனிந்து கால்விரல்களைத் தொடச் சொல்லுங்கள். பின்னாலிருந்து பார்க்கும்போது முதுகு இரண்டு பக்கமும் சமதளமாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் உயர்ந்தோ புடைத்தோ தெரிந்தால், தாமதிக்காமல் நிபுணரை அணுகுங்கள்.
வளைவு 30 முதல் 40 டிகிரிக்குள் இருக்கும்போது, உடலோடு பொருந்தும் தாங்கு கவசம் (Brace) அணிவதன் மூலமே வளைவு அதிகரிக்காமல் தடுக்க முடியும். 40 முதல் 60 டிகிரி வரை வளைந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும். இந்த நிலையில் செய்யும் அறுவை சிகிச்சை எளிமையானது… விரைவாகக் குணமாகலாம்… முதுகுத்தண்டை நன்றாக நேராக்கவும் முடியும். ஆனால், வளைவு 90 டிகிரியைத் தாண்டும் வரை விட்டுவிட்டால், நுரையீரலும் இதயமும் பாதிக்கப்படும். அப்போது செய்யும் அறுவை சிகிச்சையில் அபாயமும் அதிகம், ரத்த இழப்பும் அதிகம், குணமடையும் காலமும் நீளும்.
வயதும் வேலையும் எதுவானாலும், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு முதுகுத்தண்டைப் பாதுகாக்க மூன்று பழக்கங்கள் அடிப்படை. முதலாவது, உடற்பயிற்சி. குறிப்பாக, வயிற்றுப் பகுதியின் மையத் தசைகளையும் (Core Muscles) முதுகுத் தசைகளையும் வலுப்படுத்தும் பயிற்சிகள் அவசியம். கட்டடத்தைச் சாரம் தாங்குவது போல, இந்தத் தசைகள்தான் முதுகுத்தண்டைத் தாங்கி நிற்கின்றன.
இரண்டாவது, சத்தான உணவு. புரதம், கால்சியம், வைட்டமின் டி[7] நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்… துரித உணவுகளை (Junk Food) குறைத்துக்கொள்ளுங்கள். மூன்றாவது, போதுமான தூக்கம். முதுகுத்தண்டு உள்பட உடலின் திசுக்கள் பழுதுபார்க்கப்படுவது இரவுத் தூக்கத்தில்தான். தினமும் 6 முதல் 8 மணி நேரம் இடையூறு இல்லாமல் தூங்கினால்தான், அடுத்த நாளின் அழுத்தங்களைத் தாங்கும் வலிமை உடலுக்குக் கிடைக்கும்.
முதுகுத்தண்டு நம்மைத் தாங்குகிறது… அதைத் தாங்குவது நம் அன்றாடப் பழக்கங்கள்தாம். எப்படி உட்காருகிறோம், என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு தூங்குகிறோம் என்பதில் இன்று செய்யும் சின்ன மாற்றம், நாளைய முதுகுவலியைத் தடுக்கும்!
நம் முதுகுத்தண்டில் தனித்தனியான 24 முள்ளெலும்புகளும் (Vertebrae), 60க்கும் மேற்பட்ட மூட்டுக்களும் உள்ளன.
காவேரி மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எண்டோஸ்கோபிக் முதுகுத்தண்டு இணைப்பு அறுவை சிகிச்சையில் (Endoscopic Spinal Fusion), சுமார் 8 மி.மீ. அளவிலான சிறிய துளை வழியாகக் கேமராவும் கருவிகளும் செலுத்தப்படுகின்றன. தகுதியான நோயாளிகளுக்கு – குறைந்த ரத்த இழப்பு, விரைவாக நடக்கத் தொடங்குதல், குறுகிய மருத்துவமனை வாசம் ஆகியவற்றை அளிப்பதே இதன் நோக்கம்.
Dr. பி. கீர்த்திவாசன் MBBS, MS(Ortho),[8]
DNB (Ortho), Post doctoral fellowship in Spine Surgery Consultant – Orthopaedic Spine Surgeon
காவேரி மருத்துவமனை – சென்னை ஆழ்வார்பேட்டை[9]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/uncategorized/after-the-age-of-twenty-the-spine-shows-no-mercy/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.