by admin-blog-kh | October 16, 2026 7:04 am
அறுவை சிகிச்சை முடிந்து நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரத்தில், ‘அடுத்து ரேடியேஷன்’ என்று மருத்துவர் சொன்னதும் பல பெண்கள் மீண்டும் பயத்தில் உறைந்துவிடுகிறார்கள். தோல் கருகுமா, உடல் கெடுமா, வீட்டில் குழந்தைகளைத் தொடலாமா? கதிர்வீச்சு சிகிச்சை பற்றிய அச்சங்களுக்கும், மேமோகிராம்[1] ரிப்போர்ட்டில் வரும் ‘அடர்த்தியான மார்பகம்’ என்ற வார்த்தைக்கும் விளக்கம் இங்கே…
கதிர்வீச்சு சிகிச்சை வலியில்லாதது… சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் உடலில் கதிர்வீச்சு தங்குவதில்லை, அதனால் குடும்பத்தினருக்கு எந்த ஆபத்தும் இல்லை. மார்பகத்தைக் காக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அளிக்கப்படும் கதிர்வீச்சு, நோய் மீண்டும் வரும் அபாயத்தை ஏறக்குறைய பாதியாகக் குறைக்கிறது. ஆனால், பாதியில் நிறுத்தினால் பலன் கிடைக்காமல் போவதோடு ஆபத்தும் கூடலாம்.
‘ஆபரேஷன் முடிஞ்சிடுச்சு, இனி எல்லாம் சரியாகிடும்’ என்று நினைத்திருந்தவருக்கு, ‘இன்னும் மூன்று வாரம் ரேடியேஷன் எடுக்கணும்’ என்கிற செய்தி இன்னோர் அதிர்ச்சி. கருகிய தோல், ஓயாத வாந்தி, ‘கதிர்வீச்சு ஒட்டிக்கொள்ளும்’ என்கிற பயம்… இவையெல்லாம் பெரும்பாலும் பழைய கதைகள் அல்லது தவறான நம்பிக்கைகளே.
மார்பகத்தைக் காக்கும் அறுவை சிகிச்சையாக இருந்தாலும், முழு மார்பகத்தையும் அகற்றும் அறுவை சிகிச்சையாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியும் கட்டியைத்தான் அறுவை சிகிச்சை அகற்றுகிறது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய புற்றுநோய் செல்கள் (Microscopic Disease) சுற்றியுள்ள திசுக்களில் மிச்சமிருக்கலாம். அவை பின்னாளில் அதே இடத்திலோ மார்பகத்தின் மற்ற பகுதிகளிலோ மீண்டும் புற்றுநோயை உருவாக்கக்கூடும். அந்த நுண்ணிய செல்களை அழிப்பதுதான் கதிர்வீச்சு சிகிச்சையின் (Radiation Therapy[2]) வேலை. இது வலியில்லாத, உடலைத் துளைக்காத ஒரு சிகிச்சை. பல பத்தாண்டுகளாகப் பரிசோதிக்கப்பட்டு, நோய் மீண்டும் வரும் அபாயத்தைக் கணிசமாகக் குறைப்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை இது.
முதலில் ஒரு பயத்தைப் போக்க வேண்டும். வெளியிலிருந்து இயந்திரம் மூலம் கதிர்வீச்சு அளிக்கப்படும் இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி கதிரியக்கம் உள்ளவராக (Radioactive) மாறுவதில்லை. அவரிடமிருந்து குழந்தைகளுக்கோ குடும்பத்தினருக்கோ மற்றவர்களுக்கோ கதிர்வீச்சு பரவும் ஆபத்து எதுவும் இல்லை. சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்று குழந்தையைத் தாராளமாக அணைத்துக்கொள்ளலாம்.
மார்பகப் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை பொதுவாக மூன்று வாரங்களில் சுமார் 15 நாட்கள் அளிக்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒருமுறை… சனி, ஞாயிறு ஓய்வு. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. வந்து சிகிச்சை பெற்றுவிட்டு அன்றே வீட்டுக்குத் திரும்பலாம். ஒவ்வொரு அமர்வும் 15 முதல் 35 நிமிடங்கள் வரை ஆகும்.
சிகிச்சை மேசையில் நோயாளி அசையாமல் படுத்திருக்க, இயந்திரம் குறிப்பிட்ட பகுதிக்கு உயர் ஆற்றல் கதிர்களைச் செலுத்தும். எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் எடுப்பது போலத்தான் இது… எந்த வலியும் தெரியாது. துல்லியத்துக்காக, உடல் அசையாமல் இருக்க உதவும் சிறப்புக் கருவிகள் பயன்படுத்தப்படும். வயிற்றுப் பகுதிக்குக் கொடுக்கப்படும் கதிர்வீச்சு போல, மார்பகச் சிகிச்சை செரிமான மண்டலத்தைப் பாதிப்பதில்லை. சிலருக்குக் களைப்பு தோன்றலாம். சிகிச்சையின்போது தோல் சற்றுக் கருமையாகலாம் அல்லது லேசாக உரியலாம். நவீன சிகிச்சை முறைகளில் கடுமையான தீக்காயம் மிக அரிது. தோலின் நிறமும் சிகிச்சை முடிந்த சில மாதங்களில் இயல்புக்குத் திரும்பிவிடும்.
பழைய இருபரிமாண (2D) சிகிச்சை முறைகளில், மார்பகத்துக்குக் கீழே உள்ள இதயமும் நுரையீரலும் ஓரளவு கதிர்வீச்சைப் பெறும் நிலை இருந்தது. அந்தக் காலத்திலிருந்துதான் இந்தப் பயம் வந்தது. இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டது. கட்டியின் வடிவத்துக்கு ஏற்பக் கதிர்களின் வீரியத்தை மாற்றியமைக்கும் IMRT (Intensity Modulated Radiation Therapy), சிகிச்சையின்போதே படங்கள் எடுத்துத் துல்லியத்தை உறுதிசெய்யும் IGRT (Image Guided Radiation Therapy), இயந்திரம் சுழன்றபடி தொடர்ச்சியாகக் கதிர்வீச்சை அளித்து, சிகிச்சை நேரத்தைக் குறைக்கும் VMAT (Volumetric Modulated Arc Therapy) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன.
இவற்றின் மூலம், சுற்றியுள்ள உறுப்புகளின் ஒவ்வொரு மில்லிமீட்டருக்கும் எவ்வளவு கதிர்வீச்சு செல்லும் என்பதைச் சிகிச்சை தொடங்கும் முன்பே கணக்கிட முடிகிறது. இதனால், கதிர்வீச்சு மார்பகத் திசுவில் குவிக்கப்பட்டு, இதயத்துக்கும் நுரையீரலுக்கும் செல்லும் அளவு மிகக் குறைந்த அளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.”
சிலர் நான்கைந்து நாட்களில் ‘நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்றோ, களைப்பாலோ, முன்கூட்டியே சொல்லப்படாத பக்கவிளைவுகளாலோ சிகிச்சையைப் பாதியில் நிறுத்திவிடுகிறார்கள். இது மிக ஆபத்தானது. மருத்துவத்தில் இதை ‘விரைவுப் பெருக்கம்’ (Accelerated Repopulation) என்கிறோம். தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு விலங்கைச் சீண்டிவிட்டு, முழுமையாகக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்? அதுபோலத்தான், கதிர்வீச்சால் தொந்தரவு செய்யப்பட்டு முழுமையாக அழிக்கப்படாத புற்றுநோய் செல்கள், சிகிச்சைக்கு முன்பு இருந்ததை விட வேகமாகப் பெருகத் தொடங்கலாம். எனவே, பரிந்துரைக்கப்பட்ட முழு சிகிச்சையையும் இடைவெளியின்றி முடிப்பது கட்டாயம்.
தோல் கருமை, லேசான உரிதல், களைப்பு போன்ற பக்கவிளைவுகள் கட்டுப்படுத்தக்கூடியவை… தற்காலிகமானவை. எந்தத் தொந்தரவு இருந்தாலும், சிகிச்சையைத் தானாக நிறுத்தாமல் மருத்துவக் குழுவிடம் சொல்லுங்கள். அதைக் கையாள அவர்கள் வழிகாட்டுவார்கள். பக்கவிளைவுகளை விட, முழுமையடையாத சிகிச்சைதான் நீண்டகால ஆரோக்கியத்துக்குப் பெரிய ஆபத்து.
புற்றுநோய் நான்காம் நிலையை அடைந்து, குணப்படுத்துவது முதன்மை இலக்காக இல்லாத நிலையில், கவனம் வலிநிவாரண மற்றும் ஆதரவுச் சிகிச்சையை (Palliative Care) நோக்கித் திரும்புகிறது. இது ‘கைவிடுவது’ அல்ல. நோயாளிக்கு வசதியையும் வலியிலிருந்து விடுதலையையும் கண்ணியத்தையும் தரும் ஒரு சிறப்பு மருத்துவ அணுகுமுறை இது.
கடுமையான வலி, மூச்சுத் திணறல் போன்ற உடல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவது, முற்றிய மார்பக அல்லது வாய்ப் புற்றுநோயில்[4] ஏற்படும் புண்களில் துர்நாற்றத்தையும் தொற்றையும் கையாள்வது, முறையான கட்டுகள் போடுவது ஆகியவை இதில் அடங்கும். இதனால், நோயாளி அசௌகரியம் இல்லாமல் குடும்பத்தினருக்கு அருகிலேயே இருக்க முடிகிறது. நோயாளிக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இது ஆதரவு தருகிறது. மீதமிருக்கும் நாட்களோ, மாதங்களோ, ஆண்டுகளோ, அவற்றை நல்ல வாழ்க்கைத் தரத்துடனும், இறுதியில் கண்ணியமான மரணத்துடனும் அமைத்துக்கொடுப்பதே இதன் நோக்கம்.”
சிகிச்சையைத் தொடங்கவிருக்கும் பெண்ணுக்கு மூன்று செய்திகள்… முதலாவது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு கதிர்வீச்சு என்பது, நோய் மீண்டும் வரும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும், காலத்தால் நிரூபிக்கப்பட்ட அவசியமான படி. இரண்டாவது, நவீன தொழில்நுட்பங்களால் இந்தச் சிகிச்சை பாதுகாப்பானது… பக்கவிளைவுகள் குறைவு… இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் நன்கு பாதுகாக்கப்படுகின்றன. மூன்றாவது, மார்பகப் புற்றுநோய்[5] சிறப்பாகச் சிகிச்சை அளிக்கக்கூடிய, பல நேரங்களில் முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய். தேவையற்ற பயத்தை விட்டு, சிகிச்சையை நம்புங்கள்.
குடும்பத்துக்கு ஒரு செய்தி… புற்றுநோய் சளிக் காய்ச்சல் போலப் பரவும் நோய் அல்ல. நோயாளியைத் தீண்டத்தகாதவராகவோ, ஒதுக்கி வைக்க வேண்டியவராகவோ நடத்தாதீர்கள். அவருக்குத் தேவை பரிவு, தொடர்ந்த ஊக்கம், மன ரீதியான ஆதரவு. குடும்பம் தரும் நம்பிக்கை, பல நேரங்களில் மருத்துவரின் ஆலோசனைக்கு இணையான மருந்து.
மேமோகிராம் ரிப்போர்ட்டில் ‘Dense Breasts’ என்று பார்த்ததும் பலர் பதறிவிடுகிறார்கள். அடர்த்தியான மார்பகம் (Dense Breasts) என்பது நோயோ அசாதாரணமோ அல்ல… ஓர் இயல்பான நிலையே. மார்பகத்தில் கொழுப்புத் திசுவோடு ஒப்பிடுகையில், பால் சுரக்கும் சுரப்பித் திசு அதிகமாக இருப்பதையே இது குறிக்கிறது. 40 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது.
பிரச்னை என்னவென்றால், அடர்த்தியான சுரப்பித் திசு மேமோகிராமில் சிறிய கட்டிகளை மறைத்துவிடக்கூடும். அதனால், இத்தகைய மார்பகங்களில் மேமோகிராமின் துல்லியம் குறைகிறது. 40 வயதுக்குட்பட்டவர்களுக்கும், அடர்த்தி அதிகம் உள்ளவர்களுக்கும், துல்லியமான பரிசோதனைக்கு அல்ட்ராசவுண்ட் (Ultrasound) அல்லது எம்ஆர்ஐ (MRI) பரிசோதனை சிறந்தது. உங்கள் மார்பகத்தின் அடர்த்தியைத் தெரிந்துகொள்வது, உங்களுக்கு ஏற்ற பரிசோதனை முறையை மருத்துவருடன் சேர்ந்து தேர்ந்தெடுக்க உதவும்.”
அடர்த்தியான மார்பகம், மார்பகப் புற்றுநோய் வரும் அபாயத்தையும் ஓரளவு உயர்த்துகிறது என்பதையும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) சுட்டிக்காட்டுகிறது. எனவே, பயப்பட வேண்டியதில்லை… ஆனால் அலட்சியமும் வேண்டாம். சரியான பரிசோதனை, முழுமையான சிகிச்சை, குடும்பத்தின் அரவணைப்பு… இந்த மூன்றும் சேர்ந்தால், மார்பகப் புற்றுநோயை வெல்வது நிச்சயம் சாத்தியம்.
17 சர்வதேச ஆய்வுகளில் பங்கேற்ற 10,801 பெண்களின் தரவுகளை ஆய்வு செய்த, 2011-ம் ஆண்டில் தி லான்செட் (The Lancet) இதழில் வெளியான ஒருங்கிணைந்த பகுப்பாய்வில், மார்பகத்தைக் காக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கதிர்வீச்சு பெற்றவர்களுக்கு, பத்து ஆண்டுகளில் நோய் மீண்டும் வரும் அபாயம் 35 சதவிகிதத்திலிருந்து 19.3 சதவிகிதமாகக் குறைந்தது. மார்பகப் புற்றுநோய் மரண விகிதமும் ஏறக்குறைய ஆறில் ஒரு பங்கு குறைந்தது.
மேமோகிராம் ரிப்போர்ட்டில் மார்பக அடர்த்தி A, B, C, D என நான்கு வகைகளாகக் குறிக்கப்படுகிறது. A என்பது பெரும்பாலும் கொழுப்புத் திசு… B என்பது ஆங்காங்கே அடர்த்தியான பகுதிகள்… C என்பது பரவலான அடர்த்தி, இது சிறிய கட்டிகளை மறைக்கக்கூடும்… D என்பது மிக அதிக அடர்த்தி, இது மேமோகிராமின் உணர்திறனைக் குறைக்கும். C, D வகைகள் ‘அடர்த்தியான மார்பகம்’ எனக் கருதப்படுகின்றன. அமெரிக்காவில் 2024 செப்டம்பர் 10 முதல், ஒவ்வொரு மேமோகிராம் ரிப்போர்ட்டிலும் மார்பக அடர்த்தியைக் குறிப்பிடுவது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டாக்டர் பி. சதீஷ், [6]MBBS, MD, DNB (RO)
Consultant – Radiation Oncologist
காவேரி மருத்துவமனை – தென்னூர், திருச்சி[7]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/a-guardian-without-a-blade-radiation-therapy/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.