வலியில்லாத கட்டியா? உஷாராகுங்கள்!

by admin-blog-kh | July 27, 2026 12:41 pm

தசை, எலும்பு, கொழுப்பு, நரம்பு போன்ற உடலின் தாங்கு திசுக்களில் தோன்றும் அரிய புற்றுநோய்தான் சார்கோமா. பெரும்பாலும் வலியில்லாத ஒரு கட்டியாகவே தொடங்குவதால், சாதாரண வீக்கம் என்று அலட்சியம் செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் கண்டறிந்து, சரியான சிகிச்சையும் முறையான இயன்முறை மருத்துவமும் பெற்றால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

உடலில் ஒரு கட்டி. வலி இல்லை. ஆனால், மெல்ல மெல்லப் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. ‘கொழுப்புக் கட்டிதானே, பயப்பட ஒன்றும் இல்லை’ என்று பலரும் அதை அலட்சியம் செய்கிறார்கள். சில நேரம் அந்த அலட்சியமே ஆபத்தாகிறது. ஏனெனில், அது சார்கோமாவாக இருக்கலாம்.

சார்கோமா என்பது ஓர் அரிய வகைப் புற்றுநோய். மார்பகம், நுரையீரல் போன்ற உறுப்புகளில் தொடங்கும் பொதுவான புற்றுநோய்களைப் போல் அல்லாமல், சார்கோமா உடலைத் தாங்கி நிற்கும் தசைகள், எலும்புகள், கொழுப்புத் திசுக்கள், குருத்தெலும்பு, நரம்புகள், ரத்தக் குழாய்கள் போன்ற பகுதிகளில் தோன்றுகிறது. மொத்தப் புற்றுநோய்களில் இது சுமார் ஒரு சதவிகிதமே. கை, கால், வயிறு, மார்பு என உடலில் எங்கும் வரலாம்… எந்த வயதிலும் வரலாம். சில வகைகள் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் அதிகம்.

இதில் இரண்டு பெரும் வகைகள் உள்ளன. எலும்பில் தோன்றும் எலும்பு சார்கோமா, தசை மற்றும் மென்மையான திசுக்களில் தோன்றும் மென்மையான திசு சார்கோமா. அறிகுறிகள் அது அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து மாறுபடும். மிகப் பொதுவான ஆரம்ப அறிகுறி, வலியில்லாமல் மெதுவாக வளரும் ஒரு கட்டி அல்லது வீக்கம். எலும்பு சார்கோமாவில் நீண்ட நாட்களாகத் தொடரும் எலும்பு வலி, குறிப்பாக இரவில் அதிகரிக்கும் வலி, மூட்டுக்கு அருகே வீக்கம், மூட்டு இயக்கக் குறைபாடு ஆகியவை தோன்றலாம். வலி இல்லாததால் இதை விளையாட்டு காயம் என்றோ, சாதாரணக் கட்டி என்றோ தவறாகக் கருதி, பலர் மருத்துவரை அணுக தாமதிக்கிறார்கள். எலுமிச்சையை விடப் பெரிய, வளர்ந்துகொண்டே இருக்கும் கட்டி அல்லது வாரக்கணக்கில் தொடரும் எலும்பு வலி இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

நோயைக் கண்டறிய உடல் பரிசோதனை, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் பயாப்சி ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. மென்மையான திசு சார்கோமாவைத் துல்லியமாக அறிய எம்ஆர்ஐ பெரிதும் உதவுகிறது. கட்டியின் தன்மையை உறுதிசெய்யப் பயாப்சி அவசியம்.

சிகிச்சை முறை கட்டியின் இடம், வகை, பரவல் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை[1], கீமோதெரபி[2] ஆகியவை தனித்தோ சேர்த்தோ அளிக்கப்படுகின்றன. புற்றுநோயை அகற்றுவதோடு உடல் செயல்திறனையும் காப்பதே குறிக்கோள். இதற்காகப் புற்றுநோய் நிபுணர்கள், அறுவை மருத்துவர்கள், கதிர்வீச்சு நிபுணர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்.

சிகிச்சைக்குப் பிறகுதான் உண்மையான பயணம் தொடங்குகிறது. அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சுக்குப் பிறகு தசை பலவீனம், மூட்டு இறுக்கம், வலி, இயக்கக் குறைபாடு, மனத் தளர்ச்சி போன்றவை ஏற்படலாம். இங்குதான் இயன்முறை மருத்துவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிசியோதெரபிஸ்ட் நோயாளியின் நிலையை மதிப்பீடு செய்து, தனிப்பட்ட பயிற்சித் திட்டத்தை வழங்குகிறார். மூட்டு இயக்கப் பயிற்சிகள், தசை வலுப்படுத்தும் பயிற்சிகள், சமநிலைப் பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் இதில் அடங்கும். கை அல்லது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் செயற்கை உறுப்புகளுடன் (Prosthesis) இயல்பாக நடந்து வாழ இயன்முறை மருத்துவம் பெரிதும் உதவுகிறது.

சார்கோமா அரியது… ஆனால், தீவிரமானது. ஆரம்பகாலக் கண்டறிதல், சரியான மருத்துவ சிகிச்சை, முறையான இயன்முறை மருத்துவம் ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் தங்களின் செயல்திறனையும் வாழ்க்கைத் தரத்தையும் மீட்டெடுக்க முடியும். ‘ஆரம்பத்தில் கண்டறிதல், சிறந்த சிகிச்சை, முழுமையான மறுவாழ்வு’ என்பதே சார்கோமாவை வெல்லும் சிறந்த வழி.

 

உறுப்பை இழக்காமல் வெல்லலாம்!

சில பத்தாண்டுகளுக்கு முன்பு கை அல்லது காலில் எலும்பு சார்கோமா வந்தால், அந்த உறுப்பையே நீக்க வேண்டிய நிலை இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. துல்லியமான ஸ்கேன் வசதிகள், நவீன அறுவை சிகிச்சை முறைகள், செயற்கை எலும்பு இடுபொருள்கள் ஆகியவற்றின் துணையுடன், பெரும்பாலான நோயாளிகள் தங்கள் உறுப்பை இழக்காமல் சிகிச்சை பெற முடிகிறது. இதை உறுப்பைக் காக்கும் அறுவை சிகிச்சை (Limb Salvage Surgery) என்கிறோம். இதனோடு முறையான இயன்முறை மருத்துவமும் சேரும்போது, நோயாளிகள் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள்.

 

ஹரிஹரன்
பிசியோதெரபிஸ்ட்
காவேரி மருத்துவமனைதிருச்சி[3]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

 

Endnotes:
  1. கதிர்வீச்சு சிகிச்சை: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/radiation-oncology/
  2. கீமோதெரபி: https://www.kauveryhospital.com/chemotherapy/
  3. காவேரி மருத்துவமனைதிருச்சி: https://www.kauveryhospital.com/our-locations/trichy-cantonment/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/a-painless-lump-be-alert/