by admin-blog-kh | February 5, 2026 9:23 am
‘புற்றுநோய்’ என்கிற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் நெஞ்சில் ஒரு பயம் தோன்றும். ‘இனி வாழ்க்கை முடிந்தது’ என்கிற எண்ணமே மனதில் ஓடும். ஆனால், இன்றைய நவீன மருத்துவ உலகில் புற்றுநோய் என்பது மரண தண்டனை அல்ல. சரியான நேரத்தில் கண்டறிந்தால், முறையான சிகிச்சை மேற்கொண்டால், இந்த நோயை வெற்றிகரமாக வெல்லலாம். ‘C’ என்றால் Cancer மட்டுமல்ல… Cure-ம்தான்!
தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டுத் திட்டத்தின் (TNCRP) தரவுப்படி, ஒவ்வோர் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 96.1 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. தேசிய புற்றுநோய் பதிவேட்டு திட்டத்தின் (NCRP) 2022 அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 14.61 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதாவது, ஒன்பது இந்தியர்களில் ஒருவருக்கு வாழ்நாளில் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது.
ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப் புற்றுநோய்[1], வயிற்றுப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய்[2] ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்[3], கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் ஆகியவை முக்கியமான அச்சுறுத்தல்களாக உள்ளன.
இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையில் பல முக்கிய இடைவெளிகள் உள்ளன. முதலாவதாக, பொதுமக்களிடம் ஸ்கிரீனிங் பரிசோதனைகள் மற்றும் புற்றுநோய் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. இரண்டாவதாக, புற்றுநோய் சிகிச்சை மையங்களில் 95 சதவிகிதம் நகர்ப்புறங்களில் மட்டுமே உள்ளன. கிராமப்புறங்களில் போதிய உள்கட்டமைப்பு இல்லை.
மூன்றாவதாக, புற்றுநோய் நிபுணர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியாவில் ஒவ்வொரு பத்து லட்சம் மக்களுக்கும் ஒரே ஒரு மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் மட்டுமே உள்ளார்[4]. நான்காவதாக, புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்புக் காப்பீடு திட்டங்கள் போதுமான அளவில் இல்லை. இம்யூனோதெரபி, டார்கெட்டட் தெரபி[5] போன்ற நவீன சிகிச்சைகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளடக்குவதில்லை.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், சிகிச்சை வெற்றி பெறும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கும். அதற்கு சில முக்கிய ஸ்கிரீனிங் பரிசோதனைகள் அவசியம்.
மார்பகப் புற்றுநோய் பரிசோதனையைப் பொறுத்தவரை, 40 வயதைக் கடந்த அனைத்துப் பெண்களும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்[6]. குடும்பத்தில் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், 25 வயதிலேயே எம்ஆர்ஐ பரிசோதனை தொடங்குவது நல்லது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு[7], 21 முதல் 29 வயது வரையுள்ள பெண்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 30 முதல் 65 வயது வரையுள்ளவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் மற்றும் HPV பரிசோதனை செய்துகொள்ளலாம்.
நுரையீரல் புற்றுநோய்க்கு, 50 வயதைக் கடந்த, நீண்டகாலமாக புகைபிடிப்பவர்கள் ஆண்டுதோறும் குறைந்த அளவு கதிர்வீச்சு CT ஸ்கேன் செய்துகொள்வது அவசியம்[8]. வாய்ப் புற்றுநோய்க்கு, புகையிலை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து வாய்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இது மிகவும் ஆச்சரியமான தகவல். 70 சதவிகித புற்றுநோய்கள் வாழ்க்கைமுறைக் காரணிகளால்தான் ஏற்படுகின்றன. புகையிலை பயன்பாடு, மதுப்பழக்கம், HPV தொற்று, தவறான உணவுப் பழக்கம், உடல் பருமன்[9], உடற்பயிற்சியின்மை, காற்று மற்றும் நீர் மாசுபாடு ஆகியவை முக்கிய காரணங்கள். எனவே, சரியான வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் புற்றுநோயை வெகுவாகத் தடுக்க முடியும்.
அனைத்து வகையான புகையிலை மற்றும் மதுப் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்துவது முதல் படி. பாதுகாப்பான உடலுறவு மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி போட்டுக்கொள்வது பெண்களுக்கு அவசியம். பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும்.
வாரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நாட்கள், தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். போதுமான தூக்கம், யோகா, தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்[11].
புற்றுநோய் என்றால் இன்றும் சமூகத்தில் ஒரு களங்கமாகவே பார்க்கப்படுகிறது. ‘முற்பிறவியில் பாவம் செய்ததால் இந்த நோய் வந்தது’ என்று சிலர் கூறுவதுண்டு. புற்றுநோயாளிகளை சமூக நிகழ்வுகளில் இருந்து ஒதுக்குவது, எதிர்மறையான கருத்துகளை வெளிப்படுத்துவது போன்றவை நடக்கின்றன. இது முற்றிலும் தவறான அணுகுமுறை.
புற்றுநோய் தொற்றும் நோய் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். புற்றுநோயாளிகளை ‘நோயாளிகள்’ என்று மட்டும் பார்க்காமல், மனிதர்களாகப் பார்க்க வேண்டும். அவர்களின் பயம், கோபம், சோகத்தை முன்தீர்ப்பு கூறாமல் கேட்டு புரிந்துகொள்ள வேண்டும். வீட்டு வேலைகள், பயணம், அன்றாட நடவடிக்கைகளில் உதவ வேண்டும். அதே நேரம், அதிகப்படியான பரிதாபம் காட்டுவதும் தவறு. அது அவர்களை இன்னும் பலவீனமாக உணரச் செய்யும்.
புற்றுநோய் சிகிச்சையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டார்கெட்டட் தெரபி மற்றும் இம்யூனோதெரபி மருந்துகள் சிகிச்சைக்கான பலனை மேம்படுத்தியுள்ளன. பக்கவிளைவுகளும் குறைந்துள்ளன. காவேரி மருத்துவமனையில் இந்த நவீன சிகிச்சைகள் கிடைக்கின்றன[12]. பல நோயாளிகள் இதனால் பயனடைந்து, சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ்கின்றனர்.
பெண்களிடையே மார்பகப் புற்றுநோயும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் முதலிடத்தில் உள்ளன. எனவே, பெண்கள் தொடர்ந்து ஸ்கிரீனிங் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம். மாதந்தோறும் சுய மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சந்தேகமான கட்டி அல்லது மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சிகிச்சை பெறுவதில் பயம் வேண்டாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், உயிரைக் காப்பாற்றலாம்.
புற்றுநோயாளிகள் ஒன்றை உறுதியாக நம்ப வேண்டும்… நீங்கள் தனியாக இல்லை. தினந்தோறும் வலிமையை, நம்பிக்கையை, குணமாகும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். கடந்த ஆண்டுகளில் புற்றுநோய் உயிர்வாழ்வு விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. உங்கள் அடையாளம் புற்றுநோய் அல்ல. நீங்கள் இந்த நோயைவிடவும் முக்கியமானவர்.
புற்றுநோயிலிருந்து குணமானவர்களுக்கு உணர்வுப்பூர்வமான மன உளைச்சல், பொருளாதாரச் சுமைகள், சிகிச்சையின் தாமதமான பக்கவிளைவுகள் போன்ற தனித்துவமான சிக்கல்கள் இருக்கலாம். இவற்றைச் சமாளிக்க உதவி செய்து, புற்றுநோய்க்குப் பிறகு ஒரு புதிய இயல்பான வாழ்க்கையை வாழ உதவ வேண்டும். எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்…புற்றுநோய்க்குப் பிறகும் வாழ்க்கை உண்டு!
நம்பிக்கையை இழக்காதீர்கள். புற்றுநோயை வெல்லலாம்!
| கட்டுக்கதை | உண்மை |
| எல்லா கீமோதெரபியிலும் முடி கொட்டும்
|
எல்லா மருந்துகளும் முடி உதிர்வை ஏற்படுத்துவதில்லை. முடி உதிர்வு தற்காலிகமானது. சிகிச்சை முடிந்தபின் மீண்டும் வளரும்
|
| கீமோதெரபி மிகவும் வலிக்கும்
|
கீமோதெரபி கொடுப்பது வலிக்காது. சில நாட்கள் சோர்வு, உடல்வலி இருக்கலாம். சரியான உணவு, ஓய்வு மூலம் சமாளிக்கலாம்
|
| இறுதிக்கட்ட புற்றுநோய்க்கு மட்டுமே கீமோதெரபி
|
இல்லை. அறுவைசிகிச்சைக்கு முன் கட்டியைச் சுருக்கவும், அறுவைசிகிச்சைக்குப் பின் மீதமுள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவும் பயன்படும்
|
| கீமோதெரபி ஒன்றே சிகிச்சை | கீமோதெரபி முக்கியமான சிகிச்சை. ஆனால், டார்கெட்டட் தெரபி, இம்யூனோதெரபி போன்ற நவீன சிகிச்சைகளும் உள்ளன
|
Dr. எம். மங்கை சுசீலா[13]
MD (General Medicine), DM (Medical Oncology)
ரத்தப் புற்றுநோய் மருத்துவர்
காவேரி மருத்துவமனை, திருச்சி -– தென்னூர்[14]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/cancer-vs-care/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.