by admin-blog-kh | February 11, 2026 8:12 am
நெஞ்சு வலியை ‘வாயுத்தொல்லை’ என்று நினைத்து புறக்கணிப்பது மிகப் பெரிய ஆபத்து. கார்டியாக் சி.டி ஸ்கேன், இதயத் தமனிகளில் உள்ள அடைப்புகளையும், கால்சியம் படிவுகளையும் அறிகுறிகள் தோன்றும் முன்பே கண்டறிந்து, மாரடைப்பைத் தடுக்க உதவுகிறது.
‘‘நெஞ்சுல லேசா எரியுது… இது வாயுத்தொல்லைதான் போல’’ என்று நினைத்து தள்ளிப்போடுபவர்கள் ஏராளம். ஆனால், இந்தச் சாதாரண அசௌகரியம்தான் பல நேரங்களில் மாரடைப்பின் முதல் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கிறது[1]. இதயநோய் பெரும்பாலும் அமைதியாக வளர்கிறது. முதல் அறிகுறியே பெரிய மாரடைப்பாக இருக்கலாம். ஆகவே, கார்டியாக் சி.டி ஸ்கேன் எப்படி உயிர்காக்கும் தொழில்நுட்பமாக விளங்குகிறது என்பதை அறிவோம்.
கார்டியாக் சி.டி ஸ்கேன் என்பது நவீன எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இதயம் மற்றும் கரோனரி தமனிகளின் உயர்தர முப்பரிமாண படங்களை உருவாக்கும் பரிசோதனை. இது முற்றிலும் வலியற்றது, விரைவானது. உடலுக்குள் எந்தக் குழாயையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
பாரம்பரிய ஆஞ்சியோகிராமில், தொடை அல்லது கையில் உள்ள தமனியில் ஒரு மெல்லிய குழாயை செலுத்தி, அதன் வழியாக இதயத்தை அடைந்து படங்கள் எடுக்கப்படும். இது இன்வேசிவ் முறை என்பதால், சிறிதளவு ஆபத்து உண்டு. ஆனால், கார்டியாக் சி.டி ஸ்கேன் முற்றிலும் நான்-இன்வேசிவ் முறை. இதில் குழாய் செலுத்துவது இல்லை. பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் முடிந்துவிடும். அதிக வலியோ, அசௌகரியமோ இல்லை.
இதன் முக்கிய நன்மையாக, இதயத் தமனிகளில் ஏற்படும் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடிகிறது. தேவையற்ற இன்வேசிவ் சிகிச்சைகளைத் தவிர்க்க உதவுகிறது. விரைவாகவும் துல்லியமாகவும் நோயைக் கண்டறிய முடிகிறது.
கார்டியாக் சி.டி ஸ்கேன் பல்வேறு இதய நோய்களைக்[2] கண்டறிவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை மிகத் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான காரணத்தை மதிப்பிட முடிகிறது.
இதயத் தமனிகளில் கால்சியம் அல்லது கொழுப்புப் படிவுகள், குறுகல், அடைப்புகள் உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க முடிகிறது. இதய வால்வுகளின் நிலையை மதிப்பிட முடிகிறது. பெருந்தமனியில் (Aorta) பிரச்னைகள் இருந்தால், குறிப்பாக அனியூரிஸம் அல்லது டிஸ்செக்ஷன் இருந்தால் கண்டறிய முடிகிறது.
திறந்த இதய அறுவை சிகிச்சை[3] அல்லது குறைந்தபட்ச அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடுவதற்கு இது உதவுகிறது. டிரான்ஸ்கதீட்டர் வால்வு சிகிச்சைகளுக்குத்[4] திட்டமிட உதவுகிறது. அரித்மியா அபிலேஷன் சிகிச்சைகளுக்குத் தயாரிக்க உதவுகிறது. இந்தச் சிகிச்சைகளுக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்களை மதிப்பிட முடிகிறது.
பிறவி இதயக் குறைபாடுகள்[5] இருந்தால் கண்டறிய முடிகிறது. இதயத்தில் அல்லது அதைச் சுற்றி கட்டி அல்லது கழலை இருந்தால் கண்டறிந்து, அதன் தன்மையை வரையறுக்க முடிகிறது. இதயத்தைச் சுற்றியுள்ள உறையில் நீர் அல்லது கால்சியம் படிவு இருந்தால் கண்டறிய முடிகிறது. பைபாஸ் சிகிச்சைக்குப் பிறகு பொருத்தப்பட்ட நாளங்கள் சரியாக வேலை செய்கின்றனவா, ஸ்டென்ட்கள் நன்றாக இருக்கின்றனவா என்பதை மதிப்பிட முடிகிறது.
கால்சியம் ஸ்கோர் பரிசோதனை என்பது கரோனரி தமனிகளில் படிந்துள்ள கால்சியத்தின் அளவை அளவிடுவதாகும். இது மிக முக்கியமான பரிசோதனை. ஏனென்றால், கால்சியம் படிவு என்பது அமைதியாக வளரும் கொழுப்புப் படிவுகளின் அறிகுறி.
அறிகுறிகள் தோன்றும் முன்பே இதயநோயைக் கண்டறிய இது உதவுகிறது. எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்பட என்ன வாய்ப்பு உள்ளது என்பதை முன்னறிவிக்க உதவுகிறது. சிகிச்சை முறையைத் தீர்மானிப்பதற்கு வழிகாட்டுகிறது.
நீரிழிவு[6], உயர் ரத்த அழுத்தம்[7], உயர் கொலஸ்டிரால் உள்ளவர்களுக்கு. புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு. குடும்பத்தில் இதயநோய் வரலாறு உள்ளவர்களுக்கு. நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆபத்துக் காரணிகள் கொண்டவர்களுக்கு.
கால்சியம் ஸ்கோர் அதிகமாக இருந்தால், அதிக ஆபத்து உள்ளது என்று அர்த்தம். அதனால், தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படும்.
‘‘சி.டி ஸ்கேன் செய்தால் ரேடியேஷன் வெளிப்பாடு அதிகமாக இருக்குமே’’ என்கிற கவலை பலருக்கும் உண்டு. ஆனால், தற்போதைய நவீன சி.டி ஸ்கேனர்கள் மிகக் குறைந்த அளவு ரேடியேஷனையே பயன்படுத்துகின்றன. பழைய இயந்திரங்களைவிட இப்போதைய இயந்திரங்களில் ரேடியேஷன் அளவு மிகவும் குறைவு. பல நேரங்களில் இது நியூக்ளியர் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்களுக்குச் சமம் அல்லது குறைவாகவே இருக்கும்.
நமது நவீன ஸ்கேனர்கள் டோஸ்-ரிடக்ஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால், குறைந்த ரேடியேஷனிலேயே தெளிவான படங்களைப் பெற முடிகிறது. சரியாக பரிந்துரைக்கப்படும்போது, கார்டியாக் சி.டி மிகவும் பாதுகாப்பானது.
கான்ட்ராஸ்ட் டை பயன்படுத்துவது குறித்தும் சிலருக்குக் கவலை இருக்கும். பொதுவாக, கான்ட்ராஸ்ட் டை பாதுகாப்பானதுதான். ஆனால், பரிசோதனைக்கு முன் அனைவருக்கும் சிறுநீரகச் செயல்பாடு பரிசோதிக்கப்படும். சிறுநீரக நோய்[9] இருந்தால், நீண்டகால நீரிழிவு இருந்தால், சிறுநீரகச் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தால், சிறுநீரக நிபுணரின் ஆலோசனை பெறப்படும். போதுமான அளவு நீர் அருந்துவது ஆபத்தைக் குறைக்கிறது.
சிறுநீரகப் பிரச்னைகள் அல்லது ஒவ்வாமை இருந்தால், மருத்துவரிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும். இது மிக முக்கியம்.
நெஞ்சு வலி அல்லது விளக்கமற்ற மூச்சுத்திணறல் இருந்தால் இந்தப் பரிசோதனை தேவை. ஸ்ட்ரெஸ் டெஸ்ட் முடிவுகள் உறுதியற்றதாக இருந்தால் தேவை. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீரிழிவு இருந்தால் தேவை. குடும்பத்தில் மாரடைப்பு வரலாறு வலுவாக இருந்தால் தேவை. நாற்பது வயதுக்கு மேற்பட்ட புகைப்பழக்கம் உள்ளவர்களுக்குத் தேவை.
தடுப்பு பரிசோதனையாக கால்சியம் ஸ்கோர் டெஸ்ட்டை ஆண்களும் பெண்களும் நாற்பது வயதுக்கு மேல் செய்துகொள்ளலாம். மேலே குறிப்பிட்ட வரலாறு இருந்தால் நாற்பது வயதுக்குக் குறைவாகவும் செய்துகொள்ளலாம்.
வெளியே ஆரோக்கியமாகத் தோன்றும் நபர்களுக்குக்கூட அமைதியான இதயநோய் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால்தான் தடுப்பு பரிசோதனை முக்கியம்.
பரிசோதனைக்கு நான்கு மணி நேரம் உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். பரிசோதனை நாளில் காஃபின், எனர்ஜி பானங்கள், சாக்லேட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இதயத் துடிப்பை மெதுவாக்க பீட்டா-பிளாக்கர் மருந்து வழங்கப்படலாம்.
பரிசோதனை வெறும் பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் முடிந்துவிடும். மருத்துவமனைக்கு வந்து செல்வது உட்பட மொத்தம் ஒரு மணி நேரம் போதும். உள்நோயாளியாக அனுமதிக்கத் தேவையில்லை.
முடிவுகள் பெரும்பாலும் அதே நாளிலோ, இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளோ கிடைத்துவிடும். படங்கள் மற்றும் ஆபத்து மதிப்பீட்டுடன் கூடிய விரிவான அறிக்கை வழங்கப்படும்.
இன்றைய கார்டியாக் சி.டி ஸ்கேனர்கள் பல சிறப்பு அம்சங்களுடன் வருகின்றன. ஹை-ஸ்லைஸ் சி.டி ஸ்கேனர்கள் மிக வேகமாக படங்களை உருவாக்குகின்றன. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் படங்கள் மறுகட்டமைக்கப்படுகின்றன. இதயத் துடிப்பு அதிகமாக இருந்தாலும், மோஷன் திருத்தம் செய்யப்படுகிறது. மிகக் குறைந்த ரேடியேஷன் அளவு பயன்படுத்தப்படுகிறது. கால்சியம் படியாத மென்மையான கொழுப்புப் படிவுகளையும் நன்றாகக் கண்டறிய முடிகிறது.
இந்த முன்னேற்றங்கள் பல நன்மைகளை வழங்குகின்றன. நோய் கண்டறிதலின் துல்லியம் கணிசமாக அதிகரித்துள்ளது. நோயாளிகளின் வசதி மேம்பட்டுள்ளது. ஆபத்தான கொழுப்புப் படிவுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடிகிறது.
நெஞ்சு வலியை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. பல மாரடைப்புகள் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன…லேசான நெஞ்சு அசௌகரியம், எரிச்சல் உணர்வு, அமிலத்தன்மைக்கான வலி என்று தவறாக நினைக்கப்படும் வலி, தாடை, தோள்பட்டை அல்லது முதுகு வலி.
ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது, கார்டியாக் சி.டி பரிசோதனை செய்துகொள்வது ஆகியவை, ஆபத்தான கொழுப்புப் படிவுகள் பாதிப்பை அதிகரிக்கும் முன்பே அவற்றைக் கண்டறிய உதவும்.
இதயநோய் பெரும்பாலும் அமைதியாக முன்னேறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதல் அறிகுறியே பெரிய மாரடைப்பாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது சிகிச்சை மட்டுமல்ல… அதைத் தடுக்கும் வழி!
உங்கள் இதயம் இரண்டு முறை தராத எச்சரிக்கை அறிகுறிக்காகக் காத்திருக்காதீர்கள். இன்றே உங்கள் இதய ஆரோக்கியத்தை பரிசோதித்துக்கொள்ளுங்கள். ‘வாயுத்தொல்லை’ என்று நினைத்துத் தள்ளிப்போடாதீர்கள். ஏனென்றால், உங்கள் உயிர் உங்கள் கையில்!
• தாடை வலி
• கழுத்து அல்லது தோள்பட்டை வலி
• வியர்வையுடன் கூடிய நெஞ்சு அசௌகரியம்
• மூச்சுவிடுவதில் சிரமம்
• எரிச்சல் உணர்வு (அமிலத்தன்மை போல தோன்றலாம்)
Dr. அசிக் அலி[10]
MBBS, MD, Fellowship in Cardiothoracic Imaging
கதிரியக்கவியல் நிபுணர்
காவேரி மருத்துவமனை, சென்னை – ஆழ்வார்ப்பேட்டை[11]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/cardiac-ct-scan-warns-of-major-before-minor-attack/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.