by admin-blog-kh | June 15, 2026 12:33 pm
அதிகாலையில் எழுந்ததும் முதுகுவலி, படுத்தால் அதிகரிக்கும் வலி, நடந்தால் குறையும் அவஸ்தை… இது சாதாரண முதுகுவலி அல்ல. ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ் எனும் தானியங்கு நோய் எதிர்ப்புக் கோளாறு. 17 – 45 வயதுக்குள் யாரையும் தாக்கக்கூடிய இந்த கண்ணுக்குத் தெரியாத நோயைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரை இது.
அர்ஜுன் வயது 26. வாரக் கடைசியில் மராத்தான் ஓடக்கூடியவர். கடந்த சில மாதங்களாக காலையில் எழுந்ததும் ஓட முடிவதில்லை. படுக்கையில் இருந்து எழுந்து, ஷூ லேஸ் கட்ட இருபது நிமிடம் போராட வேண்டியிருக்கிறது. மதியமாகும்போது விறைப்பு மறைந்துவிடுகிறது. ‘ஓவரா வொர்க்கவுட் பண்றேன் போல, போஸ்ச்சர் பிரச்னையா இருக்கும்’ என்று மெடிக்கல் ஷாப்பில் வலி நிவாரண மாத்திரை வாங்கி விழுங்குகிறார். அவருக்குத் தெரியாது, ஓர் அமைதியான நோய் அவரின் முதுகுத்தண்டை உள்ளிருந்து உடைத்துக்கொண்டிருக்கிறது என்று.
இதுதான் ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் நோயின் மறைந்திருக்கும் உண்மை. உலகெங்கும் மே 3 அன்று, இந்நோய் குறித்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ் என்பது ஒரு தானியங்கு நோய் எதிர்ப்புக் கோளாறு. உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பே முதுகுத்தண்டையும் இடுப்பு மூட்டையும் எதிரியாகக் கருதி தாக்குகிறது. முக்கியமாக 17 முதல் 45 வயதுக்குள் தொடங்குகிறது. முன்பு 9 ஆண்களுக்கு ஒரு பெண் என்கிற விகிதத்தில் இருந்தது. இப்போது பெண்களிலும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை என்ன தெரியுமா? இதன் அறிகுறிகள் தொடங்கி முதல் சரியான நோயறிதல் வரை அறியப்பட ஏழு முதல் பத்து ஆண்டுகள் தாமதமாகிறது. இளைஞர்கள் தாங்களாகவே மருந்துக் கடையில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி விழுங்குகிறார்கள். வலி குறைகிறது, ஆனால், உள்ளிருந்து அழற்சி தொடர்கிறது. இறுதியில் முதுகுத்தண்டின் எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து மூங்கில் முதுகு என்கிற நிலைக்கு மாறிவிடுகின்றன. அப்போது மருந்து பலனளிக்காது.
சாதாரண முதுகுவலிக்கும் ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ் வலிக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. சாதாரண முதுகுவலி[2] ஓய்வெடுத்தால் குறையும்; இந்த நோய்க்கான வலி ஓய்வில் அதிகரிக்கும், உடற்பயிற்சியில் குறையும்.
காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடிக்கும் விறைப்பு, குதிகால் வலி[3], கண்களில் சிவப்பு மற்றும் வெளிச்சத்துக்குச் சென்சிட்டிவாக இருத்தல் (யூவியைடிஸ்), முந்தைய அல்லது குடும்ப வரலாற்றில் சொரியாசிஸ்[4]… இவை மிக முக்கியமான அறிகுறிகள். எச்.எல்.ஏ-பி27 எனும் மரபணு 70 முதல் 80 சதவிகிதம் நோயாளிகளில் உள்ளது.
இது முதுகுத்தண்டோடு நின்றுவிடும் நோயல்ல. கண்களில் யூவியைடிஸ், குடல் அழற்சி நோய் (அல்சரேட்டிவ் கொலைடிஸ், க்ரோன்ஸ்), இதய வால்வில் பாதிப்பு, நுரையீரலில் நார்ச்சிதைவு, சிறுநீரகத்தைப் பாதிக்கும் அமிலாய்டோசிஸ் என, பல உறுப்புகளையும் தாக்கக்கூடியது. குடல் ஆரோக்கியத்துக்கும் முதுகுத்தண்டு அழற்சிக்கும் நேரடித் தொடர்பு உண்டு. குடலில் அழற்சி அதிகரிக்கும்போது, முதுகிலும் அழற்சி அதிகரிக்கும்.
சிகிச்சை 50 சதவிகிதம் வேலை செய்யும். மீதி 50 சதவிகிதம் நோயாளியின் வாழ்க்கைமுறையில்தான் உள்ளது. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் பயோலாஜிக்ஸ் எனப்படும் ஊசி மருந்துகள் (ஆன்டி-டிஎன்எஃப், ஆன்டி-ஐஎல் 17, ஆன்டி-ஐஎல் 23) மற்றும் ஜேகே இன்ஹிபிட்டர்ஸ் எனப்படும் வாய்வழி மருந்துகள் நோய் சிகிச்சையில் புரட்சி ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்துகள் இலவசமாகக் கிடைக்கின்றன.
உடற்பயிற்சி அவசியம். யோகா மற்றும் நீச்சல் இரண்டும் தங்க தரநிலை எனப்படும். முன்பக்க, பின்பக்க, பக்கவாட்டு வளைவு ஆகிய மூன்றையும் உள்ளடக்கியவை. ஜிம்மில் கன பார உடற்பயிற்சிகளையும் டெட்லிஃப்ட்டையும் தவிர்க்க வேண்டும். அதிக நார்ச்சத்துள்ள உணவு, புரோபயாட்டிக்ஸ், போதுமான புரதம் உட்கொள்ளுங்கள்.
• நோயறிதலில் 7 முதல் 10 ஆண்டு தாமதம் பெரும் ஆபத்து.
• காலை விறைப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தால் உடனே மூட்டு நிபுணரை அணுகுங்கள்.
• எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் எக்ஸ்ரேயில் தெரியாத ஆரம்ப கட்ட அழற்சியைக் கண்டறியலாம்.
• குதிகால் வலி, கண் சிவப்பு, சொரியாசிஸ் வரலாறு இருந்தால் எச்சரிக்கையாக இருக்கவும்.
• ஆரம்பத்திலேயே சிகிச்சை தொடங்கினால், நோய் முற்றுவதைத் தடுக்க முடியும்.
• இந்நோய் உள்ளவர்களும் திருமணம், கர்ப்பமாதல், தாய்ப்பால் ஊட்டுதல் என அனைத்தும் செய்யலாம்.
பேராசிரியர் டாக்டர் எம்.எம். கவிதா[5]
MD (General Medicine), DNB, DM (Rheumatology), SCE (Rheumatology UK)
மூட்டு அழற்சியியல் துறை நிபுணர்
காவேரி மருத்துவமனை, சென்னை[6]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/do-not-ignore-back-pain/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.