நினைவுகள் மறையும் நேரத்திலும் அன்பு மறையக் கூடாது!

by admin-blog-kh | September 20, 2026 7:11 am

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21 அன்று உலக அல்சைமர் தினமாகக் (World Alzheimer’s Day) கடைப்பிடிக்கப்படுகிறது; செப்டம்பர் மாதம் முழுவதும் உலக அல்சைமர் மாதமாகப் பின்பற்றப்படுகிறது. டிமென்ஷியா (Dementia[1]) எனப்படும் நினைவுத்திறன் பாதிப்பு நோய்களுக்கு மிகவும் பொதுவான காரணம் அல்சைமர் நோய்தான்[2]. நினைவுகள் மெல்ல மங்கத் தொடங்கும் இந்தக் காலகட்டத்தில், நம் வீட்டு முதியவரை எப்படிப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் வாட்டும் கேள்வி.

டாக்டர், எங்க அம்மா பகல்ல வீட்ல தனியாருக்காங்க. நாங்க எல்லாரும் வேலைக்குப் போகணும். பகல்நேரத்துல அவங்க பாதுகாப்பா இருக்கிற மாதிரி ஏதாவது இடம் இருக்கா? இப்படித்தான் பல உரையாடல்கள் தொடங்குகின்றன.

உண்மையில், ‘எங்களுக்குப் பகல்நேரப் பராமரிப்பு தேவை’ என்று சொல்லிக்கொண்டு யாரும் நேரடியாக வருவதில்லை. வீட்டிலேயே முதியவரைக் கவனித்துக்கொள்வது கடினமாகிவிட்ட ஒரு கட்டத்தை அடைந்த பிறகுதான் இந்தப் பேச்சே எழுகிறது.

பல நோய்கள் ஒருசேர இருக்கும் நிலை (multi morbidity), அடிக்கடி விழுந்துவிடுதல், மருந்துகளைத் தவறாக எடுத்துக்கொள்ளுதல், நோக்கமின்றி அலைந்து திரிதல் (wandering), வேளாவேளைக்கு உணவு உண்ணாமை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் மறதி, குளிப்பது மற்றும் கழிப்பறை செல்வது போன்றவற்றில் சிரமம், பெரும்பாலான நேரத்தை முதியவர் தனியாகக் கழிப்பது என்று பல அறிகுறிகள் குடும்பத்தை யோசிக்க வைக்கின்றன. சில நேரம், ஒரு மருத்துவமனை அனுமதி அல்லது புதிதாகக் கண்டறியப்பட்ட ஒரு நோய், முதியவருக்கு மேலதிக கண்காணிப்பும் பராமரிப்பும் தேவை என்பதைக் குடும்பத்துக்கு உணர்த்திவிடும்.

சில வேளைகளில், இந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கும் உண்மையான வலி பராமரிப்பாளரின் சோர்வுதான்: ‘நாங்க எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்றோம். ஆனா, வீட்டுல எல்லாத்தையும் சமாளிக்க முடியலை…’

முதியோர் நல மருத்துவராக, இதை நான் ஒரு முக்கியமான மாற்றத் தருணமாகப் பார்க்கிறேன். குடும்பம் வெறும் ஒரு பிரச்னையைப் பற்றி மட்டும் கேட்கவில்லை. ‘எங்கள் பொறுப்புகளைத் தொடர்ந்து செய்துகொண்டே, எங்கள் பெற்றோரைப் பாதுகாப்பாக, சுறுசுறுப்பாக, சமூகத் தொடர்போடு, சுதந்திரமாக எப்படி வைத்திருப்பது?’ என்பதைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். இங்குதான் நன்கு வடிவமைக்கப்பட்ட முதியோர் பகல்நேரப் பராமரிப்புத் திட்டம் பெரிதும் உதவுகிறது. வெறும் கண்காணிப்பு மட்டுமல்ல, அறிவாற்றல் தூண்டல், உடற்பயிற்சி, ஊட்டச்சத்து, மருந்து ஆதரவு, மறுவாழ்வுப் பயிற்சி (rehabilitation[3]), சமூகப் பழக்கம், உடல்நலப் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல் என அது பலவற்றையும் வழங்குகிறது.

பகல்நேரப் பராமரிப்பு என்றால் என்ன? 

எளிமையாகச் சொல்வதென்றால், உங்கள் பெற்றோர் பகல் நேரத்தைப் பாதுகாப்பாகக் கழிக்க, தகுந்த பராமரிப்பையும் செயல்பாடுகளையும் பெற்று, மாலையில் வீடு திரும்பக்கூடிய ஒரு கட்டமைக்கப்பட்ட இடம்தான் பகல்நேரப் பராமரிப்பு (Day Care). வீட்டு உதவியாளர் (home attendant) வைத்துக்கொள்வதற்கும், முழுநேர முதியோர் இல்லத்தில் (old age home) சேர்ப்பதற்கும் இடையிலான ஒரு நடுவழி இது.

வீட்டு உதவியாளர் முறையில், முதியவர் வீட்டிலேயே இருப்பார்; குளித்தல், உடையணிதல், உணவு, மருந்து, நடமாட்டம், துணையிருத்தல் போன்றவற்றுக்கு ஒருவர் வந்து உதவுவார். பழக்கமான சூழலில் தனிநபர் கவனிப்பு கிடைப்பது இதன் நன்மை. ஆனால், முதியவர் தனிமையிலும் செயலற்ற நிலையிலும் இருந்துவிடக்கூடும்; அறிவாற்றலையும் உடலையும் தூண்டும் கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகள் இல்லாமல் போகலாம்.

பகல்நேரப் பராமரிப்பில், உங்கள் பெற்றோர் பகலில் மையத்துக்கு வந்து, மாலையில் வீடு திரும்புவார். சிறப்பாக அமைந்த ஒரு மையம் வெறும் கண்காணிப்புக்கு அப்பால் பலவற்றை வழங்கும்: உடற்பயிற்சி[4] மற்றும் நடமாட்டப் பயிற்சிகள், அறிவாற்றல் தூண்டல், சமூகப் பழக்கம், உணவு, மருந்து மேற்பார்வை, உடல்நலக் கண்காணிப்பு, தேவைப்படும்போது மறுவாழ்வு மற்றும் மருத்துவ ஆதரவு. முதியவரை வெறுமனே நேரம் கழிக்கவைப்பது நோக்கமல்ல; அவரது செயல்திறனையும் சுதந்திரத்தையும் தக்கவைப்பதே இலக்கு.

முழுநேர முதியோர் இல்லம் இதிலிருந்து வேறுபட்டது. அங்கு முதியவர் அங்கேயே தங்கி வாழ்வார்; பொதுவாக, தொடர்ச்சியான கண்காணிப்போ உதவியோ தேவைப்படும்போது, அல்லது வீட்டில் வாழ்வது நடைமுறைக்கு ஒவ்வாத, பாதுகாப்பற்ற நிலையை அடையும்போது இந்த வழி தேர்ந்தெடுக்கப்படுகிறது.

அல்சைமர், டிமென்ஷியா நோயாளிக்கு இது எப்படி உதவுகிறது? 

இந்தக் கட்டமைக்கப்பட்ட சூழல், நோயாளி, குடும்பம் ஆகிய இருதரப்புக்கும் பயன் தருகிறது.

நோயாளியைப் பொறுத்தவரை, முதல் நன்மை ஒழுங்கும் வழக்கமும். டிமென்ஷியா உள்ளவர்கள், தினமும் ஒரே மாதிரியான பழக்கத்தில் அன்றாடம் நகரும்போது சிறப்பாகச் செயல்படுகிறார்கள். எழுந்திருத்தல், உணவு, உடற்பயிற்சி, செயல்பாடுகள், ஓய்வு என நிகழ்வுகள் குறிப்பிட்ட நேரத்தில் அமையும்போது, குழப்பமும் பதற்றமும் குறைகின்றன.

அடுத்தது அறிவாற்றல் தூண்டல். உரையாடல், இசை, பழக்கமான பொருட்கள், புதிர்கள், பழைய நினைவுகளை மீட்டல், வாசிப்பு, பழக்கமான வீட்டு வேலைகள் என எளிய, அர்த்தமுள்ள செயல்பாடுகள், இன்னும் அழியாமல் இருக்கும் அறிவுத்திறன்களை ஊக்குவிக்கின்றன. நோயைக் குணப்படுத்துவது இதன் நோக்கம் அல்ல; முடிந்த அளவு நீண்ட காலத்துக்கு நோயாளியின் ஈடுபாட்டையும் செயல்திறனையும் தக்கவைப்பதே குறிக்கோள்.

உடற்பயிற்சியும் நடமாட்டமும் மூன்றாவது நன்மை. மேற்பார்வையின் கீழ் நடத்தல், சமநிலைப் பயிற்சிகள், தகுந்த உடல் அசைவுகள் ஆகியவை உடல் வலிமையையும் நடமாட்டத் திறனையும் சுதந்திரத்தையும் தக்கவைக்க உதவுகின்றன. செயலற்ற நிலை, செயல்திறன் வீழ்ச்சியை வேகப்படுத்திவிடும் என்பதால் இது மிகவும் முக்கியம்.

சமூகப் பழக்கம் நான்காவது நன்மை. டிமென்ஷியா, ஒருவரைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திவிடக்கூடும். மற்றவர்களுடன் இருப்பதும், பழகுவதும் துணையையும் ஒரு நோக்கத்தையும் உணர்வுபூர்வமான ஊக்கத்தையும் தருகின்றன.

உடல்நலத்தை நன்கு கண்காணிப்பது ஐந்தாவது நன்மை. கட்டமைக்கப்பட்ட ஒரு சூழலில், குடும்பத்தினர் கவனிக்கத் தவறக்கூடிய மாற்றங்களைப் பணியாளர்கள் எளிதில் அறிந்துகொள்கிறார்கள்: பசியின்மை, நீரிழப்பு, தூக்கத்தில் மாற்றம், அதிகரிக்கும் விழுதல்கள்[5], மோசமடையும் நடமாட்டம், நடத்தை மாற்றங்கள், மருந்து தொடர்பான சிக்கல்கள், தொற்றின் அறிகுறிகள் ஆகியவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிகிறது.

நடத்தை சார்ந்த அறிகுறிகளைச் சமாளிப்பது ஆறாவது நன்மை. சில நேரம், எரிச்சல், அலைந்து திரிதல், ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்தல் போன்றவை, சலிப்பு, தனிமை, வலி, மலச்சிக்கல், பசி அல்லது பொருத்தமற்ற சூழல் ஆகியவற்றால் ஏற்படலாம். ஒரு முன்கணிக்கக்கூடிய வழக்கமும் அர்த்தமுள்ள செயல்பாடுகளும் சில நோயாளிகளிடம் இந்தத் தூண்டல்களைக் குறைக்கக்கூடும். இருப்பினும், புதிய அல்லது கடுமையான நடத்தை அறிகுறிகள் தோன்றும்போது, முறையான மருத்துவ மதிப்பீட்டுக்குப் பகல்நேரப் பராமரிப்பு மாற்றல்ல.

குடும்பத்தைப் பொறுத்தவரை, டிமென்ஷியா உள்ள ஒருவரைப் பராமரிப்பது உடலளவிலும் உணர்வளவிலும் பெரும் சுமை. பகல்நேரப் பராமரிப்பு, பராமரிப்பாளருக்குச் சில மணி நேரங்களைத் தருகிறது; அந்த நேரத்தில் அவர் வேலைக்குச் செல்லலாம், மருத்துவ சந்திப்புகளுக்குப் போகலாம், ஓய்வெடுக்கலாம், வீட்டுப் பொறுப்புகளைக் கவனிக்கலாம், அல்லது பராமரிப்புச் சோர்விலிருந்து மீளலாம். இதில் ஒரு மறைமுக நன்மையும் உண்டு: சோர்வு குறைந்த பராமரிப்பாளர், வீட்டில் இன்னும் சிறப்பாகப் பராமரிப்பு அளிக்க முடிகிறது.

யாருக்கு இது பொருத்தமானது? 

பகல்நேரப் பராமரிப்பு சிலருக்கு மிகச் சிறப்பாகப் பொருந்தும். உடல் ரீதியாக நிலையாக இருந்தாலும் பகலில் மேற்பார்வை தேவைப்படுபவர்; லேசான முதல் மிதமான அளவிலான டிமென்ஷியா உள்ளவர், வழக்கம், தூண்டல், சமூகப் பழக்கத்தால் பயனடையக்கூடியவர்; நடமாட்டம் குறைந்தவர், பலவீனம் அல்லது ஆரம்பகட்டச் செயல்திறன் வீழ்ச்சி உள்ளவர், உடற்பயிற்சி அல்லது மறுவாழ்வுப் பயிற்சியால் பயனடையக்கூடியவர்; தனிமை, மனத்தளர்ச்சி, செயலற்ற நிலை நோக்கிச் செல்பவர்; மருந்து, உணவு, சில அன்றாடச் செயல்களுக்கு உதவி தேவைப்படும். ஆனால், நாள் முழுவதும் (இருபத்தி நான்கு மணி நேரமும்) தொடர்ச்சியான செவிலியர் பராமரிப்பு தேவைப்படாதவர்; வேலைக்குச் செல்லும், அல்லது பகல் முழுவதும் தொடர்ந்து கவனிக்க இயலாத பராமரிப்பாளரைக் கொண்டவர்.

அதேநேரம், குடும்பம் மிகவும் தாமதித்துவிட்டதற்கான அறிகுறிகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்: பராமரிப்பாளர் தூக்கமின்றி, தொடர்ந்து பதற்றத்தில், உடலளவில் சோர்ந்துபோயிருத்தல்; அடுத்த நெருக்கடியைத் தடுப்பதையே மையமாக வைத்து குடும்பம் தன் முழு வாழ்க்கையையும் ஒழுங்கமைக்கத் தொடங்குதல். இந்த நிலையை அடைவதற்கு முன்பே, தகுந்த ஆதரவைத் தேடுவது நல்லது.

‘பெற்றோரைக் கைவிடுகிறோமோ?’ என்ற குற்ற உணர்வு 

தமிழ்க் குடும்பங்களில் இந்தத் தீர்வுக்கு மிகப் பெரிய தடையாக இருப்பது, பராமரிப்பாளரின் குற்ற உணர்வுதான். என் பெற்றோரைப் பகல்நேரப் பராமரிப்புக்கு அனுப்புவதன் மூலம் அவர்களைக் கைவிடுகிறேனோ எனத் தவிக்கும் மகனுக்கும் மகளுக்கும் ஒரு விஷயம்…

உங்கள் பெற்றோரைப் பகல்நேரப் பராமரிப்புக்கு அனுப்புவது அவர்களைக் கைவிடுவதல்ல. பராமரிப்பையே விட்டுவிடுவதுதான் கைவிடுதல். நீங்கள் செய்வது, பராமரிப்பை இன்னும் சிறப்பாக வழங்க ஒரு வழியைத் தேடுவதுதான். பராமரிப்பு என்பது, ஒவ்வொரு வேலையையும் நீங்களே எத்தனை மணி நேரம் செய்கிறீர்கள் என்பதால் அளக்கப்படுவதில்லை. உங்கள் பெற்றோர் பாதுகாப்பாக, ஊட்டத்துடன், உணர்வுபூர்வமான ஆதரவுடன், மருத்துவப் பராமரிப்புடன், கண்ணியத்துடன் வாழ்கிறாரா என்பதைக் கொண்டுதான் அது அளக்கப்படுகிறது.

Also Read: பயம் வேண்டாம்… விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு![6]

ஒரு மையத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்… 

ஒரு பகல்நேரப் பராமரிப்பு மையத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், குடும்பம் பல விஷயங்களைச் சரிபார்க்க வேண்டும்.

முதலில், பணியாளர்களும் அவர்களது பயிற்சியும். உங்கள் பெற்றோரை உண்மையில் யார் கவனிப்பார்கள்? பணியாளர்களுக்கு டிமென்ஷியா பராமரிப்பு, விழுதல் தடுப்பு, அடிப்படை முதலுதவி, அவசரகால நடவடிக்கை ஆகியவற்றில் பயிற்சி உண்டா? எத்தனை முதியவருக்கு எத்தனை பணியாளர் என்கிற விகிதம் என்ன? கழிப்பறை, உணவு, நடமாட்டம் போன்ற நேரங்களில் போதுமான மேற்பார்வை இருக்கிறதா?

அடுத்து, மருத்துவ ஆதரவு. மையத்துடன் ஒரு மருத்துவர் அல்லது முதியோர் நல மருத்துவர் இணைந்திருக்கிறாரா? இயங்கும் நேரத்தில் ஒரு செவிலியர் இருப்பாரா? யாருக்காவது நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், ரத்தச் சர்க்கரை குறைவு (hypoglycaemia[7]), விழுதல் அல்லது திடீர் குழப்பம் ஏற்பட்டால் என்ன நடக்கும்? தெளிவான அவசரகால இடமாற்றத் திட்டமும், அருகில் ஒரு மருத்துவமனையும் உண்டா?

மூன்றாவது, பாதுகாப்பான சூழல். கைப்பிடிச் சட்டங்கள், வழுக்காத தரை, பாதுகாப்பான கழிப்பறை மற்றும் குளியல் வசதி, நல்ல வெளிச்சம், அவசரகால அழைப்பு அமைப்பு, விழுதல் தடுப்பு ஏற்பாடுகள், அலைந்து திரிபவர்களுக்காகப் பாதுகாப்பாக மூடப்படும் கதவுகள், பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடு ஆகியவற்றை நேரிலேயே பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

நான்காவது, டிமென்ஷியாவுக்கு ஏற்ற அணுகுமுறை. உங்கள் பெற்றோருக்கு டிமென்ஷியா இருந்தால், அந்த மையம் வெறும் மேற்பார்வையை மட்டும் அளிக்கிறதா, அல்லது டிமென்ஷியாவைப் புரிந்துகொண்டு செயல்படுகிறதா என்பதைக் கேளுங்கள். செயல்பாடுகள் நோயாளியின் அறிவாற்றல் அளவுக்கு ஏற்றவையா? எரிச்சல், அலைதல், மீண்டும் மீண்டும் ஒரே செயல், பராமரிப்பை மறுத்தல் ஆகியவற்றை அவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள்?

ஐந்தாவது, ஊட்டச்சத்தும் நீர்ச்சத்தும். என்ன உணவும் நீர்மங்களும் அளிக்கப்படுகின்றன, பசியின்மை, விழுங்குவதில் சிரமம், நீரிழிவு[8] போன்ற உணவுக் கட்டுப்பாடுகள், எடை இழப்பு ஆகியவற்றை எப்படிச் சமாளிக்கிறார்கள் எனக் கேளுங்கள்.

ஆறாவது, மருந்து மேலாண்மை. மருந்துகளை யார் கொடுக்கிறார்கள், அளவுகள் எப்படிப் பதிவு செய்யப்படுகின்றன, ஒரு மருந்து தவறவிடப்பட்டால் அல்லது மாற்றப்பட்டால் என்ன நடக்கிறது என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

ஏழாவது, செயல்பாடுகளும் மறுவாழ்வும். ஒரு நல்ல மையம், முதியவர்கள் நாள் முழுவதும் நாற்காலிகளில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் இடமாக மட்டும் இருக்கக் கூடாது. அர்த்தமுள்ள செயல்பாடுகள், உடற்பயிற்சி, நடமாட்டப் பயிற்சி, அறிவாற்றல் தூண்டல், சமூகப் பழக்கம், சுதந்திரத்தைத் தக்கவைக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றை எதிர்பாருங்கள்.

எட்டாவது, போக்குவரத்து. மையம் போக்குவரத்து வசதி அளித்தால், வாகனப் பாதுகாப்பு, பயிற்சி பெற்ற உதவியாளர்கள், சக்கர நாற்காலி வசதி, பயணத்தின்போது முதியவர் உடல்நலம் குன்றினால் என்ன நடக்கும் என்பது பற்றிக் கேளுங்கள்.

ஒன்பதாவது, செலவும் வெளிப்படைத்தன்மையும். தினசரிக் கட்டணம் மட்டுமல்ல, முழுச் செலவையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். போக்குவரத்து, உணவு, செவிலியர் பராமரிப்பு, மறுவாழ்வு, சிறப்பு உதவி, அவசரகாலப் பராமரிப்பு, கூடுதல் சேவைகளுக்கான கட்டணங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சேர்ப்பதற்கு முன் நேரில் சென்று பார்வையிடுங்கள்.

கட்டிடத்தை மட்டும் பார்க்காமல், பணியாளர்களை உற்றுக் கவனியுங்கள். அவர்கள் முதியவர்களிடம் எப்படிப் பேசுகிறார்கள்? பெயர் சொல்லி அழைக்கிறார்களா? பொறுமையாக இருக்கிறார்களா? அங்குள்ள முதியவர்கள் ஈடுபாட்டுடன், நிம்மதியாக, மரியாதையுடன் இருக்கிறார்களா? இதுவே ஒரு மையத்தின் தரத்தை உண்மையில் காட்டிவிடும்.

நினைவுகள் மங்கலாம்; ஆனால், ஒரு முதியவரின் கண்ணியம் மங்கக் கூடாது. உலக அல்சைமர் தினத்தில், நம் வீட்டு முதியவர்களைப் பாதுகாப்பாகவும் அன்போடும் வைத்திருப்பதற்கான வழிகளை அறிந்துகொள்வோம். உங்கள் குடும்பச் சூழலுக்கு எது சரியான தீர்வு என்பதை முடிவு செய்ய, ஒரு முதியோர் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

 

தெரிந்துகொள்வோம்

சேர்ப்பதற்கு முன் மையத்தை நேரில் பார்வையிடும்போது, கட்டிடத்தையும் வசதிகளையும் மட்டும் பார்த்துவிட்டு வராதீர்கள். பணியாளர்கள் முதியவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் முதியவரைப் பெயர் சொல்லி அன்போடு அழைக்கிறார்களா, பொறுமை காட்டுகிறார்களா, அங்குள்ள முதியவர்கள் மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் நடத்தப்படுகிறார்களா என்பதே ஒரு மையத்தின் உண்மையான தரத்தை வெளிப்படுத்தும்.

 

Dr. எஸ். லாவண்யா MBBS, MD[9]
முதியோர் நல மருத்துவர்
காவேரி மருத்துவமனை – திருச்சி[10]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. Dementia: https://www.kauveryhospital.com/blog/psychiatry/challenge-your-brain-in-order-to-ward-off-dementia/
  2. அல்சைமர் நோய்தான்: https://www.kauveryhospital.com/blog/neurology/alzheimers-a-growing-problem-of-the-subconscious-mind/
  3. rehabilitation: https://www.kauveryhospital.com/blog/geriatrics/what-is-geriatric-rehabilitation/
  4. உடற்பயிற்சி: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/facts-about-exercise/
  5. அதிகரிக்கும் விழுதல்கள்: https://www.kauveryhospital.com/blog/geriatrics/fall-prevention-tips-for-seniors/
  6. பயம் வேண்டாம்… விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு!: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/dont-be-afraid-awareness-is-the-best-defense/
  7. hypoglycaemia: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/dysglycaemia-glucose-irregularities-and-the-subtle-ways-they-affect-your-life/
  8. நீரிழிவு: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/complete-solutions-and-modern-treatments-for-diabetes/
  9. Dr. எஸ். லாவண்யா MBBS, MD: https://www.kauveryhospital.com/doctors/trichy-cantonment/geriatrics/dr-s-lavanya/
  10. காவேரி மருத்துவமனை – திருச்சி: https://www.kauveryhospital.com/our-locations/trichy-cantonment/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/even-when-memories-fade-love-must-not-fade/