புகைப்பிடிக்காதவருக்கும் நுரையீரல் புற்றுநோயா?

by admin-blog-kh | August 12, 2026 5:55 am

நான் வாழ்நாளில் ஒரு சிகரெட்டைக்கூடத் தொட்டதில்லையே; பிறகு எப்படி எனக்கு நுரையீரல் புற்றுநோய் வந்தது?[1]’ – இது என் மருத்துவ அறையில் நான் அடிக்கடி எதிர்கொள்ளும், நம்பமுடியாத அதிர்ச்சியுடன் கேட்கப்படும் கேள்வி. நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே வரும் என்கிற நம்பிக்கை இன்னும் பரவலாக உள்ளது. ஆனால், அது இனி உண்மை அல்ல.

 

உலகளவில் நுரையீரல் புற்றுநோய்களில்[2] சுமார் 10 முதல் 25 சதவிகிதம், ஒருபோதும் புகைப்பிடிக்காதவர்களுக்கே ஏற்படுகின்றன. ஆசிய நாடுகளில், குறிப்பாகப் பெண்களிடையே, இந்த விகிதம் இன்னும் அதிகம். புகைப்பிடித்தல்தான் மிகப்பெரிய ஆபத்துக் காரணி; ஆனால், அது ஒரே காரணம் அல்ல. காற்று மாசு[3], மறைமுகப் புகை (Passive Smoking), சமையல் புகை, தொழில்சார் வெளிப்பாடுகள், மரபணு மாற்றங்கள் எனப் பல காரணிகள் இதற்குப் பங்களிக்கின்றன. நுரையீரல் உள்ள எவருக்கும் இந்நோய் வரலாம் என்பதே உண்மை. இதில் குற்ற உணர்வுக்கோ, யாரையும் பழிப்பதற்கோ இடமில்லை; நம் கவனம் ஆரம்பக் கண்டறிதலிலும் சிறந்த சிகிச்சையிலும் இருக்க வேண்டும்.

பெண்களிடையே ஏன் அதிகரிக்கிறது

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் உள்ள பெண்களில் பலர் ஒருபோதும் புகைப்பிடித்ததில்லை. நீண்டகால உட்புற காற்று மாசு (சமையல் புகை, விறகு போன்ற உயிர்-எரிபொருள் புகை), வெளிப்புறக் காற்றில் உள்ள நுண்துகள் மாசு (PM2.5), குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வரும் மறைமுகப் புகை, மற்றும் ஆசியப் பெண்களிடையே அதிகம் காணப்படும் EGFR போன்ற மரபணு மாற்றங்கள் ஆகியவை காரணங்களாக இருக்கலாம். மேம்பட்ட விழிப்புணர்வும் நவீன பரிசோதனை வசதிகளும் அதிக நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகின்றன.

குடும்ப வரலாறு ஆபத்தைச் சற்று அதிகரிக்கலாம்; ஆனால், மரபணுவால் மட்டுமே ஒருவருக்கு நிச்சயம் புற்றுநோய் வரும் என்று அர்த்தமல்ல. ஓர் உறவினருக்கு நோய் இருந்தது என்பதற்காக மட்டும் வழக்கமான ஸ்கிரீனிங் பரிசோதனை பரிந்துரைக்கப்படுவதில்லை.

வயது, புகைப்பழக்க வரலாறு, தொழில்சார் வெளிப்பாடு, குடும்ப வரலாறு ஆகியவற்றைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. நெருங்கிய குடும்பத்தில் பலருக்கு நோய் இருந்தால், நுரையீரல் நிபுணரிடம் ஆபத்து குறித்து ஆலோசிப்பது நல்லது[4].

காற்று மாசு 

புகைப்பிடித்தலைத் தாண்டி, போக்குவரத்து மற்றும் தொழிற்சாலை மாசு, மோசமான காற்றோட்டமுள்ள சமையலறை, ஆஸ்பெஸ்டாஸ், சிலிக்கா, டீசல் புகை போன்ற தொழில்சார் வெளிப்பாடுகள், மார்பகப் பகுதிக்கு முன்னர் அளிக்கப்பட்ட கதிர்வீச்சு ஆகியவையும் ஆபத்தை அதிகரிக்கின்றன. சென்னை போன்ற நகரங்களில் காற்று மாசு

ஒரு முக்கியப் பொது சுகாதாரப் பிரச்னையாகி விட்டது; நீண்டகாலம் மாசடைந்த காற்றை சுவாசிப்பது, புகைப்பிடிக்காதவர்களுக்கும் ஆபத்தை அதிகரிக்கும்.

Also Read: தூக்கக் கோளாறுகளும் நுரையீரல் கோளாறுகளும்[5]

மாசை முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டாலும், வீட்டில் காற்றோட்டத்தை மேம்படுத்தி, புகையிலைப் புகையைத் தவிர்த்து, தூய்மையான சமையல் எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் வெளிப்பாட்டைக் குறைக்கலாம்.

புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் 

நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் நுட்பமானவை; சாதாரணத் தொற்று என்று தவறாக நினைக்கப்படலாம். மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், ஒருமுறையேனும் இருமலில் ரத்தம், நீடித்த மார்பு வலி, மூச்சுத் திணறல், காரணமின்றி எடை குறைவு அல்லது பசியின்மை, திரும்பத் திரும்ப வரும் மார்புத் தொற்று, நீடித்த குரல் கம்மல் ஆகியவற்றைப் புறக்கணிக்கவே கூடாது. முதல் கட்டமாக மார்பு எக்ஸ்-கதிர் (Chest X-ray) எடுக்கப்படுகிறது; சந்தேகம் இருந்தால் CT ஸ்கேன் மேலும் விரிவான தகவலைத் தருகிறது. நீண்டகாலம் அதிகம் புகைப்பிடித்தவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ளவர்களுக்கு, குறைந்த அளவு CT பரிசோதனை (Low-dose CT) நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது.

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சைகள் 

புகைப்பிடிக்காதவரின் நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் வேறுவிதமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களின் புற்றுநோய்களில் EGFR அல்லது ALK போன்ற குறிப்பிட்ட மரபணு மாற்றங்கள் இருக்கக்கூடும்; இவற்றை மிகவும் பயனுள்ள இலக்கு மருந்துகளால் (Targeted Therapy[6]) சிகிச்சை செய்யலாம். எனவே, சரியான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க, நாங்கள் மூலக்கூறு பரிசோதனை (Molecular Testing) செய்கிறோம்.

ஆரம்பநிலை நோய்க்கு அறுவை சிகிச்சை, துல்லிய கதிர்வீச்சு சிகிச்சை[7], தேவைப்படும்போது கீமோதெரபி[8], இலக்கு சிகிச்சை, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைப் பயன்படுத்தும் நோய் எதிர்ப்பு சிகிச்சை (Immunotherapy) என நவீன வழிகள் பல உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இதற்கான சிகிச்சை பெரிதும் முன்னேறியுள்ளது. பலர் இன்று நல்ல வாழ்க்கைத் தரத்துடன் நீண்ட காலம் வாழ்கிறார்கள்; ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் சிலருக்கு முழுமையான குணமும் சாத்தியம்.

நினைவில் கொள்ளுங்கள் 

நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமேயான நோய் அல்ல. நீடித்த சுவாச அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்காதீர்கள். ஆரம்பக் கண்டறிதலே பல உயிர்களைக் காக்கிறது.

 

புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல்; இருமலில் ரத்தம் (ஒருமுறையேனும்); நீடித்த மார்பு வலி; மூச்சுத் திணறல்; காரணமின்றி எடை/பசி குறைவு; திரும்பத் திரும்ப வரும் மார்புத் தொற்று; நீடித்த குரல் கம்மல். இவை நீடித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

 

Dr. செல்வி சி., DTCD, EDARM, DNB[9]
(Pulmonary Medicine), FSM
நுரையீரல் மருத்துவ நிபுணர்
காவேரி மருத்துவமனைசென்னை[10]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. நான் வாழ்நாளில் ஒரு சிகரெட்டைக்கூடத் தொட்டதில்லையே; பிறகு எப்படி எனக்கு நுரையீரல் புற்றுநோய் வந்தது?: https://www.kauveryhospital.com/blog/cancer/can-non-smokers-get-lung-cancer/
  2. நுரையீரல் புற்றுநோய்களில்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/this-is-a-challenge-for-lung-health/
  3. காற்று மாசு: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/the-hidden-dangers-of-air-pollution/
  4. நுரையீரல் நிபுணரிடம் ஆபத்து குறித்து ஆலோசிப்பது நல்லது: https://www.kauveryhospital.com/doctors/chennai/pulmonology/
  5. தூக்கக் கோளாறுகளும் நுரையீரல் கோளாறுகளும்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/sleep-disorders-and-lung-disorders/
  6. Targeted Therapy: https://www.kauveryhospital.com/ima-journal/ima-journal-april-2022/targeted-therapy-for-cancer/
  7. கதிர்வீச்சு சிகிச்சை: https://www.kauveryhospital.com/news-events/a-day-through-the-radiotherapy-department/
  8. கீமோதெரபி: https://www.kauveryhospital.com/chemotherapy/
  9. Dr. செல்வி சி., DTCD, EDARM, DNB: https://www.kauveryhospital.com/doctors/chennai-vadapalani/pulmonology/dr-c-selvi/
  10. காவேரி மருத்துவமனைசென்னை: https://www.kauveryhospital.com/our-locations/chennai-vadapalani/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/lung-cancer-in-non-smokers-too/