குழந்தை பிறந்தது… அம்மா தொலைந்தாளா?

by admin-blog-kh | June 12, 2026 12:53 pm

குழந்தை பிறந்து முப்பது நாட்கள். வீட்டில் சந்தோஷம். ஆனால், அந்த இளம் அம்மா மட்டும் பாத்ரூமில் கதவை மூடி அழுகிறாள். ‘நான் ஒரு மோசமான தாய்என்று தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறாள். இது ஒரு பெண்ணின் கதை அல்ல; ஐந்தில் ஓர் இந்தியத் தாயின் கதை. ஆம்தாய்மை மனநலம் குறித்த விழிப்புணர்வு மிக அவசியமான தருணத்தில் வாழ்கிறோம் நாம்.

குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகியிருக்கிறது. வீடு நிறைய வாழ்த்து அட்டைகள், பூக்கள், புன்னகைகள். ஆனால், அந்த அம்மா மட்டும், இரவு முழுவதும் விழித்திருந்து, பகலில் குழந்தையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு காரணமே இல்லாமல் அழுகிறார். நான் ஒரு மோசமான அம்மாவோ என்கிற குற்ற உணர்வு அவரைத் தின்று கொண்டிருக்கிறது. வீட்டார் கேட்கும் ஒரே கேள்வி, ‘உனக்கு என்ன குறை?’

இந்த அன்னையர் தினத்தில், நாம் பேச வேண்டிய கதை இதுதான். ஏனெனில், ஒவ்வோர் ஐந்து இந்தியத் தாய்மார்களில் ஒருவருக்கு, பிரசவத்துக்குப் பிறகு மனச்சோர்வு வருகிறது. அதில் பெரும்பாலோர் எந்த சிகிச்சையும் இல்லாமல், எந்த ஆதரவும் இல்லாமல், தாய்மை என்கிற பெயரில் மௌனமாகத் தவிக்கிறார்கள்.

பூக்களும் வாழ்த்துக்களும் மட்டுமே போதாது 

அன்னையர் தினத்தை நாம் பெரும்பாலும் ஒரு மகிழ்ச்சி தருணமாகவே பார்க்கிறோம். ஆனால், உண்மையில் தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய உடல்ரீதியான, உணர்வுரீதியான மாற்றம். நாம் அம்மாக்களைக் கொண்டாடுகிறோம்[1]; ஆனால், அவர்களின் உள்ளார்ந்த போராட்டங்களை – குறிப்பாக மனநல சவால்களை அரிதாகவே ஒப்புக்கொள்கிறோம். இந்த ஆண்டு, நமது கவனம் தாய்மை மனநலத்தின் மீது திரும்ப வேண்டும். ஏனெனில், இது தாயையும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது. சிகிச்சையளிக்கப்படாத மனநலப் பிரச்னைகள், குழந்தையுடனான பிணைப்பை, தாய்ப்பாலூட்டலை[2], குழந்தையின் வளர்ச்சியையே பாதிக்கின்றன. பல பெண்கள் விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் மௌனமாகவே தவிக்கிறார்கள். இதை உணர்வது, தாய்மையைச் சிறுமைப்படுத்துவது அல்ல… மாறாக, தாய்மையை மேலும் பாதுகாப்பானதாக, மனிதாபிமானமானதாக மாற்றுவதே.

பேபி ப்ளூஸ், பிரசவத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு, மனப்பிறழ்வு 

பிரசவத்துக்குப் பின் வரும் உணர்ச்சி மாற்றங்களை ஒரு நிறமாலை போலக் காணலாம். முதலில், பேபி ப்ளூஸ் என்கிற நிலை. இது மிகவும் பொதுவானது. குழந்தை பிறந்தவுடன் 70 முதல் 80 சதவிகிதம் தாய்மார்களைப் பாதிக்கிறது. பிரசவத்துக்குப் பிந்தைய முதல் வாரத்தில் திடீர் அழுகை, மனநிலை மாற்றம், எரிச்சல் போன்றவை வரும். இதற்கு எந்தச் சிகிச்சையும் தேவையில்லை; ஓரிரு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும்.

ஆனால், பிரசவத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு[3] என்பது வேறு. இது 10 முதல் 20 சதவிகிதம் தாய்மார்களைப் பாதிக்கிறது. பல வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும். தொடர்ச்சியான சோகம், குழந்தையிடமோ மற்ற செயல்களிலோ ஆர்வமின்மை, களைப்பு, குற்ற உணர்வு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். இதற்கு மருத்துவ உதவியும் ஆலோசனையும் அவசியம்.

மூன்றாவது நிலை… பிரசவத்துக்குப் பிந்தைய மனப்பிறழ்வு. இது மிகவும் அரிதானது. 1000 பிரசவங்களில் ஒன்று அல்லது இரண்டு தாய்மார்களுக்கே வரும். ஆனால், மிக மிகத் தீவிரமானது. மாயக்காட்சிகள், மாயத் தோற்றங்கள், குழப்பம், கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள் போன்றவை தோன்றும். இது ஒரு மனநல அவசர நிலை; உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். இம்மூன்று நிலைகளையும் வேறுபடுத்தும் அடிப்படைக் காரணிகள்… அதன் தீவிரம், கால அளவு, யதார்த்தத்துடனான தொடர்பிழப்பு ஆகியவைதான்.

மௌனத்தின் பின்னால் இருக்கும் புள்ளிவிவரங்கள் 

இந்தியாவில் ஒவ்வோர் ஐந்து தாய்மார்களில் ஒருவருக்கு, பிரசவத்துக்குப் பின் மனச்சோர்வு வரக்கூடும் என்றாலும், அதில் மிகச் சிலரே உதவி நாடி வருகிறார்கள். ஏன் இந்த மௌனம்?

பல காரணங்கள் உள்ளன. முதல் காரணம், மனநலப் பிரச்னைகள் பற்றிய களங்கம். ‘மனநோய்’ என்கிற சொல்லே பலருக்குப் பயத்தை உண்டாக்கிறது. இரண்டாவது, ‘எல்லா அம்மாக்களுக்கும் இப்படித்தான் இருக்கும்’ என்கிற சாதாரணமயமாக்கல். மூன்றாவது, வழக்கமான பிரசவத்துக்குப் பிந்தைய சோதனைகளில் மனநலச் சோதனை நடக்காமை. நான்காவது, ‘சந்தோஷமாக இருப்பது போல காட்டவேண்டும்’ என்கிற குடும்ப அழுத்தம். ஐந்தாவது, அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.

என் மருத்துவ அனுபவத்தில், பெண்கள் அறிகுறிகள் மிகவும் தீவிரமாகும் வரை அவற்றைக் குறைத்தே மதிப்பிடுகிறார்கள். மனச்சோர்வை மறைத்து, தலைவலி[4], முதுகுவலி போன்ற உடல்ரீதியான புகார்களாக மட்டுமே சொல்கிறார்கள். பலர் பல மாதங்கள் கழித்துதான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஆதரவு இன்மையும் தூக்கமின்மையும் இதில் வலுவான தொடர்பு கொண்டிருப்பதை நான் தொடர்ந்து பார்க்கிறேன்.

குடும்பத்தினர் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் 

ஒரு புதிய தாயின் மனநலப் பிரச்னையை முதலில் கண்டறிய வேண்டியது குடும்பத்தினரே. தொடர்ச்சியான சோகம் அல்லது அழுகை, எரிச்சல் அல்லது கோப வெடிப்புகள், குடும்பத்திடமிருந்தோ குழந்தையிடமிருந்தோ விலகி இருத்தல், புத்திளம் குழந்தையிடம் ஆர்வமின்மை, ‘நான் ஒரு மோசமான தாய்’ என்கிற அளவுக்கு அதிகப்படியான குற்ற உணர்வு, குழந்தை தூங்கும்போதும் தூங்க முடியாமை, பசியின்மை, தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ளவோ குழந்தையைக் காயப்படுத்தவோ தோன்றும் எண்ணங்கள் (இது மிகத் தீவிரமான அபாயக்குறி).

இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், அது வெறும் ‘புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் காலம்’ அல்ல… மருத்துவ உதவி தேவைப்படும் அவசர நிலை. உடனடியாக மருத்துவ நிபுணர்களை அணுகுங்கள்[5].

கர்ப்பக்காலத்திலேயே தொடங்கும் பாதிப்பு 

மனநலப் பிரச்னைகள் பிரசவத்துக்குப் பிறகு மட்டும் வருவதில்லை. பல பெண்களுக்கு கர்ப்ப காலத்திலேயே கவலைக் கோளாறும் மனச்சோர்வும் தொடங்கிவிடுகிறது.

Also Read: தாய்ப்பால் ஊட்டினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க முடியும்![6]

ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்கள் கர்ப்ப காலத்தில் பெரிதும் மாறுபடுகின்றன. உடல்ரீதியான அசௌகரியம், களைப்பு, பிரசவம் குறித்த பயம், முந்தைய கர்ப்பத்தில் ஏற்பட்ட இழப்பு, உணர்வுரீதியான ஆதரவு இல்லாமை, பொருளாதார அல்லது உறவுசார் அழுத்தம்… இவையெல்லாம் கர்ப்பிணிகளின் மனதைப் பாதிக்கின்றன. கருவுற்றிருக்கும்போதே ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம். அதன் மூலம் அதிக ஆபத்தில் இருக்கும் பெண்களை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். தேவையான உளவியல் ஆதரவு அளிக்கலாம். பிரசவத்துக்குப் பின் தேவைப்படும் ஆதரவைக்கூட முன்கூட்டியே திட்டமிடலாம். ஆரம்பக்கட்ட தலையீடு, பிறகு வரும் பெரும் பிரச்னைகளைத் தடுக்கிறது.

ஆரோக்கியமா குழந்தை பெத்திருக்கஅப்புறம் என்ன சோகம்

இந்த ஒரு வாக்கியம், எத்தனை தாய்மார்களை உடைத்திருக்கிறது என்பது கணக்கில்லை. இந்தியக் குடும்பங்களில் புதிய தாயிடம் மிக அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இதுவே. ஆனால், இது பாதகமான கருத்து.

இதுபோன்ற வார்த்தைகள் அந்த அம்மாவின் உணர்வுகளை மதிக்காமல் ஒதுக்குகின்றன. அவளின் குற்ற உணர்வையும் வெட்கத்தையும் அதிகரிக்கின்றன. உதவி நாடுவதை மேலும் தாமதப்படுத்துகின்றன. நாம் ஒரு சமூகமாகச் செய்ய வேண்டியது, தாய்மை பற்றிய உணர்வுகளைப் பற்றி திறந்த உரையாடல்களை சாதாரணமாக்குவதுதான்.

‘மனநலம் என்பது தேர்வல்ல; அது ஒரு மருத்துவ நிலை’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தீர்ப்பு வழங்குவதற்குப் பதிலாக, காது கொடுத்து கேட்பது அவசியம். ஆரோக்கியமான குழந்தை இருக்கிறது என்பது, ஒரு தாயின் உணர்வுரீதியான தேவைகளை ரத்து செய்வதில்லை.

கணவன், குடும்பம், பணியிடம்ஆதரவின் மூன்று தூண்கள் 

தாய்மை மனநலத்தைப் பாதுகாக்க ஆதரவு அமைப்புகள் இன்றியமையாதவை. கணவன்தான் முதல் மற்றும் மிக முக்கியமான ஆதரவு. உணர்வுரீதியாக உடன் இருக்க வேண்டும். குழந்தையைப் பராமரிப்பதிலும் இரவுநேரக் கவனிப்பிலும் சமமாகப் பங்கேற்க வேண்டும். மனதில் உள்ளதைத் திறந்து பேசும்படி தன் மனைவியை ஊக்கப்படுத்த வேண்டும்.

குடும்பத்தினர் உணவு சமைப்பது, வீட்டு வேலைகளில் உதவுவது என நடைமுறை உதவிகளை அளிக்க வேண்டும். விமர்சனங்கள், ஒப்பீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஓய்வு மற்றும் குணமடைதலுக்கான காலத்தை மதிக்க வேண்டும். ‘பக்கத்து வீட்டு அம்மா இப்படி இருக்கிறாரே, நீ ஏன் இல்லை’ என்கிற ஒப்பீடுகள் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

பணியிடமும் பொறுப்பேற்க வேண்டும். போதுமான மகப்பேறு விடுமுறை, நெகிழ்வான பணிக்குத்  திரும்பும் கொள்கைகள், தாய்ப்பால் ஊட்டுவதற்கான இடவசதிகள், மனநலம் பற்றிய விழிப்புணர்வு… இவை எல்லாம் அவசியம். இங்கு செய்யப்படும் சிறு மாற்றங்கள்கூட, பெரும் நோய்களைத் தடுக்கக் கூடியவை.

ஒவ்வொரு தாய்க்கும் ஒரு செய்தி…

நீங்கள் மௌனமாகத் தவிக்கிறீர்கள் என்றால், இதை அறிந்துகொள்ளுங்கள்: நீங்கள் தனியாக இல்லை. இது மிகவும் பொதுவானது, மேலும் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது. உதவி நாடுவது பொறுப்புள்ள, அன்பான செயல். அது பலவீனமல்ல, வலிமை!

நவீன சிகிச்சை முறைகளில் ஆலோசனை மற்றும் நல்ல சிகிச்சைகள் உள்ளன. ஓர் அம்மாவாக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் உங்களுக்கு அக்கறை தேவை. அதை நீங்கள் கேட்கத் தயங்க வேண்டாம்!

 

தெரிந்துகொள்வோம்

தாய்மை மனநலம் குறித்த முக்கியமான உண்மைகள்

 
இந்த அன்னையர் தினத்தில், உங்கள் அம்மாவுக்கோ, மனைவிக்கோ, மகளுக்கோ, சகோதரிக்கோ ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள்:

நீ நல்லா இருக்கியா?’

இந்த ஒரு கேள்வி,

ஓர் உயிரையும் காப்பாற்றலாம்!

டாக்டர் எம். சுதா சாந்தி MBBS, DGO, DNB (Obstetrics and Gynaecology)[7]
மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் நிபுணர்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி[8]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

 

Endnotes:
  1. தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய உடல்ரீதியான, உணர்வுரீதியான மாற்றம். நாம் அம்மாக்களைக் கொண்டாடுகிறோம்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/tips-for-healthy-and-beautiful-hair-during-pregnancy/
  2. தாய்ப்பாலூட்டலை: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/prioritize-breastfeeding-create-sustainable-support-systems/
  3. பிரசவத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு: https://youtu.be/LPjodSBozuk?si=eS7XR5EOOtYlFVWo
  4. தலைவலி: https://www.kauveryhospital.com/blog/neurology/what-kind-of-headache-do-you-have-what-could-be-the-cause/
  5. உடனடியாக மருத்துவ நிபுணர்களை அணுகுங்கள்: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/obstetrics/
  6. தாய்ப்பால் ஊட்டினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க முடியும்!: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/breastfeeding-can-prevent-breast-cancer/
  7. டாக்டர் எம். சுதா சாந்தி MBBS, DGO, DNB (Obstetrics and Gynaecology): https://www.kauveryhospital.com/doctors/trichy-cantonment/obstetrics-and-gynecology/dr-m-sudha-shanthi/
  8. மா காவேரி மருத்துவமனை, திருச்சி: https://www.kauveryhospital.com/maa-kauvery-trichy/women-children-hospital/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-baby-was-born-was-the-mother-lost/