மழை வந்தாச்சு… உஷாரா இருங்க!

by admin-blog-kh | July 20, 2026 12:45 pm

கடும் வெயிலில் இருந்து மழைக்காலத்துக்கு மாறும் இந்தச் சில வாரங்கள், உடலுக்கு ஒரு பெரிய சவால். ஈரப்பதமும் வெப்பநிலை மாற்றமும் கிருமிகள் பெருகச் சாதகமாகின்றன. டெங்கு[1], டைஃபாய்டு, எலி காய்ச்சல், வயிற்றுத் தொற்று என நோய்கள் அதிகரிக்கும் இந்தக் காலத்தில், சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, கொசுக் கட்டுப்பாடு ஆகியவையே குடும்பத்தைக் காக்கும்.

வறண்ட நிலத்தில் முதல் மழை விழும்போது கிடைக்கும் ஆசுவாசம் தனி. ஆனால், மருத்துவர்களைப் பொறுத்தவரை, இந்தப் பருவ மாற்றம் ஒரு புதிய சவால். கடும் வெயிலில் இருந்து திடீரென ஈரப்பதத்துக்கும் மாறிமாறி வரும் வெப்பநிலைக்கும் உடல் சட்டென மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சூழல், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் பெருகுவதற்கு ஏற்றதாக அமைகிறது.

இதன் காரணமாக ஒரு வீட்டில் பெரும்பாலும் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு இன்னும் முழுமையாக வளராததால், அவர்களுக்கு முதலில் இருமல், சளி, காய்ச்சல் வருகிறது. அவர்களிடமிருந்து இது பெரியவர்களுக்குப் பரவுகிறது. ஒரு வேடிக்கையான – ஆனால், கவலையான உண்மை என்னவென்றால், குழந்தைக்கு மூன்று நாளில் சரியாகும் காய்ச்சல், பெரியவர்களுக்கு அதிக கடுமையாகவும் நீண்ட நாள் நீடிப்பதாகவும் இருக்கும். ஏனெனில், பெரியவர்கள் ஆரம்ப அறிகுறிகளை ‘வேலைச் சோர்வு’ என்று அலட்சியம் செய்துவிடுகிறார்கள். வயதானவர்கள், சர்க்கரை, சிறுநீரக, சுவாச நோயாளிகள் ஆகியோருக்கு இது மேலும் ஆபத்தானது.

மழைக்காலத்தில் சில நோய்கள் குறிப்பாக அதிகரிக்கின்றன. கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா; அசுத்தமான தண்ணீர்[2] மற்றும் உணவால் பரவும் டைஃபாய்டு, வயிற்றுப்போக்கு; எலியின் சிறுநீர் கலந்த நீரின் வழியே பரவும் எலி காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்); ஈரப்பதத்தால் வரும் பூஞ்சைத் தொற்றுகள் என பல உண்டு.

எலி காய்ச்சல் குறித்து ஒரு தவறான எண்ணம் உண்டு; எலியை நேரில் பார்த்தால்தான் வரும் என்பதில்லை. வெள்ளம் தேங்கிய தண்ணீரில் காலில் ஒரு சிறு கீறல் இருந்தாலும் போதும், கிருமி உள்ளே நுழைந்துவிடும்.

Also Read: குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்கள்[3]

தண்ணீரும் உணவும் இங்கே மிக முக்கியம். உயர்தர ஆர்ஓ பில்டர் இருந்தாலும், குடிநீரைக் கொதிக்கவைத்து ஆறவைத்தே குடியுங்கள்; கொதிநிலை பெரும்பாலான கிருமிகளை அழித்துவிடும்.

வெளியில் சாப்பிடச் செல்லும்போது, கடையில் கொடுக்கும் தண்ணீரை நம்பாமல், வீட்டிலிருந்து கொதிக்கவைத்த தண்ணீரைக் கொண்டு செல்லுங்கள். காய்கறிகளை நன்கு கழுவி, சமைப்பதற்கு முன் கொஞ்ச நேரம் வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து ஊறவைப்பது நல்லது. வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்காய், சாத்துக்குடி, மற்றும் இஞ்சி, மஞ்சள், பூண்டு சேர்ந்த சூடான உணவு உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

கொசுக்கள் மிகச் சிறிதளவு தேங்கிய நீரிலும் முட்டையிட்டுப் பெருகும். எனவே, பழைய டயர்கள், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகள், குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏசியின் கீழுள்ள நீர்த்தட்டுகள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், கொல்லைப்புறத்தில் கிடக்கும் உரல் என எல்லாவற்றிலும் தேங்கிய நீரை வாரத்துக்கு ஒருமுறை காலி செய்து உலரவைக்க வேண்டும். குழந்தைகளுக்கு முழுக்கை ஆடைகள் அணிவியுங்கள். மாலை நான்கு முதல் ஆறு மணி வரை கொசுக்கள் அதிகம் என்பதால், அந்த நேரத்தில் ஜன்னல்களை மூடி, பாதுகாப்பான கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள். இரவில் கொசுவலை அவசியம்.

மழைக்காலக் காய்ச்சலை ‘சாதாரண சளிதானே’ என்று அலட்சியம் செய்வது ஆபத்து. சாதாரண சளியில் லேசான காய்ச்சலும் மூக்கொழுகலும் இருக்கும். 48 மணி நேரத்தில் சரியாகிவிடும். ஆனால், நடுக்கத்துடன் கூடிய 102 முதல் 103 டிகிரி அதிகக் காய்ச்சல், இரண்டு நாளுக்கு மேல் தொடரும் காய்ச்சல், கடுமையான உடல்வலி, மூச்சுத்திணறல், அடர்த்தியான சளியுடன் இருமல், தொடர் வாந்தி, கடும் வயிற்றுவலி, தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஆகியவை எச்சரிக்கை அறிகுறிகள்.

இவை இருந்தால் சொந்த வைத்தியத்தை நிறுத்திவிட்டு உடனே மருத்துவரை அணுகுங்கள். வயதானவர்களும் சர்க்கரை, ஆஸ்துமா[4], இதய நோயாளிகளும் இரண்டு நாள்கூடக் காத்திராமல், காய்ச்சல் தொடங்கியதுமே மருத்துவரை அணுக வேண்டும்.

காவேரி மருத்துவமனையில்[5] காய்ச்சலுக்கான சிறப்பு கிளினிக் உள்ளது. டெங்கு (NS1, IgG, IgM) மற்றும் மலேரியாவை ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் கண்டறியும் எலிசா (ELISA) பரிசோதனை வசதி, 24 மணி நேர அவசர சிகிச்சை[6], தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவை உள்ளன.

மழைக்காலம் நோயின் பருவம் அல்ல, புத்துணர்ச்சியின் பருவம். சூடான சத்தான உணவு, காய்ந்த சுத்தமான வீட்டுச் சூழல், அபாயக் குழுவினருக்குத் தடுப்பூசி ஆகியவற்றுடன், மழையை மனநிறைவோடு அனுபவிக்கலாம்!

 

தடுப்பூசியால் ஒரு முன்னெச்சரிக்கை!

அபாயக் குழுவினருக்கு – அதாவது 50 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை, சிறுநீரக நோய், ஆஸ்துமா அல்லது நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு, தடுப்பூசியே சிறந்த முன்னெச்சரிக்கை. மருத்துவர்கள் இன்று இன்ஃப்ளுயன்ஸா (காய்ச்சல்) மற்றும் நிமோகோகல் தடுப்பூசிகளைப் பரிந்துரைக்கின்றனர். நிமோகோகல் தடுப்பூசி நீண்டகாலப் பாதுகாப்பு தர, இன்ஃப்ளுயன்ஸா தடுப்பூசியை ஆறு மாதத்துக்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்குச் சுமார் இரண்டு மாதம் முன்பே இவற்றைப் போட்டுக்கொண்டால், உடல் போதிய எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக்கொள்ளும். தடுப்பூசி எல்லா நோய்களையும் தடுக்காவிட்டாலும், நோய் வந்தாலும் அதன் தீவிரத்தைப் பெருமளவு குறைக்கும்.

 

Dr. பி. தீபக் குமார், MBBS, MD[7]
பொது மருத்துவ நிபுணர்
காவேரி மருத்துவமனைசேலம்[8]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. டெங்கு: https://www.kauveryhospital.com/blog/infectious-diseases/dengue-fever-alert/
  2. மழைக்காலத்தில் சில நோய்கள் குறிப்பாக அதிகரிக்கின்றன. கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா; அசுத்தமான தண்ணீர்: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/monsoon-health-risks-how-to-avoid-dengue-flu-and-water-borne-diseases/
  3. குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்கள்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/infectious-diseases-in-children/
  4. ஆஸ்துமா: https://www.kauveryhospital.com/blog/pulmonology/severe-asthma-types-and-treatments/
  5. காவேரி மருத்துவமனையில்: https://www.kauveryhospital.com/
  6. 24 மணி நேர அவசர சிகிச்சை: https://www.kauveryhospital.com/patients-visitors/urgent-care/
  7. Dr. பி. தீபக் குமார், MBBS, MD: https://www.kauveryhospital.com/doctors/salem/general-medicine/dr-b-deepak-kumar/
  8. காவேரி மருத்துவமனைசேலம்: https://www.kauveryhospital.com/our-locations/salem/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-rains-are-here-stay-alert/