by admin-blog-kh | April 22, 2026 5:55 am
இந்தியாவில் 68 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருக்கிறது. ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை மேற்கொண்டால், குழந்தை இயல்பான வாழ்க்கை வாழலாம்!
ஏப்ரல் 2 – உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம். ‘என் குழந்தை ஏன் கண்களை பார்ப்பதில்லை? ஏன் பெயர் சொன்னாலும் திரும்பவில்லை? ஏன் இன்னும் பேசவில்லை?’ – இப்படி மனதுக்குள் கேள்விகளை அடக்கி, வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பெற்றோர்களுக்காகவே இந்த தினம் இருக்கிறது. ஆட்டிசம் பற்றிய பயத்தைப் புரிதலாக மாற்றுவதும், அலட்சியத்தை விழிப்புணர்வாக மாற்றுவதும்தான் இந்நாளின் நோக்கம்.
ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல… இது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு (Neurodevelopmental Disorder).[1] நோய் அல்ல என்பதால் குணப்படுத்துவது நோக்கம் அல்ல; குழந்தை தன்னைச் சுற்றிய உலகில் வெற்றிகரமாக வாழத் தேவையான கருவிகளையும் சூழலையும் ஏற்படுத்திக் கொடுப்பதே இலக்கு. மூன்று முக்கிய அறிகுறிகளே இதன் அடையாளம்… கண்ணோடு கண் கலக்கும் தன்மையின்மை, சமூகத் தொடர்பில் சிரமம், மீண்டும் மீண்டும் செய்யப்படும் குறிப்பிட்ட செயல்கள் அல்லது குறுகிய ஆர்வங்கள்.
இந்தியாவில் 68 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்துடன் இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது புதிய நோயின் வெடிப்பு அல்ல… சமூகம் இப்போது அதை சரியாக அடையாளம் காண கற்றுக்கொண்டதன் வெளிப்பாடு.
6 மாத குழந்தை அந்நியர்களிடம் சிரிக்கும். இது இயல்பான வளர்ச்சி. இந்தச் சமூக சிரிப்பு இல்லாமல் போவது ஆரம்பகட்ட எச்சரிக்கை. ஒரு வயதில் ‘அம்மா’, ‘அப்பா’ சொல்ல வேண்டும், சாலையில் நாய் இருந்தால் விரல் நீட்டி காட்ட வேண்டும், ‘bye-bye’ என கைகளை ஆட்ட வேண்டும். 16 மாதத்தில் ஒற்றை வார்த்தை பேச வேண்டும். இவை இல்லாமல் போவது, பெயர் சொன்னாலும் திரும்பாமல் இருப்பது, தனியாக விளையாட விரும்புவது, கையை அடிக்கடி ஆட்டுவது, பொம்மை காரை ஓட்டாமல் சக்கரத்தை மட்டும் சுழற்றுவது… இவை எல்லாம் பெற்றோர் கவனிக்க வேண்டிய ‘Red Flags’. 18 முதல் 24 மாதங்களில் நம்பகமான கண்டறிதல் சாத்தியம். ஆனால், பல அறிகுறிகள் 6 மாதத்திலேயே தெரியலாம். எந்த ஓர் அறிகுறியையும் புறக்கணிக்காதீர்கள்.
‘ஆண் குழந்தைகள் கொஞ்சம் தாமதமாக பேசுவார்கள், பரவாயில்லை’ என்று சமூகம் சொல்லும்போது, அந்த வார்த்தைகள் குழந்தையின் மதிப்பமிக்க ஆரம்பகால சிகிச்சை நேரத்தை திருடிவிடுகின்றன. ‘குழந்தைக்கு ஆட்டிசம் என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்?’ என்கிற கவலையே பல குடும்பங்களை மருத்துவரிடம் செல்வதை தடுக்கிறது. சில அம்மாக்களுக்கு ‘நான் என்ன தவறு செய்தேன்?’ என்கிற குற்ற உணர்வு ஆழமாக வேரூன்றி இருக்கும்.
ஆட்டிசம் என்பது எந்த ஓர் அம்மாவின் தவறும் அல்ல; இது மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் சேர்க்கையால் வரும் நரம்பியல் மாற்றம். மறுப்பை கைவிட்டுவிட்டு பிரச்னையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே குழந்தைக்கான உதவி தொடங்கும். சிகிச்சையைத் தாமதப்படுத்துவது நோயின் தீவிரத்தையே அதிகரிக்கும்.
ஆட்டிசம் ஒரே ஒரு காரணத்தால் வருவதில்லை. மரபணுக் காரணிகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. குடும்பத்தில் யாருக்காவது ஆட்டிசம் இருந்தால் வாய்ப்பு அதிகம். 35 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் தாய்களுக்கும் வாய்ப்பு கொஞ்சம் அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. கர்ப்பகாலத்தில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று, முன்கூட்டிய பிரசவம் ஆகியவையும் காரணிகளில் அடங்கும். மரபணு தன்மையும் சுற்றுச்சூழல் காரணிகளும் ஒன்றிணையும்போதே ஆட்டிசம் உருவாகிறது என்பதே தற்போதைய அறிவியல் புரிதல்.
ஆட்டிசத்துக்கு ஒரே ஒரு மருந்து அல்லது ஒரே ஒரு சிகிச்சை போதாது. பேச்சு சிகிச்சை (Speech Therapy), நடத்தை சிகிச்சை (Behavioral Therapy), தொழில் சிகிச்சை (Occupational Therapy), உணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சை (Sensory Integration Therapy), சிறப்புக் கல்வி (Special Education) – இவை எல்லாம் ஒன்றாக தேவைப்படும். குழந்தைக்கு ஆக்ரோஷம் போன்ற கூடுதல் பிரச்னைகள் இருந்தால் மருந்துகளும் உதவலாம்… சிகிச்சையில் கவனம் செலுத்த உதவும் வகையில் மட்டும்.
குறிப்பிடத்தக்க ஓர் உண்மை: வாரத்தில் சுமார் 24 மணி நேரம், அதாவது தினமும் 3 முதல் 5 மணி நேரம் சிகிச்சை தேவை என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனால், பெரும்பாலான சிகிச்சை மையங்களால் ஒரு மணி நேரம் மட்டுமே கொடுக்க முடியும். இந்த இடைவெளியை நிரப்புவது யார்? பெற்றோர்தான். அதனால் பெற்றோர் பயிற்சி பெறுவது அவசியம். சிகிச்சையாளர் கற்றுக்கொடுக்கும் நுட்பங்களை வீட்டிலும் தொடர்ந்து செய்வதே மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
வீட்டில் கட்டமைக்கப்பட்ட நேரக்கட்டளை முக்கியம். விளையாடும் நேரம், வழக்கமான அன்றாட வேலைகளுக்கான நேரம், வீட்டுப்பாடம் செய்யும் நேரம் என தினசரி அட்டவணை குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வைத் தரும். குழந்தையை இயல்பான சகோதரர்கள் அல்லது நண்பர்களுடன் ஒப்பிடக் கூடாது. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் தனித்தனியானது. பள்ளிகளில் Individualized Education Plan (IEP) மூலம் குழந்தைக்கான தனிப்பட்ட கல்வி திட்டம் வகுக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அவசியம். பள்ளி குழந்தையின் தேவைக்கு ஏற்ப மாற வேண்டும்; குழந்தை பள்ளியின் தேவைக்கு ஏற்ப மாறக்கூடாது. சமூகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவுக் குழுக்களும் இருந்தால் பெற்றோர்கள் தனிமையாக உணர மாட்டார்கள்.
‘ஆட்டிசம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல… இது ஒரு பயணமே’ என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தால், அந்தக் குழந்தை இயல்பாக வளர்ந்து வாழ்கிறது என்று பல நேரடி அனுபவங்கள் நிரூபிக்கின்றன. ஆரம்பகால சிகிச்சை தொடங்கிய 6 மாதங்களிலேயே பேச்சிலும் சமூக தொடர்பிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றம் தெரியும். தொடர் சிகிச்சையும் நம்பிக்கையான ஆதரவும் இருந்தால் பலர் சாதாரண பள்ளிகளில் படிக்கலாம், தனியாக வாழலாம்.
ஆட்டிசம் குழந்தையின் திறமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை… நம் புரிதலின்மையே தடுக்கிறது. புரிந்துகொண்டால், ஏற்றுக்கொண்டால், செயல்பட்டால் – ஒவ்வொரு குழந்தையும் தனக்கான உலகை வெற்றிகரமாக வாழலாம்!
1. ஆட்டிசம் குணமாகுமா?
‘குணமாக்குவது’ நோக்கம் அல்ல; சரியான தலையீட்டால் குழந்தை சுதந்திரமாக இயங்கும் திறனை வளர்க்கலாம்.
2. மருந்தால் மட்டும் சரியாகுமா?
இல்லை… சிகிச்சை, கல்வி, பெற்றோர் பயிற்சி ஆகியவை ஒன்றிணைந்தே பலனளிக்கும். மருந்துகள் தேவையான சில நேர்வுகளில் மட்டும் கூடுதல் உதவியாக இருக்கும்.
3. ஆட்டிசம் உள்ள குழந்தையால் சாதாரண பள்ளியில் படிக்க முடியுமா?
ஆம்… சரியான ஆதரவுக் கட்டமைப்பு இருந்தால் நிச்சயமாக முடியும்.
4. சிகிச்சை எவ்வளவு நேரம் தேவை?
வாரத்தில் சுமார் 24 மணி நேரம் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் வீட்டில் பெற்றோர் அளிக்கும் பயிற்சிகளும் முக்கியமானது.
டாக்டர் எஸ். தஸ்னீம் பேகம், [3]MBBS, MD (Psychiatry)
குழந்தை மற்றும் பதின்ம வயது மனநல சிகிச்சை நிபுணர்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி[4]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/this-is-not-a-full-stop-it-is-a-journey/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.