அந்த ஐந்து நிமிடங்கள்!

by admin-blog-kh | September 26, 2026 12:29 pm

இரவு உணவு நேரம். ஒரு வயதானவர் திடீரெனத் தொண்டையைப் பிடித்துக்கொண்டு எழுந்து நிற்கிறார். பேச முடியவில்லை. முகம் சிவக்கிறது. வீட்டில் இருக்கும் நான்கு பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்கள். ஒருவர் தண்ணீர் எடுத்து வருகிறார். இன்னொருவர் ஆம்புலன்ஸுக்கு அழைக்கிறார்.

ஆம்புலன்ஸ் வர எத்தனை நேரம் ஆனாலும், அதற்கு முன்பு உள்ள சில நிமிடங்கள் வீட்டில் இருப்பவர்களுடையவை. நகரப் போக்குவரத்தில் அந்த நேரம் இன்னும் நீளும். அந்த நிமிடங்களில் செய்யும் ஒரு சிறிய சரியான செயல், பின்னர் மருத்துவமனையில் நடப்பதைப் பெரிதும் தீர்மானிக்கிறது.

நமக்கு முதலுதவி தெரியாது என்பது பிரச்னை அல்ல. தெரியாத நிலையில் நாம் செய்யும் காரியங்கள்தாம் பிரச்னை. வீட்டில் தலைமுறையாகக் கடத்தப்பட்ட சில பழக்கங்கள் உதவுவதற்குப் பதிலாகக் காயத்தை ஆழமாக்குகின்றன.

செப்டம்பர் 12 உலக முதலுதவி நாள் (World First Aid Day). வீட்டில் அடிக்கடி நேரும் ஐந்து சூழல்களையும், அவற்றில் நாம் செய்யும் பொதுவான தவறுகளையும் இங்கே பார்ப்போம்.

தொண்டையில் அடைப்பு 

பேச முடியாமல், இருமல் வராமல், தொண்டையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார் என்றால் அது அடைப்பு. தண்ணீர் கொடுக்காதீர்கள். விரலை வாய்க்குள் விட்டுத் துழாவாதீர்கள். இரண்டும் நிலைமையை மோசமாக்கும். அவரை முன்னால் சாய்த்து, இரு தோள்பட்டைகளுக்கு நடுவே உள்ளங்கையால் ஐந்து முறை வலுவாகத் தட்டுங்கள். வெளியே வரவில்லை என்றால், பின்னால் நின்று, வயிற்றின் மேற்பகுதியில் இரு கைகளையும் கோத்து ஐந்து முறை உள்ளும் மேலும் அழுத்தமாக இழுங்கள். மாற்றி மாற்றிச் செய்யுங்கள். ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இந்த முறை வேறு. அதைப் பயிற்சி வகுப்பில் கற்றுக்கொள்வதே பாதுகாப்பானது.

தீக்காயம் 

முதல் வேலை, ஓடும் குழாய்த் தண்ணீரின் கீழ் காயத்தைக் காட்டுவது. குறைந்தது இருபது நிமிடம். மோதிரம், வளையல், கடிகாரம் இருந்தால் வீக்கம் வருவதற்கு முன் கழற்றுங்கள். ஐஸ் வைக்காதீர்கள். அது காயத்தை ஆழமாக்கும். பற்பசை, மஞ்சள், தேங்காய் எண்ணெய், சாம்பல் எதுவும் தடவாதீர்கள். கொப்புளங்களை உடைக்காதீர்கள். சுத்தமான மெல்லிய துணியால் மூடி மருத்துவமனைக்குச் செல்லுங்கள். சமையலறையில் சுடுநீரும் எண்ணெயும் படும் காயங்கள் குழந்தைகளுக்கே அதிகம். அடுப்பின் கைப்பிடிகளை உள்பக்கம் திருப்பி வைப்பது ஒரு நிமிட வேலை.

Also Read: How to Put Together a First Aid Kit for Your Home[1]

வலிப்பு 

வலிப்பு[2] வந்தவரின் வாய்க்குள் கரண்டியோ சாவியோ விரலோ திணிக்காதீர்கள். இது ஆபத்தானது, தேவையும் இல்லை. கைகால்களை அழுத்திப் பிடிக்காதீர்கள். சுற்றி இருக்கும் கடினமான பொருள்களை விலக்குங்கள். தலைக்குக் கீழே மெத்தென்று ஏதாவது வையுங்கள். வலிப்பு ஓய்ந்ததும் அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள். எத்தனை நிமிடம் நீடித்தது என்பதைக் கவனியுங்கள். ஐந்து நிமிடத்துக்கு மேல் நீடித்தால், மீண்டும் வந்தால், அல்லது வாழ்க்கையில் முதல் முறை என்றால் உடனே மருத்துவமனை[3].

அதிக ரத்தப்போக்கு 

சுத்தமான துணியை நேரடியாகக் காயத்தின் மேல் வைத்து, உள்ளங்கையால் உறுதியாக அழுத்துங்கள். அழுத்தத்தைத் தளர்த்திப் பார்க்காதீர்கள். துணி நனைந்தால் அதை எடுக்காமல் மேலே இன்னொரு துணியை வையுங்கள். முடிந்தால் அந்த உறுப்பை இதயத்தைவிட உயரத்தில் வையுங்கள். காபித் தூள், மஞ்சள், சாம்பல் எதையும் தூவாதீர்கள். துணியால் இறுக்கமாகக் கட்டிச் சுற்றுவதைத் தவிர்த்து, அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்தபடி மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

மயக்கம் மற்றும் சரிந்து விழுதல் 

கன்னத்தில் அறையாதீர்கள். முகத்தில் தண்ணீர் தெளிக்காதீர்கள். மயக்கத்தில் இருப்பவருக்குத் தண்ணீரோ காபியோ ஊற்றாதீர்கள். தோளைத் தட்டிப் பெயர் சொல்லி அழையுங்கள். பதில் வந்து சுவாசம் இயல்பாக இருந்தால், ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைத்து, கால்களைச் சற்று உயர்த்தி, காற்றோட்டம் கிடைக்கச் செய்யுங்கள். பதில் இல்லை, சுவாசம் இல்லை என்றால் அது அவசர நிலை. உடனே உதவிக்கு அழையுங்கள். ஓரிரு நிமிடத்தில் சுயநினைவு திரும்பவில்லை என்றாலோ, மார்பு வலி, பேச்சுத் தடுமாற்றம், ஒரு பக்கம் தளர்வு இருந்தாலோ காத்திருக்க வேண்டாம்.

உயரத்திலிருந்து விழுந்தவரையோ சாலை விபத்தில் காயமடைந்தவரையோ அவசரப்பட்டுத் தூக்கி நகர்த்தாதீர்கள். முதுகுத் தண்டுக்குக் காயம் இருக்கக்கூடும். தீ, தண்ணீர், மின்சாரம் போன்ற உடனடி ஆபத்து இருந்தால் மட்டுமே நகர்த்த வேண்டும்.

உதவிக்கு அழைக்கும்போது…

பதற்றத்தில் முகவரி சொல்லாமல் விட்டுவிடுவது பொதுவான தவறு. முதலில் இடம், அடுத்து என்ன நடந்தது, அடுத்து நோயாளியின் வயதும் நிலையும். ஒருவரை வாசலில் நிற்க வையுங்கள். நோயாளியின் மருந்துச் சீட்டையும் பழைய அறிக்கைகளையும் ஒரு பையில் தயாராக வையுங்கள்.

படித்தால் மட்டும் போதாது… கற்றுக்கொள்ளுங்கள்! 

முதலுதவி என்பது கையால் செய்யும் திறன்[4]. ஒருமுறை நேரில் செய்து பார்த்தால்தான் தேவைப்படும் நேரத்தில் கை தானாக நினைவுகூரும். வீட்டில் ஒருவராவது முறையான பயிற்சி பெறுவது நல்லது.

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் (Indian Red Cross Society)

முதலுதவிப் பயிற்சி குறைந்தது 16 மணி நேரம். பதினாறு வயது நிரம்பியவர்கள் சேரலாம். தேர்வில் வெற்றி பெற்றால் Senior Professional சான்றிதழ், மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதன் பிறகு Voucher (ஐந்து ஆண்டுகள்), Medallion (வாழ்நாள்) என்று மேல்நிலைச் சான்றிதழ்கள் உண்டு. மாணவர்களுக்குத் தனி நிலைகள் உள்ளன. உங்கள் மாவட்டச் செஞ்சிலுவைச் சங்கக் கிளையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சங்கம், தமிழ்நாடு மையம்

1915 முதல் இயங்கிவரும் அமைப்பு. சென்னையில் பயிற்சி மையம் உள்ளது. தேசியப் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் இப்பயிற்சிக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சான்றிதழுக்குக் காலவரம்பு உண்டு. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்வது நல்லது.

தொலைபேசி: 044 2819 1707 / 044 2819 4630

யார் அவசியம் கற்க வேண்டும்?

வலிப்பு, இதய நோய்[5], நீரிழிவு[6] உள்ளவர்களைப் பராமரிப்பவர்கள். முதியவர்களுடன் வாழ்பவர்கள். சிறு குழந்தைகளின் பெற்றோர். பள்ளி ஆசிரியர்கள். வாகன ஓட்டுநர்கள். தொழிற்சாலைப் பணியாளர்கள்.

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. How to Put Together a First Aid Kit for Your Home: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/how-to-put-together-a-first-aid-kit-for-your-home/
  2. வலிப்பு: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/seizures-the-right-treatment-at-the-right-time-is-essential/
  3. முதல் முறை என்றால் உடனே மருத்துவமனை: https://www.kauveryhospital.com/
  4. முதலுதவி என்பது கையால் செய்யும் திறன்: https://www.kauveryhospital.com/blog/lifestyle/first-aid-is-the-best-aid/
  5. இதய நோய்: https://www.kauveryhospital.com/blog/heart-health/heart-diseases-and-symptoms-a-mini-reference-guide/
  6. நீரிழிவு: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/diabetes-a-to-z/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/those-five-minutes/