தைராய்டு… சின்ன சுரப்பி பெரிய விஷயம்!

by admin-blog-kh | June 19, 2026 5:06 am

உடலின் ஒவ்வோர் அணுவையும் கட்டுப்படுத்தும் கழுத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி வடிவ சின்னஞ்சிறு சுரப்பி இது. இதயத் துடிப்பு, எடை, கருவுறுதல், பிறக்கப்போகும் குழந்தையின் மூளை வளர்ச்சி வரை அனைத்தும் இதன் கையில்தான். ஆனால், இந்தியாவில் கோடிக்கணக்கானோருக்கு இது இருப்பதே தெரியாது. மே 25 உலக தைராய்டு தினம் குறித்த விழிப்புணர்வுக் கட்டுரைக்குள் செல்வோமா

‘சார், எடை கூடுது, முடி கொட்டுது, எப்பவும் சோர்வா இருக்கு. மாதவிடாயும் ஒழுங்கா வரல[1]…’ – இந்தப் புகாருடன் ஒரு நாளைக்கு பத்து பேராவது வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு அடிப்படைப் பிரச்னை ஒன்றுதான்… தைராய்டு!

சின்ன சுரப்பி, மாபெரும் பங்கு 

தைராய்டு என்பது கழுத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி வடிவ சிறிய சுரப்பி[2]. ஆனால், இது உங்கள் உடலின் வேகக் கட்டுப்படுத்தி போன்றது. இது அதிகமாகச் செயல்பட்டால் உடலில் எல்லாமே வேகமாகும்; குறைவாகச் செயல்பட்டால் எல்லாமே மெதுவாகும். இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை, எடை, சக்தி, கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி அனைத்தையும் இதுவே கட்டுப்படுத்துகிறது. தங்களுக்குத் தைராய்டு பிரச்னை இருக்கிறது என்பதே இந்தியாவில் பலருக்குத் தெரியாது. சோர்வு, எடை மாற்றம், மன அழுத்தம்[3] போன்ற அறிகுறிகளை மன அழுத்தத்தின் விளைவு என்று தவறாக நினைக்கிறார்கள். TSH என்கிற எளிய ரத்தப் பரிசோதனை மூலம் இதை உடனே கண்டறியலாம்.

அமைதியாக அதிகரிக்கும் பிரச்னை 

பெண்களுக்கு, குறிப்பாக, ஹைப்போதைராய்டிசம்[4] (தைராய்டு குறைவு) மிகவும் பொதுவானது. எடை அதிகரிப்பு, சோர்வு, முடி கொட்டுதல், மாதவிடாய் சீரற்றத் தன்மை, கருவுற முடியாமை ஆகியவற்றுடன் வருகிறார்கள். பெரும்பாலும் இவை மன அழுத்தம் என்றே கருதப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடம், வளர்ச்சிக் குறைவு, எடை மாற்றங்கள், படிப்பில் கவனம் குறைவு என்று வெளிப்படும். முதியோரிடம், சோர்வு, மனச்சோர்வு, செயல்பாடு குறைதல் வயதாவதின் விளைவு என்று தவறாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அறிகுறிகள் மென்மையாக, குறிப்பிட்டதாக இல்லாமல், படிப்படியாக வளர்வதால், பலர் ஆண்டுக்கணக்கில் நோயறிதல் இல்லாமலேயே இருக்கிறார்கள்.

ஹைப்போ, ஹைப்பர், சப்கிளினிக்கல் 

ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு குறைவாகச் செயல்படுதல். TSH அதிகம், T3/T4 குறைவாக இருக்கும். உடல் செயல்பாடுகள் மெதுவாகும். சோர்வு, எடை கூடுதல், குளிரில் அதிக உணர்வு போன்றவை அறிகுறிகள். சிகிச்சை அவசியம்.

ஹைப்பர்தைராய்டிசம் அதற்கு எதிர்மறை. TSH குறைவு, T3/T4 அதிகம். உடல் செயல்பாடுகள் அதி வேகமாகும், எடை குறைதல், இதயத் துடிப்பு, கவலை போன்றவை அறிகுறிகள். சிகிச்சை அவசியம்.

சப்கிளினிக்கல் (subclinical) என்பது ஆரம்பக்கட்ட நிலை. TSH சற்றே சாதாரண அளவை மீறியிருக்கும், ஆனால், T3/T4 சாதாரணமாக இருக்கும். பல நேரம் குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்காது. இப்படிப்பட்ட நிலையில் உடனே மருந்தைத் தொடங்காமல், கண்காணிப்பதே சரியான வழி. TSH 10க்கு மேல் இருந்தால், அறிகுறிகள் தீவிரமாக இருந்தால், கர்ப்ப காலத்தில், கருவுற முயலும்போது, இதய சம்பந்தமான ஆபத்து இருந்தால் மட்டும் சிகிச்சை தேவை.

Also Read: அலட்சியம் வேண்டாம்![5]

தைராய்டு நொடியூல்ஸ், தைராய்டு புற்றுநோய் 

தற்போது அல்ட்ராசவுண்ட் அதிகம் செய்யப்படுவதால், தைராய்டு நொடியூல்ஸ் அதிகம் கண்டறியப்படுகின்றன. ஆனால், கவலைப்பட வேண்டாம். இவற்றில் 5 முதல் 10 சதவிகிதம் மட்டுமே புற்றுநோயாக மாறக்கூடும். நொடியூல் கண்டறியப்பட்டால், முதலில் TSH ரத்தப் பரிசோதனை, பின்னர் விரிவான அல்ட்ராசவுண்ட், தேவைப்பட்டால் FNAC எனப்படும் சிறிய ஊசி பரிசோதனை செய்வோம்.

மகிழ்ச்சியான செய்தி ஒன்றும் உண்டு… தைராய்டு புற்றுநோய்[6] கண்டறியப்பட்டாலும், இது குணப்படுத்தக்கூடிய  புற்றுநோய்களில் ஒன்று. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், முழுமையான குணம் சாத்தியம்.

கர்ப்பம், கருவுறுதல், புத்திளம் குழந்தைகள் 

சிறிய, கவனிக்கப்படாத தைராய்டு பிரச்னைகூட கருவுறுதலைப் பாதிக்கலாம், கருச்சிதைவை அதிகரிக்கலாம். மிக முக்கியமாக, குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குழந்தை முற்றிலும் தாயின் தைராய்டு ஹார்மோனையே சார்ந்திருக்கிறது. கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்ணும், கருத்தரிப்பதற்கு முன்பே TSH (சில நேரம் T4) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முதல் மும்மாதத்தில் மீண்டும் சோதிக்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கும் தைராய்டு ஸ்கிரீனிங் (Newborn thyroid screening) அவசியம். இது பிறந்த குறுகிய காலத்திலேயே செய்யக்கூடிய எளிய பரிசோதனை. பிறவி ஹைப்போதைராய்டிசத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், வளர்ச்சிக் குறைபாடு மற்றும் குறைவான IQ போன்ற வாழ்நாள் பிரச்னைகளை முற்றிலும் தடுக்கலாம்.

எடை, சோர்வுஎல்லாம் தைராய்டுதானா

பலர் எடை கூடுதல், சோர்வு, முடி கொட்டுதல், மனச்சோர்வு எல்லாமே தைராய்டுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில், சிறிய சதவிகிதமே தைராய்டால் ஏற்படுகின்றன. மற்றவை வாழ்க்கைமுறை, மன அழுத்தம், போதுமான தூக்கம் இல்லாமை, ரத்தசோகை[7], B12 அல்லது வைட்டமின் D குறைபாடு, PCOS[8], இன்சுலின் எதிர்ப்பு, மனச்சோர்வு போன்றவற்றால் வரக்கூடும். எனவே, தைராய்டு சோதனை செய்வது முக்கியம், ஆனால், எல்லா பழியையும் தைராய்டு மீது போடாதீர்கள். சரியான நோயறிதலே சரியான சிகிச்சை!

தவறான நம்பிக்கைகள் 

முட்டைக்கோஸ், காலிஃபிளவர், சோயா, முருங்கை இலை போன்றவற்றைத் தவிர்க்கத் தேவையில்லை; சாதாரண அளவில் இவை பாதுகாப்பானவை. ஆனால், அயோடின் சேர்க்கப்பட்ட உப்பை (iodized salt) மருத்துவ ஆலோசனை இல்லாமல் தவிர்ப்பது மிகப்பெரிய தவறு. அயோடின் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு அவசியம்.

நல்ல தூக்கம், தினசரி உடற்பயிற்சி, மன அழுத்தக் கட்டுப்பாடு ஆகியவை உதவும். வைட்டமின் D குறைபாடு[9] இருந்தால் சரிசெய்வது நல்லது. ஆனால், தைராய்டு நோய்க்கான உண்மையான தீர்வு… சரியான நோயறிதல் மற்றும் தேவையெனில் மருந்து மட்டுமே!

 

அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள். உரிய நேரத்தில் சோதனை செய்துகொள்ளுங்கள். ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

 

டாக்டர் எஸ். சிவப்பிரகாஷ் MBBS, MD (General Medicine), DM (Endocrinology, AIIMS New Delhi)[10]
நாளமில்லா சுரப்பியியல் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர்
காவேரி மருத்துவமனை, திருநெல்வேலி[11]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. மாதவிடாயும் ஒழுங்கா வரல: https://www.kauveryhospital.com/blog/obstetrics-and-gynecology/when-to-worry-about-irregular-periods/
  2. தைராய்டு என்பது கழுத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி வடிவ சிறிய சுரப்பி: https://www.kauveryhospital.com/blog/endocrinology/what-is-thyroid-and-how-does-it-function/
  3. மன அழுத்தம்: https://www.kauveryhospital.com/blog/endocrinology/stress-hormone-and-its-effects/
  4. ஹைப்போதைராய்டிசம்: https://www.kauveryhospital.com/blog/endocrinology/is-your-thyroid-trying-to-tell-you-something-understanding-hypothyroidism-and-hyperthyroidism/
  5. அலட்சியம் வேண்டாம்!: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/do-not-be-negligent/
  6. தைராய்டு புற்றுநோய்: https://www.kauveryhospital.com/blog/cancer/early-signs-and-symptoms-of-thyroid-cancer/
  7. ரத்தசோகை: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/attention-parents-the-cause-and-solution-of-anemia-in-children/
  8. PCOS: https://www.kauveryhospital.com/blog/obstetrics-and-gynecology/pcos-all-you-need-to-know-to-conquer-it/
  9. வைட்டமின் D குறைபாடு: https://www.kauveryhospital.com/blog/lifestyle/symptoms-of-vitamin-d-deficiency/
  10. டாக்டர் எஸ். சிவப்பிரகாஷ் MBBS, MD (General Medicine), DM (Endocrinology, AIIMS New Delhi): https://www.kauveryhospital.com/doctors/tirunelveli/endocrinology/dr-s-sivaprakash/
  11. காவேரி மருத்துவமனை, திருநெல்வேலி: https://www.kauveryhospital.com/our-locations/tirunelveli/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/thyroid-a-small-gland-a-big-deal/