ட்ரூபீம் தொழில்நுட்பம் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய சகாப்தம்

by admin-blog-kh | February 16, 2026 7:30 am

கதிரியக்கச் சிகிச்சை என்றாலே பக்கவிளைவுகள், நீண்ட சிகிச்சைக் காலம் என்கிற பயம் இருந்தது. ஆனால், ட்ரூபீம் தொழில்நுட்பம் அந்தப் பயத்தையே மாற்றியமைத்திருக்கிறது. மிகத் துல்லியமான இலக்கு வைத்தல், குறைவான பக்கவிளைவுகள், விரைவான சிகிச்சை – இதுவே ட்ரூபீம் தொழில்நுட்பத்தின் சிறப்பு!

புற்றுநோய்[1] என்கிற வார்த்தை மட்டுமே போதும்… ஒருவரின் மனத்தில் பயத்தை ஏற்படுத்திவிடும். அதற்கான சிகிச்சை என்றால், மேலும் அச்சம் அதிகரிக்கும். குறிப்பாக கதிரியக்கச் சிகிச்சை[2] என்பது நோயாளிகளுக்கு நீண்ட நாள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது, பக்கவிளைவுகளின் கொடுமை, வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வது என பல்வேறு இடர்பாடுகளை உள்ளடக்கியதாக இருந்துவந்தது. இன்றைய நவீன மருத்துவ உலகில், ட்ரூபீம் (TrueBeam) தொழில்நுட்பம் என்கிற அதிநவீன கதிரியக்கச் சிகிச்சை முறை இந்தப் பயங்களையும் பிரச்னைகளையும் முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது.

ட்ரூபீம் தொழில்நுட்பம் என்றால் என்ன

ட்ரூபீம் என்பது வேரியன் (Varian) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதிநவீன லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரத்தின் பெயர். இது வெறும் ஓர் இயந்திரம் மட்டுமல்ல… புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முழுமையான புரட்சியை ஏற்படுத்தும் தொழில்நுட்ப அமைப்பு. காவேரி மருத்துவமனையில் செயல்படும் வேரியன் ட்ரூபீம் 18.0 பதிப்பு உலகிலேயே மிகச் சமீபத்திய மற்றும் மேம்பட்ட மாடலாகும்[3].

இந்தத் தொழில்நுட்பம் நான்கு முக்கியமான வழிகளில் புற்றுநோய் சிகிச்சையை மாற்றியமைத்திருக்கிறது. முதலாவதாக, மிகத் துல்லியமான இலக்கு வைத்தல் – புற்றுநோய்க் கட்டியை மட்டும் துல்லியமாகக் குறிவைத்து சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாக்கிறது. இரண்டாவதாக, பக்கவிளைவுகள் மிகவும் குறைவு. பாதுகாப்பான முறையில் கதிர்வீச்சு அளிப்பதால் வழக்கமான பக்கவிளைவுகள் வெகுவாகக் குறைகின்றன. மூன்றாவதாக, சிகிச்சைக் காலம் குறைவு. பாரம்பரிய முறையில் 25 முதல் 30 நாட்கள் ஆகும் சிகிச்சை இப்போது ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படுகிறது. நான்காவதாக, அதிக அளவு கதிர்வீச்சு வழங்க முடிவது. துல்லியம் காரணமாக புற்றுநோய் கட்டிக்கு அதிக சக்திவாய்ந்த கதிர்வீச்சை பாதுகாப்பாக அளிக்க முடிகிறது, இது நோய் குணமாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

இந்தத் தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான நோக்கம், புற்றுநோயை மட்டும் அழிப்பதல்ல… நோயாளியின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதும்தான். உதாரணமாக, குரல்வளை புற்றுநோயில், அறுவைசிகிச்சை செய்தால் நோயாளி வாழ்நாள் முழுவதும் பேச முடியாமல் போவார். ட்ரூபீம் தொழில்நுட்பத்தின் துல்லியமான கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை அழித்து, குரல்வளை உறுப்பையும் அதன் செயல்பாட்டையும் பாதுகாக்க முடிகிறது. மார்பகம், சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்ற உறுப்புகளிலும் இதே முறையில் உறுப்புகளைப் பாதுகாத்து சிகிச்சையளிக்க முடிகிறது.

பாரம்பரிய கதிர்வீச்சுக்கும் ட்ரூபீம் தொழில்நுட்பத்துக்கும் உள்ள வேறுபாடுகள் 

பழைய கதிர்வீச்சு முறைகளுக்கும் ட்ரூபீம் தொழில்நுட்பத்துக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. பாரம்பரிய கதிர்வீச்சில், அதிக பரப்பளவுக்கு கதிர்வீச்சு அளிக்கப்பட்டது, இதனால் ஆரோக்கியமான திசுக்களும் பாதிக்கப்பட்டன. ட்ரூபீம் தொழில்நுட்பத்தில், மிகச் சிறிய, குறுகிய பகுதிக்கு மட்டுமே கதிர்வீச்சு அளிக்கப்படுகிறது, இதனால் உறுப்புகள் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன.

நேரத்தின் அடிப்படையில் பார்த்தால், பாரம்பரிய முறையில் ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 நிமிடங்கள் சிகிச்சைக்காக ஆகும். ட்ரூபீம் தொழில்நுட்பத்தில், ராபிட்ஆர்க் (RapidArc) என்ற நுட்பத்தின் மூலம் வெறும் 7 முதல் 8 நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். மொத்த சிகிச்சைக் காலத்தையும் பார்த்தால், முன்னதாக 25 முதல் 30 நாட்கள் ஆகும் சிகிச்சை, இப்போது பல புற்றுநோய்களுக்கு ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படுகிறது. குறிப்பாக, ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கு 35 நாட்களிலிருந்து 20 நாட்களாகவும், மார்பகப் புற்றுநோய்[4]க்கு 25-28 நாட்களிலிருந்து 15 நாட்களாகவும் குறைந்துள்ளது. மூளை மெட்டாஸ்டாசிஸுக்கு 3 முதல் 5 நாட்களிலும், சில நேரங்களில் ஸ்டீரியோடாக்டிக் ரேடியோசர்ஜரி மூலம் ஒரே நாளில் கூட முடிக்க முடிகிறது.

துல்லியத்தின் அடிப்படையில், ட்ரூபீம் அமைப்பு 18.0 பதிப்பு மென்பொருள், பிஇடி மற்றும் எம்ஆர்ஏ ஸ்கேன்களின் இமேஜ் ஃப்யூஷன் தொழில்நுட்பம், மல்ட்டிலீஃப் கொலிமேட்டர் என்கிற கதிர்வீச்சு வடிவமைப்பு கருவி, தானாகவே பழுதுகளைக் கண்டறிந்து பொறியாளர்களுக்குத் தெரிவிக்கும் ரிமோட் டயக்னாஸ்டிக்ஸ் அமைப்பு போன்ற பல்வேறு அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் ஐஎம்ஆர்டி (IMRT), ஐஜிஆர்டி (IGRT), விஎம்ஏடி (VMAT), ஸ்டீரியோடாக்டிக் ரேடியோசர்ஜரி (SRS) மற்றும் ஸ்டீரியோடாக்டிக் பாடி ரேடியோதெரபி (SBRT) போன்ற உயர்தர சிகிச்சை முறைகளை அளிக்க முடிகிறது.

பக்கவிளைவுகளின் அடிப்படையில், ட்ரூபீம் தொழில்நுட்பம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. கிட்டத்தட்ட 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளில், மூன்றாம் அல்லது நான்காம் நிலை (கடுமையான) பக்கவிளைவுகள் முதல் அல்லது இரண்டாம் நிலை (லேசான) பக்கவிளைவுகளாகக் குறைந்துள்ளன. உதாரணமாக, தோல் அழற்சி பிரச்னைகள் ‘ஸ்கின் ஸ்பேரிங் ரேடியேஷன் தெரபி’ மூலம் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. குடலிறக்கப் பிரச்னைகளான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை[5], குடல்களுக்குக் குறைவான கதிர்வீச்சு செல்வதால் மிகவும் குறைகின்றன.

எந்தெந்த புற்றுநோய்களுக்கு ட்ரூபீம் சிகிச்சை அளிக்க முடியும்

ட்ரூபீம் தொழில்நுட்பத்தை கிட்டத்தட்ட உடலின் எல்லாப் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும் பயன்படுத்தப்படலாம். மூளைக் கட்டிகள் மற்றும் மண்டை ஓட்டு அடிப்பகுதிக் கட்டிகள், தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்கள் (குரல்வளை, குரல்தொண்டை), மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்[6], லிம்ஃபோமா[7], இடுப்புப் பகுதி புற்றுநோய்கள் (ப்ராஸ்டேட்[8], மகளிர் நலம் தொடர்பான புற்றுநோய்கள்), செரிமான மண்டல புற்றுநோய்கள் (உணவுக்குழாய், மலக்குடல், ஆசன வாய்க்குழாய்), எலும்பு மற்றும் மென்திசு சார்கோமாக்கள் போன்ற அனைத்துக்கும் சிகிச்சையளிக்க முடிகிறது.

இதுதவிர, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சைக்கான[9] டோட்டல் பாடி இர்ரேடியேஷன் மற்றும் குழந்தைகளுக்கான க்ரேனியல் ஸ்பைனல் இர்ரேடியேஷன் போன்ற சிறப்பு சிகிச்சைகளும் ட்ரூபீம் மூலம் செய்ய முடிகிறது.

இரண்டு குறிப்பிட்ட சூழல்களில் ட்ரூபீம் விதிவிலக்கான முடிவுகளைக் காட்டும்…

முதலாவதாக, முக்கியமான உறுப்புகளுக்கு அருகில் இருக்கும் கட்டிகள். மூளையில் பார்வை நரம்புகள் போன்ற முக்கியமான பகுதிகளுக்கு அருகில் கட்டி இருந்தால், ட்ரூபீம் தொழில்நுட்பத்தால் கட்டியைத் துல்லியமாக குறிவைத்து கதிர்வீச்சு அளித்து, பார்வைத் திறனைப் பாதுகாக்க முடிகிறது. இரண்டாவதாக, உறுப்புகளைப் பாதுகாத்தல். குரல்வளை, உணவுக்குழாய், மலக்குடல், சிறுநீர்ப்பை மற்றும் மார்பகம் போன்ற உறுப்புகளை அறுவைசிகிச்சை இல்லாமல் அல்லது குறைந்த அளவு அறுவைசிகிச்சையுடன் பாதுகாத்து சிகிச்சையளிக்க முடிவது நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை பெருமளவில் மேம்படுத்துகிறது.

இமேஜ் கைடட் ரேடியேஷன் தெரபி (IGRT) எப்படி வேலை செய்கிறது

ட்ரூபீம் தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான அம்சம் இமேஜ் கைடட் ரேடியேஷன் தெரபி (IGRT). இதை துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சையின் உச்சகட்டம் என்று கூறலாம். இதன் செயல்பாடு மிக எளிமையானது… ஆனால், மிகவும் சக்திவாய்ந்தது.

ட்ரூபீம் அமைப்பில் ஒரு கோன் பீம் சிடி (Cone Beam CT) ஸ்கேனர் உள்ளது. ஒவ்வொரு நாளும் சிகிச்சை அளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நோயாளி சிகிச்சை மேசையில் படுத்திருக்கும்போதே இந்த ஸ்கேனர் ஒரு புதிய சிடி ஸ்கேன் எடுக்கிறது. இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், மனித உடல் நிலையானதல்ல… ஒவ்வொரு நாளும் உள் உறுப்புகள் சிறிது நகரக்கூடும். உதாரணமாக, ப்ராஸ்டேட் கட்டியின் இடம் சிறுநீர்ப்பை அல்லது மலக்குடல் எவ்வளவு நிரம்பியுள்ளது என்பதைப் பொறுத்து மாறுபடும்.

முந்தைய நாள் திட்டமிட்ட சிகிச்சைக்கும் இன்றைய உடலின் உண்மையான நிலைக்கும் இடையே வேறுபாடு இருக்கலாம். IGRT தொழில்நுட்பம் இந்த வேறுபாட்டைக் கண்டறிந்து, கதிர்வீச்சை அளிப்பதற்கு முன்பே சரிசெய்துவிடுகிறது. அதாவது மருத்துவர்கள் கதிர்வீச்சைச் செலுத்துவதற்கு சற்று முன்பே, எங்கே செலுத்துகிறார்கள் என்பதை அறிவார்கள். இது ஒரு ரியல் டைம் ஜிபிஎஸ் போன்றது… கதிர்வீச்சுக் கற்றை எப்போதும் சரியான இலக்கை நோக்கிச் செல்வதை உறுதிசெய்கிறது.

Also Read: Types of Cancer Treatments[10]

இந்த அமைப்பின் மற்றொரு சிறப்பு அம்சம் அடாப்டிவ் ரேடியோதெரபி. சில வாரங்கள் சிகிச்சைக்குப் பிறகு கட்டி சுருங்கியிருந்தால், புதிய ஆன்-கௌச் ஸ்கேன் அதைக் காட்டும். அப்போது மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சைத் திட்டத்தை மறுசீரமைத்து, குறைந்த பரப்பளவுக்கு கதிர்வீச்சு அளிப்பதன் மூலம் ஆரோக்கியமான திசுக்களை மேலும் பாதுகாக்க முடிகிறது.

நோயாளிகளின் சிகிச்சை அனுபவம் எப்படி இருக்கும்

ட்ரூபீம் சிகிச்சை பெறும் நோயாளிகளின் அனுபவம் மிகவும் நேர்மறையானதாகவே இருக்கிறது. முதலில், ஒவ்வொரு நாளும் சிகிச்சைக்கு ஆகும் நேரம் மிகவும் குறைவு – வெறும் 7 முதல் 8 நிமிடங்கள். இது நோயாளிகளின் அன்றாட வாழ்க்கையில் குறைந்த இடையூற்றையே ஏற்படுத்துகிறது.

மொத்த சிகிச்சை அமர்வுகளின் எண்ணிக்கை புற்றுநோயின் வகையைப் பொறுத்து மாறுபடும். மூளைக்குள் இருக்கும் கட்டிகளுக்கு வெறும் 1 அமர்வு முதல், மற்ற புற்றுநோய்களுக்கு 30 முதல் 33 அமர்வுகள் வரை தேவைப்படலாம். ஹைபோஃப்ராக்ஷனேட்டட் ரேடியேஷன் தெரபி என்கிற நுட்பத்தின் மூலம், அதிக கதிர்வீச்சை ஒரே அமர்வில் பாதுகாப்பாக அளிக்க முடிவதால், மொத்த அமர்வுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடுகிறது.

பக்கவிளைவுகளின் அளவும் மிகவும் குறைவு. பாரம்பரிய கதிர்வீச்சு முறையில் கடுமையான பக்கவிளைவுகள் (மூன்றாம் அல்லது நான்காம் நிலை) பொதுவாக இருந்தன. ட்ரூபீம் தொழில்நுட்பத்தில், 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு லேசான பக்கவிளைவுகள் (முதல் அல்லது இரண்டாம் நிலை) மட்டுமே ஏற்படுகின்றன. இதன் பொருள், நோயாளிகள் வேகமாகக் குணமடைந்து, சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ முடிகிறது.

நகரும் கட்டிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியுமா

நுரையீரல் மற்றும் கல்லீரலில் இருக்கும் கட்டிகள் ஒரு சிறப்பு சவாலை ஏற்படுத்துகின்றன. அவை நோயாளி சுவாசிக்கும்போது நகர்கின்றன. பழைய தொழில்நுட்பங்களில், இந்த இயக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பெரிய பரப்பளவுக்கு கதிர்வீச்சு அளிக்க வேண்டியிருந்தது. இதனால் அதிக அளவு ஆரோக்கியமான திசுக்கள் பாதிக்கப்பட்டன.

ட்ரூபீம் தொழில்நுட்பம் இந்தப் பிரச்னையை ரெஸ்பிரேட்டரி மோஷன் கேட்டிங் (Respiratory Motion Gating) அல்லது ஆர்பிஎம் (RPM) தொழில்நுட்பம் மூலம் தீர்க்கிறது. இந்த அமைப்பு நோயாளியின் சுவாசச் சுழற்சியைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. கதிர்வீச்சு அளிக்கும் இயந்திரம் சுவாசத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மட்டுமே – உதாரணமாக, மூச்சை உள்ளிழுக்கும்போது மட்டும் – கதிர்வீச்சை வெளியிடும்படி திட்டமிடப்படுகிறது.

இந்த நுட்பம் மூலம், நகரும் கட்டியை மிகத் துல்லியமாக குறிவைக்க முடிகிறது. சுவாசத்துடன் ஒத்திசைவு செய்யப்பட்ட கதிர்வீச்சு, கட்டி எங்கிருந்தாலும் அதைச் சரியாகத் தாக்குகிறது, சுற்றியுள்ள ஆரோக்கியமான நுரையீரல் அல்லது கல்லீரல் திசுக்களைப் பாதுகாக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் மார்பகப் புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. அங்கு நான்கு பரிமாண சிடி ஸ்கேன் மற்றும் டீப் இன்ஸ்பிரேட்டரி ப்ரெத் ஹோல்டிங் தொழில்நுட்பத்துடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய சகாப்தம் 

ட்ரூபீம் தொழில்நுட்பம் புற்றுநோய் சிகிச்சையில் ஓர் உண்மையான புரட்சியைக் குறிக்கிறது. கதிர்வீச்சு சிகிச்சை என்பது இனி நோயாளிகள் அஞ்ச வேண்டிய ஒன்றல்ல… மாறாக, அது மிகத் துல்லியமான, பயனுள்ள மற்றும் நோயாளி நலனை மையமாகக் கொண்ட ஒரு நவீன சிகிச்சை முறையாக மாறியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோயை வெல்வதோடு, நோயாளிகள் தங்கள் உறுப்புகளைப் பாதுகாத்து, சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ முடிகிறது. சிகிச்சைக் காலம் குறைவு, பக்கவிளைவுகள் மிகக் குறைவு, வேகமான குணமடைதல்…இவை அனைத்தும் சேர்ந்து, நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கின்றன!

 

ட்ரூபீம் தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோயை வெல்வதோடு, நோயாளிக தங்கள் உறுப்புகளைப் பாதுகாத்து, சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ முடிகிறது.

 

Dr. பி. சதீஷ்[11]
MBBS, MD, DNB (RO)
கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர்
காவேரி மருத்துவமனை, திருச்சிதென்னூர்[12]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. புற்றுநோய்: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/oncology/
  2. கதிரியக்கச் சிகிச்சை: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/radiation-oncology/
  3. காவேரி மருத்துவமனையில் செயல்படும் வேரியன் ட்ரூபீம் 18.0 பதிப்பு உலகிலேயே மிகச் சமீபத்திய மற்றும் மேம்பட்ட மாடலாகும்: https://www.kauveryhospital.com/kauverian-scientific-journal/subglottis-carcinoma-truebeam/
  4. மார்பகப் புற்றுநோய்: https://www.kauveryhospital.com/blog/cancer/breast-cancer-early-signs-diagnosis-and-treatment/
  5. குடலிறக்கப் பிரச்னைகளான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை: https://www.kauveryhospital.com/blog/gastroenterology/hernia-is-there-a-cure-that-does-not-involve-surgery/
  6. நுரையீரல் புற்றுநோய்: https://www.kauveryhospital.com/blog/cancer/lung-cancer-screening-tests-when-does-one-need-it/
  7. லிம்ஃபோமா: https://www.kauveryhospital.com/blog/cancer/lymphoma-an-overview-types-and-genetic-risks/
  8. ப்ராஸ்டேட்: https://www.kauveryhospital.com/blog/cancer/treatment-options-for-prostate-cancer/
  9. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சைக்கான: https://www.kauveryhospital.com/bone-marrow-transplant/
  10. Types of Cancer Treatments: https://www.kauveryhospital.com/blog/cancer/types-of-cancer-treatments/
  11. Dr. பி. சதீஷ்: https://www.kauveryhospital.com/doctors/trichy-tennur/radiation-oncology/dr-b-sathish/
  12. திருச்சிதென்னூர்: https://www.kauveryhospital.com/our-locations/trichy-tennur/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/truebeam-technology-heralds-a-new-era-in-cancer-treatment/