by admin-blog-kh | April 21, 2026 7:34 am
100 பெண் குழந்தைகளில் 8 பேருக்கும், 100 ஆண் குழந்தைகளில் 2 பேருக்கும் 5 வயதுக்குள் UTI என்கிற சிறுநீரக நோய்த்தொற்று வருகிறது. கோடை காலத்தில் தண்ணீர் குறைவாகக் குடிப்பது இதை மேலும் அதிகரிக்கிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளித்தால் சிறுநீரக சேதத்தைத் தவிர்க்கலாம்.
கோடை வந்தால் குழந்தைகளுக்கு விடுமுறை வரும், விளையாட்டு வரும். அதோடு சேர்ந்து, ஓர் அலட்சியமான எதிரியும் வரும்… சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று – அதாவது (UTI). வெயில் காலத்தில் குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீர் அடர்த்தியாகிறது. இது கிருமிகள் வளரவும், தொற்று ஏற்படவும் ஏதுவாகிறது[1].
குழந்தைகளுக்குமா UTI வரும்? ஆம்… இது பெரியவர்களுக்கு மட்டுமான நோய் அல்ல. இந்தியாவில் காய்ச்சலுடன் வரும் குழந்தைகளில் 4 முதல் 5 சதவிகிதம் பேருக்கு, UTI-தான் காரணமாக இருக்கிறது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? பெண் குழந்தைகளுக்கே அதிக ஆபத்து. ஆண்களைவிட பெண்களுக்கு சிறுநீர்க் குழாய் குறுகியதாகவும் குறைந்த நீளத்திலும் இருப்பதால், கிருமிகள் சுலபமாக உள்ளே நுழைந்துவிடுகின்றன. 5 வயதுக்குள் 100 பெண் குழந்தைகளில் 8 பேருக்கும், 100 ஆண் குழந்தைகளில் 2 பேருக்கும் UTI வரலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சல், சரியாகப் பால் குடிக்காமல் இருப்பது, எரிச்சலடைந்து அழுவது, துர்நாற்றமுள்ள சிறுநீர் போன்றவை மட்டுமே அறிகுறியாக இருக்கும். பெரிய குழந்தைகளுக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு, சிறுநீரில் ரத்தம், வயிறு அல்லது முதுகில் வலி, அதிக காய்ச்சல் ஆகியவை தோன்றலாம். சில நேரங்களில் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்துவிடலாம்[2]. இவை எதுவும் தெரியாமல் வெறும் காய்ச்சலாக மட்டுமே வெளிப்படும்போது, பெற்றோர்கள் UTI என்று சந்தேகிக்காமல் விட்டுவிடுகிறார்கள். அதுதான் ஆபத்து.
சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காவிட்டால், கிருமிகள் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரகம் வரை பரவும். இந்நிலையில் கடுமையான சிறுநீரக நோய்த்தொற்று (Pyelonephritis) ஏற்படும். காய்ச்சல் உள்ள குழந்தைகளில் UTI காரணமாக சிறுநீரக வடு (Renal Scarring) ஏற்படும் அபாயம் சுமார் 15 சதவிகிதம். இந்த வடுக்கள் நீடித்தால், வளர்ந்த பின் ரத்த அழுத்தம், நாட்பட்ட சிறுநீரக நோய் எனப் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்[4].
தண்ணீர் அதிகமாகக் குடிக்க வைப்பது மிக முக்கியம். சிறுநீரை அடக்கி வைக்காமல் உடனே கழிக்க பழக்குங்கள். பெண் குழந்தைகளுக்கு முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாகச் சுத்தம் செய்யும் பழக்கத்தை சிறு வயதிலேயே கற்றுக்கொடுங்கள். குழந்தையின் உள்ளாடை சுத்தமாகவும் உலர்ந்தும் இருக்கட்டும். மலச்சிக்கல் இருந்தாலும் UTI வரலாம் என்பதால் நார்ச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுங்கள்.
லேசான காய்ச்சல், அழுகை, சிறுநீர் நாற்றம்… இவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். சிறுநீர் பரிசோதனை (Urine Culture) மட்டுமே UTI பிரச்னையை உறுதி செய்யும். 7 முதல் 10 நாட்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics) எடுத்தால் குணமாகும். மருந்தை நடுவிலேயே நிறுத்திவிடக் கூடாது.
கோடை வெயிலில் குழந்தையை ஆடவிடுங்கள், சிரிக்கவிடுங்கள். ஆனால், தண்ணீர் குடிக்க மறக்கவிடாதீர்கள்!
UTI ஏற்படக் காரணமான கிருமிகளில் E.coli என்பது 80 சதவிகிதம் வரை காரணமாக இருக்கிறது. சில குழந்தைகளுக்கு சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு தண்ணீர் திரும்பி வரும் Vesicoureteral Reflux (VUR) என்கிற குறைபாடு இருக்கும். இந்தக் குழந்தைகளுக்கு UTI மீண்டும் மீண்டும் வரும். Ultrasound, VCUG போன்ற பரிசோதனைகள் மூலம் இதை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.
Dr. எம். சுரேஷ்[5], MBBS, MD (Paediatrics), Fellowship in Paediatric Nephrology
குழந்தை சிறுநீரகவியல் நிபுணர்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி[6]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/urinary-tract-infections-in-children-amidst-the-summer-heat/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.