by admin-blog-kh | April 20, 2026 5:57 am
உடல் நலம், மன நலம் மட்டுமல்ல… இன்றைய உலகில் ‘டிஜிட்டல் நலம்’ என்கிற மூன்றாவது பரிமாணமும் ஆரோக்கியத்தின் அங்கமாகிவிட்டது. ஆரோக்கியம் என்பது உங்கள் போன் பேட்டரி மாதிரி; சார்ஜ் செய்யாமல் விட்டால் திடீரென்று அணைந்துவிடும்!
ஏப்ரல் 7… உலக சுகாதார தினம்[1]. ‘நலமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்கும் இந்த நாளில், நலம் என்றால் என்ன என்று கொஞ்சம் ஆழமாக யோசிக்க வேண்டும். ரத்த அழுத்தம்[2] சரியாக இருக்கிறது, சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது… இது மட்டும் ஆரோக்கியம் அல்ல. உடல் நலமும் மன நலமும் சமநிலையில் இருக்கும்போதுதான் உண்மையான ஆரோக்கியம் பூக்கிறது. இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களின் தாக்கத்தால் உருவாகும் ‘டிஜிட்டல் மன அழுத்தம்’ என்கிற மூன்றாவது சவாலும் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
ஆரோக்கியம் என்பது உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியைப் போன்றது. தினமும் சார்ஜ் செய்ய வேண்டும், அடிக்கடி மென்பொருள் புதுப்பிக்க வேண்டும், முற்றிலும் காலியாக விட்டுவிடக் கூடாது. உடல் ஆரோக்கியம்[3] என்பது பாட்டி சொல்வதைக் கேட்பது போல்… பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், வீட்டு சமையல்.
மன ஆரோக்கியம் என்பது வாழ்க்கையில் வரும் மன அழுத்தத்துக்காக அளவுக்கு அதிகமாக மன அழுத்தப்படாமல், நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசி, சிரித்து வாழ்வது.
குழந்தைகளுக்குத் தொடர்ந்து வயிற்று வலி வருகிறது, ஆனால், பரிசோதனையில் எந்தப் பிரச்னையும் தெரிவதில்லை. ஆழமாக பேசினால் தெரிகிறது… தேர்வு அழுத்தம் அல்லது சமூக ஊடக ஒப்பீட்டால் வரும் மன அழுத்தம் தான் காரணம். IT துறை இளைஞர்களுக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் Insulin Resistance அதிகரித்து, இளம் வயதிலேயே நீரிழிவு வருகிறது[4]. இரவு 2 மணிக்கு சாப்பிடும் பழக்கம் உடலின் உயிரியல் கடிகாரத்தை சீர்குலைக்கிறது; உறக்கமின்மையும் மன அழுத்தமும் சேர்ந்து ‘பசி’ என்கிற பெயரில் மகிழ்ச்சியை உணவில் தேடும் போக்கையும் உருவாக்குகிறது. வயதான பெற்றோர்கள், குறிப்பாக பெண்கள், மகன் அல்லது மகள் வெளிநாடு சென்றதும் தனிமையில் ஆழ்ந்து மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். இதை ‘Empty Nest Syndrome’ என்கிறோம்[5].
மேலும், நம் வாழ்க்கை முறையில் ஒரு பூகோள முரண்பாட்டையும் காண்கிறோம். வெப்பமான தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தாத கனமான ஆடைகள், அதிக வியர்வை, தொடர் பூஞ்சைத் தொற்று. பாரம்பரிய மோர், இளநீர், கோடைகால பழங்களை விட்டுவிட்டு, உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தினசரி சாப்பிடுவது… இவை எல்லாம் ஆரோக்கியத்தை மறைமுகமாகப் பாதிக்கின்றன.
குடும்ப மருத்துவர் என்பவர் வெறும் மருத்துவர் மட்டுமல்ல… குடும்பத்தின் மரபணு வரலாறு, பழக்கவழக்கங்கள், ஒவ்வோர் உறுப்பினரின் மனநிலை என அனைத்தையும் புரிந்துகொண்டு பராமரிப்பவர். ஒரு குழந்தைக்கு ‘உன் அப்பா உன் எதிர்காலத்துக்காக கஷ்டப்படுகிறார்’ என்று புரியவைப்பவரும், அந்த அப்பாவிடம் ‘உங்கள் குழந்தை இந்த வயதில் என்ன நினைக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள்’ என்று ஆலோசனை சொல்பவரும் குடும்ப மருத்துவரே. நிபுணத்துவ மருத்துவர்களிடம் அனுப்பி, குணமடைதல் வரை தொடர்ந்து கண்காணிப்பதும் இந்தப் பாத்திரத்தின் முக்கியமான பகுதி.
தலைவலிக்கு[7] இணையத்தில் தேடி, மருந்துக்கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதனால் கண்டறியப்படாத சிறுநீரகப் பாதிப்பு, மருந்து ஒவ்வாமை, தாமதமான சிகிச்சை என பல தீவிர விளைவுகள் ஏற்படும் அபாயம் உண்டு. அறிகுறி இல்லாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, தைராய்டு[8], கல்லீரல், சிறுநீரகம், சிறுநீர் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம். இது செலவல்ல… முதலீடு!
உலக சுகாதார தினத்தில் மூன்று மிக முக்கியமான மாற்றங்களை இன்றே தொடங்குங்கள். முதலாவது… உடலை அசையுங்கள்; உறுப்புகளை உபயோகிக்காமல் விட்டால் அவை செயலிழக்கும். இரண்டாவது… தூக்கத்துக்கு முன்னுரிமை கொடுங்கள்; அது உற்பத்தித்திறனுக்கான தியாகம் அல்ல, ஆரோக்கியத்துக்கான அடிப்படை. மூன்றாவது…டிஜிட்டல் சமூகத்தைவிட நேர்முக சமூகத் தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள்; போனை வையுங்கள், உலகம் நின்றுவிடாது. வீட்டில் குடும்பமாகச் சேர்ந்து சமைக்கவும், இயற்கையில் நேரம் செலவிடவும் தொடங்குங்கள்.
ஆரோக்கியம் ஓர் இலக்கல்ல… இது ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டிய பயணம்!
1. தட்பவெப்ப நிலைக்கேற்ற வாழ்க்கை முறை: கோடையில் பருத்தி ஆடை, மோர், இளநீர், மாம்பழம் போன்ற பருவகால உணவுகள் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சி தரும்.
2. Digital Detox: தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் திரையில் இருந்து விலகுங்கள்.
3. Team Spirit: விளையாட்டு மூலம் தோல்வியையும் வெற்றியையும் சேர்ந்து அனுபவிக்கக் கற்பது வாழ்க்கையில் ‘adjusting capacity’-ஐ வளர்க்கிறது. இதை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுங்கள்.
4. Memory Exercise: போன் நம்பரை மனப்பாடம் செய்யுங்கள், சின்னச் சின்ன கணக்குகளை மனதிலேயே போடுங்கள்… மூளைக்கும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
Dr. கவிதா சுந்தரவதனம் MBBS, DFH[9]
குடும்ப மருத்துவர்
காவேரி மருத்துவமனை, சென்னை – ஆழ்வார்பேட்டை[10]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/your-health-is-in-your-hands-but-those-hands-are-always-holding-a-phone/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.