முழங்கால் அழுகிறது… காது கொடுத்துக் கேட்கிறீர்களா?

by admin-blog-kh | October 26, 2026 7:17 am

‘வயசானா மூட்டு வலி வரத்தான் செய்யும்’ என்று சகித்துக்கொண்டு வாழ்வது நம் வீடுகளில் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது[1]. எந்த அறிகுறி ஆபத்து, அறுவை சிகிச்சை இல்லாமல் என்ன செய்யலாம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குச் சரியான நேரம் எது?

மூட்டுவாதம் (Arthritis)[2] உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. ஆனால், வீக்கம் என்ற எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினாலோ, முடங்கும் வரை காத்திருந்தாலோ, பின்னால் கிடைக்கும் பலன் குறைந்துவிடும். வலியைச் சகிப்பதை விட, வலியைப் புரிந்துகொள்வதே முக்கியம்.

கோயில் படிக்கட்டுகளைப் பார்த்தாலே மலைப்பு, சமையலறையில் அரை மணி நேரம் நின்றாலே முழங்காலில் வலி, சேரில் இருந்து எழுந்திருக்கும்போது ஒரு பெருமூச்சு… நம் வீட்டுப் பெரியவர்கள் பலரும் இதை ‘வயசு’ என்று ஏற்றுக்கொண்டு, மெல்ல மெல்ல வெளியே செல்வதையே குறைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இழக்கும் நடமாட்டம் பெரும்பாலும் வயதால் அல்ல… தாமதத்தாலும் தவறான நம்பிக்கைகளாலும்தான்.

‘வயது’ என்று ஒதுக்கக் கூடாத அறிகுறிகள் 

நம் நாட்டில், குறிப்பாக 40 வயதைக் கடந்த பெண்களிடம், மூட்டுவலி மிக அதிகமாகக் காணப்படுகிறது. உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறையும் பரம்பரைத் தன்மையும் இதற்கு முக்கியக் காரணங்கள். வலி வந்தாலே பயப்பட வேண்டியதில்லை. ஆனால், முழங்கால் வீங்குவது ஒருபோதும் நல்ல அறிகுறி அல்ல. கடைக்குப் போய் வந்த பிறகோ, நீண்ட நேரம் நடந்த பிறகோ, சமையலறையில் நின்று வேலை செய்த பிறகோ மாலையில் முழங்கால் வீங்கினால், மூட்டுக்குள் இருக்கும் அமைப்புகள் சரியாகச் செயல்படவில்லை என்று அர்த்தம். முழங்கால் அழுகிறது… அது ஏன் அழுகிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.

நாற்காலியில் இருந்து எழுந்த உடனேயே வலிப்பது, நடக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களுக்குள் வலி வருவது, இரவில் தூக்கத்திலிருந்து எழுப்பும் அளவுக்கு வலிப்பது ஆகியவையும் தீவிரமான அறிகுறிகள். இவை இருந்தால் ‘தாங்க முடியாத அளவுக்கு வலிக்கட்டும், பிறகு பார்க்கலாம்’ என்று காத்திருக்காமல் உடனே மருத்துவரைச் சந்தியுங்கள்.

அறுவை சிகிச்சைக்கு முன் என்ன செய்யலாம்? 

மூட்டுவாதம் என்று சொன்னதுமே ஆபரேஷன்தான் ஒரே வழி என்று பலர் பயப்படுகிறார்கள். உண்மையில், மூட்டுவாதம் உள்ளவர்களில் சுமார் 95 சதவிகிதம் பேருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. சரியான பழக்கங்களோடு அவர்கள் நன்றாக நடமாடி, நல்ல வாழ்க்கைத் தரத்துடன் வாழ முடியும்.

இதில் மிக முக்கியமானது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதைத் தவிர்ப்பது. நடப்பதை விட, அசையாமல் நிற்பதுதான் மூட்டுக்கு அதிக அழுத்தம் தருகிறது. மணிக்கணக்கில் அடுப்பு முன் நிற்கும் நம் வீட்டுப் பெண்களுக்கு இது மிகவும் பொருந்தும். சமையலுக்கு இடையே சிறிது உட்காருவது, அலுவலகத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால் இடையிடையே அசைவது நல்லது. அசைவுதான் மூட்டுக்கு மசகு.

எளிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, இயன்முறை மருத்துவம் (Physiotherapy), வெந்நீர் ஒத்தடம் ஆகியவை மூட்டை இயக்கத்தில் வைத்திருக்க உதவும். முழங்கால் கவசம் (Knee Cap), வலி நிவாரணக் களிம்புகள் (Topical Gel) ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். எலும்பு உறுதிக்குக் கால்சியம், வைட்டமின் டி[3] சத்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். இந்த எளிய வழிகளால் பலர் பல ஆண்டுகள் நலமாக நடமாடுகிறார்கள்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குச் சரியான நேரம் எது? 

ஓர் எளிய அளவுகோல் சொல்கிறேன். ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க முடிகிறது, நாற்காலியில் இருந்து எழுவது போன்ற அன்றாட வேலைகளைப் பெரிய சிரமம் இல்லாமல் செய்ய முடிகிறது என்றால், உங்களுக்கு இப்போது அறுவை சிகிச்சை தேவையில்லை. ஆனால், ஒவ்வொரு முறை எழுந்து நிற்கும்போதும் வலிக்கிறது, இரவில் வலியால் தூக்கம் கலைகிறது என்றால், அந்த எல்லையைத் தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

Also Read: மற்றவரைக் கவனிக்கும் நீங்கள், உங்கள் எலும்புகளையும் கவனியுங்கள்![4]

பலர் ‘இப்போதே செய்வது சீக்கிரமோ’ என்று தயங்கி, முடங்கிப்போகும் வரை காத்திருக்கிறார்கள். அப்படிக் காத்திருக்கும்போது தசைகள் சுருங்கி வலுவிழக்கின்றன, எலும்புகளும் பலவீனமாகின்றன. அதனால் பின்னால் செய்யும் அறுவை சிகிச்சையின் பலனும் குறைகிறது. இன்றைய செயற்கை மூட்டுக்கள் (Implant) 25 முதல் 30 ஆண்டுகள் வரை நீடிக்கின்றன. எனவே, ‘சீக்கிரம் செய்தால் தேய்ந்துவிடுமோ’ என்று பயந்து தள்ளிப்போட வேண்டியதில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்துகொண்டால், அடுத்த 25, 30 ஆண்டுகளை நல்ல நடமாட்டத்துடன் வாழலாம். பத்து ஆண்டுகள் வலியோடு போராடுவதை விட, ‘சீக்கிரம்’ என்பதையே நான் தேர்ந்தெடுப்பேன்.”

ரோபோட்டிக் அறுவை சிகிச்சை என்றால் ரோபோதான் ஆபரேஷன் செய்கிறதா? 

இல்லை. ரோபோ அறுவை சிகிச்சையைச்[5] செய்வதில்லை… அறுவை மருத்துவர்தான் செய்கிறார். மூட்டின் அமைப்பை மதிப்பிடவும், செயற்கை மூட்டைச் சரியான கோணத்தில் பொருத்தவும் (Alignment) வழிகாட்டும் கருவிதான் ரோபோ. பெரிய தவறுகளும் சிக்கல்களும் நேராமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு வலையாக அது செயல்படுகிறது. அனுபவம் குறைந்த இளம் அறுவை மருத்துவர்களுக்கு, கற்றுக்கொள்ளும் காலத்தில் துல்லியத்தைத் தரும் விலைமதிப்பற்ற கருவி இது.

அதே நேரம், ஒவ்வொருவரின் முழங்காலும் வேறுபட்டது. எலும்பின் தரம், தசைநார்களின் இறுக்கம் (Ligament Tension), வளைவின் தன்மை எல்லாமே நபருக்கு நபர் மாறும். இந்த நுணுக்கங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதில் ரோபோவுக்கு இன்னும் வரம்புகள் உண்டு. பல்லாயிரக்கணக்கான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள்[6] செய்த அனுபவமுள்ள மருத்துவரின் கைத்திறனும் மருத்துவ நுண்ணறிவும், ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தனிப்பட்ட பொருத்தத்தைத் தருகின்றன என்பது என் அனுபவம்.

மூட்டு மாற்றுக்குப் பிறகு தரையில் உட்கார முடியுமா? 

நேர்மையாகச் சொல்கிறேன்… முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குந்தி உட்கார்வதையும் தரையில் சம்மணமிட்டு உட்கார்வதையும் தவிர்க்க வேண்டும். செயற்கை மூட்டு, 0 முதல் 130 டிகிரி வரையிலான கீல் போன்ற அசைவுக்காகவே வடிவமைக்கப்படுகிறது. குந்தி உட்காரும்போது மூட்டு அதைத் தாண்டி மடங்குகிறது. அப்போது செயற்கை மூட்டு எலும்பின் பின்பகுதியில் இடிக்கிறது. இது எலும்பைச் சேதப்படுத்துவதோடு, செயற்கை மூட்டின் ஆயுளையும் கணிசமாகக் குறைத்துவிடும்.

ஆனால், இதற்கு ஈடாகக் கிடைப்பதைப் பாருங்கள். வலியில்லாமல் நடப்பது, படிக்கட்டு ஏறுவது, நாற்காலியில் இருந்து சிரமமின்றி எழுவது, யாரையும் சார்ந்திருக்காமல் அன்றாட வேலைகளைச் செய்வது… இதுதான் அறுவை சிகிச்சையின் நோக்கம். ஒரே ஓர் அசைவை விட்டுக்கொடுத்து, நிம்மதியான, சுறுசுறுப்பான வாழ்க்கையைத் திரும்பப் பெறுகிறீர்கள்.

அடுத்த 30 ஆண்டுகளுக்கு மூன்று பழக்கங்கள் 

வயது எதுவானாலும், மூட்டுக்களைக் காக்க மூன்று பழக்கங்கள் போதும். முதலாவது, தினமும் காலையில் யோகா அல்லது மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி. இரண்டாவது, அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடப்பது. மூன்றாவது, நல்ல உணவுப் பழக்கத்துடன் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது. கூடுதல் எடை ஒவ்வொன்றும் மூட்டின் மீது கூடுதல் சுமைதான்.

மூட்டுவலியைச் சகித்துக்கொள்வது வீரம் அல்ல. வீக்கம் தெரிந்தாலோ, நாற்காலியில் இருந்து எழுவதே போராட்டமாக மாறினாலோ, ‘அட்ஜஸ்ட்’ செய்வதை நிறுத்திவிட்டு நிபுணரை அணுகுங்கள். நடமாட்டம் என்பது வயது தரும் பரிசு அல்ல… நாம் காத்துக்கொள்ள வேண்டிய செல்வம்!

 

தெரிந்துகொள்வோம்

உலக மூட்டுவாத தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 1996-ம் ஆண்டில் சர்வதேச மூட்டுவாத அமைப்பு (Arthritis and Rheumatism International) இதைத் தொடங்கியது.

இந்தியாவில் ஐந்து இடங்களில் 5,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 28.7 சதவிகிதம் பேருக்கு முழங்கால் மூட்டுத் தேய்மானம் (Knee Osteoarthritis) இருந்தது. பெண்களில் இது 31.6 சதவிகிதம். உடல் பருமன், வயது, உட்கார்ந்தே செய்யும் வேலை ஆகியவை இதனுடன் தொடர்புடைய காரணிகள்.

இந்திய முதியவர்களிடம் நடத்தப்பட்ட 14 ஆய்வுகளின் ஒருங்கிணைந்த பகுப்பாய்வில், ஏறக்குறைய இரண்டில் ஒருவருக்கு (47 சதவிகிதம்) முழங்கால் மூட்டுத் தேய்மானம் இருப்பது தெரியவந்துள்ளது.

 

Dr. ரவி சங்கர் கிருபானந்தன்[7]
MBBS, D Ortho, MRCS, FRCS (Trauma & Ortho, Edinburgh), Dip SICOT
Senior Consultant, Head – Department of Robotic Joint Replacements
காவேரி மருத்துவமனை – சென்னை வடபழனி[8]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. வயசானா மூட்டு வலி வரத்தான் செய்யும்’ என்று சகித்துக்கொண்டு வாழ்வது நம் வீடுகளில் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/is-this-a-consequence-of-old-age-or-is-it-a-treatable-disease/
  2. மூட்டுவாதம் (Arthritis): https://www.kauveryhospital.com/blog/orthopedics/tips-to-manage-arthritis-in-your-hands/
  3. வைட்டமின் டி: https://www.kauveryhospital.com/blog/lifestyle/symptoms-of-vitamin-d-deficiency/
  4. மற்றவரைக் கவனிக்கும் நீங்கள், உங்கள் எலும்புகளையும் கவனியுங்கள்!: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/you-look-after-others-take-care-of-your-bones-too/
  5. ரோபோ அறுவை சிகிச்சையைச்: https://www.kauveryhospital.com/robotic-knee-replacement/
  6. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள்: https://www.kauveryhospital.com/blog/orthopedics/knee-replacement-is-it-time/
  7. Dr. ரவி சங்கர் கிருபானந்தன்: https://www.kauveryhospital.com/doctors/chennai-vadapalani/orthopaedics/dr-ravi-sankar-kirubanandan/
  8. காவேரி மருத்துவமனை – சென்னை வடபழனி: https://www.kauveryhospital.com/our-locations/chennai-vadapalani/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/your-knee-is-crying-are-you-listening/