காணும் பொங்கலும்.மனித மன மாற்றமும்

ஆண்டுதோறும்….

காணும் பொங்கலைச்

சந்திக்கிறோம்….

ஆனால்

சொந்தங்களையும்

நண்பர்களையும் தான்

சந்திப்பதே இல்லை….!!

ஒருவேளை இது

காணாத பொங்கலோ ?

உறவுகள் எல்லாம்

அந்நியமாகிறது

அந்நியமானதெல்லாம்

உறவுகளாகிறது…..

முதல் மனிதனே

மூன்றாவது

மனிதனாகி விட்டான் !!

மூன்றாவது மனிதன்

என்னாகுவான்…?

உழவர்கள் இல்லாமலேயே

உழவர் தினம்

கொண்டாடுகிறோம்…..!!

மாடு இல்லாமலேயே

மாட்டுப் பொங்கல்

கொண்டாகிறோம்…!!

யாரையும் காணாமலேயே

காணும் பொங்கல்

கொண்டாடுகிறோம்!!

நேற்று

வாயினால்

வடை சுட்டோம்…..

இன்று

வாயினால்

பொங்கல் வைக்கிறோம்…..

நாளை?

வாழ்க்கையின் அவசரத்தில்

பழத்தை தூக்கி

எறிந்து விட்டு

தோலைத் தின்கிறோம்….

ஆடம்பரமான வாழ்க்கைக்கு

ஆசைப்பட்டு

இதயத்தை கழுட்டி

எறிந்து விட்டு

இயந்திரத்தை வாங்கி

பொருத்திக் கொண்டோம்…

பாசம் தேங்கி நின்றதால்

பாசி பிடித்துக் கிடக்கிறது….

யாரும் ஆதரிக்காததால்

அநாதையாக

அலைந்து கொண்டிருக்கிறது

அன்பு !

அடகு வைக்கப்பட்டது….

நீண்ட நாட்களாகியும்

இன்னும் திருப்பவேயில்லை

நேர்மையை……!!

கருணைக்கு

கண்களே

கல்லறையாகி விட்டது…!!

விட்டுக் கொடுப்பதை பயன்படுத்தாமல் விட்டதால்

துரு பிடித்து

கிடக்கின்றது……

மனிதம்

சுயநலச்சிலுவையில்

அறையப்பட்டுள்ளது…

உயிர்த்தெழுந்து வருவது

எப்பொழுது என்றுதான்

தெரியவில்லை…..?.

ஆன்மாவை

சந்திக்கப் போகச் சொன்னால்

பிணத்தை

சந்திக்கப் போகிறோம்….

உதிராத

நட்புக்களைப் பார்க்க

வீட்டுக்குப் போகச் சொன்னால்

உதிர்ந்த

சருகுகளைப் பார்க்க

தோட்டத்திற்குப் போகிறோம்…

உணர்வுகளைப்

பரிமாறிக் கொள்வதற்கு

உறவினர் இல்லத்திற்குச்

சென்று வரச் சொன்னால்….

உணவுகளை

பரிமாறிக் கொள்ளும்

உணவகத்திற்கு

சென்று வருகிறோம்……

பாடம் கற்றுக் கொடுத்த வரை

பார்த்து விட்டு

வாருங்கள் என்றால்

படம் பார்த்து விட்டு வருகிறோம்….

பயிர்களை

பிடிங்கி எறிந்து விட்டு

களைகளுக்கு

நீர் பாய்ச்சிகிறோம்…..

இலை பூ காய்

கனிகளை எல்லாம்

இந்த மனித மரங்கள்

உதிர்த்து விட்டு

பெரியதாக

எதை உருவாக்கப் போகிறதோ….?

சிந்தியுங்கள் மனிதமே,

இக்கவிதை உங்களுக்கு சமர்ப்பணம்.

balasubramani

GK. Balasubramani

Senior Physiotherapist