பக்கவாதத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்

பக்கவாதத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்
January 06 08:15 2026 Print This Article

பக்கவாதத்தின் அறிகுறிகளை உடனடியாகக் கண்டறிந்து, மூன்று மணி நேரத்துக்குள் சிகிச்சை பெற்றால் முழுமையாகக் குணமடைய வாய்ப்புகள் அதிகம். F.A.S.T என்ற எளிய சோதனை மூலம் பக்கவாதத்தை அடையாளம் காணலாம்.

திடீரென்று ஒரு பக்கம் கை-கால் செயலிழப்பது, பேச முடியாமல் திணறுவது, முகம் கோணலாக மாறுவது – இவை பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறிகள். ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதில் கணிசமான எண்ணிக்கையினர் உயிரிழக்கின்றனர் அல்லது நிரந்தர ஊனத்துடன் வாழ நேரிடுகிறது.

பக்கவாதம் என்றால் என்ன

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது அல்லது மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும்போது பக்கவாதம் வருகிறது. ரத்த ஓட்டம் நின்றால் மூளை செல்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அவை இறக்க ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் லட்சக்கணக்கான மூளை செல்கள் அழிகின்றன. எனவே, பக்கவாதத்தில் ‘நேரம்தான் மூளை’ (Time is Brain) என்பார்கள்.

இரண்டு வகை பக்கவாதம் உள்ளது. இஸ்கீமிக் ஸ்ட்ரோக் – ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுவது. இது 85 சதவிகிதம் பேருக்கு வருகிறது. ஹெமரேஜிக் ஸ்ட்ரோக் – மூளையில் ரத்தக்குழாய் வெடித்து ரத்தக்கசிவு ஏற்படுவது. இது 15 சதவிகிதம் பேருக்கு ஏற்படுகிறது.

F.A.S.T – உயிர் காக்கும் சோதனை 

F – Face (முகம்): சிரிக்கச் சொல்லுங்கள். ஒரு பக்க முகம் தொங்குகிறதா அல்லது கோணலாக இருக்கிறதா?

A – Arms (கைகள்): இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்லுங்கள். ஒரு கை கீழே விழுகிறதா அல்லது பலவீனமாக உள்ளதா?

S – Speech (பேச்சு): எளிய வாக்கியம் ஒன்றை பேசச் சொல்லுங்கள். குழறுகிறார்களா அல்லது தெளிவாக பேச முடியவில்லையா?

T – Time (நேரம்): இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், தாமதம் செய்யாமல் உடனடியாக ஆம்புலன்ஸை அழையுங்கள்.

மற்ற அறிகுறிகள் 

திடீர் தீவிர தலைவலி, பார்வை மங்கலாவது அல்லது இரட்டைப் பார்வை, நடக்கும்போது தள்ளாட்டம், தலைசுற்றல், குழப்பமான மனநிலை, விழுங்குவதில் சிரமம், ஒரு பக்க உடல் மரத்துப்போதல் போன்றவையும் பக்கவாத அறிகுறிகளாக இருக்கலாம்.

ஆபத்துக் காரணிகள் 

உயர் ரத்த அழுத்தம் பக்கவாதத்துக்கு முக்கிய காரணம். நீரிழிவு நோயாளிகளுக்கு இரண்டு முதல் நான்கு மடங்கு அதிக ஆபத்து. புகைபிடிப்பவர்களுக்கு இரட்டிப்பு வாய்ப்பு. அதிக கொழுப்பு, உடல் பருமன், மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை, இதய நோய்கள், மன அழுத்தம் போன்றவையும் காரணங்கள். 55 வயதுக்கு மேல் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஆபத்து இரட்டிப்பாகிறது.

கோல்டன் அவர்எனும் தங்கமான நேரம்

பக்கவாதம் வந்த சில மணி நேரத்துக்குள் சிகிச்சையை ஆரம்பித்தால் மூளை செல்கள் அழிவதைக் கணிசமாகக் குறைக்கலாம். இதற்கான சிகிச்சை 3 மணி நேரத்துக்குள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு 4.5 மணி நேரத்துக்குள் அளிக்கப்பட வேண்டும். அதனால் Stroke Ready மருத்துவமனையில் உடனடியாக அனுமதி பெற வேண்டும்.

ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்து (Tissue Plasminogen Activator) அல்லது இயந்திர முறையில் ரத்தக்கட்டியை அகற்றும் சிகிச்சை மூலம் ரத்த ஓட்டத்தை மீண்டும் ஏற்படுத்தலாம். தாமதமானால் நிரந்தரப் பாதிப்பு ஏற்படும்.

தடுப்பு முறைகள் 

ரத்த அழுத்தத்தை 120/80 mmHg அளவில் பராமரியுங்கள். சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். புகை பிடிப்பதை முழுமையாக நிறுத்துங்கள். தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். உப்பு குறைவாகப் பயன்படுத்துங்கள். பழங்கள், காய்கறிகள் நிறைந்த சமச்சீர் உணவு சாப்பிடுங்கள். உடல் எடையை சரியான அளவில் பராமரியுங்கள். மன அழுத்தத்தைக் குறையுங்கள். 40 வயதுக்கு மேல் வருடந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

பக்கவாதம் வந்தாலும் உடனடி சிகிச்சையால் முழுமையாகக் குணமடைய முடியும். F.A.S.T சோதனையை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே உயிர் காக்கும் வழி!

 

மினி ஸ்ட்ரோக் – அலட்சியம் வேண்டாம்!

டி.ஐ.ஏ (Transient Ischemic Attack) எனப்படும் மினி ஸ்ட்ரோக்கில் பக்கவாத அறிகுறிகள் சில நிமிடங்கள் முதல் 24 மணி நேரத்துக்குள் சரியாகிவிடும். ஆனால், இது பெரிய பக்கவாதத்தின் முன் எச்சரிக்கை. மினி ஸ்ட்ரோக் வந்தவர்களில் 10-15 சதவிகிதத்தினருக்கு 90 நாட்களுக்குள் பெரிய பக்கவாதம் வருகிறது. எனவே, மினி ஸ்ட்ரோக் வந்தாலும் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து முழுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

 

Dr. சிவராஜன் தாண்டீஸ்வரன்
MBBS, MRCP(UK), CCT in Stroke Medicine
பக்கவாத மருத்துவ நிபுணர்
காவேரி மருத்துவமனை, சென்னைஆழ்வார்பேட்டை

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011