கார்டியாக் எம்.ஆர்.ஐ இதய நோய்களுக்கு ‘கண்’ போன்றது!

கார்டியாக் எம்.ஆர்.ஐ இதய நோய்களுக்கு ‘கண்’ போன்றது!
February 10 07:09 2026 Print This Article

இதய நோய்களைத் துல்லியமாகக் கண்டறியும் புதிய தொழில்நுட்பமாக கார்டியாக் எம்.ஆர்.ஐ விளங்குகிறது. ரேடியேஷன் இல்லாமல், இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை முழுமையாக ஆராயும் இந்தத் தொழில்நுட்பம், சிக்கலான இதய நோய்களுக்குத் தீர்வு காண உதவுகிறது.

இதயத்தை ஆய்வு செய்வதற்கான பரிசோதனைகள் மருத்துவத்துறையில் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகின்றன. இ.சி.ஜி (Electrocardiogram), எக்கோ, சி.டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் நமக்குப் பழக்கமானவை. இவற்றைத் தாண்டி, இப்போது கார்டியாக் எம்.ஆர்.ஐ என்ற புதிய தொழில்நுட்பம் இதய நோய்களைத் துல்லியமாகக் கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காந்தப்புலத் தொழில்நுட்பம் 

கார்டியாக் எம்.ஆர்.ஐ என்பது மேக்னடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) தொழில்நுட்பம். 1980களில் உருவான இந்த முறை, தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. உடலின் பல்வேறு உறுப்புகள், வலிமையான காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது வேறுபட்ட முறையில் நடந்துகொள்கின்றன. இந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி படங்கள் உருவாக்கப்படுகின்றன. இதயம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு என்பதால், அதை எம்.ஆர்.ஐ மூலம் படமெடுப்பதில் சில சவால்கள் இருக்கின்றன. ஆனால், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்தச் சவால்களை வெற்றிகரமாகக் கடந்து, தெளிவான படங்களைப் பெற முடிகிறது.

கார்டியாக் எம்.ஆர்.ஐயின் சிறப்பு அம்சங்கள் பல உள்ளன. இது முற்றிலும் பாதுகாப்பான, ரேடியேஷன் இல்லாத பரிசோதனை. உடலுக்குள் எந்த ஊசியோ, குழாயோ செலுத்தாமல், வெளியில் இருந்தே இதயத்தின் முழுமையான தகவல்களைப் பெற முடியும். இதயத் திசுக்களின் தன்மையை, உயிர்திசு பரிசோதனை (Biopsy) செய்வது போன்ற துல்லியத்துடன் கண்டறிய முடிகிறது. இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்து மிகத் துல்லியமான தகவல்களை இந்தப் பரிசோதனை வழங்குகிறது.

மற்ற பரிசோதனைகளுடன் ஒப்பீடு 

இதய நோய்களைக் கண்டறிய பல வகையான பரிசோதனைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன. கார்டியாக் சி.டி ஸ்கேனில் ரேடியேஷன் பயன்படுத்தப்படுகிறது. இதில் கான்ட்ராஸ்ட் என்ற நிறப்பொருள் செலுத்தப்படுகிறது. இது எம்.ஆர்.ஐயில் பயன்படுத்தப்படும் கான்ட்ராஸ்டைவிட அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சி.டி ஸ்கேன் நிலையான படங்களை மட்டுமே வழங்குகிறது. எனவே, இயங்கிக்கொண்டிருக்கும் இதயம் பற்றிய சில தகவல்களைப் பெற முடியாது. இருப்பினும், கரோனரி தமனிகளை ஆய்வு செய்வதற்கும், இதயத்தின் அமைப்பை மதிப்பிடுவதற்கும் இது சிறந்த பரிசோதனையாகும்.

எக்கோ கார்டியோகிராம் இதய மதிப்பீட்டில் மிக அடிப்படையான பரிசோதனையாகும். இது எளிதாகக் கிடைக்கக்கூடியது. இதற்கான உபகரணங்களும், நிபுணர்களும் பரவலாக உள்ளனர். இதில் ரேடியேஷன் இல்லை, கான்ட்ராஸ்ட் செலுத்த தேவையில்லை. ஆனால், வயது முதிர்ந்தவர்களுக்கும், முன்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும் இதில் தெளிவான படங்கள் கிடைக்காமல் போகலாம். குழந்தைகளுக்கும்கூட, இதயத்தின் சில பகுதிகள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம். திசுக்களின் தன்மையை இதில் கண்டறிய முடியாது. மேலும், இது செய்யும் நபரின் திறமையைப் பொறுத்து முடிவுகள் மாறுபடும்.

எந்த நோய்களுக்கு உதவுகிறது

கார்டியாக் எம்.ஆர்.ஐ பல்வேறு இதய நோய்களைக் கண்டறிவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பிறவி இதயக் குறைபாடுகளை, எளிமையான குறைபாடுகள் முதல் சிக்கலான குறைபாடுகள் வரை துல்லியமாகக் கண்டறிய முடிகிறது. குறைபாட்டைக் கண்டறிவதோடு, சிகிச்சைத் திட்டத்தை வகுப்பதற்கும் இது உதவுகிறது. குழந்தைப் பருவத்தில் சிகிச்சை பெறாத வயது முதிர்ந்தவர்களின் பிறவி இதயக் குறைபாடுகளையும், ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களின் பின்தொடர் மதிப்பீட்டுக்கும் இது பயன்படுகிறது.

இஸ்கீமிக் இதய நோயில், கரோனரி தமனி அடைப்புக்கு சிகிச்சை அளித்தால் எந்த அளவுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என்பதைத் தீர்மானிக்க இது உதவுகிறது. இதயத்தின் மற்ற பகுதிகளில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதையும் இது கண்டறிகிறது. இதய வால்வுகளின் பிரச்னைகளையும், அதன் தீவிரத்தையும் துல்லியமாக மதிப்பிட முடிகிறது.

அமைலாய்டோசிஸ், சார்காய்டோசிஸ் போன்ற நோய்களால் இதயத்தில் தேங்கும் பொருட்களை, உயிர்திசு பரிசோதனை செய்யாமலேயே கண்டறிய முடிகிறது. மையோகார்டிடிஸ் எனப்படும் இதயத் தசை வீக்கத்தையும் இது கண்டறிகிறது. கார்டியோமையோபதி எனப்படும் இதயத் தசைப் பிரச்னைகளான விரிவடைந்த கார்டியோமையோபதி, கட்டுப்படுத்தும் கார்டியோமையோபதி, தடித்த கார்டியோமையோபதி ஆகியவற்றை மதிப்பிடவும், திடீர் இதயச் செயலிழப்பு அல்லது மரணத்துக்கான ஆபத்தைக் கண்டறியவும் இது உதவுகிறது.

இதயக் கட்டிகளை மதிப்பிடுவதிலும் கார்டியாக் எம்.ஆர்.ஐ முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டி எதனால் ஆனது, அது என்ன பிரச்னைகளை ஏற்படுத்துகிறது, அது புற்றுநோய்க் கட்டியா அல்லது நல்ல கட்டியா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது.

பரிசோதனைக்கான தயாரிப்பு 

கார்டியாக் எம்.ஆர்.ஐ பரிசோதனை சி.டி ஸ்கேன் அல்லது எக்கோ பரிசோதனையைவிட சற்று அதிக நேரம் எடுக்கும். இது மிக விரிவான பரிசோதனை என்பதால், சில நேரங்களில் ஒன்றரை மணி நேரம் வரை ஆகலாம். பரிசோதனைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்பு உணவு உண்ண வேண்டும். உலோகப் பொருட்கள், கைப்பேசிகள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தையும் அறைக்கு வெளியில் விட்டுவிட வேண்டும். இவற்றை உள்ளே எடுத்துச் சென்றால் சாதனம் பழுதடையலாம் அல்லது அறைக்குள் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம்.

பரிசோதனையின்போது தொழில்நுட்ப நிபுணரின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, மூச்சைப் பிடித்து வைத்திருக்க சொல்லும்போது அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். இது தெளிவான படங்களைப் பெறுவதற்கு மிக அவசியம்.

கான்ட்ராஸ்ட் செலுத்துதல் 

பெரும்பாலான கார்டியாக் எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் கான்ட்ராஸ்ட் (உடலின் குறிப்பிட்ட பகுதிகளை ஸ்கேன் படத்தில் பிரகாசமாகக் காட்டும் சிறப்பு மருந்து) இல்லாமலேயே செய்யப்படுகின்றன. ஏனெனில், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கிடையேயான இயற்கையான வேறுபாடுகளே படங்களைப் பெற உதவுகின்றன. ஆனால், இதயத்தின் முழுமையான படத்தைப் பெற, கேடலினியம் என்கிற உப்பு வடிவிலான கான்ட்ராஸ்ட் பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

இதயத்தின் அமைப்பை மதிப்பிடவும், திசுக்களின் தன்மையைக் கண்டறியவும் கான்ட்ராஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இதன் பக்கவிளைவுகள் மிகவும் அரிதானவை. ஒவ்வாமை எதிர்வினைகளும் அரிதாகவே நிகழ்கின்றன. சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவர்களுக்கு நெஃப்ரோஜெனிக் ஸ்க்ளீரோசிங் ஃபைப்ரோசிஸ் என்கிற அரிய சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவர்களுக்கு கான்ட்ராஸ்ட் செலுத்துவதில் கூடுதல் கவனம் தேவை.

அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் 

இதய அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் கார்டியாக் எம்.ஆர்.ஐ முக்கிய உதவியை வழங்குகிறது. இதய வால்வு பிரச்னைகளில், சிகிச்சை முறையைத் தீர்மானிக்க இது உதவுகிறது. பைபாஸ் அறுவை சிகிச்சையில், எந்தெந்த தமனிகளில் பைபாஸ் தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின், இதயம் எவ்வளவு நன்றாக மீண்டு வருகிறது என்பதை மதிப்பிடவும் இது பயன்படுகிறது.

காவேரி மருத்துவமனையில்… 

காவேரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் உள்ளன. முழுமையான இதய மதிப்பீட்டுக்குத் தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள் வசதிகள் உள்ளன. பரிசோதனைக்கு முன் தொழில்நுட்ப நிபுணர்கள் மருத்துவரைத் தொடர்புகொள்கின்றனர். பரிசோதனையின்போது நேரடியாக ஆலோசனை பெற்று, தேவையான படங்கள் எடுக்கப்படுகின்றன. பரிசோதனை முடிந்தபின், முடிவுகள் குறித்து குறிப்பிட்ட மருத்துவருடன் கலந்தாலோசித்து, தேவையான அனைத்து அமைப்புகளும் மதிப்பிடப்படுகின்றன. இதன் பின், அறிக்கையுடன் நோயாளிகள் தங்கள் முதன்மை மருத்துவரை அணுகலாம்.

யாருக்குப் பரிசோதனை தேவை

பாரம்பரிய பரிசோதனைகளான ஈ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே ஆகியவை முழுமையான தகவல்களை வழங்காத சூழலில், கார்டியாக் எம்.ஆர்.ஐ பரிந்துரைக்கப்படுகிறது. மூடிய அறைக்குள் தனியே பரிசோதனை மேற்கொள்ள அச்சம் கொள்ளும் நோயாளிகளுக்கு ஆலோசனையும், தேவைப்பட்டால் கவலையைக் குறைக்கும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான பேஸ்மேக்கர்களும், மற்ற உலோக உள்வைப்புகளும் எம்.ஆர்.ஐ பரிசோதனைக்குத் தடையாக இருப்பதில்லை. இருப்பினும், பரிசோதனைக்கு முன் இது குறித்து மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.

புதிய காலத்தின் தேவை 

இதய நோய்களின் சிக்கல்தன்மை அதிகரித்து வரும் இன்றைய காலத்தில், துல்லியமான நோய் கண்டறிதல் மிக அவசியம். பாரம்பரிய பரிசோதனைகள் அடிப்படைத் தகவல்களை வழங்கினாலும், சில சூழல்களில் அவை போதுமானதாக இருப்பதில்லை. அப்போதுதான் கார்டியாக் எம்.ஆர்.ஐ போன்ற நவீன தொழில்நுட்பங்கள் தங்கள் உண்மையான மதிப்பை நிரூபிக்கின்றன.

ரேடியேஷன் இல்லாத, பாதுகாப்பான, துல்லியமான இந்தப் பரிசோதனை, இதய நோய்களின் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இளம் வயதினருக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான இந்தப் பரிசோதனை, திரும்பத் திரும்பச் செய்யப்படும் தேவை இருந்தால்கூட எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

காவேரி மருத்துவமனையில் இந்தத் தொழில்நுட்பம் அனைத்து மையங்களிலும் கிடைப்பதால், நோயாளிகள் தரமான சிகிச்சையை எளிதாகப் பெற முடிகிறது. நிபுணர்களின் நேரடி ஆலோசனையுடன் செய்யப்படும் இந்தப் பரிசோதனை, துல்லியமான நோய் கண்டறிதலுக்கு வழிவகுக்கிறது.

Dr. ஜெபராஜ் ஆர்
DCH, M.D (Paediatrics), MRCPCH (UK), CMR (UK)
இதய நோய் சிறப்பு மருத்துவர்
காவேரி மருத்துவமனை, சென்னைவடபழனி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011