இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50,000 குழந்தைகளுக்குப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. ஆனால், சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் 90 சதவிகிதம் வரை குணப்படுத்த முடியும். பெரியவர்களின் புற்றுநோயைவிட குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு நன்கு பதிலளிக்கும் என்பது நம்பிக்கையூட்டும் செய்தி!
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15 அன்று சர்வதேச குழந்தைப் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் இந்த நாளின் நோக்கம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50,000 குழந்தைகளுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இது உலகளாவிய குழந்தைப் புற்றுநோய் பாதிப்பில் 20 சதவிகிதமாகும். இவற்றில் ரத்தப் புற்றுநோய் (லுக்கீமியா) 30 முதல் 40 சதவிகிதமும், மூளைக் கட்டிகள் 12 சதவிகிதம், லிம்ஃபோமா 11 சதவிகிதம் என்கிற விகிதத்தில் காணப்படுகின்றன.
மற்ற குழந்தைப் புற்றுநோய்களில் நியூரோபிளாஸ்டோமா (அட்ரீனல் சுரப்பியில் ஏற்படுவது – பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு), வில்ம்ஸ் கட்டி (சிறுநீரகப் புற்றுநோய் – 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு), எலும்புக் கட்டிகள், மென்திசுக் கட்டிகள், கல்லீரல் கட்டிகள், ரெட்டினோபிளாஸ்டோமா (கண்ணில் ஏற்படும் புற்றுநோய்) ஆகியவை அடங்கும்.
பெரியவர்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், மார்பகம், புரோஸ்டேட் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படும். குழந்தைகளுக்கு ரத்தம், மூளை, எலும்பு மற்றும் கரு திசுக்களில் புற்றுநோய் ஏற்படுகிறது.
பெரியவர்களின் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல், மது அருந்துதல், சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கைமுறை ஆகியவை காரணமாக இருக்கும். குழந்தைகளின் புற்றுநோய் பெரும்பாலும் மரபணு மாற்றங்களால் ஏற்படுகிறது. சரியான காரணம் பெரும்பாலும் தெரியாது.
குழந்தைகளின் புற்றுநோய் வேகமாக வளரும் தன்மை கொண்டது. ஆனால், சிகிச்சைக்கு மிகச் சிறப்பாகப் பதிலளிக்கும். பெரியவர்களின் புற்றுநோய் மெதுவாக வளரும். ஆனால், சிகிச்சை சிக்கலானது. இதனால், குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதம் பெரியவர்களைவிட அதிகமாக இருக்கிறது.
குழந்தைகளின் புற்றுநோய் அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு, எலும்பு வலி போன்று சாதாரண நோய்கள் போலவே தோன்றும். இதனால் ஆரம்பத்தில் கண்டறிவது சவாலாக இருக்கிறது. பெரியவர்களுக்குக் கட்டிகள், ரத்தப்போக்கு, எடை குறைவு போன்ற அறிகுறிகள் தெளிவாகத் தெரியும்.
தொடர்ந்து காய்ச்சல் இருந்து, சாதாரண சிகிச்சைக்குக் குணமாகாவிட்டால் கவனிக்க வேண்டும். அக்குள், கழுத்து, மார்பு, வயிறு அல்லது விதைப்பையில் வீக்கம் அல்லது கட்டி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தொடர்ந்து சோர்வு, பலவீனம், வெளிறிய தோற்றம் இருந்தாலும் கவனிக்க வேண்டும்.
காயம் இல்லாமல் எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி, குறிப்பாக இரவில் அதிகமாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிக்கடி சிராய்ப்பு, ஈறு அல்லது மூக்கில் ரத்தப்போக்கு, தோலில் சிவப்பு அல்லது ஊதா புள்ளிகள் தென்பட்டால் ரத்தப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
காலையில் தலைவலியுடன் வாந்தி, தலைச்சுற்றல், பார்வை அல்லது நடை சமநிலையில் மாற்றம், கை கால்களில் பலவீனம் ஆகியவை மூளைக் கட்டியின் அறிகுறிகளாக இருக்கலாம். ஃபிளாஷ் புகைப்படங்களில் கண்ணின் பாவையில் வெள்ளைப் பிரதிபலிப்பு தெரிந்தால், ரெட்டினோபிளாஸ்டோமா என்ற கண் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
முகம், அக்குள், அந்தரங்க பகுதிகளில் அதிக முடி வளர்ச்சி, சிறுமிகளுக்கு முன்கூட்டியே மாதவிடாய் வருதல் ஆகியவை ஜெர்ம் செல் கட்டிகள் அல்லது அட்ரீனல் கட்டிகளின் அறிகுறிகளாக இருக்கலாம்.
குழந்தைப் புற்றுநோயைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, எலும்பு மஜ்ஜை ஆய்வு, கட்டியிலிருந்து திசு எடுத்து பரிசோதனை (பயாப்ஸி), சிடி/எம்ஆர்ஐ ஸ்கேன், பெட்-சிடி ஸ்கேன் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய நோக்கம் புற்றுநோயைக் குணப்படுத்துவதுடன், குழந்தையின் வளர்ச்சி, மேம்பாடு, கருத்தரிக்கும் திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதும் ஆகும்.
சிகிச்சை முறைகளில் கீமோதெரபி, அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, இம்யூனோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை மற்றும் இலக்கு சிகிச்சை (டார்கெட்டட் தெரபி) ஆகியவை அடங்கும். காவேரி மருத்துவமனையில் இந்த அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் கிடைக்கின்றன.
லுக்கீமியா என்பது ரத்தப் புற்றுநோய். எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் வெள்ளை ரத்த அணுக்களில் ஏற்படும் அசாதாரணத்தால் இது ஏற்படுகிறது. இதனால் எலும்பு மஜ்ஜை செயலிழப்பு ஏற்பட்டு, சிவப்பு ரத்த அணுக்கள் குறைவு (வெளிறிய தோற்றம், சோர்வு), தட்டணுக்கள் குறைவு (ரத்தப்போக்கு), வெள்ளை ரத்த அணுக்கள் குறைவு அல்லது அதிகரிப்பு ஏற்படும்.
குழந்தைகளில் அக்யூட் லிம்ஃபோபிளாஸ்டிக் லுக்கீமியா (ALL) மிகவும் பொதுவானது. அதற்கடுத்தபடியாக அக்யூட் மைலாய்ட் லுக்கீமியா (AML) வருகிறது.
ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளான்ட் என்றும் அழைக்கப்படும் இந்தச் சிகிச்சையில், பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையை ஆரோக்கியமான எலும்பு மஜ்ஜையால் மாற்றுவர். ஆரோக்கியமான எலும்பு மஜ்ஜை செல்களைச் சேகரித்து, ரத்த மாற்றம் போல நோயாளிக்கு செலுத்துவர்.
சாதாரண சிகிச்சைக்குப் பதிலளிக்காத அதிக ஆபத்துள்ள லுக்கீமியா, மீண்டும் வரும் லுக்கீமியா அல்லது குறிப்பிட்ட மரபணு வகைகளுக்கு இந்தச் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, நோயில்லாத எலும்பு மஜ்ஜையை வழங்குகிறது. பெரும்பாலான குழந்தைகள் இதன் பிறகு இயல்பான வாழ்க்கை வாழ்கின்றனர்.
இந்தியாவில் குழந்தைப் புற்றுநோயின் சராசரி உயிர்வாழ்வு விகிதம் தற்போது 60 முதல் 70 சதவிகிதமாக உள்ளது. ஆரம்பத்தில் கண்டறிந்து சரியான சிகிச்சை அளித்தால், சில புற்றுநோய்களுக்கு 90 முதல் 95 சதவிகிதம் வரை குணப்படுத்த முடியும்!
வெற்றிகரமான முடிவுகளுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிதல், உடனடி சிகிச்சை, குழந்தைப் புற்றுநோய் சிகிச்சைக்கென்று பிரத்யேகமான மையங்களில் சிகிச்சை பெறுதல், தரப்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள், ஊட்டச்சத்து மற்றும் துணை சிகிச்சை, சிகிச்சையை இடையில் நிறுத்தாமல் இருத்தல், பெற்றோர், பராமரிப்பாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை முக்கியம்.
சிகிச்சையின் காலம் புற்றுநோயின் வகை மற்றும் சிக்கல்களைப் பொறுத்து மாறுபடும். சில கட்டிகளுக்கு அறுவைசிகிச்சை மட்டுமே போதுமானதாக இருக்கும், அப்போது ஒரு வாரத்தில் சிகிச்சை முடிந்துவிடும். லுக்கீமியா போன்ற புற்றுநோய்களுக்கு இரண்டரை ஆண்டுகள் வரை சிகிச்சை தேவைப்படலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவை வழங்க வேண்டும். நோய் மற்றும் சிகிச்சை பற்றி வயதுக்கேற்ற எளிய விளக்கங்களை அளிக்க வேண்டும். குழந்தைக்கு இது அவர்களின் தவறு இல்லை என்று உறுதியளிக்க வேண்டும். மருத்துவமனையில் இருக்கும்போது படம் வரைதல், புதிர் விளையாட்டு, புத்தகம் படித்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். மற்றவர்களுடன் பழகுவதை ஊக்குவிக்க வேண்டும். சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தக் கூடாது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினருக்கு பல்வேறு ஆதரவுகள் தேவைப்படுகின்றன. உளவியல் ஆதரவு, அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் நிதி ஆதரவு, பல்துறை நிபுணர் குழுவின் மருத்துவ ஆதரவு, தங்குமிட வசதி, பள்ளி மற்றும் சமூக மறு ஒருங்கிணைப்பு, புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் ஆதரவுக் குழுக்கள் ஆகியவை முக்கியம்.
நவீன மருத்துவ வசதிகள் மற்றும் கண்டறியும் தொழில்நுட்பங்களால் குழந்தைகளின் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். புற்றுநோய் சிகிச்சை முடிந்த பிறகு உங்கள் குழந்தை இயல்பான வாழ்க்கை வாழ முடியும். புற்றுநோய் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்த பல குழந்தைகள் உள்ளனர்.
நீங்கள் தனியாக இல்லை… இந்தப் பயணம் முழுவதும் உங்களுக்கு மருத்துவ மற்றும் சமூக ஆதரவு கிடைக்கும். உங்கள் தைரியமும் ஆதரவும் உங்கள் குழந்தைக்கு மிகவும் முக்கியம். இதுவும் மருத்துவ சிகிச்சையைப் போலவே முக்கியமானது. எதிர்காலத்தில் புற்றுநோய் ஒரு கொடிய நோயாகக் கருதப்படாது என்று நம்புகிறேன்.
Dr. சாய் சிவா MBBS, MD Pediatrics, DM Pediatric Oncology குழந்தை மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் காவேரி மருத்துவமனை, சென்னை – ஆழ்வார்பேட்டை
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011