பருவமடைதல் என்பது குழந்தையிலிருந்து பருவம் எய்தும் இயற்கையான உடல் மாற்றம். இந்த மாற்றங்களை முன்கூட்டியே புரிந்துகொண்டால், குழந்தைகளும் பெற்றோர்களும் வளர் இளம் பருவத்தை நம்பிக்கையுடன் கடக்கலாம்.
உடலில் ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கி, குழந்தை உடலானது முதிரும் உடலாக மாறும் நிகழ்வே பருவமடைதல். தமிழ்நாட்டுப் பெண் குழந்தைகளுக்கு பொதுவாக 9 முதல் 13 வயதுக்குள் இந்த மாற்றங்கள் தொடங்குகின்றன. சராசரியாக 10 முதல் 12 வயதுக்குள் முதல் அறிகுறிகள் தெரியும். ஆண் குழந்தைகளுக்கு சற்று தாமதமாக (11 முதல் 14 வயதில்) தொடங்கும். இந்த மாற்றம் முடிய சுமார் 2 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
மார்பக அரும்பு தோன்றுவது முதல் அறிகுறி. அதைத் தொடர்ந்து உயரம் வேகமாக அதிகரிக்கும் (Growth Spurt), இடுப்பு அகலமாகும், உடலில் முடி வளர்ச்சி ஏற்படும், சரும எண்ணெய் பசையும் முகப்பருவும் வரலாம்.
மார்பக அரும்பு தோன்றிய சுமார் இரண்டு ஆண்டுகளில் முதல் மாதவிடாய் (Menarche) வரும். இவை அனைத்தும் இயற்கையான, ஆரோக்கியமான மாற்றங்களே.
ஹார்மோன் மாற்றங்களால் மனநிலை திடீரென மாறும்; சிறிய விஷயத்துக்குக்கூட கோபமோ அழுகையோ வரலாம். தனிமை விரும்புதல், உடல் தோற்றம் குறித்த கவலை, சக நண்பர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போக்கு – இவை இந்த வயதில் இயற்கை. பெற்றோர் திட்டாமல், பயமுறுத்தாமல், நண்பர்களாகப் பேசுவது மிக முக்கியம். ‘இது நோய் இல்லை, வளர்ச்சிதான்’ என்கிற நம்பிக்கையை குழந்தைக்குக் கொடுப்பது அவசியம்.
8 வயதுக்கு முன்பே உடல் மாற்றங்கள் தெரிந்தால் – அது ‘முன்கூட்டியே பருவமடைதல்’ (Precocious Puberty). இது குழந்தையின் இறுதி உயரத்தைப் பாதிக்கலாம். ஆகவே, மருத்துவ ஆலோசனை அவசியம். 13 வயது வரை மார்பக வளர்ச்சியில் எந்த அறிகுறியும் இல்லையெனில், அல்லது 15 வயதில் மாதவிடாய் வராவிட்டால் ‘தாமதமான பருவமடைதல்’ (Delayed Puberty). ஹார்மோன் சோதனை செய்வது அவசியம். இரு நிலைகளுக்கும் சிகிச்சை கிடைக்கிறது… தாமதிக்காமல் அணுகவும்.
பருவமடைதல் காலத்தில் எலும்பு மற்றும் உயர வளர்ச்சி வேகமாக நடக்கும் என்பதால் கால்சியம் (பால், கேழ்வரகு, எள்) தினமும் அவசியம். மாதவிடாய் தொடங்கியதும் இரும்புச் சத்து தேவை இரட்டிப்பாகும். தினமும் முருங்கைக்கீரை, பேரீச்சம்பழம், சுண்டல் சேர்க்கவும். வளர்ச்சிக்குப் புரதம் (முட்டை, பருப்பு, கோழி) தேவை. சர்க்கரை நிறைந்த ஜங்க் உணவுகளை குறைக்கவும். இவை PCOS போன்ற பிரச்னைகளை தூண்டலாம்.
மாதவிடாய் முறையற்று வருவது, கடுமையான வலி, அதிக ரத்தப்போக்கு, கட்டுப்படாத முகப்பரு, அதிக முடி வளர்ச்சி… இவை PCOS அல்லது ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். இன்றைய இந்தியாவில் பத்தில் ஒரு டீனேஜ் பெண்ணுக்கு PCOS பிரச்னை இருக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றமே (சரியான உணவு, தினசரி உடற்பயிற்சி, போதுமான தூக்கம்) இதற்கு சிறந்த மருந்து.
‘மாதவிடாய் காலத்தில் வெளியில் செல்லக்கூடாது… விளையாடக்கூடாது’ – வலி போன்ற பிரச்னைகள் இல்லாவிட்டால் எல்லாவிதமான பணிகளிலும் ஈடுபடலாம். தடையேதுமில்லை!
‘மாதவிடாய் காலத்தில் குளிக்கக் கூடாது’ – இது தவறு; சுகாதாரம் மிக அவசியம்.
‘வலி வருவது சாதாரணம், தாங்கிக்கொள்’ – இல்லை… கடுமையான வலி இருந்தால் மருத்துவர் ஆலோசனை தேவை.
‘பருவமடைவதை யாரிடமும் சொல்லக் கூடாது’ – இந்த மனோபாவம் குழந்தைகளைத் தனிமைப்படுத்தும்.
இந்திய பெண் குழந்தைகளுக்கு 9-13 வயதில் பருவமடைதல் தொடங்கும்.
8 வயதுக்கு முன் உடல் மாற்றம் அல்லது 15 வயதில் மாதவிடாய் வராவிட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
• 8 வயதுக்கு முன் உடல் மாற்றங்கள் • 15 வயதில் மாதவிடாய் வராமை • தொடர்ந்த கடுமையான மாதவிடாய் வலி • முறையற்ற சுழற்சி + முகப்பரு + அதிக முடி வளர்ச்சி (PCOS அறிகுறி)
Dr. E. இளவரசி MBBS, DGO, DNB (OBG), F.Art, MMAS, D.MAS மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் மா காவேரி மருத்துவமனை, திருச்சி
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011