வாழ்க்கை தொடங்குகிறது!

வாழ்க்கை தொடங்குகிறது!
April 10 07:22 2026 Print This Article

எல்லாமே முடிந்துவிட்டதுஎன்று பெண்கள் மனமுடைந்துகொள்வதை நாங்கள் அடிக்கடி காண்கிறோம். உண்மை என்னவென்றால்மாதவிடாய் நிற்பது (மெனோபாஸ்) என்பது ஒரு முடிவு அல்ல, ஒரு புதிய தொடக்கம்!

மாதவிடாய் நிறுத்தம் என்றால் என்ன

தொடர்ந்து 12 மாதங்களாக மாதவிடாய் இல்லாமல் இருக்கும் நிலையே மாதவிடாய் நிறுத்தம் (Menopause). உலக அளவில் இதற்கான சராசரி வயது 50-51. ஆனால், இந்தியப் பெண்களுக்கு சற்று முன்பாகவே – 46 முதல் 48 வயதில் – இது நிகழ்கிறது. இதற்கு முன்பு பெரிமெனோபாஸ் என்ற இடைக்கட்டம் இருக்கும்… 2 முதல் 8 ஆண்டுகள் வரை ஹார்மோன் மாற்றங்கள் நிகழும், மாதவிடாய் ஒழுங்கற்று வரும். மாதவிடாய் நின்ற பிறகு போஸ்ட் மெனோபாஸ் காலம் தொடங்குகிறது… அறிகுறிகள் குறைந்தாலும், நீண்டகால உடல்நல ஆபத்துகள் அதிகரிக்கும். ஆரம்ப அறிகுறிகளாக ஒழுங்கற்ற மாதவிடாய், திடீர் சூடேற்றம் (Hot flashes), தூக்கமின்மை, மனநிலை மாற்றங்கள், யோனி வறட்சி ஆகியவை தெரியலாம்.

அறிகுறிகள்உடல் மட்டுமல்ல, மனமும் பாதிக்கும் 

உடலில் திடீர் சூடேற்றம், இரவு வியர்வை, எடை அதிகரிப்பு (குறிப்பாக வயிற்றுப் பகுதியில்), மூட்டுவலி, சோர்வு எனப் பல மாற்றங்கள் ஏற்படும். இதோடு மனநிலையிலும் – எரிச்சல், கவலை, Brain fog, தன்னம்பிக்கையிழப்பு போன்ற உணர்வுகள் வரலாம். இவை தினசரி வாழ்க்கையை, வேலையை, உறவுகளைப் பாதிக்கலாம். இவை நோய் அல்ல…ஈஸ்ட்ரோஜன் குறைவால் உண்டாகும் இயல்பான மாற்றங்களே. சரியான புரிதலோடு கையாண்டால் எளிதில் சமாளிக்கலாம்.

ஆரோக்கிய ஆபத்துகளும், தடுப்பு வழிகளும் 

மாதவிடாய் நிறுத்தத்துக்குப் பிறகு எலும்பு அடர்த்தி வேகமாகக் குறையும். ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் உயரும், இதய நோய் ஆபத்தும் கூடும். வயிற்றில் கொழுப்பு சேர்வதால் இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு அபாயமும் ஏற்படலாம். தினமும் கால்சியம் 1000-1200 மில்லிகிராம், வைட்டமின் டி 800-1000 IU எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி, வருடாந்திர பரிசோதனைகள்… இவை இந்த ஆபத்துகளைக் கட்டுப்படுத்தும்.

HRT – யாருக்கு, எப்போது

ஹார்மோன் சிகிச்சை (HRT) – கடுமையான சூடேற்றம், 45 வயதுக்கு முன்பே மாதவிடாய் நிற்பது, எலும்பு பாதிப்பு ஆபத்து அதிகமாக இருப்பவர்களுக்குப் பரிந்துரைக்கப்படலாம். சரியான நேரத்தில் – 60 வயதுக்கு முன்பாக அல்லது மாதவிடாய் நின்ற 10 ஆண்டுகளுக்கு உள்ளாக – தொடங்குவது நல்லது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுக்கக் கூடாது. HRT விரும்பாதவர்களுக்கு – யோனி ஈஸ்ட்ரோஜன் கிரீம், SSRIs, சோயா மற்றும் ஆளிவிதை போன்ற பைட்டோஈஸ்ட்ரோஜன் உணவுகள், யோகா, CBT என மாற்று வழிகள் உள்ளன.

வாழ்க்கைமுறை மாற்றங்களே சிறந்த மருந்து 

ராகி, பால், பனீர், பச்சைக் கீரைகள் (கால்சியம்), ஆளிவிதை, அக்ரூட் (ஒமேகா-3), புரதம் (உடல் எடையில் கிலோவுக்கு 1-1.2 கிராம்) – தினசரி உணவில் சேர்க்கவும். வாரம் மூன்று முறை பலம் பெருக்கும் உடற்பயிற்சி, தினமும் 30 நிமிட நடை, யோகா – இவை எடை, எலும்பு, மனநலம் மூன்றையும் காக்கும். தியானம், சீரான தூக்க நேரம், காஃபி குறைப்பு, சமூக தொடர்பு ஆகியவை மன அழுத்தத்தை குறைக்கும்.

தாம்பத்திய வாழ்க்கையும் தொடரும்

மாதவிடாய் நிற்பதோடு தாம்பத்திய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைப்பது மிகவும் தவறு. யோனி வறட்சி, விருப்பமின்மை, உடலுறவில் வலி – இவை சிகிச்சை தேவைப்படக்கூடிய பிரச்னைகள். யோனி மாய்ஸ்சரைசர், வாட்டர் பேஸ்ட் லூப்ரிகன்ட், யோனி ஈஸ்ட்ரோஜன், பெல்விக் ஃப்ளோர் பயிற்சி – இவை உதவும். இணையருடன் திறந்த மனசுடன் பேசுவதும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதும் இந்தக் காலகட்டத்தை இனிமையாக்கும்.

இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகவும் 

மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு, திடீர் நெஞ்சுவலி, கடுமையான தலைவலி, விவரிக்கமுடியாத எடை குறைவு – இவை உடனே மருத்துவ கவனிப்பு தேவைப்படுகின்றன. போஸ்ட்மெனோபாஸ் காலத்தில் DEXA எலும்பு அடர்த்தி சோதனை, மார்பக மேமோகிராம் (1-2 ஆண்டுகளுக்கு ஒருமுறை), ரத்த சர்க்கரை, லிபிட் புரொஃபைல், தைராய்டு சோதனைகள் அவசியம்.

இந்தியப் பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் 46-48 வயதில் ஏற்படுகிறதுஉலக சராசரியைவிட சற்று முன்பாகவே. சரியான வாழ்க்கைமுறை மாற்றங்களும், மருத்துவக் கவனிப்பும் இந்தப் பருவத்தை நம்பிக்கையோடு கடக்க உதவும்!

மூன்று முக்கிய ஆலோசனைகள் 

  1. மாதவிடாய் பற்றி அறிந்துகொள்ளுங்கள் – விழிப்புணர்வே பயத்தைக் குறைக்கும்.
  2. புரதம் மற்றும் பலம் பெருக்கும் உடற்பயிற்சியை தினசரி வழக்கமாக்குங்கள்.
  3. அறிகுறிகள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும்போது – மருத்துவரிடம் தயங்காமல் பேசுங்கள்!

சில தவறான நம்பிக்கைகள் 

  • மாதவிடாய் நிறுத்தம் ஒரு நோய் அல்ல… இது இயல்பான வாழ்க்கை மாற்றம்.
  • பாலியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பது தவறு. பலர் மகிழ்ச்சியான தாம்பத்தியத்தைத் தொடர்கிறார்கள்.
  • எடை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என்பதும் தவறு. வாழ்க்கைமுறை மாற்றங்கள் பெரிய வித்தியாசம் காட்டும்.

 

Dr. M. சுதா சாந்தி MBBS, DGO, DNB
மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்
காவேரி மருத்துவமனை, திருச்சி கன்டோன்மென்ட்

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011