கை நடுக்கம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வாசனை தெரியாமல் போவது, தூக்கத்தில் கத்துவது, மலச்சிக்கல்… இவை பார்கின்சன் நோயின் ஆரம்ப எச்சரிக்கைகள். இந்தியாவில் நோய் வரும் சராசரி வயது 51… உலக சராசரியைவிட 10 ஆண்டுகள் குறைவு. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் வாழ்க்கையை முழுமையாக வாழலாம்!
‘கை கொஞ்சம் நடுங்குகிறது, வயதாகிவிட்டது… பரவாயில்லை’ என்று பலர் தள்ளிப்போடுகிறார்கள். ஆனால், அந்த நடுக்கம் தெரிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மூளை ஒரு மெல்லிய போரை நடத்திக்கொண்டிருக்கிறது. அந்தப் போரின் பெயர் – பார்கின்சன் நோய். இந்நோயின் உண்மை நிலையையும் புதிய நம்பிக்கை அளிக்கும் செய்திகளையும் அறிவோம்!
மூளையின் ஆழத்தில் ‘பேசல் கேங்லியா’ பகுதியில் உள்ள நரம்பு செல்கள் படிப்படியாக இறந்துகொண்டே போகின்றன. இவைதாம் ‘டோபமைன்’ என்கிற வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றன… இதுதான் தசைகளுக்கு மென்மையான செய்திகளை அனுப்பும் தூதுவன். முதல் அறிகுறி தெரிவதற்குள் 60 முதல் 80 சதவிகிதம் டோபமைன் செல்கள் ஏற்கனவே அழிந்திருக்கும்.
இந்தியாவில் சராசரி நோய் வரும் வயது 51… உலக சராசரியை விட 10 ஆண்டுகள் குறைவு. 2050-ம் ஆண்டில் இந்தியா அதிக பார்கின்சன் நோயாளிகளைக் கொண்ட நாடுகளில் முன்னணியில் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
கை நடுக்கம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிகுறிகள் தோன்றலாம்… வாழைப்பழம், ஊறுகாய், சோப் வாசனை தெரியாமல் போவது; தூக்கத்தில் கத்துவது, குத்துவது, உதைப்பது; மலச்சிக்கல்; சிறிய கிறுக்கலான கையெழுத்து; கம்மலான குரல்; தோள்பட்டையில் விறைப்பு; நின்றதும் தலைசுற்றல்; ஆரம்பகட்ட மனச்சோர்வு அல்லது பதற்றம்… இவற்றைக் கவனித்தால் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறியலாம்.
60 வயதுக்கு மேல் ஆபத்து அதிகரிக்கும்; ஆண்களுக்கு 1.5 மடங்கு அபாயம் அதிகம். பூச்சிக்கொல்லிகள், காற்று மாசு, மரபணுக் காரணிகள் ஆகியவையும் பங்காற்றுகின்றன. ஒரு முக்கியமான விஷயம்… சில குமட்டல் மருந்துகள் (Metoclopramide, Domperidone), மனநல மருந்துகள் (Haloperidol, Risperidone) நீண்ட காலம் எடுத்தால் பார்கின்சன் போன்ற அறிகுறிகளை உருவாக்கலாம். மருத்துவர் ஆலோசனையில் மருந்தை நிறுத்தினால் சில வாரங்களில் சரியாகிவிடும்.
பொதுவான பார்கின்சனுக்கு இதுவரை குணப்படுத்தும் மருந்து இல்லை. ஆனால், நன்கு நிர்வகிக்கலாம். லெவோடோபா மருந்து டோபமைனை வழங்கி மணிக்கணக்கில் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும். பிசியோதெரபி, பேச்சு சிகிச்சை, தொழில் சிகிச்சை மூலம் சுதந்திரமான வாழ்க்கையை நீட்டிக்கலாம்.
கடுமையான நடுக்கம் உள்ளவர்களுக்கு Deep Brain Stimulation (DBS) – இதயத்துக்கான pacemaker போன்ற சாதனம் – அறிகுறிகளை 50 சதவிகிதம் வரை குறைக்கும். தினசரி நடை, சைக்கிள், நடனம் நோய் முன்னேற்றத்தை மெதுவாக்கலாம்.
குடும்பத்தினர் சரியான நேரத்தில் மருந்து கொடுப்பது, வீட்டில் விழாமல் காக்கும் ஏற்பாடுகள், உணர்வு ஆதரவு… இவை நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை நேரடியாக உயர்த்தும். 30 அல்லது 40 வயதில் நோய் வரும்போது வேலை, குடும்பம், எதிர்காலம் என வாழ்க்கையின் நடுவில் மோதுகிறது. அப்போது சிகிச்சை திட்டம் வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் காக்கும் வகையில் தயாரிக்கப்படும்.
ஆரம்பகட்ட அறிகுறிகளைக் கவனிப்பது, நவீன சிகிச்சைகளை பயன்படுத்துவது, குடும்பத்தின் ஆதரவு பெறுவது… இம்மூன்றும் இருந்தால் பார்கின்சன் நோயாளி பல ஆண்டுகள் சுறுசுறுப்பாக வாழலாம்!
காபி மற்றும் கிரீன் டீ பார்கின்சன் ஆபத்தைக் கொஞ்சம் குறைக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. Smartwatch மற்றும் App-கள் மூலம் நடுக்கத்தை தொலைதூரத்திலிருந்தே கண்காணித்து சிகிச்சையை சரிசெய்யும் டிஜிட்டல் கருவிகள் கிடைக்கின்றன. Alpha-Synuclein புரதத்தை தண்டுவட திரவத்தில் கண்டறியும் புதிய பரிசோதனை, நோய் கண்டறிதலில் புரட்சியை ஏற்படுத்தலாம். மரபணு சிகிச்சை, Neuroprotective drugs ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. ஆகவே, எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது.
டாக்டர் அரவிந்த் கௌதம் V MBBS, DNB (General Medicine), DM (Neurology), MRCP (SCE) Neurology (UK), Fellowship in Stroke & Interventional Neurology (RTIICS, Kolkata) நரம்பியல் மருத்துவர் காவேரி மருத்துவமனை, திருநெல்வேலி
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011