எகிறும் ரத்த அழுத்தம்… ஆபத்தில் சிறுநீரகம்!

எகிறும் ரத்த அழுத்தம்… ஆபத்தில் சிறுநீரகம்!
June 12 12:44 2026 Print This Article

இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர், ஆனால், அவர்களில் 60 சதவிகிதம் பேருக்குத் தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாது. தெரிந்தவர்களில்கூட 10 சதவிகிதம் பேரே சரியான கட்டுப்பாட்டில் உள்ளனர். எந்த அறிகுறியும் காட்டாமல் சிறுநீரகத்தை அழிக்கும் இந்த மௌனக் கொலையாளி குறித்த விழிப்புணர்வுக் கட்டுரை இது.

சார், எனக்கு எந்த வலியும் இல்ல. ஏன் ரத்த அழுத்த மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடணும்? இந்தக் கேள்வியை தினசரி சந்திக்கிறார்கள் பல மருத்துவர்கள்.

உயர் ரத்த அழுத்தம் (ஹைபர்டென்சன்) எந்த அறிகுறியும் காட்டாமல், மெதுவாகச் சிறுநீரகத்தை அழிக்கிறது. அதனால்தான் மருத்துவ உலகம் இதை மௌனக் கொலையாளி என்று அழைக்கிறது. மே 17 உலக உயர் ரத்த அழுத்த தினத்தில் இது பற்றி விரிவாக அறிவோம்.

அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் 

இந்தியாவில் ஒவ்வொரு நான்கு பெரியவர்களில் ஒருவருக்கு, அதாவது 30 சதவிகிதம் பேருக்கு, உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாது. நோய் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில்கூட 5 முதல் 10 சதவிகிதம் பேரே இலக்குக் கட்டுப்பாட்டில் உள்ளனர். சிறுநீரகச் செயலிழப்புக்கு (CKD) சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக உயர் ரத்த அழுத்தமே இரண்டாவது பெரிய காரணம். இதய நோய் மற்றும் பக்கவாதத்தில் 50 சதவிகிதத்துக்கும் உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணம்.

இருவழி அழிவுக் கதை 

ரத்த அழுத்தத்துக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள உறவு ஓர் இருவழிப் பாதை. உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தைச் சேதப்படுத்துகிறது; சேதமடைந்த சிறுநீரகம் ரத்த அழுத்தத்தை மேலும் உயர்த்துகிறது. இது ஒரு மோசமான சுழற்சி. சிறுநீரகத்துக்கு ரத்தம் போவது குறையும்போது, உடல் ரெனின்-ஆஞ்சியோடென்சின் என்கிற ஹார்மோன் முறையை இயக்கி, சோடியம் மற்றும் தண்ணீரைத் தக்கவைக்கிறது. இது ரத்த அழுத்தத்தை மேலும் உயர்த்துகிறது.

10 லட்சம் நெஃப்ரான்களின் கதை 

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஏறத்தாழ 10 லட்சம் சிறிய வடிகட்டும் பகுதிகள் (நெஃப்ரான்கள்) உள்ளன. சிறுநீரகம் இதயத்தின் மொத்த ரத்த வெளியீட்டில் 20 சதவிகிதத்தைப் பெறுகிறது. நாள்பட்ட உயர் ரத்த அழுத்தம் இந்த நெஃப்ரான்களை அதிக வேலை செய்ய நிர்பந்திக்கிறது. பாதுகாப்பான போடோசைட் செல்கள் சேதமடைந்து, வடிகட்டிகளில் தழும்பு உருவாகின்றன (ஸ்க்லெரோசிஸ்). ஒருமுறை தழும்பு ஏற்பட்டுவிட்டால், அந்த வடிகட்டி மீண்டும் வேலை செய்யாது. ACE மற்றும் APOL1 மரபணுக்களில் உள்ள வேறுபாடுகள் சிலருக்கு மிக வேகமாகச் சிறுநீரக செயலிழப்பு வருவதற்குக் காரணமாக உள்ளன.

உப்புமறைந்திருக்கும் எதிரி 

உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளைக்கு 5 முதல் 6 கிராம் உப்பு மட்டுமே பரிந்துரைக்கிறது. ஆனால், சராசரி இந்தியர் தினசரி 12 முதல் 15 கிராம் உப்பை உட்கொள்கிறார். ஆந்திராவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சில குடும்பங்கள் 30 கிராம் வரை உப்பு உட்கொள்வது கண்டறியப்பட்டது; இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட ஆறு மடங்கு அதிகம். தென்னிந்திய உணவுகளில் உப்பு மறைந்து வசிக்கிறது. ஊறுகாய், அப்பளம், வடகம், சம்பார், ரசம், ஹோட்டல் உணவு அனைத்திலும் மிகுதியான உப்பு உள்ளது. உப்பைக் குறைப்பது என்பது வெறும் ஆலோசனை அல்ல… அது மருந்துக்கு நிகரான சிகிச்சை!

கவனிக்க வேண்டிய அறிகுறிகள் 

உயர் ரத்த அழுத்தத்துக்கே அறிகுறிகள் இல்லை, ஆனால், சிறுநீரகப் பாதிப்பின் சில சிவப்புக் கொடிகளைக் கவனியுங்கள்: நுரை நுரையாக வரும் சிறுநீர் (புரதம் கசிகிறது என்பதற்கான அறிகுறி), கால்கள் அல்லது கணுக்கால் வீக்கம், தொடர்ச்சியான சோர்வு, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுதல், சிறுநீரில் ரத்தம். 15 வயதுக்குக் கீழ் அல்லது 60 வயதுக்கு மேல் திடீரென ரத்த அழுத்தம் உயர்ந்தால் அது Secondary Hypertension ஆக இருக்கக்கூடும். இதற்கு விரைவாக மருத்துவ மதிப்பீடு தேவை.

அவசியமான பரிசோதனைகள் 

ஒவ்வோர் உயர் ரத்த அழுத்த நோயாளியும் ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டிய பரிசோதனைகள்: சீரம் கிரியாட்டினின் (ரத்த வடிகட்டும் திறனை அளக்கிறது), சிறுநீர் புரதப் பரிசோதனை (microalbuminuria), eGFR, சிறுநீரக அல்ட்ராசவுண்ட், ஈசிஜி அல்லது எக்கோ, கொலஸ்ட்ரால் மற்றும் BMI.

இலக்கு ரத்த அழுத்தம் 120/80 mmHg. தொடர்ச்சியாக 130/80 mmHg மேல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

BMI 23-க்குக் கீழ் இருக்க வேண்டும்.

மாத்திரை பற்றிய புரிதல் 

ஒருமுறை ரத்த அழுத்த மாத்திரை தொடங்கினால் ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டும், அது சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்கிற மூட நம்பிக்கை மிக ஆபத்தானது. உண்மையில் இந்த மருந்துகள் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் கவசம் போல செயல்படுகின்றன. மருந்தை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நிறுத்துவதால் ஏற்படும் ரத்த அழுத்த ஏற்ற இறக்கம், எந்த மாத்திரையையும் விட அதிக அளவு பாதிப்பை நெஃப்ரான்களுக்கு ஏற்படுத்தும்.

நவீன சிகிச்சைகள் 

சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிட்டால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு. காவேரி மருத்துவமனையில் உடன் தானம் செய்யும் (லைவ்) மற்றும் மூளை சாவடைந்த தானம் செய்யும் (cadaver) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்கிறோம். ரத்தவகை பொருந்தாத ABO-incompatible மாற்று அறுவை சிகிச்சையும் தற்போது சாத்தியம். CAPD எனப்படும் வீட்டிலேயே செய்யக்கூடிய டயாலிசிஸ் வசதியும் உள்ளது. ஆனால், மிக முக்கியம், இந்த நிலை ஏற்படாமல் தடுப்பதே!

உங்கள் ரத்த அழுத்த எண்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

அவை உங்கள் சிறுநீரக வடிகட்டிகளை என்ன செய்கின்றன என்பதை அறிந்திருக்கிறீர்களா? இந்த இரு கேள்விகளின் பதிலே உங்கள் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

 

Dr. டி. ராஜராஜன் MBBS, MD, DM (Nephrology)
சிறுநீரகவியல் நிபுணர்
காவேரி மருத்துவமனை, திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011