உலகில் ஆண்டுக்கு 80 லட்சம் பேரைக் கொல்லும் புகையிலை, இந்தியாவில் ஒவ்வொரு 100 புற்றுநோய்களில் 27-ஐ உருவாக்குகிறது. சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா, ஹூக்கா அனைத்தும் கொலைக் கருவிகள்தான். மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில், ஒற்றை முடிவால் உயிர்காக்கும் விழிப்புணர்வுக் கட்டுரை இது.
‘40 வயசுக்குள்ள வாய் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞன்… சாப்பிட முடியாது, பேச முடியாது, சுவாசிக்கவே கஷ்டப்படுறான். அவனுக்குத் தெரிஞ்ச ஒரே பழக்கம், பதின்ம வயசுல ஆரம்பிச்ச குட்கா…’ – தினமும் இதுபோன்ற சோகக் கதைகளைச் சுமந்து நிற்கிறது புற்றுநோய் மருத்துவ உலகம்.
உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி, புகையிலை ஆண்டுக்கு 80 லட்சத்துக்கும் அதிகமானோரைக் கொல்கிறது. அதில் 13 லட்சம் பேர் மற்றவர்கள் பிடிக்கும் புகையை சுவாசித்து உயிரிழப்பவர்கள். இந்தியாவில் மொத்த புற்றுநோய்களில் 27 சதவிகிதம் புகையிலையால்தான் வருகின்றன. ஆண்களில் இந்த விகிதம் இன்னும் அதிகம். வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் ஆகியவை முக்கியமானவை. இந்நோய்களை ஒற்றை முடிவால் தடுக்கலாம்… அது புகையிலையைத் தொடாமல் இருப்பது, ஏற்கெனவே பிடித்திருந்தால் உடனே நிறுத்துவது.
புகையிலையில் 7,000 ரசாயனங்கள் உள்ளன. அதில் குறைந்தது 70 – புற்றுநோய் உண்டாக்கக்கூடியவை. இவை DNA-வை சேதப்படுத்தி, நாள்பட்ட அழற்சியைத் தூண்டி, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன. வாய், நாக்கு, உதடு, தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், வயிறு, கணையம், கல்லீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, கர்ப்பப்பைவாய், ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட குறைந்தது 15 வகை புற்றுநோய்களுக்கு புகையிலை காரணமாகிறது.
புகை இல்லாத புகையிலை பாதுகாப்பானது என்கிற எண்ணம் மிக ஆபத்தானது. இது உண்மையில் சிகரெட்டை விட ஆபத்தானது. ஏனெனில், இது வாய் திசுக்களுடன் நீண்ட நேரம் நேரடியாகத் தொடர்பில் இருக்கிறது. மிகச் சக்தி வாய்ந்த நைட்ரோசமைன்கள் என்கிற புற்றுநோய் உண்டாக்கிகள் இதில் உள்ளன. தொடர்ச்சியான பயன்பாடு வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
மற்றொரு கடுமையான நோய் Oral Submucosal Fibrosis… இதில் வாய் படிப்படியாக திறக்க முடியாமல் ஆகிறது. ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்: வாயில் வெள்ளைத் திட்டுகள் (ல்யூகோப்லேகியா), சிவப்புத் திட்டுகள் (எரித்ரோப்லேகியா), காரமான உணவு சாப்பிடும்போது எரிச்சல், வாய் திறப்பது குறைதல், ஆறாத வாய்ப் புண்.
கூர்மையான பல் தொடர்ந்து உரசுவதாலும் வாய் புற்றுநோய் வரக்கூடும்; உடனே பல் சிகிச்சை பெறுங்கள்.
இளைஞர்களிடையே வேப், ஹூக்கா, ஈ-சிகரெட் பாதுகாப்பானவை என்கிற தவறான எண்ணம் பரவுகிறது. இவை குறைவான நச்சுக்களைக் கொண்டிருந்தாலும் பாதுகாப்பானவை அல்ல.
நிகோடின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். நச்சு ரசாயனங்கள், கன உலோகங்கள் உள்ளன. ஹூக்காவில் ‘தண்ணீர் நச்சுக்களை வடிகட்டும்’ என்பது மூட நம்பிக்கை… உண்மையில் அது பல சிகரெட்டுகளுக்குச் சமமான புகையை வெளியேற்றும். பெரிய ஆபத்து இது, இது இளைஞர்களை நிகோடினுக்கு அடிமையாக்கி, பின்னர் பாரம்பரிய புகையிலைக்கு இட்டுச் செல்லும் வாயிலாகும்.
வீட்டில் கணவன் புகை பிடித்தால், மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அதே புற்றுநோய் உண்டாக்கிகள் நுரையீரலுக்குச் செல்கின்றன. நுரையீரல் புற்றுநோய், இதய நோய், குழந்தைகளில் ஆஸ்துமா, தொடர்ச்சியான தொற்றுகள் வரலாம். வீடு, வாகனத்தை முழுமையாக புகை இல்லா மண்டலமாக மாற்றுங்கள். குழந்தைகளுக்கு அருகில், ஜன்னலில், பால்கனியில் கூட புகை பிடிக்கக் கூடாது. பாதுகாப்பான வரம்பு என்பதே இதற்குக் கிடையாது.
2 முதல் 3 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் வாய்ப் புண், வாயில் வெள்ளை அல்லது சிவப்புத் திட்டுகள், வாய் திறப்பதில் சிரமம், தொடர்ச்சியான குரல் மாற்றம், நாள்பட்ட இருமல், இருமலில் ரத்தம், விழுங்குவதில் கடினம், காரணமில்லாத எடை இழப்பு… இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கு மேல் நீடித்தால், குறிப்பாக புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, உடனே மருத்துவ மதிப்பீடு அவசியம்.
நிகோடின் ரிப்ளேஸ்மெண்ட் தெரபி (NRT), வரிநிக்ளைன், பூப்ரோபியான் போன்ற மருந்துகள், நடத்தை ஆலோசனை, ஆதரவுக் குழுக்கள் அனைத்தும் புகையிலையை விட்டுவிடுவதற்கு உதவுகின்றன. இந்தியாவில் தேசிய புகையிலை குயிட்லைன் (National Tobacco Quitline Services) இலவச தொலைபேசி ஆலோசனை அளிக்கிறது. சில வாரங்களில் நுரையீரல் செயல்பாடு மேம்படும். ஒரு வருடத்தில் இதய நோய் ஆபத்து பெரும்பாலும் குறையும். 5 முதல் 10 ஆண்டுகளில் புற்றுநோய் ஆபத்து கணிசமாகக் குறையும். விட முடியாத அளவுக்கு தாமதமானது என்று எதுவும் இல்லை!
• புகையிலை உலகெங்கும் ஆண்டுக்கு 80 லட்சம் உயிர்களைக் குடிக்கிறது. • இந்தியாவில் 27 சதவிகிதம் புற்றுநோய்கள் புகையிலையால் வருகின்றன. • புகையிலையில் 7,000 ரசாயனங்கள்… அவற்றில் 70 புற்றுநோய் உண்டாக்கக்கூடியவை. • குட்கா, பான் மசாலா, ஹான்ஸ், கைனி… சிகரெட்டை விட ஆபத்தானவை. • வேப், ஹூக்கா பாதுகாப்பானவை என்கிற நம்பிக்கை தவறானது. • மற்றவர் பிடிக்கும் புகைக்குப் பாதுகாப்பான அளவு என்று எதுவும் இல்லை. • இன்று விட்டாலும் உடல் தானே சரிசெய்யத் தொடங்கும்.
Dr. A. நந்தகுமார் MBBS, MD (General Medicine), DrNB – Medical Oncology புற்றுநோயியல் நிபுணர் காவேரி மருத்துவமனை, சேலம்
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011