ரத்தம் கொடுங்கள்… உயிர் கொடுங்கள்!

ரத்தம் கொடுங்கள்… உயிர் கொடுங்கள்!
June 06 13:57 2026 Print This Article

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14 அன்று உலக ரத்த தான தினம் (World Blood Donor Day) அனுசரிக்கப்படுகிறது. ரத்த தானத்தின் அவசியத்தை உலகுக்கு உணர்த்துவதும், தன்னார்வ ரத்த தான நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் இந்த நாளின் நோக்கம். ஆனால், ரத்த தானம் குறித்த தவறான நம்பிக்கைகளும் பயமும் இன்னும் பலரை ரத்தம் கொடுப்பதிலிருந்து தடுத்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் மொத்த ரத்த சேகரிப்பு எண்ணிக்கை காகிதத்தில் போதுமானதாகத் தெரிந்தாலும், சமச்சீரற்ற விநியோகம் காரணமாக பல இடங்களில் ரத்தப் பற்றாக்குறை தொடர்கிறது. குறிப்பாக, சிறிய நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் விடுமுறை நாட்கள், மழைக்காலம், அவசர நிலைகளின்போது ரத்தம் கிடைப்பது கடினமாகிறது. இன்னும் பெரும்பான்மையான ரத்த தானம் ‘ரீப்ளேஸ்மென்ட் டொனேஷன்’ (Replacement Donation) முறையில்தான் நடக்கிறது. அதாவது நோயாளியின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் கட்டாயமாகக் கொடுப்பது. இது மாற வேண்டும்.

புரளிகளை நம்பாதீர்கள்

‘ரத்தம் கொடுத்தால் உடம்பு பலவீனமாகிவிடும்‘, ‘இன்ஃபெக்ஷன் வரும்‘, ‘அடிக்கடி கொடுத்தால் உடலில் ரத்தமே இல்லாமல் போய்விடும்’ – இவையெல்லாம் முற்றிலும் தவறான நம்பிக்கைகள். உண்மையில், ரத்தம் கொடுத்த பிறகு உடலின் திரவ அளவு 24 முதல் 48 மணி நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். சிவப்பு ரத்த அணுக்கள் சில வாரங்களில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். ரத்த தானத்தில் பயன்படுத்தப்படும் ஊசிகள், சுத்தம் செய்யும் பொருட்கள் அனைத்தும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு உடனடியாக அகற்றப்படும். எனவே தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

யார் ரத்தம் கொடுக்கலாம்

18 முதல் 65 வயதுக்குட்பட்ட, 45 கிலோவுக்கு மேல் எடையுள்ள, ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் உள்ள எந்த ஆரோக்கியமான நபரும் ரத்தம் கொடுக்கலாம்.

சமீபத்தில் டாட்டூ போட்டிருந்தால், அறுவைசிகிச்சை செய்திருந்தால், கர்ப்ப காலம் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் இருந்தால் தற்காலிகமாகத் தகுதி ஒத்திவைக்கப்படும்.

HIV, ஹெபடைடிஸ் பி அல்லது சி தொற்று, சில இதய நோய்கள், புற்றுநோய் போன்ற நிலைகள் இருந்தால் நிரந்தரமாகத் தகுதி மறுக்கப்படும்.

சாதாரண ரத்த தானத்தைத் தாண்டி… 

நவீன டிரான்ஸ்ஃபியூஷன் மெடிசின் வெறும் ‘முழு ரத்தம் கொடுப்பது’ என்கிற நிலையைத் தாண்டி வெகுவாக முன்னேறியிருக்கிறது. பிளேட்லெட்ஃபெரிஸிஸ் (Plateletpheresis), பிளாஸ்மாஃபெரிஸிஸ் (Plasmapheresis) போன்ற சிறப்பு முறைகளில், தேவையான ரத்தக் கூறுகளை மட்டும் பிரித்தெடுத்து, மீதமுள்ளவற்றைக் கொடையாளருக்கே திருப்பி அளிக்க முடியும்.

அஃபெரிஸிஸ் பிளேட்லெட்கள் – கீமோதெரபி பெறும் புற்றுநோய் நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை பெற்றவர்கள், கடுமையான விபத்துக்குள்ளானவர்களுக்கு உயிர்காக்கும் மருந்தாக இருக்கின்றன. பிளாஸ்மா தானம், கடுமையான ரத்தப்போக்கு நிலைகளுக்கும், நோய் எதிர்ப்பு குறைபாடு மற்றும் ஹீமோஃபிலியா போன்ற நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

ரத்த வங்கிகளின் தொழில்நுட்பப் புரட்சி 

இன்றைய ரத்த வங்கிகள் கம்போனன்ட் தெரபி (Component Therapy), நியூக்ளிக் அமில சோதனை (NAT), லியூகோரிடக்ஷன் (Leukoreduction), இரேடியேஷன் தொழில்நுட்பங்கள், தானியங்கி குறுக்கு-பொருத்த அமைப்புகள் (Automated Crossmatching) போன்ற நவீன முறைகளைப் பயன்படுத்துகின்றன. இவை ரத்தமாற்றத்தின் பாதுகாப்பை மேம்படுத்தி, ஒவ்வொரு யூனிட் ரத்தத்தின் பயனையும் அதிகபட்சமாக்குகின்றன.

தன்னார்வ vs ரீப்ளேஸ்மென்ட் – ஏன் தன்னார்வ ரத்த தானம் சிறந்தது

தன்னார்வ ரத்த தான் நண்பர்கள் சமூகப் பொறுப்புணர்வுடனும், பிறர் நலனுக்காகவும் ரத்தம் கொடுப்பவர்கள். அவர்கள் தங்கள் மருத்துவ வரலாற்றை நேர்மையாகப் பகிர்வார்கள். ஆனால், ரீப்ளேஸ்மென்ட் டொனேஷன் முறையில் உறவினர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ரத்தம் கொடுப்பதால், சில நேரங்களில் மருத்துவத் தகவல்களை மறைக்க நேரிடலாம். எனவே, தன்னார்வ ரத்த தானம் பாதுகாப்பானதும் நம்பகமானதும் ஆகும்.

மறுபிறப்பு மருத்துவத்தின் புதிய பரிமாணம் 

ரத்த வங்கி தொழில்நுட்பம் இப்போது மறுபிறப்பு மருத்துவத்திலும் (Regenerative Medicine) பங்களிக்கிறது. ஸ்டெம் செல் தெரபி, பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா (PRP) சிகிச்சை, இம்யூனோதெரபி ஆகியவற்றில் அஃபெரிஸிஸ் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரிஃபெரல் பிளட் ஸ்டெம் செல் (PBSC) ஹார்வெஸ்டிங் மூலம், எலும்பு மஜ்ஜையிலிருந்து நேரடியாக எடுக்காமலேயே, ரத்த ஓட்டத்திலிருந்தே ஸ்டெம் செல்களைச் சேகரிக்க முடிகிறது. அஃபெரிஸிஸ் முறையில் சேகரிக்கப்படும் லிம்ஃபோசைட்டுகள், CAR-T செல் தெரபி போன்ற புரட்சிகரமான புற்றுநோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

குழந்தைப் பருவத்தில் பலரும் ஹீரோ ஆக வேண்டும் என்று கனவு காண்பார்கள். ரத்தம் கொடுப்பது என்பது நிஜமாகவே ஒரு ஹீரோவாக மாறும் வாய்ப்பு! ஒரே ஒரு முறை ரத்தம் கொடுத்தால் மூன்று நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும். அவசர மருத்துவ நிலையில் போராடும் குடும்பங்களுக்கு, சாதாரண மனிதர்கள் நிஜ வாழ்க்கை ஹீரோக்களாக மாற முடியும்!

 

தெரிந்துகொள்வோம்

• ரத்தம் கொடுத்த பிறகு திரவ அளவு 24-48 மணி நேரத்தில் இயல்பாகிவிடும். சிவப்பு ரத்த அணுக்கள் சில வாரங்களில் மீள்உற்பத்தியாகும்.
• ஒரு யூனிட் ரத்தத்தை சிவப்பு ரத்த அணுக்கள், பிளேட்லெட்கள், பிளாஸ்மா என மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம். எனவே, ஒரு தானம் மூன்று உயிர்களைக் காக்கும்.
• NAT (Nucleic Acid Testing) தொழில்நுட்பம் HIV, ஹெபடைடிஸ் போன்ற தொற்றுகளை மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ரத்தமாற்றப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
• CAR-T செல் தெரபி – ரத்த வங்கி தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியமாகும் புரட்சிகரமான புற்றுநோய் சிகிச்சை.

 

ஒரே ஒரு முறை ரத்தம் கொடுத்தால் மூன்று உயிர்களைக் காப்பாற்றலாம்! ஆனால், இந்தியாவில் இன்னும் தன்னார்வ ரத்த தானம் போதுமான அளவு இல்லை. ஆம்நீங்களும் ஹீரோ ஆகலாம்!

Dr. G. சுனில் ஜெய் கர்னேஷ் MBBS, MD
ரத்த மாற்ற மருத்துவர்
காவேரி மருத்துவமனை –- திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011