நாம் பார்த்த ஒவ்வொரு படத்திலும் தாய்ப்பால் ஊட்டுவது அழகாகவும் எளிதாகவும் தோன்றியிருக்கும். ஆனால், புதிதாகத் தாயான பலருக்கு, முதல் சில நாட்களின் உண்மை அப்படி இருப்பதில்லை. மகப்பேற்றுக்குப் பிறகு, தையல் வலியிலிருந்தும் நீண்ட பிரசவச் சோர்விலிருந்தும் மீண்டு வரும் அதே நேரத்தில், தன்னையும் குழந்தையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு தாய்க்கு வருகிறது.
சாதாரண பிரசவமோ அறுவை சிகிச்சையோ, முதல் நாட்களில் தாய்ப்பால் ஊட்டுவதில் பல சிரமங்கள் ஏற்படலாம். குழந்தையைச் சரியாகப் பிடித்து ஊட்டும் நிலையைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். சிலருக்கு, குழந்தை சரியாக மார்பைப் பற்றாததால் (latching) ஒவ்வொரு முறை ஊட்டும்போதும் வலியும் பயமும் ஏற்படுகிறது. ‘பால் ஊட்ட வேண்டிய நேரம் வந்தால் வலியை நினைத்தே கண்ணீர் வருகிறது’ என்று சில தாய்மார்கள் சொல்வதுண்டு. இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஊட்டுவதும், தூக்கமின்மையும் சேர்ந்து தாயை முற்றிலும் சோர்வடையச் செய்கின்றன. உண்மையில், முதல் வாரங்களில் தாயும் குழந்தையும் சேர்ந்தே தாய்ப்பால் ஊட்டுவதையும் அருந்துவதையும் கற்றுக்கொள்கிறார்கள். சிலருக்கு முதல் நாளிலேயே சாத்தியமாகும்; சிலருக்குச் சில நாட்கள் ஆகலாம். ஆனால், சரியான ஆதரவு இருந்தால், ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்குப் பால் ஊட்ட முடியும்.
குடும்பம், நண்பர்கள், சமூக ஊடகங்கள் வழியாக ‘முழுமையாகத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்’ என்று அளிக்கப்படும் அழுத்தம் இன்று மிக அதிகம். இதனால் பல தாய்மார்கள் குற்ற உணர்வால் வாடுகிறார்கள்.
இங்கே நான் தாய்மார்களிடம் முதலில் சொல்வது இதுதான்: மகிழ்ச்சியான அம்மாவால்தான் குழந்தையையும் மகிழ்ச்சியாக வைக்க முடியும். உங்கள் பயணத்தை நண்பருடனோ, அண்டை வீட்டாருடனோ, சமூக ஊடகத்தில் காண்பவருடனோ ஒப்பிட வேண்டாம். சிலருக்குப் பிரசவச் சிக்கல்கள் இருந்திருக்கலாம்; சிலருக்குப் போதிய ஆதரவு இல்லாமல் இருக்கலாம். உங்கள் பயணம் தனித்துவமானது. தாய்ப்பால் ஓர் அழகிய அனுபவம்; ஆனால், அது உங்கள் மகிழ்ச்சியை இழந்து அல்ல. உங்கள் குழந்தைமீது உங்களுக்குள்ள அன்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்; அது தாய்ப்பாலைத் தாண்டியது.
தாய்ப்பாலைச் சுற்றிப் பல தவறான நம்பிக்கைகள் உண்டு; மிகப் பொதுவானவை உணவு பற்றியவை. ‘இரண்டு பேருக்காகச் சாப்பிட வேண்டும், இல்லையேல் பால் இருக்காது’ என்று வலுக்கட்டாயமாக அதிகம் உண்ணச் சொல்வதுண்டு. இது தேவையில்லை. பாலூட்டும் தாய்க்குக் கூடுதல் சத்து தேவை என்பது உண்மைதான்; ஆனால், வேண்டுமென்றே அதிகம் உண்ண வேண்டியதில்லை. மூன்று வேளை உணவும், இரண்டு சிற்றுண்டியும், ஒவ்வொன்றிலும் ஒரு புரத உணவும், போதிய நீரும் இருந்தால் போதும். பால் சுரப்பைத் தூண்டும் உணவுகளையும் (Galactagogues) தினசரி சேர்த்துக்கொள்ளலாம். மறுபுறம், ‘இதைச் சாப்பிடக் கூடாது’ என்று பல ஆரோக்கியமான உணவுகள் தடுக்கப்படுவதும் தேவையற்றது; தாய்மார்கள் தங்கள் வழக்கமான, சுவையான, ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். ‘தினமும் ஒரு லிட்டர் பால் குடித்தால்தான் தாய்ப்பால் சுரக்கும்’ என்பதும் ஒரு மாயையே. மற்றொரு பொதுவான மாயை: ‘குழந்தை அழுகிறது என்றால் பால் போதவில்லை’. இது உண்மை அல்ல; குழந்தைகள் பசி, தூக்கம், அசௌகரியம், டயப்பர் மாற்றம், அல்லது வெறுமனே தாயின் அரவணைப்பு வேண்டும் என்பதற்காகவும் அழுகின்றன.
தூக்கமின்மையும் மனச்சோர்வும் ஒன்றையொன்று தூண்டக்கூடியவை; இரண்டும் தாய்ப்பாலைப் பாதிக்கின்றன. மன அழுத்தம், பால் இறங்குவதற்கு உதவும் ஆக்சிடோசின் (Oxytocin) எனும் ஹார்மோனைத் தடுக்கிறது. பால் உற்பத்தி ‘தேவை–சுரப்பு’ கொள்கையில் இயங்குகிறது; பால் குறைவாக எடுக்கப்பட்டால் உற்பத்தியும் குறையும். எனவே, தாய்மார்கள்மீதுள்ள ‘முழுமையாக இருக்க வேண்டும்’ என்கிற அழுத்தத்தை நீக்குவது அவசியம். தாய்ப்பால் என்பது ‘எல்லாம் அல்லது ஒன்றுமில்லை’ அல்ல; ஒவ்வொரு முறை ஊட்டுவதும் மதிப்புமிக்கது. வீட்டு வேலை, டயப்பர் மாற்றம் ஆகியவற்றில் குடும்ப உதவியைப் பெற்று, இன்னொருவர் குழந்தையைக் கவனிக்கும்போது தாய் தொய்வில்லாத ஒரு தூக்கத்தைப் பெறலாம். மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression) பற்றி மனம் திறந்து பேச பலர் தயங்குகிறார்கள்; மருத்துவர்கள் தீர்ப்பளிக்க அல்ல, உதவவே இருக்கிறார்கள் என்பதை அறியுங்கள்.
வேலைக்குத் திரும்புவது தாய்ப்பால் பயணத்தின் முடிவல்ல. மருத்துவர்கள் ஒரு மாதம் முன்பே வழிகாட்ட வேண்டும்: பால் கறந்து பாதுகாப்பாகச் சேமித்தல், குழந்தைக்குக் கப் அல்லது பாலடை மூலம் ஊட்டுதல் பற்றி. குடும்பமும் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும். பணியிடங்களில் பாலூட்டும் தாய்க்குத் தனி அறை என்பது ஓர் அடிப்படைத் தேவை; நேர நெகிழ்வும் பெரிதும் உதவும்.
தந்தையரால் நேரடியாக பால் ஊட்ட முடியாவிட்டாலும், அவர்களின் பங்கு நினைப்பதைவிட மிக முக்கியம். தோலோடு தோல் அரவணைத்தல், டயப்பர் மாற்றுதல், ஏப்பம் விடச் செய்தல், தாய் உணவும் நீரும் எடுத்துக்கொள்வதை உறுதிசெய்தல், நீண்ட, தனிமையான ஊட்டல் நேரங்களில் துணையாக இருத்தல், தேவைப்பட்டால் கறந்த பாலைக் கப்/பாலடையில் ஊட்டுதல் எனப் பல வழிகளில் அவர்கள் உதவலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, தாய்க்கு உணர்வுபூர்வமான ஆதரவளிப்பதும், அவள் தேர்ந்தெடுக்கும் ஊட்டல் முறையை மதிப்பதுமே மிகப்பெரிய உதவி.
தாய்ப்பால் ஊட்டுதல் என்பது ஓர் அழகிய பயணம்; ஆனால், அது தாயின் மகிழ்ச்சியுடன் இணைந்தே அழகாகும்!
‘இரண்டு பேருக்காகச் சாப்பிட’ வேண்டியதில்லை, சமச்சீர் உணவும் நீரும் போதும்; ‘தினமும் ஒரு லிட்டர் பால்’ என்பது ஒரு மாயை; குழந்தையின் அழுகை எப்போதும் ‘பால் போதவில்லை’ என்பதல்ல; தாய்ப்பால் ‘எல்லாம் அல்லது ஒன்றுமில்லை’ அல்ல… ஒவ்வொரு முறையும் மதிப்புமிக்கது. மகிழ்ச்சியான அம்மா = மகிழ்ச்சியான குழந்தை!
Dr. C. அஷிகா, MBBS, MD (Paediatrics), IBCLC, MIYCAN குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் பாலூட்டல் ஆலோசகர் காவேரி மருத்துவமனை, திருச்சி
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011