அறிவுரை வேண்டாம்… கொஞ்சம் காது கொடுங்கள்!

அறிவுரை வேண்டாம்… கொஞ்சம் காது கொடுங்கள்!
October 14 06:50 2026 Print This Article

‘சும்மா டென்ஷன்’, ‘ரொம்ப யோசிக்கிறே’, ‘தைரியமா இரு’ – மனக்கஷ்டத்தை வெளிப்படுத்தும் ஒருவருக்கு நம் வீடுகளில் கிடைக்கும் பதில்கள் பெரும்பாலும் இவைதாம். சாதாரண சோகம் எப்போது நோயாக மாறுகிறது, மனம் திறந்து பேசுபவரிடம் குடும்பம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், செல்போன் பழக்கம் எப்போது அடிமைத்தனமாகிறது, முதியவர்களிடம் எதைக் கவனிக்கத் தவறுகிறோம்?

எல்லாச் சோகமும் மனச்சோர்வு நோய் அல்ல. ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்து அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் மாற்றங்களை ‘வெறும் ஸ்ட்ரெஸ்’ என்று கடந்துபோகக் கூடாது. மனம் திறந்து பேசும் ஒருவருக்கு முதலில் தேவை அறிவுரை அல்ல… தீர்ப்பளிக்காமல் கேட்கும் ஒரு மனிதர். மனநல மருத்துவரைச் சந்திப்பது ஒரு முத்திரை அல்ல… ஒரு மருத்துவ மதிப்பீடு.

இந்த ஆண்டு உலக மனநல தினத்தின் கருப்பொருள், ‘அனுபவங்கள் கேட்கப்படட்டும்: உண்மைக் குரல்கள், உண்மையான மாற்றம்’ (Lived Experiences Heard: Real Voices, Real Change). மனநலப் பிரச்னைகளை நேரடியாக அனுபவித்தவர்களின் குரலுக்குச் செவிசாய்ப்பதே இதன் மையம். ஆனால், அந்தக் குரல் முதலில் கேட்கப்பட வேண்டிய இடம் நம் வீடுதான்!

சாதாரண சோகம் எப்போது நோயாக மாறுகிறது? 

சிரிப்பும் அழுகையும் சேர்ந்ததுதான் மனித வாழ்க்கை என்று கண்ணதாசன் அழகாகச் சொல்லியிருக்கிறார். எனவே, எல்லாச் சோகமும் மனச்சோர்வு நோய் அல்ல. ஓர் இழப்புக்கோ துயரமான நிகழ்வுக்கோ பிறகு சோகமாக இருப்பதும், சில நாட்கள் மனம் தளர்வதும் இயல்பான மனித அனுபவங்கள். ஆனால், இந்த உணர்வுகள் நீடித்து, தீவிரமடைந்து, நோயாக மாறுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) உருவாக்கிய சர்வதேச நோய் வகைப்பாட்டின் பதினொன்றாவது பதிப்பு (ICD 11), மனச்சோர்வு நோயை (Depressive Disorder) அடையாளம் காண்பதற்கான அளவுகோல்களைத் தருகிறது. இதில் மிக முக்கியமானவை இரண்டு. முதலாவது, பெரும்பாலான நேரங்களில் சோகமோ வெறுமையோ உணர்வது (Depressed Mood). இரண்டாவது, முன்பு மகிழ்ச்சி தந்த விஷயங்களில்கூட ஆர்வம் இல்லாமல் போவது (Loss of Interest or Pleasure). நண்பர்களைச் சந்திப்பது, பிடித்த பொழுதுபோக்கு, இசை எதிலும் மனம் ஒட்டாது. இவற்றில் ஏதேனும் ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.

இவற்றோடு, சிறிய வேலைகளைக்கூடச் செய்ய முடியாத அளவுக்குச் சோர்வும் ஆற்றல் குறைவும் (Reduced Energy), படிப்பிலோ வேலையிலோ கவனம் செலுத்த முடியாமை, ‘நான் எதற்கும் பயனற்றவன்’ என்கிற தாழ்வு உணர்வு, நடந்தவற்றுக்கெல்லாம் தன்னையே குற்றம் சாட்டிக்கொள்ளும் அளவுக்கு மீறிய குற்ற உணர்வு, தூக்கம் குறைவது அல்லது அதிகரிப்பது, பசி குறைவது அல்லது அதிகரிப்பது ஆகியவையும் காணப்படலாம். எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மையும், மரணம் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.

இந்த அறிகுறிகள் பெரும்பாலான நேரங்களில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், குறைந்தது இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து இருப்பதும், அவை வேலை, படிப்பு, குடும்ப உறவுகள் அல்லது அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிப்பதும் முக்கியமான அளவுகோல்கள். சோகமோ ஆர்வமின்மையோ நீடித்து, தூக்கம், பசி, ஆற்றல், கவனம், தன்னம்பிக்கை ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, அன்றாட வாழ்க்கையே பாதிக்கத் தொடங்கினால், அதை ‘வெறும் ஸ்ட்ரெஸ்‘ என்றோ ‘அதிகமாக யோசிக்கிறார்’ என்றோ கடந்துபோகாமல், நிபுணரின் உதவியை நாடுவது அவசியம். தற்கொலை எண்ணங்கள் இருந்தால், காத்திருக்காமல் உடனே உதவி பெற வேண்டும்.

மனம் திறந்து பேசும்போது குடும்பம் என்ன செய்ய வேண்டும்? 

ஒருவர் தன் மனக்கஷ்டத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்ளும்போது, அவருக்கு முதலில் தேவைப்படுவது அறிவுரை அல்ல… அவரை உண்மையாகக் கேட்கும் ஒரு மனிதர். மனதில் இருப்பதைச் சொல்லி அழுதால் துயரம் பாதியாகும் என்பதையும் கண்ணதாசன் பாடியிருக்கிறார். வலியை உடனே தீர்க்க வேண்டும் என்ற அவசரத்தை விட, முதலில் அந்த வலிக்கு இடம் கொடுப்பதே முக்கியம்.

நல்ல எண்ணத்தில்தான் குடும்பத்தினர் சில வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஆனால், அவை எதிர்பார்த்ததற்கு மாறாக, மனம் திறந்து பேசுவதையே நிறுத்திவிடக்கூடும். ‘இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே’ என்பது அவருடைய வேதனையைச் சிறிதாக்கி, அவருடைய உணர்வுகள் முக்கியமில்லை என்ற எண்ணத்தை உண்டாக்கும்… உதவி நாடுவதையும் குறைக்கும். அதற்குப் பதிலாக, ‘இது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்று புரிகிறது. என்ன நடக்கிறது என்று சொல்லுங்கள்’ என்று சொல்லலாம்.

‘மற்றவர்களுக்கு இதை விடப் பெரிய பிரச்னைகள் இருக்கின்றன’ என்று ஒப்பிடுவது, ‘எனக்கு இப்படி உணரக்கூட உரிமையில்லை’ என்கிற எண்ணத்தைத் தூண்டும். ஒவ்வொருவரின் வேதனையும் அவரவர் வாழ்க்கைச் சூழலோடு தொடர்புடையது. ‘உங்களுக்கு இது கடினமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறேன். இன்னும் சொல்லுங்கள்’ என்பதே சரியான பதில்.

‘தைரியமாக இரு, உன்னால் சமாளிக்க முடியும்’ என்பது, வலிமையாக இருப்பது மட்டுமே தீர்வு என்ற செய்தியைத் தருகிறது. உதவி கேட்பது பலவீனம் அல்ல என்பதைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அவர் வேதனையை உள்ளுக்குள்ளேயே புதைத்துக்கொள்வார். ‘நீங்கள் ஏற்கெனவே நிறைய விஷயங்களைச் சமாளித்து வருகிறீர்கள். இப்போது உங்களுக்கு என்ன மாதிரியான ஆதரவு தேவை?’ என்று கேளுங்கள்.

‘உன் குடும்பத்தை நினைத்துப் பார்’ என்பது, ஏற்கெனவே தன்னை ஒரு சுமையாக உணரும் ஒருவருக்குக் குற்ற உணர்வையும் மன அழுத்தத்தையும் கூட்டும். ‘உங்கள் குடும்பம் உங்களுக்கு முக்கியம் என்று புரிகிறது. ஆனால், இப்போது உங்களை மிகவும் பாதிப்பது எது என்று பேசலாம்’ என்று சொல்லலாம். ‘மக்கள் என்ன நினைப்பார்கள்?’ என்கிற கேள்வி அவமான உணர்வையும் சமூகத்தின் தீர்ப்பு பற்றிய பயத்தையும் அதிகரித்து, மருத்துவ உதவியை நாடுவதையே தடுத்துவிடும். ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விட, நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்’ என்பதே அவருக்குத் தேவையான வார்த்தைகள்.

‘நீ எப்படி உணர்கிறாய் என்று எனக்கு முழுமையாகத் தெரியும்’ என்று சொல்வதைவிட, ‘நான் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்… ஆனால், உங்களைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்பதே சிறந்த அணுகுமுறை. அவருடைய அனுபவத்தை நம் அனுபவத்தோடு ஒப்பிடாமல், அவருடைய பார்வையிலிருந்து புரிந்துகொள்வதுதான் பரிவுடன் கேட்பது (Empathetic Listening). சில நேரங்களில் தீர்வைவிட, உடனிருப்பதே தேவை. ‘நான் உங்களுடன் இருக்கிறேன். இதை நீங்கள் தனியாகச் சமாளிக்க வேண்டியதில்லை. சேர்ந்து அடுத்த அடியை யோசிப்போம்’ என்ற வார்த்தைகளே மிகப் பெரிய ஆதரவு. அறிவுரை சொல்வதற்கு முன் கேட்போம்… ஒப்பிடுவதற்கு முன் புரிந்துகொள்வோம்… தீர்ப்பு வழங்குவதற்கு முன், அந்த மனிதரின் அனுபவத்துக்கு இடம் கொடுப்போம்.”

செல்போன் பழக்கம் எப்போது அடிமைத்தனமாகிறது? 

ஸ்மார்ட்போன், சமூக ஊடகங்கள், வீடியோ கேம்கள், இடைவிடாமல் திரையைத் தள்ளிப் பார்ப்பது ஆகியவை இன்று அன்றாட வாழ்க்கையின் பகுதியாகிவிட்டன. போதைப்பொருளுக்கு அடிமையாவது போலவே, சில நடத்தைகளுக்கும் அடிமையாகலாம். இதை நடத்தை அடிமைத்தனம் (Behavioural Addiction) என்கிறோம். உலக சுகாதார நிறுவனம் இத்தகைய நிலைகளை ‘அடிமைப்படுத்தும் நடத்தைகளால் ஏற்படும் கோளாறுகள்’ என்ற பிரிவில் வகைப்படுத்துகிறது. இதில், கேமிங் கோளாறு (Gaming Disorder) ICD 11-ல் அங்கீகரிக்கப்பட்ட, கண்டறியக்கூடிய ஒரு நோய்.

இதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் உண்டு. முதலாவது, கட்டுப்பாட்டை இழப்பது (Impaired Control). எப்போது விளையாடுவது, எவ்வளவு நேரம், எப்போது நிறுத்துவது என்பதைக் கட்டுப்படுத்த முடியாமல், ‘இன்னும் பத்து நிமிடம் மட்டும்’ என்று நேரத்தை நீட்டித்துக்கொண்டே போவது. இரண்டாவது, அதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பது (Increasing Priority). படிப்பு, தூக்கம், குடும்பம், நண்பர்கள், பிற பொழுதுபோக்குகள் அனைத்தையும் விட கேமிங் முன்னுக்கு வருவது. மூன்றாவது, பாதிப்புகள் தெரிந்தும் தொடர்வது (Continuation Despite Negative Consequences). தூக்கமும் படிப்பும் உறவுகளும் பாதிக்கப்படுவது தெரிந்தும் நிறுத்த முடியாமல் இருப்பது. இவை தனிப்பட்ட, குடும்ப, சமூக, கல்வி அல்லது பணி வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

எனவே, ‘எத்தனை மணி நேரம் திரையைப் பார்க்கிறார்?’ என்று மட்டும் பெற்றோர் கணக்குப் போடுவதைவிட, ‘கட்டுப்படுத்த முடியவில்லையா? மற்ற முக்கியச் செயல்பாடுகளை விட அது முன்னுரிமை பெற்றுவிட்டதா? பாதிப்புகள் தெரிந்தும் தொடர்கிறாரா?’ என்று கவனிப்பதே முக்கியம்.

முதியவர்களிடம் குடும்பங்கள் தவறவிடும் மாற்றங்கள் எவை? 

வயதானவர்களின் மனநலத்தைப் பற்றிப் பேசும்போது முதலில் கவனிக்க வேண்டியது, வயதுப் பாகுபாடு (Ageism). உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி, வயதை அடிப்படையாகக் கொண்டு நாம் எப்படி நினைக்கிறோம் (Stereotypes), எப்படி உணர்கிறோம் (Prejudice), எப்படி நடந்துகொள்கிறோம் (Discrimination) என்பதே வயதுப் பாகுபாடு. ‘இந்த வயதில் இப்படித்தான் இருப்பார்கள்’, ‘மறதி எல்லோருக்கும் வரும்’, ‘தனிமை வயதின் இயல்புதான்’ என்று எந்த மாற்றத்தையும் வயதின் பெயரில் இயல்பாக்கிவிடுவதுதான் இதன் நுட்பமான வடிவம். இதனால், சிகிச்சை தேவைப்படும் பிரச்னைகள் கவனிக்கப்படாமல் போகின்றன. வயதாவது இயல்பானது… ஆனால் மனச்சோர்வு, திடீர் குழப்பநிலை, மூளைத்திறன் மழுங்குநோய் ஆகியவை வயதாவதன் கட்டாயப் பகுதிகள் அல்ல.

முதியவர்களிடம் குடும்பத்தினர் கவனிக்க வேண்டியவை மூன்று. முதலாவது, மனச்சோர்வு (Depression). ஆர்வம் குறைதல், சோர்வு, தூக்கத்திலும் பசியிலும் மாற்றம், பிறரிடமிருந்து விலகுதல் ஆகியவை இதன் அறிகுறிகள். அடிக்கடி தவறவிடப்படுவது, உடல் அறிகுறிகளுக்குள் ஒளிந்திருக்கும் மறைமுக மனச்சோர்வு (Masked or Somatic Depression). நம் சூழலில் பல முதியவர்கள் மனவேதனையை வார்த்தைகளில் சொல்வதில்லை. ‘உடம்பெல்லாம் வலிக்கிறது’, ‘சோர்வாக இருக்கிறது’, ‘தூக்கம் சரியில்லை’, ‘பசியே இல்லை’ என்று உடல் பிரச்னையாகவே சொல்வார்கள். அதனால், ‘உடம்புக்கு என்ன?’ என்பதோடு, ‘மனதுக்கு என்ன?’ என்றும் கேட்க வேண்டும்.

இரண்டாவது, மூளைத்திறன் மழுங்குநோய் (Dementia). இது வெறும் மறதி மட்டுமல்ல. நினைவாற்றல், சிந்தனை, மொழி, முடிவெடுக்கும் திறன், இடத்தையும் காலத்தையும் புரிந்துகொள்ளும் திறன், நடத்தை, ஆளுமை ஆகியவற்றிலும் படிப்படியாக மாற்றங்கள் வரலாம். பணத்தைக் கையாள்வதில் சிரமம், வழக்கமான வேலைகளைச் செய்ய முடியாமை, அதிக அளவு சந்தேகம், எரிச்சல், சமூக நடத்தையில் மாற்றம் ஆகியவையும் அறிகுறிகளாக இருக்கலாம். இவை அன்றாடச் செயல்பாட்டைப் பாதிக்கத் தொடங்கினால் மருத்துவ மதிப்பீடு அவசியம்.

மூன்றாவது, திடீர் குழப்பநிலை (Delirium). சில மணி நேரங்களிலோ நாட்களிலோ திடீரென கவனம், விழிப்புநிலை, புரிதல் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவது இது. நோய்த்தொற்று, உடலின் வளர்சிதை மாற்றப் பிரச்னைகள், மருந்துகள் போன்ற மருத்துவக் காரணங்களோடு இது தொடர்புடையதாக இருக்கலாம். எனவே, திடீரென ஏற்படும் குழப்பத்தை ‘வயதாகிவிட்டது’ என்று அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

வயதைப் பார்க்காமல் மனிதரைப் பார்ப்போம்… வயதைக் காரணமாக்காமல் மாற்றத்தைக் கவனிப்போம்.”

மனநல மருத்துவரைப் பார்த்தால் ‘பைத்தியம்‘ என்ற முத்திரையா? 

உலக சுகாதார நிறுவனத்தின் அரசியலமைப்பு, நோய் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியம் அல்ல… உடல், மனம், சமூகம் ஆகிய மூன்றிலும் முழுமையான நலம்தான் ஆரோக்கியம் என்று வரையறுக்கிறது. எனவே, மனநலத்துக்காக உதவி கேட்பது நோயின் அடையாளம் அல்ல… முழுமையான ஆரோக்கியத்தைக் காப்பதன் ஒரு பகுதி.

இன்னொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும்… மனம் என்பது மூளைக்கு வெளியே தனியாக இயங்கும் ஒன்றல்ல. நம் உணர்வுகள், நினைவுகள், உந்துதல், பயம், மகிழ்ச்சி ஆகியவை மூளையின் பல்வேறு நரம்பு வலைப்பின்னல்களோடு தொடர்புடையவை. குறிப்பாக, லிம்பிக் அமைப்பு (Limbic System), முன்மூளைப் புறணி (Prefrontal Cortex) போன்ற பகுதிகள் உணர்வு, உந்துதல், நினைவு, நடத்தை ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மூளை, மனம், நடத்தை ஆகியவற்றின் தொடர்பை அறிவியல் அடிப்படையில் புரிந்துகொள்ளும் ஒரு முறையான மருத்துவத் துறைதான் மனநல மருத்துவம் (Psychiatry).

மனநல மருத்துவரைச் சந்திப்பது ஒரு முத்திரை அல்ல… ஒரு மருத்துவ மதிப்பீடு. முதல் சந்திப்பில், உங்கள் பிரச்னை, அதன் தீவிரம், எவ்வளவு காலமாக இருக்கிறது, தூக்கம், பசி, ஆற்றல், கவனம், வேலையிலும் குடும்பத்திலும் அதன் தாக்கம் ஆகியவற்றை மருத்துவர் புரிந்துகொள்வார். உங்கள் மருத்துவ வரலாறு, எடுத்துக்கொள்ளும் மருந்துகள், வாழ்க்கைமுறை ஆகியவற்றையும் மதிப்பீடு செய்வார். மருந்து தேவையா என்பதை அதன் பிறகுதான் முடிவு செய்வார். தேவைப்பட்டால், நோயின் தன்மை, தீவிரம், சிகிச்சைக்கான பலன் ஆகியவற்றைப் பொறுத்து எந்த மருந்து, எந்த அளவு, எவ்வளவு காலம் என்பது தீர்மானிக்கப்படும். எல்லோருக்கும் வாழ்நாள் முழுவதும் மருந்து தேவை என்பது உண்மையல்ல. சிலருக்கு உளவியல் சிகிச்சை (Psychotherapy), ஆலோசனை (Counselling), வாழ்க்கைமுறை மாற்றங்கள் அல்லது இவற்றின் கலவையே போதுமானதாக இருக்கலாம். மனநல மருத்துவரைச் சந்திப்பது ‘நான் நோயாளி’ என்று ஒப்புக்கொள்வது அல்ல… ‘எனக்குள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவி கேட்கிறேன்’ என்று சொல்வதுதான்.

இந்த உலக மனநல தினத்தில் நினைவில் வைக்கவேண்டிய மூன்று விஷயங்கள் 

முதலாவது, தீர்ப்பளிக்காமல் கேளுங்கள். ஒருவர் மனக்கஷ்டத்தைப் பகிரும்போது, உடனே அறிவுரை சொல்லவோ, ஒப்பிடவோ, தீர்வு சொல்லவோ அவசரப்பட வேண்டாம். ‘நான் உங்களுடன் இருக்கிறேன். என்ன நடந்தது என்று சொல்லுங்கள்’ என்கிற ஒரு வாக்கியமே பெரிய ஆதரவாக இருக்கும்.

இரண்டாவது, மாற்றங்களைப் புறக்கணிக்காமல் கவனியுங்கள். நம்மிடமோ, நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமோ தூக்கம், பசி, ஆற்றல், மனநிலை, ஆர்வம், நடத்தை, அன்றாடச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களை ‘ஸ்ட்ரெஸ்தான்’, ‘வயது காரணம்’, ‘அவர் இப்படித்தான்’ என்று கடந்துபோக வேண்டாம். மாற்றம் நீடித்தால், அதன் பின்னால் இருக்கும் காரணத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.

மூன்றாவது, உதவி கேட்பதைத் தாமதிக்காதீர்கள். சரியான நேரத்தில் உதவி கிடைத்தால், மனநலப் பிரச்னைகள் பலவற்றைத் திறம்படக் கையாள முடியும். மனநல நிபுணரை அணுகுவது பலவீனத்தின் அடையாளம் அல்ல… தன்னைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பான முடிவு. மனநலம் என்பது நெருக்கடி வந்த பிறகு மட்டும் கவனிக்க வேண்டியது அல்ல… ஒவ்வொரு நாளும் காக்க வேண்டிய ஆரோக்கியத்தின் ஒரு பகுதி.

ஒவ்வொரு மனிதரின் அனுபவத்தையும் மதித்து, அதில் ஒலிக்கும் உணர்வுகளைப் புரிந்துகொள்வோம். அந்தப் புரிதலில்தான் உண்மையான மாற்றம் தொடங்குகிறது.

 

தெரிந்துகொள்வோம்

மனநல ஆலோசனைக்காக, இந்திய அரசின் ‘டெலி மனஸ்’ (Tele MANAS) இலவச உதவி எண் 14416 (அல்லது 1800 891 4416) இருபத்து நான்கு மணி நேரமும் செயல்படுகிறது. அழைப்பவர் தனக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்துப் பேசலாம். 2022 அக்டோபர் 10 அன்று, உலக மனநல தினத்திலேயே இந்தச் சேவை தொடங்கப்பட்டது.

ICD 11-ன்படி, கேமிங் கோளாறு என்று உறுதிசெய்ய, அந்த நடத்தை பொதுவாகக் குறைந்தது 12 மாதங்கள் நீடித்திருக்க வேண்டும். அறிகுறிகள் மிகத் தீவிரமாக இருந்தால், இந்தக் காலம் குறைவாக இருந்தாலும் கண்டறியலாம்.
உலக மக்கள்தொகையில் பாதிப் பேர் முதியவர்கள் மீது வயதுப் பாகுபாடு கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

WHO மனநல அட்லஸ் 2024 கணக்கெடுப்பில் பதிலளித்த நாடுகளில், 37 சதவிகிதம் மட்டுமே ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களுக்கான மனநலப் பயிற்சியில் நேரடி அனுபவம் கொண்டவர்களை ஈடுபடுத்தியுள்ளன.

 

டாக்டர் யாமினி கண்ணப்பன்
MBBS, DPM, DNB (Psychiatry)
Senior Consultant
காவேரி மருத்துவமனை – சென்னை

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011