அறுவை சிகிச்சை அறைக்குள்…

அறுவை சிகிச்சை அறைக்குள்…
November 28 10:29 2025 Print This Article

அறுவை சிகிச்சைக்கும் மயக்க மருந்துக்கும் முன் செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் என்னன்ன

  • ஆறு முதல் எட்டு மணி நேரம் சாப்பிடக்கூடாது (Fasting). சில சந்தர்ப்பங்களில் clear liquids 2 மணி நேரத்துக்கு முன் வரை எடுத்துக்கொள்ளலாம்.
  • நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை மருத்துவர்கள் சொல்வதற்கு இணங்க மாற்றிக்கொள்ள வேண்டும் (உதா: இன்சுலின்).
  • புகைப்பிடித்தல், மது அருந்துதல் முற்றிலும் கூடாது.
  • உங்கள் நோய்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் (நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை).
  • சில தருணங்களில் உறவினர்கள் ரத்த தானம் செய்ய வேண்டியிருக்கும்.
  • கடைசியாக இவையெல்லாவற்றையும் படித்து புரிந்துகொண்டு ஓப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.

இவை அனைத்தும் அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கவும், நோயாளிகள் சீக்கிரம் உடல்நலம் மீண்டு வரவும் உதவும்.

அறுவை சிகிச்சை மற்றும் மயக்க நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவின் (ICU) பங்கு என்ன?  

  • நவீன மருத்துவத்தில் தீவிர சிகிச்சையின் பங்கு மிக முக்கியமானது.
  • சில நேரங்களில் அவசர அறுவைசிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் படாமல் இருக்கலாம். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மூலம் உடல் உறுப்புகளுக்கு உதவி செய்யவும், அவை அதிலிருந்து மீளவும் மருந்துகள் தரப்படும்.
  • அவர்களின் உடல் நலனை மேம்படுத்தி அறுவை சிகிச்சைக்குத் தகுதியானவராக்குவதில் ICUவின் பங்கு முக்கியமானது.
  • மேலும் அவர்கள் அறுவைசிகிச்சைக்குப் பின்னரும் தொடர்ந்து ICU-வில் உடல்நலம் முழுதாக தேறும் வரை இருப்பார்கள்.
  • சிக்கலான நீண்ட அறுவைசிகிச்சைகளுக்குப் பின்னரும், சில நேரங்களில் வலி மருந்துகளைச் செலுத்துவதற்காகவும் தீவிர சிகிச்சை பிரிவின் உதவி தேவைப்படும்.

குழந்தைகள், வயதானவர்கள், இதய நோய்கள் போன்ற நோயாளிகள்இவர்களுக்குத் தரப்படும் மயக்க மருந்து முறை ஒரே மாதிரியா? இல்லை வேறுபடுமா

எல்லாருக்கும் ஒரே மயக்க மருந்து முறை நிச்சயமாகக் கிடையாது. அது நோயாளியின் வயது, உடல் எடை, அவர்களுக்கு இருக்கும் நோய்களைப் பொறுத்து மாறுபடும்.

இதனால்தான் அறுவை சிகிச்சைக்கு முன்னரே மயக்க மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது அவசியம்.

மயக்க மருத்துவத்தின்போது ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் என்ன ஆகும்? அதை எப்படிச் சமாளிப்பார்கள்

மயக்க மருத்துவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தீவிரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது இதைப்பற்றி நிறைய படித்து சிக்கலான சவால்களை எதிர்கொள்ள தயாராகிறார்கள் –- ஒரு விமானி எப்படி உருவாகிறாரோ அப்படி.

சுவாசப் பிரச்னைகள், இதயம், சிறுநீரகம் சார்ந்த சவால்கள், அதிக ரத்த இழப்பு, அலர்ஜி மற்றும் இதயத்துடிப்பு நின்றால்கூட (cardiac arrest) நோயாளிகளை எப்படி மீட்பது என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கான கருவிகளும் அறுவை சிகிச்சை அரங்கில் இருக்கும்.

முக்கியமாக அறுவை சிகிச்சையின்போதும், மயக்க மருத்துவத்தின்போதும் சிக்கல்கள் வராமல் தடுக்கவும், முன்கூட்டியே ஊகிக்கவும் பல சரிபார்ப்புப் பட்டியல்களும் (check lists), நெறிபார்ப்பு முறைகளும் (protocols) உண்டு. இதனால் இன்றைய மயக்க மருத்துவம் மிகவும் பாதுகாப்பானது. அதில் தீவிரமான சிக்கல்கள் ஏற்படுவது மிகவும் அரிது.

அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலி எவ்வாறு கையாளப்படுகிறது

இது மிக முக்கியமான ஒன்று. அறுவை சிகிச்சைக்குப் பின் வலி இல்லாமல் இருப்பது பல விதங்களில் நோயாளிக்கு உதவும். அவர்கள் மனநிலை, உறக்கம், படபடப்பு எல்லாமே மேம்படும். அவர்களின் உடல் நிலை மீண்டும் சீக்கிரம் சரியாகவும் உதவும்.

இதனால் அறுவைசிகிச்சைக்கு முன்னரே மயக்க மருத்துவர் இதைப் பற்றித் திட்டமிடுவார்.

இதற்காக நவீன மருத்துவத்தில் பல முறைகள் உள்ளன… 

  • பல மருந்துகளை இணைத்துச் செயல்படுத்தும் (multimodal analgesia) வலி நீக்கும் முறை. இதில் வேறு வேறு முறைகளில் வேலை செய்யும் இரண்டுக்கும் மேற்பட்ட மருந்துகளை இணைத்து தேவையான வலி நிவாரணத்தைப் பெறலாம்.
  • உடலின் குறிப்பிட்ட பகுதியை மரத்துப்போகச் செய்து வலி குறைப்பது. நாம் முன்னரே பார்த்த இந்த மயக்க மருத்துவ முறைகளை வலி நீக்கவும் பயன்படுத்தலாம் (epidural analgesia, nerve blocks).
  • சில நேரங்களில் மருந்துகளைச் செலுத்தும் முடிவை நோயாளியிடமே விட்டுவிட்டு, அவர்களுக்குத் தேவையான மருந்தை அவர்கள் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் பெறச் செய்யும் முறை (PAC –- patient controlled analgesia).

நோயாளிகளின் வாழ்க்கைமுறை மற்றும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் எப்படி மயக்க மருத்துவத்துக்கு உட்படுத்தப்படும்போது பாதிக்கும்?  

புகைப்பிடித்தல்

இது நுரையீரலையும் இதயத்தையும் பல விதங்களில் பாதிக்கும். கண்டிப்பாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு முன்பாவது இதை நிறுத்தவேண்டும்.

மது அருந்துதல்

இது மயக்க மருந்துக்களின் வீரியத்தைக் குறைக்கும். உடல் நடுக்கம் போன்ற நரம்புப் பிரச்னைகள், கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

நீண்ட நாள் மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதை மறைக்காமல் மயக்க மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் 24 முதல் 48 மணி நேரத்துக்கு முன்பாவது இதை நிறுத்த வேண்டும்.

மற்ற ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்தல், உறக்கம், மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்றவை அறுவை சிகிச்சையிலிருந்து சீக்கிரம் குணமாக உதவும்.

மயக்க மருத்துவம் என்பது அறுவை சிகிச்சையின்போது உங்களைத் தூங்க வைப்பது மட்டுமல்ல… நீங்கள் பாதுகாப்பாக அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரவும் சிகிச்சைக்குப் பின்னர் வலி இல்லாமல் இருக்கவும் உதவுகிறது.

அதனால், அறுவை சிகிச்சைக்கு முன்னர் எதையும் மறைக்காமல் உங்கள் நோய்கள், உட்கொள்ளும் மருந்துகள், பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை பற்றி மயக்க மருத்துவருடன் ஆலோசிப்பது உங்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம்.

நவீன மயக்க மருத்துவம் மிகவும் பாதுகாப்பானது. அதைப் பற்றிய பயம் துளியும் வேண்டாம்!

 

Dr. புத்தன் ராஜரத்தினம்
MD (Anaesthesia), EDIC, IDCCM, PDFCCM
தலைவர் -– கிரிட்டிகல் கேர் மெடிசன்
காவேரி மருத்துவமனை, சென்னைவடபழனி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801