வலிப்பு நோய் என்பது மூளையின் மின்சாரச் செயல்பாட்டில் ஏற்படும் தற்காலிகக் குறுக்கீடு. இது எந்த வயதிலும் யாருக்கும் வரலாம். சரியான சிகிச்சையுடன், வலிப்பு நோயாளிகள் இயல்பான வாழ்க்கை வாழ முடியும். ஆனால், இந்தியாவில் இந்த நோய் பற்றிய தவறான புரிதலும், மோசமான எண்ணமும் நோயாளிகளைப் பெரிதும் பாதிக்கின்றன. வலிப்பு பற்றி, காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் திவ்யா செல்வராஜ் தரும் விரிவான விளக்கங்கள் இதோ…
வலிப்பு நோய் (எபிலெப்ஸி) என்பது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு நரம்பியல் கோளாறு. உலகளவில் சுமார் ஐந்து கோடி மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வலிப்பு நோயுடன் வாழ்கின்றனர். ஆனால், இந்த நோய் பற்றிய சரியான விழிப்புணர்வு இன்னும் சமூகத்தில் பரவலாக இல்லை. பல மூடநம்பிக்கைகளும், தவறான புரிதல்களும் இந்த நோயைச் சுற்றி உள்ளன.
வலிப்பு நோய் என்பது மூளையின் மின்சார செயல்பாட்டில் ஏற்படும் திடீர், தற்காலிக குறுக்கீடு என்கிற டாக்டர் திவ்யா செல்வராஜ் இதுபற்றி விளக்குகிறார். ‘‘நமது மூளையில் கோடிக்கணக்கான நரம்பு செல்கள் மின்சாரச் சமிக்ஞைகள் மூலம் தொடர்பு கொள்கின்றன. இந்த மின்சாரச் செயல்பாட்டில் திடீரென ஒரு குறுக்கீடு அல்லது அசாதாரண மின்னழுத்தம் ஏற்படும்போது, வலிப்பு உண்டாகிறது’’ என்கிறார்.
ஒரு முறை வலிப்பு வருவதற்கும், வலிப்பு நோய் இருப்பதற்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. ‘‘அதிக காய்ச்சல், மூளையில் தொற்று, தலையில் அடிபடுதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைதல் போன்ற காரணங்களால் ஒரு முறை வலிப்பு வரலாம். இதைத் ‘தூண்டப்பட்ட வலிப்பு’ (provoked seizure) என்கிறோம். ஆனால், எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை வலிப்பு வந்தால், அதை ‘எபிலெப்ஸி’ அல்லது வலிப்பு நோய் என்று அழைக்கிறோம்’’ என்று தெளிவுபடுத்துகிறார் மருத்துவர்.
வலிப்பு நோய் எந்த வயதிலும் யாருக்கும் வரலாம் என்பது முக்கியமான உண்மை. ‘‘குழந்தைப் பருவத்திலும், வயதான காலத்திலும் வலிப்பு நோய் வருவதற்கான அபாயம் சற்று அதிகம். குழந்தைகளுக்குப் பிறப்பில் ஏற்படும் சிக்கல்கள், மூளை வளர்ச்சிக் குறைபாடுகள் போன்றவை காரணமாக இருக்கலாம். வயதானவர்களுக்கு மூளையில் ரத்தக் கசிவு, கட்டி போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், எந்த வயதிலும், எந்தக் காரணமும் இல்லாமலும் வலிப்பு நோய் ஏற்படலாம்’’ என்கிறார் டாக்டர் திவ்யா செல்வராஜ்.
பலருக்கும் வலிப்பு என்றால், ஒருவர் தரையில் விழுந்து, உடல் முழுவதும் நடுங்கி, வாயில் நுரை வருவது என்கிற ஒரே படம்தான் மனத்தில் தோன்றும். ஆனால், இது ஒரு தவறான, முழுமையற்ற புரிதல். ‘‘வலிப்பு பல வகைகளில் வரும். சில வலிப்புகளில் வெளிப்படையான உடல் அசைவுகள் (convulsions) இருக்கும். சில வலிப்புகளில் எந்த உடல் அசைவும் இருக்காது’’ என்று விளக்குகிறார் டாக்டர் திவ்யா செல்வராஜ்.
வலிப்புகளைப் பொதுவாக மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்கிறார் மருத்துவர். முதலாவது, பொதுவான தொடக்க வலிப்பு (generalized onset seizures). இந்த வகையில், மூளையின் இரு பாகங்களும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுகின்றன. உடல் முழுவதும் விறைப்பு மற்றும் நடுக்கம், திடீரென மயக்கமாகி விழுதல், சில வினாடிகள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருத்தல் (absence seizures) போன்றவை இதில் அடங்கும்.
இரண்டாவது, குவியத் தொடக்க வலிப்பு (focal onset seizures). இதில் மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் பாதிக்கப்படும். ‘‘இந்த வகை வலிப்பில், ஒரு கை அல்லது கால் மட்டும் நடுங்கலாம். அல்லது வித்தியாசமான நறுமணத்தை உணர்தல், விசித்திரமான பார்வை தோன்றுதல், திடீர் பயம் அல்லது மகிழ்ச்சி உணர்வு போன்ற அனுபவங்கள் இருக்கலாம். சிலர் ஒரு குறிப்பிட்ட செயலை (உதாரணம்: உதட்டை சப்பிக்கொண்டே இருத்தல், ஆடை பொத்தானை தொட்டுக் கொண்டே இருத்தல்) மீண்டும் மீண்டும் செய்யலாம். பார்க்கும் மற்றவர்களுக்கு இது வலிப்பு என்று தெரியாமலேயே இருக்கலாம்’’ என்று விவரிக்கிறார் டாக்டர் திவ்யா செல்வராஜ்.
மூன்றாவது, அறியப்படாத தொடக்க வலிப்பு (unknown onset seizures). சில நேரங்களில், வலிப்பு மூளையின் எந்தப் பகுதியில் தொடங்கியது என்பதைத் துல்லியமாக அறிய முடியாமல் இருக்கலாம்.
‘‘மோட்டார் அல்லாத வலிப்புகள் (non-motor seizures) என்று ஒரு வகை உண்டு. இதில் உடல் அசைவுகள் இல்லாமல், நடத்தை திடீரென நின்றுவிடுதல் (behavioral arrest), வித்தியாசமான உணர்வுகள் (sensory), சிந்தனை மாற்றம் (cognitive), உணர்ச்சி மாற்றங்கள் (emotional), அல்லது உடலின் தானியங்கிச் செயல்பாடுகளில் மாற்றம் (autonomic) போன்றவை நிகழலாம். இதனால், எல்லா வலிப்புகளும் வெளிப்படையாகத் தெரியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறார் மருத்துவர்.
வலிப்பு நோயைத் தூண்டும் பல காரணிகள் உள்ளன என்று டாக்டர் திவ்யா செல்வராஜ் விளக்குகிறார். ‘‘ஆம், தூக்கமின்மை (sleep deprivation), ஒளிரும் அல்லது படபடக்கும் விளக்குகள் (flickering lights), திடீரென மருந்து எடுப்பதை நிறுத்துதல் (drug withdrawal) போன்றவை வலிப்பைத் தூண்டக்கூடிய முக்கிய காரணிகள்’’ என்கிறார்.
தூக்கமின்மை மிக முக்கியமான தூண்டுதலாகும். ‘‘இரவு முழுவதும் விழித்திருத்தல், தொடர்ந்து குறைவான தூக்கம், இரவு வேலை அட்டவணைகள் போன்றவை மூளையின் மின்சாரச் செயல்பாட்டைப் பாதித்து, வலிப்பைத் தூண்டலாம். வலிப்பு நோயாளிகள் தினமும் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது மிக அவசியம்’’ என்று அறிவுரை தருகிறார் மருத்துவர்.
ஒளிரும் விளக்குகள் மற்றும் திரைகளும் பிரச்னை உருவாக்கலாம். ‘‘டிஸ்கோ விளக்குகள், வீடியோ கேம்கள், தொலைக்காட்சியின் படபடக்கும் காட்சிகள் போன்றவை சில நபர்களுக்கு வலிப்பைத் தூண்டலாம். இதை ‘ஃபோட்டோசென்சிட்டிவ் எபிலெப்ஸி’ (photosensitive epilepsy) என்கிறோம். இவர்கள் திரை நேரத்தைக் குறைக்க வேண்டும், இருண்ட அறையில் ஸ்க்ரீன்களைப் பார்க்கக் கூடாது’’ என்கிறார்.
மது அருந்துதல் மற்றும் மயக்க மருந்துகள் பயன்படுத்துதலும் ஆபத்தானது. ‘‘வலிப்பு நோயாளிகள் மதுவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மதுப் பழக்கம் இருப்பவர்கள் திடீரென்று மதுவை நிறுத்தினாலும் வலிப்பு வரலாம். எனவே, மது நிறுத்துதல் மருத்துவ மேற்பார்வையில் படிப்படியாக செய்யப்பட வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் திவ்யா செல்வராஜ்.
வலிப்பு நோய் உள்ளவர்கள் சில விஷயங்களை கவனமாகக் கடைபிடிக்க வேண்டும். ‘‘சரியான, சீரான உணவு உண்ண வேண்டும். வயிறு காலியாக இருக்கக் கூடாது. ஏனெனில், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் வலிப்பைத் தூண்டலாம். திரை நேரத்தை (screen time) மிதமாக வைத்துக்கொள்ள வேண்டும். தூக்கமின்மையை தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை ஒரு போதும் தவறவிடக் கூடாது அல்லது திடீரென்று நிறுத்தக் கூடாது’’ என்று வலியுறுத்துகிறார் மருத்துவர்.
வலிப்பு நோயைக் கண்டறிவது சில நேரங்களில் சிக்கலானதாக இருக்கலாம் என்கிறார் டாக்டர் திவ்யா செல்வராஜ். ‘‘MRI மூளை ஸ்கேன் மற்றும் EEG (மின்னலை வரைபடம் – electroencephalogram) பரிசோதனைகள் வலிப்பு நோயின் காரணத்தைக் கண்டறிய உதவலாம். ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், சுமார் 50 சதவிகித வலிப்பு நோயாளிகளில் இந்தப் பரிசோதனைகள் முற்றிலும் இயல்பாகவே இருக்கலாம்’’ என்கிறார்.
இதனால்தான் மருத்துவ வரலாறு மிக முக்கியமானதாகிறது. ‘‘வலிப்பு வருவதற்கு முன்பு என்ன நடந்தது, வலிப்பு வரும்போது என்ன நடந்தது, வலிப்பு முடிந்த பிறகு என்ன நடந்தது என்பதை விரிவாக அறிந்துகொள்வது அவசியம். நோயாளியின் விவரிப்பு மட்டும் போதாது. ஏனெனில், வலிப்பு வரும்போது நோயாளி மயக்கத்தில் இருப்பார். எனவே, வலிப்பை நேரில் பார்த்த ஒருவரின் (eye witness) விவரிப்பு அல்லது வலிப்பை வீடியோ பதிவு செய்திருந்தால் அது மிக முக்கியமான தகவலாக இருக்கும்’’ என்று தெரிவிக்கிறார் டாக்டர் திவ்யா செல்வராஜ்.
MRI ஸ்கேன் எதற்காகச் செய்யப்படுகிறது? ‘‘MRI மூளைப் பரிசோதனை மூலம், மூளையில் ஏதேனும் கட்டி, வடு (scar), வளர்ச்சிக் குறைபாடு, பழைய அடிபட்ட காயத்தின் தடயங்கள், ரத்தக் கசிவு போன்றவை இருக்கிறதா என்பதை பார்க்கலாம். இவை வலிப்புக்கான காரணமாக இருக்கலாம். ஆனால், MRI இயல்பாக இருந்தாலும், நபருக்கு வலிப்பு நோய் இருக்கலாம்’’ என்கிறார் மருத்துவர்.
EEG பரிசோதனை என்பது மூளையின் மின்சார அலைகளைப் பதிவு செய்யும் பரிசோதனை. ‘‘இதில் தலையில் சில மின்முனைகளை (electrodes) ஒட்டி, மூளையின் மின்சாரச் செயல்பாட்டை பதிவு செய்வார்கள். வலிப்பு வரும்போது அசாதாரண மின்னலைகள் தோன்றும். ஆனால், வலிப்பு வராத நேரத்திலும் இந்தப் பரிசோதனை செய்யப்படுவதால், இயல்பாக இருக்கலாம். தேவைப்பட்டால், 24 மணி நேர EEG பரிசோதனையும் செய்யலாம்’’ என்று விளக்குகிறார் டாக்டர் திவ்யா செல்வராஜ்.
Dr. திவ்யா செல்வராஜ் MD(Paediatrics), DM(Neurology) ரம்பியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் காவேரி மருத்துவமனை, சேலம்
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011