நவீன ரேடியாலஜியின் அற்புதங்கள் எக்ஸ்ரே முதல் AI வரை!

நவீன ரேடியாலஜியின் அற்புதங்கள் எக்ஸ்ரே முதல் AI வரை!
November 24 07:41 2025 Print This Article

மருத்துவத் துறையில் மிக வேகமாக வளர்ந்துவரும் பிரிவு ரேடியாலஜி. கடந்த பத்தாண்டுகளில் நடந்துள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நோய் கண்டறிதலை எளிமையாக்கியுள்ளன. காவேரி மருத்துவமனையின் ரேடியாலஜி சிறப்பு மருத்துவர் டாக்டர் எல். முரளிகிருஷ்ணா பகிரும் முக்கிய தகவல்கள்…

எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐஎப்போது எது தேவை

எக்ஸ்ரே என்பது ரேடியாலஜியின் அடிப்படைப் பரிசோதனை. எலும்புப் பிரச்னைகள் மற்றும் நெஞ்சுத் தொற்றுகளைக் கண்டறிய மிகவும் பயனுள்ளது. இதில் கதிர்வீச்சு மிகக் குறைவு.

அல்ட்ராசவுண்ட் முக்கியமாக வயிற்று உறுப்புகள் மற்றும் கர்ப்பகால ஸ்கேனுக்கு பயன்படுகிறது. தைராய்டு, தசைகள், தசைநார்கள் ஆகியவற்றையும் பரிசோதிக்கலாம். டாப்ளர் தொழில்நுட்பம் ரத்த நாளங்களை ஆய்வு செய்ய உதவுகிறது.

மேமோகிராஃபி மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறந்த கருவி.

40 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் 1-2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் உடலின் எந்தப் பகுதியையும் முப்பரிமாண வடிவில் ஸ்கேன் செய்யலாம். சிடி ஸ்கேனில் கதிர்வீச்சு உள்ளது. ஆனால், எம்ஆர்ஐ-ல் கதிர்வீச்சு இல்லை. உங்கள் அறிகுறிகளைப் பொறுத்து மருத்துவர் சரியான ஸ்கேனை பரிந்துரைப்பார்.

கதிர்வீச்சு பாதுகாப்பு – ALARA கொள்கை 

‘‘அனைத்து ரேடியாலஜி துறைகளும் ALARA –  As Low As Reasonably Achievable (முடிந்தவரை குறைந்த அளவு) என்கிற கொள்கையில் செயல்படுகின்றன’’ என்கிறார் டாக்டர் முரளிகிருஷ்ணா.

எக்ஸ்ரே மற்றும் மேமோகிராமில் மிகக் குறைந்த கதிர்வீச்சு உள்ளது. சிடி ஸ்கேனில் 250-350 எக்ஸ்ரேக்கு சமமான கதிர்வீச்சு உள்ளது. அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐயில் கதிர்வீச்சே இல்லை. நவீன டிஜிட்டல் இயந்திரங்கள் மற்றும் AI தொழில்நுட்பம் குறைந்த அளவு கதிர்வீச்சையே நோயாளிக்கு வழங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவின் பங்கு 

AI தொழில்நுட்பம் ரேடியாலஜியில் பல நிலைகளில் வேலை செய்கிறது – படம் எடுப்பதிலிருந்து ரிப்போர்ட் தயாரிப்பு வரை. ஸ்கேன் நேரத்தைக் குறைத்து, தெளிவான படங்களை அளித்து, சிடி கதிர்வீச்சை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைக்கிறது. அசாதாரண கட்டிகளைத் தானாக கண்டறிந்து, அவசரகால ரிப்போர்ட்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

முன்கூட்டியே கண்டறிதல் – 100% குணமாகும் வாய்ப்பு 

‘‘முதல் நிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோய்களில் பெரும்பாலானவை தற்போதைய தொழில்நுட்பத்தில் 100 சதவிகிதம் குணப்படுத்தக்கூடியவை. குடும்பப் பின்னணி உள்ளவர்கள் தொடர் பரிசோதனை செய்வது உயிர் காக்கும்’’ என்கிறார் டாக்டர்.

கோவிட்டுக்குப் பிறகு இளைஞர்களிடையே திடீர் மாரடைப்பு அதிகரித்துள்ளது. கால்சியம் ஸ்கோரிங் மற்றும் சிடி கொரோனரி ஆன்ஜியோகிராம் போன்ற வழக்கமான இதயப் பரிசோதனைகள் இத்தகைய பேரழிவுகளிலிருந்து காப்பாற்றும்.

கர்ப்பிணிகள், பேஸ்மேக்கர் மற்றும் சில உண்மைகள் 

கர்ப்பகாலத்தில் எக்ஸ்ரே தவிர்ப்பது நல்லது. ஆனால், அவசரத்தில் சரியான பாதுகாப்புடன் கை-கால் எக்ஸ்ரே எடுக்கலாம். அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானவை. புதிய பேஸ்மேக்கர்கள் எம்ஆர்ஐ செய்யத் தகுதியானவை. ஆனால், பழைய மாடல்கள் எம்ஆர்ஐயைத் தவிர்க்க வேண்டும்.

எதிர்கால ரேடியாலஜி 

அடுத்த பத்தாண்டுகளில் ரேடியாலஜி புரட்சிகர மாற்றங்களைக் காணும். AI உதவியுடன் முன்கூட்டியே நோய் கண்டறிதல், தனிப்பட்ட சிகிச்சை திட்டமிடல், குறைந்த கதிர்வீச்சில் தெளிவான படங்கள், மூலக்கூறு அளவிலான இமேஜிங் என பல புதுமைகள் வரவிருக்கின்றன!

நவீன டிஜிட்டல் இயந்திரங்கள் மற்றும் AI தொழில்நுட்பம் ஆகியவை குறைந்த அளவு கதிர்வீச்சையே நோயாளிக்கு வழங்குகின்றன!

 

Dr. எல். முரளிகிருஷ்ணா
MBBS, MD (Radiodiagnosis)
ரேடியாலஜி சிறப்பு மருத்துவர்
காவேரி மருத்துவமனை, சென்னைவடபழனி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011