ஆரோக்கிய குடும்பம் ஆனந்த வாழ்க்கை!

ஆரோக்கிய குடும்பம் ஆனந்த வாழ்க்கை!
May 23 05:52 2025 Print This Article

குடும்ப உறுப்பினர்களிடையே திறந்த தொடர்பு, ஒருவருக்கொருவர் ஆதரவு மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறை ஆகியவை ஆரோக்கியமான குடும்பத்தின் அடித்தளம். தடுப்பூசிகள், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் குடும்பமாகக் கடைப்பிடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகிறது

குடும்ப ஆரோக்கியம் – ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறை! 

குடும்ப ஆரோக்கியம் என்பது வெறும் நோய் இல்லாத நிலை மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் உடல், மனம் மற்றும் சமூக நலன்களின் ஒருங்கிணைந்த செயல்பாடாகும். குடும்பத்தில் உள்ள ஒவ்வோர் உறுப்பினரின் ஆரோக்கியமும் மற்ற உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது.

குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பின்வரும் அம்சங்கள் முக்கியமானவை…

தடுப்புப் பராமரிப்பின் முக்கியத்துவம் 

தடுப்புப் பராமரிப்பு என்பது நோய் வருவதற்கு முன்னரே அதைத் தடுப்பதாகும். இதில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தடுப்பூசிகள் மற்றும் வழக்கமான பரிசோதனைகள் அடங்கும்.

தடுப்பூசிகள்-நோய்த் தடுப்பின் முதல் வழி 

தடுப்பூசிகள் எல்லா வயதினருக்கும் மிகவும் முக்கியமானவை. பலருக்கு தடுப்பூசிகள் மீது பயம் இருக்கிறது, ‘இந்தத் தடுப்பூசி போடுவதால் ஏதேனும் பாதிப்பு வருமா?’ என்கிற சந்தேகம் இருக்கும். ஆனால், தடுப்பூசிகள் நம் உடலுக்கு முன்கூட்டியே நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.

குழந்தைகளுக்கு: சிக்கன்பாக்ஸ், தட்டம்மை, ரூபெல்லா, டிப்தீரியா போன்றவற்றுக்குத் தடுப்பூசிகள் போடுவது மிக அவசியம். இவை மூளைக் காய்ச்சலைத் தடுக்க உதவுகின்றன.

பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கு: நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கும் முதியவர்களுக்கும் நிமோனியா, சிங்கிள்ஸ், இன்ஃப்ளூயன்ஸா போன்ற தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளவை. இவை நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அதன் தீவிரத்தைக் குறைக்க உதவுகின்றன.

ஆரம்ப அறிதலின் முக்கியத்துவம் 

குடும்ப ஆரோக்கியத்தில் வழக்கமான பரிசோதனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறைகளில், உடல் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியம்.

அடிப்படைப் பரிசோதனைகள்: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு, கொலஸ்ட்ரால் அளவுகளை பரிசோதிக்க வேண்டும்.

40 வயதுக்கு மேல்: எக்கோ, த்ரெட்மில் போன்ற பரிசோதனைகள் இதயத்தின் செயல்திறனை மதிப்பிட உதவுகின்றன.

பெண்களுக்கு: கர்ப்பப்பை, கருமுட்டை மற்றும் மார்பக ஆரோக்கியத்துக்கான சிறப்புப் பரிசோதனைகளை வழக்கமாக மேற்கொள்ள வேண்டும்.

கண் மற்றும் காது பரிசோதனை: அனைத்து வயதினருக்கும் வருடத்துக்கு ஒருமுறை பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த டிஜிட்டல் யுகத்தில் மிகவும் அவசியம்.

முதியவர்களை பாதுகாப்பாக பராமரிக்க… 

வீடு அமைப்பில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – வழுக்காத தரைகள், பாத்ரூமில் பிடிப்பதற்கான கைப்பிடிகள், நல்ல வெளிச்சம், தடுப்பூசிகள் மற்றும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் கண் மற்றும் காது ஆரோக்கியத்தைக் கவனித்தல்

சமூக தொடர்புகளை ஊக்குவித்தல் 

குடும்ப ஆரோக்கியத்தில் தகவல் தொடர்பின் பங்கு குடும்ப உறுப்பினர்களிடையே திறந்த தகவல் தொடர்பு ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். உடல் மற்றும் மன ஆரோக்கியப் பிரச்னைகளை பற்றி வெளிப்படையாகப் பேசும் குடும்பங்களில், பிரச்னைகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றன.

‘நமக்கு இருக்கும் கஷ்டம் நம் குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது’, ‘நமக்கு இருக்கிற பிரச்னையை அம்மா அப்பாவுக்கு சொல்லி எதுக்கு கஷ்டப்படுத்தணும்?’ என்பது போன்ற மனநிலை தவிர்க்கப்பட வேண்டும்.

மனநல அறிகுறிகளை அடையாளம் காணுதல் 

குடும்ப உறுப்பினர்களின் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். தற்போதைய காலகட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தம் இருக்கலாம்.

பின்வரும் சில அறிகுறிகள் அவசியம் கவனிக்கப்பட வேண்டியவை:

  • பழக்கவழக்கங்களில் திடீர் மாற்றங்கள்
  • சமூக விலகல் அல்லது தனிமைப்படுத்திக்கொள்ளுதல்
  • தூக்கம் அல்லது உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள்
  • செயல்திறன் குறைதல் அல்லது ஆர்வமின்மை
  • அதிகப்படியான பதற்றம் அல்லது சோகம்

குழந்தைகள் மனநலம் 

குழந்தைகளுக்கு படிப்பு, தேர்வுகள், போட்டிகள்  போன்றவை பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. ‘நீதான் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும்’ என்று அழுத்தம் கொடுப்பதை விட, ‘தினமும் உன்னால் முடிந்த அளவுக்கு படிடா கண்ணா’ என்று ஊக்குவிப்பது நல்லது. வேலையில் ஏற்பட்ட கோபத்தைக் குழந்தைகளிடம் காட்டுவதையும், கணவன்-மனைவிக்கிடையேயான சண்டைகளையும் தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய வலைப்பதிவு: ஆரோக்கியத்தை உறுதி செய்வோம்!

முதியவர்கள் மனநலம் 

முதியவர்கள் தங்களைச் சுமையாக உணரலாம்… ‘நாம் மற்றவரைச் சார்ந்து இருக்கிறோமே, மற்றவர்களுக்கு இவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கிறோமே’ என்கிற எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம். ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், உங்களுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்கிற தன்னம்பிக்கையை அவர்களுக்கு அளிப்பது மிக முக்கியம்.

மறதி நோயும் பராமரிப்பும் 

சில முதியவர்களுக்கு மறதி நோய், அல்சைமர், பார்கின்சன்ஸ் அல்லது பக்கவாதம் போன்ற நோய்கள் இருக்கலாம். இது குடும்பத்தினருக்கு சவாலாக இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான கவனிப்பை வழங்க வேண்டும். தேவைப்பட்டால் நர்ஸ் உதவி அல்லது பராமரிப்பு மையங்களைப் பயன்படுத்தலாம்.

ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் 

  1. ஒழுங்கான வாழ்க்கை முறை

  • நேரத்தோடு உறங்கச் செல்லுதல் மற்றும் எழுதல்
  • சீரான உணவு நேரங்கள்
  • சரியான ஊட்டச்சத்து உள்ள ஆரோக்கியமான உணவுகள்
  • குடும்பமாக உடற்பயிற்சி செய்தல்
  1. ஆரோக்கியமான தகவல் தொடர்பு

  • குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக வழக்கமாகக் கூடும் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல்
  • அனைவரும் தங்கள் கருத்துகளைப் பகிர ஊக்குவித்தல்
  • குழந்தைகளின் கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளித்தல்
  • உணர்வுகளைப் பற்றி வெளிப்படையாக பேசுதல்
  1. டிஜிட்டல் பயன்பாட்டை சமநிலைப்படுத்துதல்

  • தொலைபேசி தொடர்பில் இருக்க உதவுகிறது… அதே நேரம் தொடர்பைத் துண்டிக்கவும் செய்கிறது.
  • குடும்ப நேரத்தின் போது டிஜிட்டல் சாதனங்களைக் குறைத்தல்
  • குழந்தைகளின் திரை நேரத்தைக் கண்காணித்தல்
  • நேரடி உரையாடல்களுக்கு முன்னுரிமை அளித்தல்
  1. பெற்றோரே ரோல்மாடல்

  • குழந்தைகள் பெற்றோரின் நடத்தையையே பின்பற்றுகிறார்கள்
  • பெற்றோர்களின் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குழந்தைகளிடையே தாக்கம் செலுத்துகின்றன
  • கண்டிப்பு, அன்பு – இரண்டையும் சமநிலையில் வைத்திருத்தல்
  • நட்பு, வழிகாட்டுதல் – இரண்டையும் வழங்குதல்
  1. முதியோர் பராமரிப்பு

  • முதியவர்களின் மருத்துவத் தேவைகளை கவனித்தல்
  • வீட்டுப் பாதுகாப்பு (வழுக்காத தரைகள், பாத்ரூம் கைப்பிடிகள்)

சர்வதேச குடும்ப தினத்துக்கான சிறப்பு செய்தி

ஆரோக்கியமான குடும்பம் என்பது வெறும் நோய் இல்லாத நிலை மட்டுமல்ல. அது அன்பு, புரிதல், மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் நிறைந்த சூழல். குடும்பம் என்பது ஒரு தனிநபரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வடிவமைக்கும் முதல் மற்றும் மிக முக்கியமான சூழலாகும்.

குடும்பங்கள் தினத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவழிக்க உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் கேட்கவும், கவனிக்கவும், ஆதரிக்கவும் நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளையும் முதியவர்களையும் சமமாக மதித்து, அவர்களின் தேவைகளை அறிய முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியமான தனிநபர்கள் ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்குகிறார்கள், ஆரோக்கியமான குடும்பங்கள் ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குகின்றன. ஆரோக்கியமான குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கான முயற்சிகளை இன்றே தொடங்குவோம்!

 

குடும்பங்களை அதிக அளவு பாதிக்கும் ஆரோக்கிய சவால்கள் வாழ்க்கைமுறை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் வயதானவர்களின் ஆரோக்கியப் பிரச்னைகளே!இன்றைய காலத்தில் முதியவர்கள் 90 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னைகள் போன்ற நீண்டகால நோய்களுடன் வாழ்கின்றனர்.

 

வரலாறு ஏன் முக்கியம்?

குடும்ப சுகாதார வரலாறு பல நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க உதவுகிறது. பல நோய்கள் பரம்பரை ரீதியாக வரக்கூடியவை. ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், தைராய்டு பிரச்னைகள், ஆஸ்துமா போன்றவை குடும்பத்தில் மரபணு வழியாக வரலாம்.

உதாரணம்: 40 வயதில் இதயப் பிரச்னைகள் உள்ள குடும்பத்தில், முன்னதாகவே ‘பயப்பட வேண்டாம், ஏற்கனவே உங்க தாத்தாவுக்கு இந்தப் பிரச்னை இருந்தது’ என்று குடும்ப மருத்துவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதைத் தடுப்பதற்கான வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம்.

சிலருக்கு பிறவியிலேயே இதய வால்வு சுருக்கம், கார்டியோ மயோபதி போன்ற நிலைகள் இருக்கலாம். இந்த மாதிரி குடும்பங்களில், இளம் வயதிலேயே ECG, எக்கோ, த்ரெட்மில் போன்ற பரிசோதனைகள் செய்து, தேவைப்பட்டால் முன்கூட்டியே சிகிச்சை அளிப்பது அவசியம்.

 

குடும்ப ஆரோக்கியத்துக்கான 10 எளிய வழிகள் 

வழக்கமான குடும்ப உணவு நேரங்கள்

திரை சாதனங்கள் இல்லாமல் ஒன்றாக அமர்ந்து   உணவருந்துங்கள். இது உரையாடலுக்கும் உறவுகளை வலுப்படுத்தவும் உதவும்.

வாராந்திரக் குடும்பச் செயல்பாடுகள்

நடைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், பூங்கா பயணங்கள் போன்ற உடல் ரீதியான செயல்பாடுகளைத் திட்டமிடுங்கள்.

குடும்ப ஆரோக்கிய வரலாறு

உங்கள் குடும்பத்தில் பரம்பரையாக வரும் நோய்களை அறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும்.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள்

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படைப் பரிசோதனைகள் செய்யுங்கள்.

ஆரோக்கியமான உணவு பழக்கங்கள்

வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை முன்னுரிமைப்படுத்துங்கள், வெளியில் சாப்பிடுவதையும் டோர் டெலிவரி உணவுகளையும் குறைக்கவும்.

ஒழுங்கான தூக்க அட்டவணை

நேரத்துக்கு உறங்கச் செல்லுதல் மற்றும் எழுதல். இது சர்க்காடியன் ரிதம் (உடலின் இயற்கையான கடிகாரம்) சரியாகச் செயல்பட உதவும்.

டிஜிட்டல் டிடாக்ஸ்

குடும்ப நேரத்தின்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் ஒதுக்கி வைக்க குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள், ‘இந்த நேரத்துக்கு மேல் தொலைபேசியை எடுக்க கூடாது’ போன்ற விதிகளை உருவாக்குங்கள்.

வெளிப்படையான தகவல் தொடர்பு

உடல் மற்றும் மன ஆரோக்கிய சிக்கல்கள் குறித்து வெளிப்படையாக பேசுங்கள், ‘நமக்கு இருக்கும் கஷ்டம் மற்றவர்களுக்கு தெரியக் கூடாது’ என்கிற மனநிலையைத் தவிர்க்கவும்.

முதியோர் பராமரிப்பு

முதியவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகள், பாதுகாப்பான வீட்டுச் சூழல், காது-கண் பரிசோதனைகள் போன்றவற்றை உறுதி செய்யுங்கள்.

பரஸ்பர மரியாதை

ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் சூழ்நிலை, மனநிலை மற்றும் எண்ணங்களை புரிந்துகொண்டு நடக்கவும்.

Dr. கவிதா சுந்தரவதனம்
குடும்ப மருத்துவர்,
காவேரி மருத்துவமனை – சென்னை, ஆழ்வார்பேட்டை

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

குடும்ப ஆரோக்கியம் என்றால் என்ன?

குடும்ப ஆரோக்கியம் என்பது ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் உடல், மன மற்றும் சமூக நலன்களின் சமநிலை மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பாகும். இது நோய் இல்லாத நிலையை மட்டும் குறிக்கவில்லை.

குடும்ப ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன வழிகள் உள்ளன?

தடுப்பூசிகள், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், நேர்மையான தொடர்பு மற்றும் உடற்பயிற்சி போன்றவை குடும்ப ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.

குழந்தைகளுக்கான முக்கிய தடுப்பூசிகள் யாவை?

பிசிடி, பி.சி.ஜி, ஹெபடைட்டிடிஸ் பி, ரூபெல்லா, தட்டம்மை, சிக்கன்பாக்ஸ் போன்றவை முக்கியமானவை. குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனைப்படி தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்.

முதியவர்கள் மனநலத்தை எவ்வாறு கவனிப்பது?

அவர்களுக்கு சுமை உணர்வை ஏற்படுத்தாதவாறு ஆதரவு தருவது, அவர்களிடம் உரையாடுவது, சமூகத் தொடர்புகளை ஊக்குவிப்பது முக்கியம். மறதி நோய் போன்ற சிக்கல்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

குடும்பத்தில் மனநலம் பாதிப்பை எப்படி அடையாளம் காணலாம்?

தூக்க விகிதம் மாற்றம், உணவு பழக்கங்களில் மாற்றம், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், மன அழுத்தம் போன்றவை முக்கிய அறிகுறிகள்.

குடும்ப ஆரோக்கியத்தில் பெற்றோர்களின் பாதிப்பு என்ன?

பெற்றோர் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதால், அவர்கள் நடத்தையும் ஆரோக்கிய பழக்கங்களும் குடும்பத்தின் ஒட்டுமொத்த நலனில் தாக்கம் செலுத்தும்.

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801