பிஞ்சு இதயம்… பெரிய நம்பிக்கை!

பிஞ்சு இதயம்… பெரிய நம்பிக்கை!
September 15 07:56 2026 Print This Article

ஆயிரம் குழந்தைகளில் சுமார் 8 முதல் 10 பேர் ஏதேனும் ஒரு பிறவி இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். ஆனால், இன்றைய மருத்துவத்தில் இது உயிருக்கு ஆபத்தான நிலை அல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால், பெரும்பாலான குழந்தைகள் மற்றக் குழந்தைகளைப் போலவே இயல்பாக வளர, படிக்க, விளையாட முடியும்.

உங்கள் குழந்தைக்கு இதயத்தில் ஒரு குறைபாடு இருக்கிறது’ என்ற வார்த்தை எந்தப் பெற்றோரையும் உலுக்கிவிடும். ஆனால், அது ஒரு முடிவல்ல; கடந்துவிடக்கூடிய ஒரு தற்காலிகத் தடை மட்டுமே. உலக இதய தினத்தை முன்னிட்டு, பிறவி இதயக் குறைபாடு குறித்து ஒரு பார்வை இதோ…

பிறவி இதயக் குறைபாடு என்றால் என்ன? எவ்வளவு பொதுவானது? 

தாயின் வயிற்றில் கரு வளரும்போது, இதயத்தின் சுவர்கள், வால்வுகள், ரத்தக் குழாய்கள் ஆகியவை முழுமையாக, சரியான வடிவில் உருவாகாமல் போவதுதான் பிறவி இதயக் குறைபாடு (Congenital Heart Disease). இதனால், உடலில் ரத்தம் இயல்பாகப் பாய்வது பாதிக்கப்படுகிறது. ஆயிரம் குழந்தைகளில் சுமார் 8 முதல் 10 பேர், அதாவது தோராயமாக ஒரு சதவிகிதம் குழந்தைகள், ஏதேனும் ஒரு வகை இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். எனவே, இது ஒரு பரவலான குழந்தை நல பிரச்னை.

குழந்தை பிறக்கும் முன்பே இதயத்தில் ஏன் குறைபாடு உருவாகிறது?

பரம்பரையும் சூழலும் இணைந்து இதற்குக் காரணமாக அமைகின்றன. பெற்றோர், தாத்தா பாட்டி அல்லது உடன்பிறந்தோரிடம் இதய நோய் வரலாறு இருந்தால் அபாயம் அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் வைரஸ் தொற்றுகள், குறிப்பாக, ரூபெல்லா (Rubella) எனப்படும் ஜெர்மன் தட்டம்மை ஒரு முக்கியக் காரணம். கர்ப்ப காலத்தில் மது அருந்துதல், புகைபிடித்தல், தாய்க்கு நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் இருத்தல், ஃபோலிக் அமிலம் (Folic Acid) குறைபாடு, மாசுபட்ட நீர், சுகாதாரமற்ற உணவு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவையும் காரணிகளாக இருக்கின்றன.

இந்த அபாயத்தைக் குறைக்க, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே ரூபெல்லாவுக்கு எதிரான தடுப்பூசி பெறுவது, கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் தவறாமல் எடுத்துக்கொள்வது, மது மற்றும் புகையிலையைத் தவிர்ப்பது, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, சுகாதாரமான உணவு மற்றும் முறையான கர்ப்பகால மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவை உதவும்.

எந்த அறிகுறிகளை வைத்து பெற்றோர் இதைச் சந்தேகிக்கலாம்? 

இதயக் குறைபாடுகள் பொதுவாக இரு வகைப்படும். முதலாவது, நீலநிற (Cyanotic) குறைபாடு. இதில் நுரையீரலுக்குப் போதிய ரத்தம் செல்லாததால், உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது; இதனால் குழந்தையின் உதடுகள், நகங்கள், தோல், கண்கள் நீல நிறமாக மாறும். ‘நீலக் குழந்தை’ என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் இந்த நிலைக்கு டெட்ராலஜி ஆஃப் ஃபாலோ (Tetralogy of Fallot), பெருநாளங்களின் இடமாற்றம் (Transposition of the Great Arteries) போன்றவை உதாரணங்கள்.

இரண்டாவது, நீலமில்லா (Acyanotic) குறைபாடு. இதில் நுரையீரலுக்கு அளவுக்கு அதிகமாக ரத்தம் செல்கிறது. இங்கு அறிகுறிகள் நுட்பமானவை: குழந்தை பால் குடிக்கும்போது, சிறிது நேரத்தில் நிறுத்தி, விரைவாக மூச்சு வாங்கி, மீண்டும் தொடங்கும்; தொடர்ந்து விரைவான, சிரமமான மூச்சு; வயதுக்கு ஏற்ப எடை கூடாமல் தேங்கி நிற்றல் ஆகியவை தென்படும். ஏட்ரியல் செப்டல் டிஃபெக்ட் (Atrial Septal Defect), வென்ட்ரிகுலர் செப்டல் டிஃபெக்ட் (Ventricular Septal Defect), பேட்டன்ட் டக்டஸ் ஆர்டீரியோசஸ் (Patent Ductus Arteriosus) இதற்கு உதாரணங்கள். விரைவான மூச்சுக்கும் இதயத்துக்கும் தொடர்பு இருக்கும் என்று பலர் நினைப்பதில்லை; அதனால்தான் இந்த அறிகுறிகள் அடிக்கடி கவனிக்கப்படாமல் போகின்றன. பால் குடிக்கும்போது மூச்சு வாங்க அடிக்கடி நிறுத்தும் குழந்தையின் நுரையீரலில் அதிக ரத்தம் தேங்கியிருக்கலாம்.

இதை எப்படிக் கண்டறிகிறீர்கள்? கருவில் இருக்கும்போதே தெரியுமா? 

குழந்தைகள் மருத்துவரின் சந்தேகத்திலிருந்து தொடங்கி, இதயம் சார்ந்த சிறப்புப் பரிசோதனையை நோக்கி நகர்கிறது இதற்கான கண்டறிதல். இதயம் பெரும்பாலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களிலேயே உருவாகிவிடுகிறது. கருவில் இருக்கும்போதே, கர்ப்ப காலத்தில் ஃபீட்டல் எக்கோகார்டியோகிராஃபி (Fetal Echocardiography) எனப்படும் இதய ஸ்கேன் மூலம், இதயத்தில் உள்ள ஓட்டைகள், வால்வுக் கோளாறுகள், ரத்தக் குழாய்களின் இடப்பிறழ்வுகளைக் கண்டறிய முடியும். இதுவே முதன்மையான பரிசோதனை. இதயத்தின் அளவையும், நுரையீரலுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகமா குறைவா என்பதையும் மார்பு எக்ஸ்ரே (Chest X-Ray) காட்டும். இதயத் துடிப்பில் உள்ள மாற்றங்களை ஈசிஜி (ECG) அறியும். எக்கோ முடிவுகள் தெளிவில்லாதபோது, ரத்தக் குழாய்களின் விவரங்களை சிடி ஸ்கேன் (CT Scan) துல்லியமாகக் காட்டும்.

அறுவை சிகிச்சைதான் ஒரே வழியா? இன்றைய முறைகள் பாதுகாப்பானவையா? 

இதயக் குறைபாடு என்றாலே அறுவை சிகிச்சை என்று அர்த்தமல்ல. முடிந்தவரை குறைந்த சிரமமான வழியையே நாங்கள் முதலில் தேர்ந்தெடுக்கிறோம். சுமார் 2 முதல் 3 மி.மீ. அளவிலான சிறிய ஓட்டைகள், மருந்து மற்றும் கண்காணிப்புடன், முதல் சில ஆண்டுகளில் தானாகவே அடைந்துவிடக்கூடும். சுமார் 5 முதல் 6 மி.மீ. அளவிலான ஓட்டைகளுக்கு, மார்பைத் திறக்காமல், காலில் அல்லது கையில் செலுத்தப்படும் ஒரு கத்தீட்டர் (Catheter) வழியாக ஒரு சிறிய கருவியைப் பொருத்தி ஓட்டையை அடைக்கலாம். பெரிய ஓட்டைகள் அல்லது சிக்கலான குறைபாடுகளுக்கு மட்டுமே திறந்த இதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இன்றைய நவீன முறைகளில், மார்பெலும்பைத் திறக்காமல், மார்பின் பக்கவாட்டில் சுமார் 4 முதல் 5 செ.மீ. அளவிலான சிறு கீறல் மூலமே சிகிச்சை செய்ய முடியும்.

தொழில்நுட்ப முன்னேற்றங்களாலும், குழந்தைகளுக்கான மயக்க மருத்துவத்தில் ஏற்பட்ட வளர்ச்சியாலும், இன்று குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது. பல பொதுவான குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகளில் வெற்றி விகிதம் 95 சதவிகிதத்துக்கும் அதிகம். வெற்றி வாய்ப்பு, குறைபாட்டின் தன்மையையும் சிக்கலையும் பொறுத்து மாறுபடும்.

‘சின்ன வயசுல அறுவை சிகிச்சையா?’ என்கிற பயம் 

குழந்தை இன்னும் ‘பெரிதாகட்டும், பலம் வரட்டும்’ என்று சிகிச்சையைத் தள்ளிப்போடும் பெற்றோர் உண்டு. இது ஆபத்தான தவறான எண்ணம். சிகிச்சையைத் தாமதப்படுத்துவது பல நேரம் அறுவை சிகிச்சையைவிட அதிக அபாயம். தாமதத்தால், நுரையீரல் ரத்தக் குழாய்களில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தும் நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் (Pulmonary Hypertension), வளர்ச்சிக் குன்றல், நிமோனியா போன்ற அடிக்கடி ஏற்படும் தொற்றுகள் உண்டாகலாம். சில குறைபாடுகளுக்கோ, பிறந்த சில மணி நேரங்களிலேயே சிகிச்சை தேவைப்படும். பெரும்பாலான நேரங்களில், நோயின் அபாயம் சிகிச்சையின் அபாயத்தைவிட அதிகம்.

சிகிச்சைக்குப் பிறகு குழந்தை இயல்பாக வளருமா? 

சிகிச்சையின் இறுதி நோக்கமே, குழந்தை மற்ற குழந்தைகளைப் போலவே எந்தத் தடையும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான். பெரும்பாலான குழந்தைகள் படிக்கவும், விளையாடவும், சுறுசுறுப்பாக இருக்கவும் முடியும். தொடர் கண்காணிப்பின் தேவை, குறைபாட்டின் தன்மையைப் பொறுத்தது. ஏட்ரியல் அல்லது வென்ட்ரிகுலர் செப்டல் டிஃபெக்ட் போன்ற எளிய குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெற்ற குழந்தைகள் பொதுவாக இயல்பாக வளர்கிறார்கள்; சுமார் 5 முதல் 10 ஆண்டுகள் கண்காணிப்பு போதும், அனைத்தும் இயல்பாக இருந்தால் தொடர் சிகிச்சை தேவைப்படாமல் போகலாம். ஆனால், டெட்ராலஜி ஆஃப் ஃபாலோ, பெருநாளங்களின் இடமாற்றம் போன்ற சிக்கலான குறைபாடுகளுக்கு, வயது கூடும்போது வால்வு செயல்பாடு அல்லது இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படலாம் என்பதால், ஆண்டுதோறும் வாழ்நாள் முழுவதும் ஈசிஜி, எக்ஸ்ரே, எக்கோ போன்ற பரிசோதனைகள் தேவை.

பெற்றோருக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி? 

பிறவி இதயக் குறைபாடு ஒரு முட்டுச்சந்து அல்ல; அது கடந்துவிடக்கூடிய ஒரு தற்காலிகத் தடை மட்டுமே. நவீன அறிவியலும் சரியான நேரத்தில் மேற்கொள்ளும் சிகிச்சையும் இருக்கும்போது, பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமான, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். பயத்தில் இருந்து விலகி, ஆதாரப்பூர்வமான சிகிச்சையை நோக்கி நகர்வதே, உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரும் மிகப் பெரிய பரிசு. உங்கள் குழந்தையின் நிலைக்கு ஏற்ற சரியான சிகிச்சையைத் தீர்மானிக்க, ஒரு குழந்தைகள் இதய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

 

தெரிந்துகொள்வோம்

இன்று பல இதயக் குறைபாடுகளை, மார்பையே திறக்காமல், காலில் அல்லது கையில் செலுத்தப்படும் ஒரு சிறிய கருவி மூலமே அடைக்க முடியும். தேவைப்படும் அரிதான சூழல்களில், குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே கூட, பாதுகாப்பாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு இன்றைய மருத்துவம் வளர்ந்துள்ளது.

 

Dr. ஜாவித் ராஜா, MBBS, MS, M.Ch (Cardiothoracic & Vascular), FPCS
குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனை – திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011