PCOS உள்ள பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயம் 4 மடங்கு அதிகம். கர்ப்ப கால நீரிழிவு 80-90% பேருக்குப் பிரசவத்துக்குப் பின் சரியாகும். ஆனால், 7 மடங்கு அதிக நீரிழிவு ஆபத்து உள்ளது. மெனோபாஸில் 40% பெண்கள் ப்ரீடயாபெடிக் பெரும்பாலோருக்குத் தெரியவே இல்லை!
30 வயதான அந்தப் பெண்ணுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு, முகத்தில் அதிக முடி வளர்ச்சி. மருத்துவரிடம் சென்றபோது PCOS என்று கண்டறியப்பட்டது. இதை ‘பெண்களின் வழக்கமான பிரச்னை’ என்று நினைத்து அலட்சியம் செய்தார். உண்மையில், இது எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வருவதற்கான முதல் எச்சரிக்கை மணி!
பெண்கள் தங்கள் வாழ்நாளில் மூன்று முக்கியமான ஹார்மோன் மாற்றங்களைச் சந்திக்கிறார்கள் இனப்பெருக்க ஆண்டுகளில் PCOS, கர்ப்ப காலத்தில் கர்ப்ப கால நீரிழிவு, மெனோபாஸில் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு. இந்த மூன்று நிலைகளிலும் உடலின் சர்க்கரைக் கட்டுப்பாட்டு அமைப்பு பெரும் சவாலைச் சந்திக்கிறது.
Polycystic Ovary Syndrome (PCOS) என்பது வெறும் கருப்பை பிரச்னை அல்ல – இது ஒரு வளர்சிதைமாற்றக் கோளாறு. PCOS உள்ள பெண்களில் 50 முதல் 80 சதவிகிதம் பேருக்கு இன்சுலின் எதிர்ப்பு (insulin resistance) இருக்கிறது. இதன் பொருள்: உடல் செல்கள் இன்சுலினுக்குச் சரியாகப் பதிலளிப்பதில்லை.
இதன் விளைவாக என்ன நடக்கிறது? கணையம் அதிகப்படியான இன்சுலினை உற்பத்தி செய்கிறது (hyperinsulinemia). இந்த அதிகப்படியான இன்சுலின் கருப்பையில் ஆண்ட்ரோஜன் என்கிற ஆண் ஹார்மோன்களை அதிகமாகச் சுரக்கச் செய்கிறது. இதனால் முகத்தில் அதிக முடி, முகப்பரு, வயிற்றில் கொழுப்பு குவிதல் போன்ற பிரச்னைகள். மிக முக்கியமாக – இது டைப் 2 நீரிழிவுக்கான வாசலைத் திறந்துவிடுகிறது.
அதிர்ச்சி புள்ளிவிவரம்: PCOS உள்ள பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயம் மற்ற பெண்களைவிட 4 மடங்கு அதிகம். இன்னும் அதிர்ச்சி தரும் உண்மை – 50 சதவிகிதத்துக்கும் அதிகமான PCOS பெண்கள் 40 வயதுக்குள் நீரிழிவு நோயை உருவாக்குகிறார்கள். உடல் பருமன் இருந்தால், இந்த ஆபத்து 8 மடங்கு அதிகரிக்கிறது!
35 வயது பிரியாவுக்கு கர்ப்பத்தின் 6வது மாதத்தில் gestational diabetes (GDM) கண்டறியப்பட்டது. குழந்தைப் பிறந்த சில நாட்களில் அவரது சர்க்கரை சாதாரண நிலைக்கு வந்தது. ‘எல்லாம் சரியாகிவிட்டது’ என்று நினைத்து, மருத்துவர் சொன்ன 6 வாரங்களுக்குப் பிறகு பரிசோதனைக்குப் போகவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு முழுமையான டைப் 2 நீரிழிவு உருவாகியிருந்தது. உலகளவில் 14 சதவிகிதம் கர்ப்பிணிகளை பாதிக்கும் GDM, கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களில் வெளிப்படுகிறது. தாய் நஞ்சு (placenta) சுரக்கும் ஹார்மோன்கள் – placental lactogen, progesterone, cortisol – இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகின்றன. இது குழந்தைக்குப் போதுமான குளுக்கோஸ் கிடைப்பதற்கான இயற்கையான பாதுகாப்பு வழிமுறை. ஆனால், 80 சதவிகிதம் GDM பெண்களுக்கு கர்ப்பத்துக்கு முன்பே நாள்பட்ட இன்சுலின் எதிர்ப்பு இருந்திருக்கிறது – கர்ப்பம் இதை வெளிக்கொணர்கிறது.
80 முதல் 90 சதவிகிதம் பெண்களுக்குப் பிரசவத்துக்கு 24 முதல் 72 மணி நேரத்துக்குள் சர்க்கரை சாதாரண நிலைக்கு வருகிறது.
ஆனால்… மறைந்திருக்கும் ஆபத்து; GDM இருந்த பெண்களுக்கு எதிர்காலத்தில் டைப் 2 நீரிழிவு வருவதற்கான அபாயம் 7 மடங்கு அதிகம்.
9 ஆண்டுகளில் 18.9 சதவிகிதம் பேருக்கு இது நீரிழிவை உருவாகிறது (GDM இல்லாதவர்களில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே). மேலும் அபாயம்… GDM தாயின் குழந்தைக்கும் எதிர்காலத்தில் நீரிழிவு வருவதற்கான அபாயம் 5 மடங்கு அதிகம்!
கவலைக்குரிய உண்மை: மருத்துவ வழிகாட்டுதல்கள் பிரசவத்துக்கு 4 முதல் 12 வாரங்களுக்குப் பிறகு glucose tolerance test செய்யப் பரிந்துரைக்கின்றன. ஆனால், வெறும் 36 சதவிகிதம் பெண்கள் மட்டுமே இந்த முக்கியமான பரிசோதனையை மேற்கொள்கிறார்கள் 64 சதவிகிதம் பெண்கள் தங்கள் ஆபத்தை அறியாமலேயே இருக்கிறார்கள்!
48 வயது மீனாவுக்கு மெனோபாஸ் அறிகுறிகள் தொடங்கியபோது, அவர் சோர்வு, தூக்கமின்மை, எடை அதிகரிப்பு எல்லாவற்றையும் ‘வயதாவதன் அறிகுறிகள்’ என்று நினைத்தார். ஆனால், வழக்கமான பரிசோதனையில், அவரது HbA1c 6.2 – ப்ரீடயாபெடிக் நிலை. அவர் அதிர்ச்சியடைந்தார். ‘எனக்கு நீரிழிவு குடும்ப வரலாறு இல்லையே…’ என்று.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குளுக்கோஸ் கட்டுப்பாட்டில் முக்கியப் பாதுகாப்புப் பங்கு வகிக்கிறது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இனப்பெருக்க வயதில் ஈஸ்ட்ரோஜன் அளவு 50 முதல் 400 pg/mL இருக்கும். மெனோபாஸுக்குப் பிறகு இது 30 pg/mL-க்கும் கீழே விழுகிறது. இந்த வீழ்ச்சியுடன், இன்சுலின் உணர்திறனும் கடுமையாகக் குறைகிறது.
மெனோபாஸுடன் வரும் பிற மாற்றங்கள்: வயிற்றுப் பகுதியில் visceral fat (ஆழமான கொழுப்பு) குவிவு – இதய ஆபத்துக்கு வழி வகுக்கும். இரவு வியர்வையால் தூக்கக் குறைவு – இது கார்டிசோல் அதிகரிப்பை ஏற்படுத்தி ரத்த சர்க்கரையை உயர்த்துகிறது. மனநிலை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் – இவையும் சர்க்கரைக் கட்டுப்பாட்டை மோசமாக்குகின்றன.
அதிர்ச்சி புள்ளிவிவரம்: கிட்டத்தட்ட 40 சதவிகிதம் மெனோபாஸ் பெண்கள் ப்ரீடயாபெடிக் நிலையில் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலோருக்கு இது தெரியவே இல்லை! 40 வயதுக்கு முன்பே மெனோபாஸ் வந்தவர்களுக்கு நீரிழிவு ஆபத்து இன்னும் அதிகம்.
PCOS அறிகுறிகள் (இனப்பெருக்க ஆண்டுகள்):
அனைத்துக் கர்ப்பிணிகளுக்கும் 24 முதல் 28 வாரங்களில் கட்டாய GDM screening. அதிக ஆபத்து உள்ளவர்கள் (உடல் பருமன், நீரிழிவு குடும்ப வரலாறு, PCOS, முந்தைய GDM) முதல் மும்மாதங்களிலேயே பரிசோதனை செய்ய வேண்டும்.
முக்கியம்: மெனோபாஸ் அறிகுறிகளும் ஆரம்ப கட்ட நீரிழிவு அறிகுறிகளும் ஒன்றுபோல இருப்பதால், 40 வயதுக்கு மேல் அனைத்துப் பெண்களும் baseline fasting glucose, HbA1c பரிசோதனை செய்ய வேண்டும். சாதாரணமாக இருந்தால், 1 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் திரும்பவும் பரிசோதனை அவசியம்.
எடை மேலாண்மை: உடல் பருமன் இருந்தால் 5 முதல் 10 சதவிகித எடை குறைப்பே இன்சுலின் மற்றும் ஆண்ட்ரோஜன் அளவுகளை கணிசமாகக் குறைக்கும்.
உணவு முறை
உடற்பயிற்சி
உறக்கம்
தாய்ப்பால் கொடுத்தல்: இது தாயின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதுடன், குழந்தையின் குளுக்கோஸ் வளர்சிதைமாற்றம் மற்றும் பருமன் ஆபத்தையும் குறைக்கிறது.
• PCOS அறிகுறிகள் இருந்தால் உடனடியாகவே பரிசோதனை செய்யுங்கள் • கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களில் GDM screening கட்டாயம் • GDM இருந்தால், பிரசவத்துக்கு 4 முதல் 12 வாரங்களுக்குப் பிறகு GTT கட்டாயம் • 40 வயதுக்கு மேல் baseline glucose testing செய்யுங்கள் • 5 முதல் 10 சதவிகித எடை குறைப்பு = 25 சதவிகித ஆபத்துக் குறைப்பு • வாரம் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி + ஆரோக்கியமான உணவு • 7 முதல் 9 மணி நேரம் உறக்கம் அவசியம்
Dr. ரமீஸ் ராஜா பி, MBBS, MD, DNB (General Medicine), DM, DrNB (Endcrinlgy) நாளமில்லா சுரப்பி சிகிச்சை நிபுணர் காவேரி மருத்துவமனை, சென்னை (ரேடியல் ரோடு)
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011