‘ஆக்ஸிடென்ட்ல தலையில அடிபட்டுச்சு… ஆனா உடனே எழுந்து நடந்தாரு, ஒண்ணும் இல்லைன்னு நினைச்சோம்… ரெண்டு மணி நேரம் கழிச்சு திடீர்னு மயங்கி விழுந்தாரு…’ – இந்தியாவில் பல குடும்பங்கள் கேட்டிருக்கும், அனுபவித்திருக்கும் கதை இது. தலைக் காயம் என்பது வெளிப்படையாகத் தெரியும் காயம் மட்டுமல்ல… உள்ளே மறைந்திருக்கும் ரத்தக்கசிவு, மூளை வீக்கம் போன்றவை உயிருக்கே ஆபத்தாக மாறலாம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 15 முதல் 20 லட்சம் பேர் தலைக் காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். 40 வயதுக்குட்பட்டவர்களின் அதிர்ச்சி தொடர்பான மரணம் மற்றும் ஊனத்துக்கு தலைக் காயங்களே முதன்மைக் காரணம். சாலை விபத்துகள் 60 சதவிகிதம் வரையிலான மூளை அதிர்ச்சிக் காயங்களுக்கு (TBI) காரணமாக இருக்கின்றன.
வீட்டில் அல்லது உயரத்தில் இருந்து விழுதல் 20-25 சதவிகிதம், வன்முறை/தாக்குதல் சுமார் 10 சதவிகிதம், மது அருந்திய நிலையில் 12-15 சதவிகிதம் காயங்கள் நிகழ்கின்றன.
தமிழ்நாட்டில் நிலை மிகவும் கவலைக்குரியது. சாலை விபத்துகளே 54 முதல் 86 சதவிகிதம் வரையிலான தலைக் காயங்களுக்குக் காரணம். சமீபத்திய ஆண்டில் 67,213 விபத்துகள் பதிவாகியுள்ளன. பொதுவாக சாலை விபத்துகளே முதன்மையாக உள்ளன, முதியவர்களின் எளிய வீட்டு விழுதல்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
கன்கஷன் (Concussion) – அதிர்வு காரணமாக நரம்பு செயல்பாட்டில் ஏற்படும் தற்காலிக இடையூறு. மூளையில் கட்டமைப்பு சேதமோ, ரத்தக்கசிவோ இருக்காது.
மூளை சிதைவு (Brain Contusion) – மண்டை ஓட்டின் கரடுமுரடான எலும்புப் பகுதிகளில் மூளை மோதுவதால் ஏற்படும் உள்ளக ரத்தக்கசிவு.
மண்டை ஓடு உடைவு (Skull Fracture) – மண்டை ஓட்டின் தொடர்ச்சி உடையும் நிலை, தோல் மேற்பரப்புடன் தொடர்பு கொண்டால் திறந்த எலும்பு முறிவு என்றும், இல்லையெனில் மூடிய எலும்பு முறிவு என்றும் வகைப்படுத்தப்படும்.
எபிடூரல் ரத்தக்கசிவு (Epidural Haemorrhage) – மண்டை ஓட்டுக்கும் மூளை உறைக்கும் (Duramater) இடையே ஏற்படும் ரத்தக்கசிவு, பொதுவாக மண்டை ஓடு உடைவின் சிக்கலாக வருவது.
சப்டூரல் ரத்தக்கசிவு (Subdural Haemorrhage) – மூளை உறைக்கும் மூளைத் திசுவுக்கும் இடையே ஏற்படும் ரத்தக்கசிவு, மூளையிலிருந்து ரத்தத்தை வடிகட்டும் பாலம் போன்ற நரம்புகள் கிழிவதால் உருவாவது.
குறிப்பிடத்தக்க வகையில் தலையில் அடிபட்ட எந்த நபரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட வேண்டும். ‘வீட்டில் கவனிக்கலாம்’ என்பது சிகிச்சை முறையே இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 5 நிமிடங்களுக்கு மேல் நினைவு இழப்பு, எந்தத் தூண்டுதலுக்கும் பதிலளிக்காமை, மூக்கு, காது, தொண்டையில் இருந்து ரத்தப்போக்கு, வாந்தி, வலிப்பு – இவை உடனடி எச்சரிக்கை அறிகுறிகள்.
‘லூசிட் இன்டர்வல்’ (Lucid Interval) என்பது மிகவும் ஆபத்தான ஒரு நிலை. காயத்துக்குப் பிறகு நோயாளி நினைவு திரும்பி, சாதாரணமாக நடந்துகொண்டிருப்பார், ஆனால், திடீரென்று மயக்கமடைவார். எபிடூரல் மற்றும் சப்டூரல் ரத்தக்கசிவு இரண்டிலும் இது நிகழலாம். எனவே, ஆரம்பத்தில் நினைவிழந்து பின் சாதாரணமாகத் தெரிந்தாலும், அருகிலுள்ள CT ஸ்கேன் எடுக்க அதிர்ச்சி சிகிச்சை மையத்துக்கு உடனடியாக அழைத்துச் செல்வது கட்டாயம்.
தலைக் காயத்தில் ‘கோல்டன் ஹவர்’ என்கிற கருத்தாக்கம், பெரிய உள்மூளை ரத்தக்கசிவுக்குப் பொருந்தும். 4 மணி நேரத்துக்குள் அறுவைசிகிச்சை செய்யப்பட்டால், 30 நாள் இறப்பு விகிதத்தில் 85 சதவிகிதத்துக்கும் அதிக குறைப்பும், 3 மாதங்களுக்குப் பிறகு 50-60 சதவிகிதம் செயல்பாட்டுச் சுதந்திரமும் கிடைக்கும்.
அமைதியாக இருக்கவும், விளக்குகளை ஒளிரவைக்கவும் அல்லது எச்சரிக்கை முக்கோணங்களை அமைக்கவும், நினைவு மற்றும் சுவாசத்தைச் சரிபார்க்கவும், பாதிக்கப்பட்டவரை பக்கவாட்டில் படுக்கவைத்து தலையைச் சற்று பின்புறமாகச் சாய்த்து சுவாசப் பாதையைத் தெளிவாக்கவும், கழுத்தை நிலைநிறுத்தவும், ஆம்புலன்ஸை அழைக்கவும், திறந்த காயங்களின் மீது மெதுவாக அழுத்தம் கொடுக்கவும்.
க்ளாஸ்கோ கோமா ஸ்கேல் (GCS) என்கிற சர்வதேச தரநிலை மூலம் தலைக் காயத்தின் தீவிரம் மதிப்பிடப்படுகிறது. கண் திறப்பு, வாய்மொழி பதிலளிப்பு, உடல் அசைவு ஆகியவற்றின் அடிப்படையில் 15 புள்ளிகள் கொண்ட இந்த அளவீடு – லேசான (GCS 13-15), மிதமான (GCS 9-12), கடுமையான (GCS 8-க்குக் கீழ்) என வகைப்படுத்துகிறது. CT ஸ்கேன் மூலம் ரத்தக்கசிவின் அளவு, மூளையின் நடுக்கோடு நகர்வு (Midline Shift) ஆகியவை மதிப்பிடப்படுகின்றன.
GCS 8-க்குக் கீழ், CT-யில் 25 மி.லி-க்கு மேல் ரத்தக்கசிவு, 5 மி.மீ-க்கு மேல் நடுக்கோடு நகர்வு இருந்தால் – அவசர டிகம்ப்ரெசிவ் க்ரேனியெக்டமி (Decompressive Craniectomy) அறுவைசிகிச்சை செய்யப்படும். நினைவிழந்த நோயாளிக்கு பரவலான நரம்பிழை காயம் (Diffuse Axonal Injury) இருந்தால் – ICP குறைக்கும் சிகிச்சையும், ஆரம்ப ட்ரேக்கியோஸ்டமியும் செய்யப்படும்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விழுதலே தலைக் காயத்துக்கான முதன்மைக் காரணம். குழந்தைகளின் மூளை அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டது என்பதால், பெரியவர்களில் அரிதான பல காயங்களுக்கு உள்ளாகலாம். குழந்தைகளுக்கு கடைசி நிமிடம் வரை அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். பிறகு திடீரென்று மோசமடையலாம். எனவே விபத்து/விழுதலுக்குப் பிறகு உடனடியாக அதிர்ச்சி சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தூக்கம், எரிச்சல், குறைந்த செயல்பாடு, வலிப்பு போன்ற அறிகுறிகள் வரும் வரை காத்திருக்கக் கூடாது. வாகனங்களில் ஹெல்மெட், குழந்தை இருக்கை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.
60 வயதுக்கு மேற்பட்ட எவருக்காவது தலையில் அடிபட்டால் – சாதாரணமாக இருந்தாலும் – CT ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று அனைத்து சர்வதேச வழிகாட்டுதல்களும் பரிந்துரைக்கின்றன. முதியவர்களுக்கு ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் (வார்ஃபரின்/ஆஸ்பிரின்) எடுத்துக்கொள்வது, எளிய அதிர்ச்சிக்குப் பிறகும் கடுமையான ரத்தக்கசிவை ஏற்படுத்தலாம்.
கதவுச் சட்டத்தில் தலை மோதுவது போன்ற சிறிய அடி கூட நாள்பட்ட சப்டூரல் ரத்தக்கசிவை (Chronic SDH) ஏற்படுத்தலாம். இது முதியவர்களுக்கே உரிய ஒரு தனித்துவமான நிலை. மீட்பு காலம் நீண்டதாக இருக்கும், ஆனால், கடுமையான தலைக் காயத்திலிருந்தும் முதியவர்கள் நன்றாக மீளலாம். விழுதல் ஆபத்து மதிப்பீடு, தடுப்பு பயிற்சி, மருந்து மறு ஆய்வு ஆகியவை மறு காயத்தைத் தடுக்க மிகவும் முக்கியம்.
• இந்தியாவில் சாலை விபத்துகள் 60% தலைக் காயங்களுக்குக் காரணம். தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக விபத்து விகிதம் கொண்ட மாநிலங்களில் ஒன்று. • ‘லூசிட் இன்டர்வல்’ – காயத்துக்குப் பிறகு சாதாரணமாகத் தெரிந்தாலும், உள்ளே ரத்தக்கசிவு நடக்கலாம். CT ஸ்கேன் கட்டாயம். • 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்தவிதமான தலை அடிக்கும் CT ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. • போஸ்ட் கன்கஷன் சிண்ட்ரோம்: 10-15% நோயாளிகளுக்கு தலைவலி, சோர்வு, நினைவாற்றல் குறைவு 10 நாட்களுக்கு மேல் நீடிக்கலாம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 15-20 லட்சம் பேர் தலைக் காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். 4 மணி நேரத்துக்குள் அறுவைசிகிச்சை செய்தால் 85% உயிரிழப்பைத் தடுக்கலாம்… ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்!
Dr. N. ரகுநாதன் MBBS, MCh (Neurosurgery) நரம்பியல் அறுவைசிகிச்சை சிறப்பு மருத்துவர் காவேரி மருத்துவமனை – சேலம்
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011