வலிப்பு பரம்பரை நோயா?

வலிப்பு பரம்பரை நோயா?
February 24 09:30 2025 Print This Article

மூளை ஓர் அதிசயம்! 

மனித மூளை உலகின் மிகச் சிறந்த கணினியை விட பலமடங்கு செயல்திறன் மற்றும் நினைவுத் திறன் கொண்டது. இதில் உள்ள சுமார் நூறு பில்லியன் நரம்பணுக்கள் ஒரு கணினியின் நுண்ணிய ‘சிப்’ போலச் செயல்படுகின்றன. இந்த நரம்பணுக்கள் தமக்குள் குறிகைகளை (signals) அனுப்ப ஏறத்தாழ நூறு டிரிலியன் நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன. எனவே, மூளையை ஓர் அணு (நரம்பணு) மின் நிலையம் என்றே சொல்லலாம்!

வலிப்பு நோய் என்றால் என்ன? 

சிலருக்குச் சில நேரங்களில் மூளையில் தேவையற்ற அல்லது அளவுக்கு அதிகமாக நரம்பணு மின்கசிவு வெளிப்படும்போது, உடலில் ஏற்படும் மாற்றமே வலிப்பு நோயாகும். இதனைக் காக்காய் வலிப்பு, ஜன்னி, ஃபிட்ஸ் (Fits) மற்றும் எபிலெப்ஸி (Epilepsy) என்றும் அழைக்கிறார்கள்.

வலிப்பு நோய்க்கான காரணங்கள் 

  • மூளையில் ஏற்படும் ரத்த ஓட்டப் பாதிப்பு (Brain attack)
  • தலைக்காயம் (Head injury)
  • மூளையில் புற்றுநோய் ( Brain Tumors)
  • மூளையில் பூச்சிக்கட்டி (Cysticercosis)
  • மூளையில் காசநோய் (Tuberculoma)
  • மூளைக் காய்ச்சல் (Brain Fever)
  • தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல்
  • போதைப்பொருள் உபயோகித்தல்
  • பலருக்கு காரணம் இன்றியும் வரலாம்.

வலிப்பு நோயின் அறிகுறிகள் 

இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.

  • கை, கால் இழுத்தல்
  • வாயில் நுரை தள்ளுதல்
  • சுயநினைவு மாறுதல்
  • உடலின் ஒரு பாகம் துடித்தல் (வெட்டுதல்)
  • கண்கள் மேலே செருகுதல்
  • சில சமயம் சுய நினைவின்றிச் சிறுநீர் கழிதல்
  • திடீரென மயக்கமடைந்து விழுதல்
  • கண் சிமிட்டுதல்
  • நினைவின்றிச் சப்பு கொட்டுதல்
  • சில நிமிடங்கள் சுயநினைவின்றிப் பேசுதல்

வலிப்பு நோய் யாரைப் பாதிக்கும்? 

மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல்
5 பேருக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நோய்க்கு வயது வரம்பு கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதிலும் வரலாம்.

இது பரம்பரை நோயா? 

பெரும்பாலும் இது பரம்பரை நோய் அல்ல. மிகக் குறைந்த நபருக்கே (10%) இது பரம்பரை வழி தொடருகிறது.

இந்த நோய் உள்ளவர்களுக்கு செய்யப்படும் சோதனைகள் 

நோய்க்கான அறிகுறிகளை நோயாளிகளிடமிருந்து மருத்துவர்கள் கேட்டறிந்து வலிப்பு நோயினை வகைப்படுத்துகின்றனர். பின்னர் நோய்க்கு ஏற்ப பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

  • EEG: மூளையின் மின் அதிர்வை வரைபடமாக்குதல்
  • CT scan: மூளையின் பாகங்களைக் கணினி மூலம் படம் எடுத்தல்
  • MRI Scan: காந்த அதிர்வு மூலம் மிகத் துல்லியமாக மூளையின் பாகங்களைப் படம் எடுத்தல்

இந்த நோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்? 

மூளை நரம்பியல் மருத்துவ நிபுணரைச் சந்தித்து நோயின் வகை, நோய்க்கான காரணம் ஆகியவற்றைப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அவரின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும்.

எவ்வளவு காலம் மாத்திரை உட்கொள்ள வேண்டும்?  

இது நோயின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகிறது. பெரும்பாலும் 3 முதல் 5 வருடம் வரை உட்கொள்ள வேண்டும். பின்னர், தேவையான பரிசோதனைகளுக்குப் பிறகு மருந்துகளை மெல்ல மெல்லக் குறைத்து, அதன் பின் நிறுத்தலாம்.

இந்நோய் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டலாமா? 

வலிப்பு இல்லாமல் குறைந்தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்களை ஒட்டலாம்.

வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை என்னென்ன? 

  • மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவோ, வேறு மருந்துக்கு மாறவோ கூடாது.
  • தேவையற்ற மன உளைச்சல் கூடாது.
  • மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
  • உயிருக்கு ஆபத்தான நகரும், அசையும் இயந்திரங்களைக் கொண்டு வேலை செய்யக்கூடாது.
  • அதிக நேரம் கணினி (Computer), தொலைக்காட்சி (TV) பார்க்கக்கூடாது.

முறையான சிகிச்சை செய்யவில்லை என்றால்..? 

ஒவ்வொரு முறை வலிப்பு வரும்போதும் மூளையில் உள்ள நரம்பணுக்கள் பாதிப்பு அடைகின்றன. இது நாளடைவில் மூளையின் செயல் மற்றும் நினைவுத்திறனைப் பாதிக்கும். எனவே, முறையான மருந்துகள் உட்கொண்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.

முதலுதவி வழிமுறைகள் 

  • நோயாளியைச் சுற்றிக் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும்.
  • சாலையில் அபாயகரமான இடத்தில் நோயாளி இருந்தால், அவரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லவும்.
  • நோயாளியின் ஆடையைத் தளர்த்தி விடவும். இது சுவாசத்துக்கு உதவியாக இருக்கும்.
  • நோயாளியை ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வைக்கவும். வலிப்பின் போது நோயாளியை அழுத்திப்பிடிக்க வேண்டாம்.
  • காயம் ஏற்படுத்தும் கூர்மையான ஆயுதங்கள் அருகில் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவும்.
  • சாவி அல்லது இரும்புப் பொருட்களைக் கையில் கொடுப்பதையோ / வாயில் திணிப்பதையோ தவிர்க்கவும். நோயாளிக்கு சுயநினைவு வரும் வரை திட/திரவ உணவு தரக் கூடாது.
  • உணர்வு திரும்பிய பிறகு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும். சிலருக்குக் குழப்பநிலை நீடிக்கலாம். அப்போது உங்கள் துணை அவசியம்.
  • 10-15 நிமிடங்களுக்கு மேலும் வலிப்பு நீடித்தால் அவசர ஊர்தியை அமைக்கவும்.

சிலருக்குச் சில நேரங்களில் மூளையில் தேவையற்ற அல்லது அளவுக்கு அதிகமாக நரம்பணு மின்கசிவு வெளிப்படும்போது, உடலில் ஏற்படும் மாற்றமே வலிப்பு நோயாகும்.

மண வாழ்வும் மகப்பேறும் 

வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? 

திருமணம் செய்துகொள்ள வலிப்பு நோய் ஒரு தடையல்ல. இருப்பினும், திருமணத்துக்கு முன் உங்கள்  மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தினைத்  தொடர்ந்து உட்கொள்ளவும்.

வலிப்பு நோய் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? 

தாய், சேய் இருவரையும் வலிப்பு நோய் பாதிக்கும். ஆனால், முறையாக வலிப்பு நோய் மாத்திரையும்  ஃபோலிக் ஆசிட் (Folic acid) என்ற சத்து  மாத்திரையும் சாப்பிடும்போது பிரச்னைகளைக்  குறைக்கலாம். கருத்தரிக்கும் முன் உங்கள்  மருத்துவரை அவசியம் சந்திக்கவும்.

Dr. திவ்யா செல்வராஜ்
M.D (Paediatrics)., D.M (Neurology)
நரம்பியல் & நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனை, சேலம்

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801