ஐசக் நியூட்டன், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ஜூலியஸ் சீசர்… இவர்கள் அனைவருக்கும் வலிப்பு நோய் இருந்தது. ஆனால், அது அவர்களின் சாதனைகளைத் தடுக்கவில்லை. சரியான சிகிச்சையும் விழிப்புணர்வும் இருந்தால், வலிப்பு நோயாளிகளும் சாதாரண வாழ்க்கை வாழ முடியும்!
‘‘அடடா, அவங்க வீட்டுப் பையனுக்கு வலிப்பு வருதாம்… பாவம்!’’ – இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்கிறோம். வலிப்பு நோய் என்றாலே சமூகத்தில் ஒரு பயமும், தவறான புரிதலும் நிலவுகிறது. சிலர் இதை மனநோய் என்றும், சிலர் பேய் பிடித்தல் என்றும் தவறாக நம்புகிறார்கள். ஆனால், வலிப்பு நோய் என்பது மூளை சார்ந்த ஒரு நரம்பியல் பிரச்னை. இது யாருக்கும், எந்த வயதிலும் வரலாம். சரியான சிகிச்சையுடன் இந்த நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தி, சாதாரண வாழ்க்கை வாழ முடியும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூண்டுதல் இல்லாத வலிப்புகள் ஏற்பட்டால், அதை எபிலெப்சி அல்லது வலிப்பு நோய் என்கிறோம். இது எந்த வயதிலும் வரலாம் என்றாலும், குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்கள் திடீரென அசாதாரணமான மின் சமிக்ஞைகளை வெளியிடும்போது வலிப்பு ஏற்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே நீடிக்கும்… பின்னர் மூளை இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
பலரும் வலிப்பு என்றால் கை கால் உதறுவது, நுரை தள்ளுவது என்று மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால், இது முழுமையான உண்மை அல்ல.
வலிப்புகள் வலிப்பு வகை (Convulsive) மற்றும் வலிப்பில்லா வகை (Non-convulsive) என இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளன. பொதுவாக, வலிப்புகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. முதலாவது ஜெனரலைஸ்டு ஆன்செட் (Generalized Onset) – இதில் மூளையின் இரு பகுதிகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும். இரண்டாவது ஃபோக்கல் ஆன்செட் (Focal Onset) – மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தொடங்கும். மூன்றாவது அன்நோன் ஆன்செட் (Unknown Onset) – எங்கு தொடங்கியது என்று அறிய முடியாதவை.
வலிப்பில்லா வகையில் நடத்தை நிறுத்தம் (Behavioural Arrest), உணர்வு மாற்றங்கள் (Sensory), அறிவாற்றல் மாற்றங்கள் (Cognitive), உணர்வு மாற்றங்கள் (Emotional), தன்னியக்க மாற்றங்கள் (Autonomic) போன்றவை அடங்கும். சில நேரங்களில், ஒரு குழந்தை திடீரென சில வினாடிகள் அசையாமல் நின்றுவிட்டு, பின் இயல்பாக நடந்துகொள்ளும். இதுவும் ஒரு வகை வலிப்புதான். எனவே, கை கால் உதறினால் மட்டுமே வலிப்பு என்று நினைப்பது தவறு.
சில குறிப்பிட்ட காரணிகள் வலிப்பைத் தூண்டலாம். தூக்கமின்மை மிக முக்கியமான தூண்டுதல் காரணி. இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு வலிப்பு வரலாம். அதிகமான ஒளி மின்னல்கள் (Flickering Lights) சிலருக்கு வலிப்பைத் தூண்டும். இதை ஃபோட்டோசென்சிடிவ் எபிலெப்சி என்று அழைக்கிறோம். மருந்துகளைத் திடீரென நிறுத்துவதும் ஆபத்தானது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வலிப்பு மருந்துகளை நிறுத்தினால், கடுமையான வலிப்புகள் ஏற்படலாம்.
வலிப்பு நோயாளிகள் சரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மொபைல், கம்ப்யூட்டர், டிவி போன்ற திரைகளை அதிக நேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தூக்கமின்மையைத் தவிர்த்து, ஒழுங்கான தூக்க முறையைப் பின்பற்ற வேண்டும். மிக முக்கியமாக, மருந்துகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரு வேளை மருந்தைத் தவறவிட்டாலும் வலிப்பு வரலாம்.
வலிப்பு நோயைக் கண்டறிவதில் பல படிநிலைகள் உள்ளன. எம்ஆர்ஐ மூளை ஸ்கேன் (MRI Brain) மூளையில் ஏதேனும் கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளனவா என்பதைக் காட்டும். ஈஈஜி (EEG – Electroencephalogram) மூளையின் மின் செயல்பாட்டை அளவிடும். இந்தப் பரிசோதனைகள் நோயின் காரணத்தைக் கண்டறிய உதவும். ஆனால், சுமார் 50 சதவிகித நோயாளிகளுக்கு இந்தப் பரிசோதனைகள் சாதாரணமாகவே இருக்கலாம்.
இங்குதான் மருத்துவரின் அனுபவம் முக்கியமாகிறது. நோயாளியின் முழுமையான மருத்துவ வரலாறு, வலிப்பைப் பார்த்த சாட்சிகளின் விவரணை, அல்லது வலிப்பின் வீடியோ பதிவு ஆகியவை நோய் கண்டறிதலில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, வலிப்பு வரும்போது பதற்றமடையாமல், முடிந்தால் வீடியோ எடுப்பது மருத்துவருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வலிப்பு நோய்க்கு வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் (Anti-epileptic Medications) முதல் நிலை சிகிச்சையாகும். இன்றைய நவீன மருந்துகள் மிகவும் பயனுள்ளவை. சரியான மருந்தை, சரியான அளவில், தொடர்ந்து எடுத்துக்கொண்டால், பெரும்பாலான நோயாளிகளுக்கு வலிப்பு முழுமையாகக் கட்டுப்படும்.
மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத கடினமான வழக்குகளுக்கு அறுவைசிகிச்சை வாய்ப்பும் உள்ளது. மூளையில் கட்டமைப்புப் பாதிப்புகள் இருந்தால், அவற்றை அகற்றும் அறுவைசிகிச்சை செய்யப்படும். மருந்துகளுக்குக் கட்டுப்படாத (Refractory) வழக்குகளுக்கும் அறுவைசிகிச்சை ஒரு தீர்வாக இருக்கலாம். காவேரி மருத்துவமனையில் இத்தகைய நவீன சிகிச்சைகள் அனைத்தும் கிடைக்கின்றன.
வலிப்பு நோயுள்ள பெண்கள் இன்றும் சமூகத்தில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். திருமணம், கர்ப்பம், குழந்தைப்பேறு போன்றவற்றில் அச்சமும் சந்தேகமும் நிலவுகின்றன. ஆனால், இன்று கர்ப்ப காலத்திலும் குழந்தைப் பேற்றிலும் பாதுகாப்பாகப் பயன்படுத்தக்கூடிய மருந்துகள் உள்ளன. மருத்துவரின் மேற்பார்வையில், வலிப்பு நோயுள்ள பெண்களும் ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் பிரசவ அனுபவத்தைப் பெறலாம்.
வலிப்பு நோயாளிகள் பாதுகாப்பான வேலைகளில் ஈடுபடலாம். ஆனால், இயந்திர வேலைகள், வாகனம் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வலிப்பு நோயாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது அவர்களின் பாதுகாப்பையும், பொது மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்ட விதி.
வரலாறு நமக்குப் பல உதாரணங்களைக் காட்டுகிறது. ஐசக் நியூட்டன், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ஜூலியஸ் சீசர் போன்ற மாமனிதர்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், அது அவர்களை அறிவியல், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் சாதனைகள் படைப்பதிலிருந்து தடுக்கவில்லை.
வலிப்பு நோயாளிகளுக்கு மருத்துவர்களாகிய நாங்கள் தரும் செய்தி மிகவும் நம்பிக்கையூட்டுவது. சரியான மருத்துவ சிகிச்சை பெற்று, வலிப்பு கட்டுப்பாட்டில் இருந்தால், வலிப்பு நோயாளிகளும் மற்றவர்களைப் போலவே சாதாரண வாழ்க்கை வாழலாம். நல்ல கல்வி பெறலாம், திருமணம் செய்துகொள்ளலாம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
வலிப்பு நோய் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல, அது ஒரு சவால் மட்டுமே. அந்தச் சவாலை சரியான சிகிச்சையுடன் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்!
யாருக்காவது வலிப்பு வரும்போது அருகில் இருப்பவர்கள் பதற்றமடைவது இயல்பு. ஆனால், தவறான முதலுதவி ஆபத்தை ஏற்படுத்தலாம். சரியான முறையை அறிந்துகொள்வது அவசியம்.
வலிப்பை நிறுத்த கை கால்களை இறுக்கமாகப் பிடிக்கக்கூடாது. இரும்புக் கம்பி, சாவி போன்றவற்றை கையில் கொடுக்கக்கூடாது… இது மூடநம்பிக்கை, எந்தப் பலனும் இல்லை. வாயில் எதையும் திணிக்கக்கூடாது… தண்ணீர், மருந்து, உணவு எதுவும் கொடுக்கக்கூடாது. நாக்கைக் கடித்துக்கொள்வார் என்று விரல் நுழைக்கக்கூடாது.
நோயாளியை ஒரு பக்கமாகப் படுக்கவையுங்கள்… இது சுவாசப் பாதையைத் திறந்து வைக்கும். தலைக்குக் கீழே மெல்லிய துண்டு அல்லது தலையணை வையுங்கள். அருகில் உள்ள கூர்மையான பொருட்கள், மேசை, நாற்காலி போன்றவற்றை விலக்குங்கள். இறுக்கமான உடைகளைத் தளர்த்துங்கள்.
வலிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று கவனியுங்கள். 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
உலக வலிப்பு நோய் தினம்: பிப்ரவரி 10
Dr. திவ்யா செல்வராஜ் MD (Paediatrics), DM (Neurology) குழந்தை நரம்பியல் நிபுணர் காவேரி மருத்துவமனை, சேலம்
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011