இது வயதின் கொடுமையா? அல்லது குணப்படுத்தக்கூடிய நோயா?

இது வயதின் கொடுமையா? அல்லது குணப்படுத்தக்கூடிய நோயா?
January 06 08:08 2026 Print This Article

‘மூட்டு வலி என்பது வயதாகும்போது வரும் இயற்கையான விஷயம்’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு அதிர்ச்சியான உண்மை… மூட்டுவலியில் பல வகைகள் உள்ளன… பல குணப்படுத்தக்கூடியவை, சில தடுக்கக்கூடியவை!

மூட்டு வலி என்றால் என்ன? பலரும் இதை வயதான காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு பிரச்னை என்று நினைக்கிறோம். ‘அம்மாவுக்கு மூட்டுவலி வந்துடுச்சு, வயசாச்சு இல்ல’ என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், உண்மை இதுதான்… மூட்டுவலி என்பது ஒரே வகையான பிரச்னை அல்ல. இதில் பல வகைகள் இருக்கின்றன, அவற்றின் காரணங்களும் வேறுவேறு.

மிக முக்கியமாக, சில வகை மூட்டுவலிகள் நம்முடைய உடலே தன்னைத்தானே தாக்கிக்கொள்வதால் ஏற்படுகின்றன. இதை ஆட்டோ இம்யூன் நோய் என்று சொல்வோம். இந்த உண்மையை அறிந்துகொண்டால், நம்முடைய அணுகுமுறையே மாறிவிடும்.

மூட்டுவலியின் அடிப்படை அறிவியல் 

மூட்டுவலி என்பது அர்டிகுலர் கார்டிலேஜ் (மூட்டுக்க்குருத்து) இழப்பால் ஏற்படும் வலியான மூட்டு நிலையாகும். இந்த கார்டிலேஜ் என்பது எலும்புகளின் நுனியில் இருக்கும் ஒரு சிறப்புத் திசு. இது ஒரு கெட்டியான குஷன் போலச் செயல்படுகிறது. இதனால்தான் நம்முடைய மூட்டுக்கள் மென்மையாகவும் வலியில்லாமலும் நகர முடிகிறது.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த கார்டிலேஜ் நம்முடைய உடலில் குறைந்த அளவில்தான் இருக்கிறது. மேலும் இது ஒருமுறை சேதமானால் மீண்டும் உருவாகாது. இதுதான் மூட்டுவலியின் மூலப் பிரச்னை.

மூட்டுவலியின் இரண்டு முக்கிய வகைகள் 

மூட்டுவலியை இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கலாம்: தேய்மானத்தால் வரும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் மற்றும் வீக்கத்தால் வரும் ஆர்த்ரைட்டிஸ்.

  1. தேய்மானத்தால் வரும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்

இது ‘உடைந்து போகும்’ வகையான மூட்டுவலி. இதை மீண்டும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

முதன்மை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்: வயதானதால் இயற்கையாக வரும் மூட்டுவலி. இந்தியாவில் இது முக்கியமாக முழங்கால் மூட்டுக்க்களைப் பாதிக்கிறது. உடல் எடை அதிகமாக இருப்பது, தொடையின் தசைகள் பலவீனமாக இருப்பது போன்ற காரணங்களால் இது மோசமாகிறது. இதனால் கால்கள் வளைந்துபோகும் நிலையும் ஏற்படலாம்.

இரண்டாம்நிலை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்: குறிப்பிட்ட காரணங்களால் வரும் மூட்டுவலி. பழைய காயங்கள் சரியாகக் குணமாகாமல் போனால், மூட்டின் மேற்பரப்பு சமமாக இல்லாமல் போகும். இதனால் கார்டிலேஜ் விரைவில் தேய்ந்துபோய் மூட்டுவலி ஏற்படும். அதேபோல கால் அல்லது கையில் ஏதேனும் வளைவு இருந்தால், மூட்டின் மீது அசாதாரண அழுத்தம் விழுந்து இந்தப் பிரச்னை வரும்.

  1. முடக்குவாதம் என்கிற கீல்வாதம்உடலே தன்னைத் தாக்கும் நோய்

இது மிகவும் வித்தியாசமான வகை. இதில் நம்முடைய உடலின் எதிர்ப்பு சக்தியே நம்முடைய மூட்டுக்களைத் தாக்குகிறது. இதை ஆட்டோ இம்யூன் நோய் என்று சொல்வோம். நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் நம்முடைய மூட்டுக்களைச் சுற்றியுள்ள சைநோவியம் என்கிற திசுவைத் தாக்குகிறது. இதனால் கார்டிலேஜ் சேதமடைந்து மூட்டுவலி ஏற்படுகிறது.

முடக்குவாதத்தின் வகைகள்

ரூமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்: இது மிகவும் பொதுவான வீக்கத்தால் வரும் ஆர்த்ரைட்டிஸ். ஆண்களைவிட நடுத்தர வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கிறது. பொதுவாக கைகள் மற்றும் கால்களின் சிறிய மூட்டுக்களில் (விரல்கள் மற்றும் கால்விரல்கள்) தொடங்குகிறது. குளிர்காலத்தில் மற்றும் குளிர்ந்த சூழலில் இது மோசமாகும்.

அன்கைலோசிங் ஸ்பான்டைலைட்டிஸ்: இது முக்கியமாக 20 முதல் 40 வயதுடைய ஆண்களைப் பாதிக்கிறது. முதுகெலும்பு மற்றும் கீழ் முதுகுப் பகுதியைத் தாக்குகிறது. ஆரம்பத்தில் இடுப்புவலியாகத் தோன்றி, படிப்படியாக முதுகின் விறைப்பு மற்றும் வளைவுக்கு வழிவகுக்கும். கடைசியில் கழுத்து வரை பரவலாம்.

முடக்குவாதத்தின் முக்கிய அறிகுறிகள் 

முடக்குவாதத்தை எளிதில் கண்டறியக்கூடிய சில சிறப்பு அறிகுறிகள் உள்ளன.

காலையில் விறைப்பு: இதுதான் மிக முக்கியமான அறிகுறி. காலையில் படுக்கையில் இருந்து எழும்போது மூட்டுக்களில் கடுமையான வலி மற்றும் விறைப்பு இருக்கும். இது அரை மணி நேரம் அல்லது அதற்கு மேலும்கூட நீடிக்கும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்போது இந்த விறைப்பு குறைந்துவிடும்.

பல மூட்டுக்களில் வலி: ஒரே நேரத்தில் பல மூட்டுக்களில் வலி, வீக்கம் மற்றும் விறைப்பு இருக்கும்.

ஓய்வின்போது அதிக வலி: செயல்பாட்டின்போது வலி குறையும், ஓய்வின்போது அதிகரிக்கும்.

கண்ணுக்குத் தெரியும் வீக்கம்: பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தெளிவாகத் தெரியும் வீக்கம் இருக்கும்.

ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் 

சில நேரங்களில் முடக்குவாதம் மிகவும் நுட்பமாகத் தொடங்கும்.

  • அடிக்கடி வரும் முதுகுவலி
  • குதிகால் வலி
  • முழங்கை மூட்டு வலி
  • பல மூட்டுக்களில் மீண்டும் மீண்டும் வரும் வலி

ஏன் வலிநிவாரணி மாத்திரைகள் ஆபத்தானவை

பலர் மூட்டுவலி வந்தவுடன் மருந்துக் கடைகளில் கிடைக்கும் வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது மிக ஆபத்தான விஷயம். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக வலியைப் போக்கினாலும், உண்மையான நோய் தொடர்ந்து முன்னேறி மூட்டுக்களை நிரந்தரமாக அழித்துக்கொண்டே இருக்கும்.

முடக்குவாதத்துக்கு ‘நோய் மாற்றும் மருந்துகள்’ என்கிற சிறப்பு மருந்துகள் உள்ளன. இவை நோய் முற்றுவதைத் தடுத்து, சில நேரங்களில் நோயை முழுமையாகக் குணப்படுத்தவும் செய்கின்றன.

நவீன சிகிச்சை முறைகள் 

ஆரம்பகால மருத்துவ சிகிச்சை: முடக்குவாதத்துக்கு ஆரம்ப நிலையிலேயே சரியான நோய் கண்டறிதல் மற்றும் சிறப்பு மருந்துகள் கொடுப்பது மிக முக்கியம். இதனால் மூட்டுக்களின் நிரந்தர சேதத்தைத் தடுக்க முடியும்.

அறுவைசிகிச்சை: நோய் மிகவும் முன்னேறி கார்டிலேஜ் முழுமையாக அழிந்துபோன நிலையில், ‘எலும்பு எலும்பைத் தொடும்’ அளவுக்கு மோசமாகிவிட்டால், அறுவைசிகிச்சைதான் ஒரே தீர்வு.

மூட்டு மாற்று அறுவைசிகிச்சை: இன்றைய காலத்தில் இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டுக்களைப் பூரணமாக மாற்றிப்போடலாம். இதன் நன்மைகள்…

  • முழுமையான வலி நிவாரணம்
  • அறுவைசிகிச்சைக்கு அடுத்த நாளிலேயே நடக்க ஆரம்பிக்கலாம்
  • வயது ஒரு தடையல்ல… எந்த வயதிலும் செய்யலாம்

தடுப்பு மற்றும் வாழ்க்கைமுறை வழிகாட்டுதல் 

உடல் எடை பராமரிப்பு: சரியான உடல் எடையைப் பராமரிப்பது மூட்டுக்களுக்கு அளிக்கும் அழுத்தத்தைக் குறைக்கும். முழங்கால் மூட்டுவலி உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.

உடற்பயிற்சி மற்றும் தசை வலுவாக்கம்: உடற்பயிற்சி வாயிலாகவே தொடையின் தசைகளை வலுப்படுத்துவது முழங்கால் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸை தடுக்க அல்லது தாமதமாக்க உதவும். வலுவான தசைகள் மூட்டுக்கு ‘ஷாக் எப்சார்பர்கள்’ போல வேலை செய்யும்.

மன அழுத்த நிர்வாகம்: மன அழுத்தம் மற்றும் தவறான உணவுப் பழக்கம் முடக்குவாதத்தை மோசமாக்கும். ஆரோக்கியமான உணவு மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை நடத்தல் நல்லது.

தவறான நம்பிக்கைகளைத் திருத்தி எழுதுவோம்

தவறான நம்பிக்கை: மூட்டுவலி தொற்று நோய் என்று நினைக்கும் பெரும்பாலோர் உண்டு.

உண்மை: மூட்டுவலி தொற்று நோய் அல்ல. இது ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்குப் பரவாது. குடும்பத்தினருக்கும் இது வரும் என்பது தவறான நம்பிக்கையாகும்.

மூட்டுவலி என்பது வயதான காலத்தின் தவிர்க்க முடியாத ஒரு நிலை அல்ல. சரியான நிபுணர் அளிக்கும் சிகிச்சை மூலமும், வாழ்க்கைமுறை மாற்றத்தினாலும், நம்முடைய வாழ்நாள் பூரணமாக வலியற்றதாக மாறும்.

சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தசை வலிமையைப் பராமரிக்க வேண்டும்… இந்த மூன்று செயல்களைப் பின்பற்றினால், வாழ்க்கைக் காலம் பூரணமும் வலியில்லாமல் மகிழ்வாக வாழலாம்!

மூட்டுவலிஉடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய நேரம்!

  1. பல மூட்டுக்களில் எதிர்பாராத வலி – தொடர்ந்து பல மூட்டுக்களில் வலி மற்றும் வீக்கம்
  2. காலையில் மிக அதிக விறைப்பு – காலையில் அரை மணி நேரத்துக்கு மேலும் நீளும் மூட்டு விறைப்பு
  3. தொடர்ச்சியாக வலிநிவாரணி மாத்திரை அவசியம் – மருந்து இல்லாமல் வாழ முடியாத நிலை
  4. கண்ணுக்குத் தெரியும் மூட்டு வீக்கம் – பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தெரியக்கூடிய வீக்கம்
  5. செயல்பாட்டில் குறையும், ஓய்வில் அதிகரிக்கும் – வேலை அல்லது உடற்பயிற்சியின் போது வீக்கம் மற்றும் வலி குறையும்

Dr. வி. சிங்காரவடிவேலு, MBBS, D.Ortho, MS(Ortho), PhD,
சீனியர் ஆலோசகர் மற்றும் அகாடமிக் லீட்ஆர்த்தோபெடிக் சர்ஜரி பிரிவு
காவேரி மருத்துவமனைசென்னை

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011