முதுகுவலி, கழுத்துவலி என்றாலே தசைப்பிடிப்பு அல்லது எலும்புத் தேய்மானம் என்றுதான் நினைக்கிறோம். ஆனால், சில நேரங்களில் அந்த வலி, நரம்பு நசுங்குவதன் அபாய அறிகுறியாக இருக்கலாம். இந்த விஷயத்தில் எப்போது கவலைப்பட வேண்டும், டிஸ்க் விலகல் என்றால் என்ன, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்தால் நடக்க முடியாமல் போய்விடுமா?
முதுகுவலி, கழுத்துவலிகளில் பெரும்பாலானவை தவறான உடல் நிலையாலும் (Posture), உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கைமுறையாலும் வருபவை. ஆனால், கை அல்லது காலில் மின்சாரம் பாய்வது போன்ற வலி, புதிதாகத் தோன்றும் பலவீனம், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் மாற்றம் ஆகியவை நரம்பு அழுத்தத்தின் எச்சரிக்கைகள். இவற்றை அலட்சியப்படுத்தினால், இழப்பு நிரந்தரமாகலாம்.
காலையில் கழுத்தில் ஒரு இறுக்கம், மாலையில் இடுப்பில் ஒரு வலி. ஒரு தைலம், ஒரு நாள் ஓய்வு, சரியாகிவிடும் என்று நினைக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் அது சரியும்கூட. அதே வலி காலுக்கோ கைக்கோ மின்சாரம் போலப் பாய்ந்தால், விரல்கள் மரத்துப்போனால், பிடிமானம் தளர்ந்தால், பிரச்னை தசையிலோ எலும்பிலோ மட்டும் இல்லை… நரம்பிலும் இருக்கலாம்.
முதுகுவலி, கழுத்துவலிகளில் ஏறக்குறைய 90 சதவிகிதம், இயந்திரவியல் காரணங்களால் (Mechanical Causes) வருபவை. தவறான உடல் நிலை (Posture), உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை, வேலை செய்யும் இடத்தில் தவறான அமைப்பு (Ergonomics), அளவுக்கு மீறிய செல்போன் பயன்பாடு போன்றவைதான் இவற்றுக்குக் காரணம். அப்படியென்றால், எப்போது கவலைப்பட வேண்டும்?
அன்றாட வேலைகளையே செய்ய முடியாத அளவுக்குக் கடுமையான வலி, இரவுத் தூக்கத்தைக் கெடுக்கும் வலி, இரவில் அதிகமாக வியர்ப்பது, காரணமில்லாமல் எடை குறைவது, கைக்கோ காலுக்கோ மின்சாரம் பாய்வது போலப் பரவும் வலி, புதிதாகத் தோன்றும் பலவீனம், சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஆகியவை இருந்தால், அது சாதாரண முதுகுவலி அல்ல. இவற்றில் எது இருந்தாலும் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
கை அல்லது காலில் மின்சார அதிர்ச்சி போலப் பரவும் வலி (Radiating Pain), ஒரு குறிப்பிட்ட நரம்பை டிஸ்க்கோ, எலும்போ, கட்டியோ அழுத்தும்போது ஏற்படுகிறது. இந்த அழுத்தம் படிப்படியாக அதிகரிக்கும். முதலில் வலி, பிறகு பலவீனம், இறுதியில் உணர்வும் இயக்க வலிமையும் முற்றிலும் இழந்துபோகும் நிலை வரை செல்லலாம். அதனால், இத்தகைய அறிகுறிகள் இருந்தால், நரம்பு அழுத்தம் (Nerve Compression) இருக்கிறதா என்பதை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (Neurosurgeon) போன்ற பயிற்சி பெற்ற நிபுணரிடம் கண்டிப்பாகப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். வலி மட்டும் இருக்கும் நிலையிலேயே வந்தால், பலவீனம் வருவதற்கு முன்பே சிகிச்சை அளிக்க முடியும்.
டிஸ்க் விலகல் (Slipped Disc) மிகவும் பொதுவாகக் காணப்படும் பிரச்னைதான். நம் முதுகெலும்பு, முள்ளெலும்புகள் (Vertebrae) எனப்படும் பல தனித்தனி எலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக்கு இடையே, உறுதியான, மீள்தன்மை கொண்ட ஒரு தட்டு இருக்கிறது. அதுதான் முள்ளெலும்பு இடைத்தட்டு (Vertebral Disc). வாகனத்தின் சஸ்பென்ஷன் போல, ஒரு ஸ்பிரிங் போல அதிர்வுகளைத் தாங்குவது இதன் வேலை. இந்தத் தட்டு தன் இடத்தை விட்டு விலகி, நரம்பு செல்லும் பாதைக்குள் நுழைந்து நரம்பை அழுத்தும்போது வலி, பலவீனம், சிறுநீர்ப்பை மற்றும் குடல் கட்டுப்பாட்டில் தளர்வு ஆகியவை ஏற்படுகின்றன. முதலில் மருத்துவப் பரிசோதனை செய்வோம். தேவைப்பட்டால் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேனும் வேறு சிறப்புப் பரிசோதனைகளும் செய்வோம்.
சிறிய அளவிலான டிஸ்க் விலகல்களில் பெரும்பாலானவற்றை, ஓய்வு, உடற்பயிற்சி, முறையான பயிற்சிகள் மூலமே அறுவை சிகிச்சை இல்லாமல் சரிசெய்துவிடலாம். மசாஜ், எண்ணெய் தேய்த்தல் போன்ற அறுவை சிகிச்சை அல்லாத மாற்று முறைகளில் பலன் கண்டதாகச் சொல்பவர்களும் பெரும்பாலும் இந்த வகையினர்தான். ஆனால், வலி மிகக் கடுமையாக இருந்து, வேலையைப் பாதித்து, பலவீனமும் சேர்ந்தால், அது அறுவை சிகிச்சைக்கான அறிகுறி. வலியில்லாமல் நடமாடவும், வேலைக்குச் செல்லவும், பயணம் செய்யவும், சமூக வாழ்க்கையில் இயல்பாகப் பங்கேற்கவும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை உதவி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நடக்கவே முடியாதோ என்பதுதான் பெரும்பாலான நோயாளிகள் என்னிடம் கொண்டுவரும் மிகப் பெரிய பயம். ஆனால், இன்று முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பானதாக மாறியிருக்கிறது. எம்ஆர்ஐ, அசைவின்போது எடுக்கப்படும் சிறப்பு எக்ஸ்ரேக்கள் (Dynamic X Ray) போன்ற நோயறிதல் முன்னேற்றங்களும், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் நரம்பியல் நுண்ணோக்கிகள் (Neurosurgical Microscope), நரம்புக் கண்காணிப்பு (Neuromonitoring), எண்டோஸ்கோபிக் அல்லது சாவித்துவார அறுவை சிகிச்சை (Keyhole Surgery) போன்ற தொழில்நுட்பங்களும் அறுவை சிகிச்சையைப் பாதுகாப்பானதாக்குகின்றன.
அதே நேரம், அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் உடல்நிலை, அவருடைய மனநிலை, ஏற்கெனவே நிரந்தரமாகிவிட்ட பலவீனம் ஆகியவை முடிவுகளைப் பாதிக்கின்றன. நீண்ட நாட்கள் காத்திருந்து பலவீனம் நிரந்தரமான பிறகு வருவதைவிட, உரிய நேரத்தில் வருவது முக்கியம். அறுவை சிகிச்சைக்குப் பிறகான மறுவாழ்வுப் பயிற்சிகளும் (Rehabilitation), முதுகுத்தண்டுக்கான பயிற்சிகளும், வாழ்க்கைமுறை மாற்றங்களும் பிரச்னை மீண்டும் வராமல் தடுக்க மிக முக்கியம்.
குறைந்த ஊடுருவல் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை (Minimally Invasive Spine Surgery, MISS), பெரிய அளவில் திறக்காமல் சிறிய துளைகள் வழியாகச் செய்யப்படுவது. கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது சிறப்பான பலன்களைத் தருகிறது. ஆனால், எல்லா நோயாளிகளுக்கும் சாவித்துவார, எண்டோஸ்கோபிக் அல்லது குறைந்த ஊடுருவல் அறுவை சிகிச்சை தேவையில்லை. நுண்ணோக்கி உதவியுடன் செய்யப்படும் திறந்த அறுவை சிகிச்சைகளும் (Microscopic Surgery) மிக நல்ல பலன்களைத் தருகின்றன. எந்த நோயாளிக்கு எந்த அணுகுமுறை என்பதைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம்.
எந்த வகை அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தாலும், நல்ல முடிவைத் தருவதில் அறுவை சிகிச்சைக்குப் பிறகான மறுவாழ்வுப் பயிற்சி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அறுவை சிகிச்சை ஒரு தொடக்கம்தான்… முழுமையான குணம் பயிற்சியில்தான் இருக்கிறது.
முதுகுத்தண்டையும் அதன் வழியே செல்லும் நரம்புகளையும் காக்க மூன்று வார்த்தைகளை நினைவில் வையுங்கள். முதலாவது, அசையுங்கள். அசைவுதான் உயிர் தருகிறது. இரண்டாவது, வலுப்படுத்துங்கள். தசைகளின் வலிமையைக் கட்டமைத்துக்கொள்ளுங்கள்… வலுவான தசைகள் முதுகுத்தண்டைத் தாங்கி நிற்கும். மூன்றாவது, பாதுகாத்துக்கொள்ளுங்கள். வேலை செய்யும்போதும், செல்போன் பார்க்கும்போதும், உட்காரும்போதும், குனியும்போதும் சரியான உடல் நிலையைப் (Posture)பின்பற்றினால், முதுகுத்தண்டு பாதுகாப்பாக இருக்கும்.
முதுகுவலியில் பெரும்பாலானவை ஆபத்தில்லாதவை என்பது ஆறுதலான செய்தி. ஆனால், நரம்பு கொடுக்கும் எச்சரிக்கைகளை அடையாளம் கண்டு, உரிய நேரத்தில் நிபுணரைச் சந்திப்பது, நடமாட்டத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் காக்கும்.
முதுகுவலி மட்டுமல்ல… கழுத்துவலியும் உலக அளவில் பெரும் சுமையாக இருக்கிறது. 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 20.3 கோடி பேர் கழுத்துவலியால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2050-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 26.9 கோடியாக உயரும் என்று தி லான்செட் ருமட்டாலஜி (The Lancet Rheumatology) இதழில் 2024-ம் ஆண்டில் வெளியான உலக நோய்ச்சுமை ஆய்வு (Global Burden of Disease Study) கணிக்கிறது.
அதே ஆய்வின்படி, ஆண்களைவிடப் பெண்களிடம் கழுத்துவலி அதிகம் காணப்படுகிறது. 45 முதல் 74 வயதுக்குட்பட்டவர்களிடம்தான் இது உச்சத்தில் இருக்கிறது.
காவேரி மருத்துவமனையில் மூளை மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்கான நியூரோநேவிகேஷன் (Neuronavigation) தொழில்நுட்பம் 2016-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த ஊடுருவல் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை 2017-ம் ஆண்டில் முதன்முறையாகத் தொடங்கப்பட்டு, இப்போது வழக்கமாகச் செய்யப்படுகிறது.
டாக்டர் ஜி. ஜோஸ் ஜாஸ்பர் MBBS, MCh (Neurosurgery), PGDMLS HOD, Brain and Spine Surgery காவேரி மருத்துவமனை – திருச்சி கண்டோன்மென்ட்
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011