கல்லீரல் சொல்லும் கதை!

கல்லீரல் சொல்லும் கதை!
April 17 06:12 2026 Print This Article

கல்லீரல் நோய்கள் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் காட்டாமல் மௌனமாகவே முன்னேறும். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பெரும்பாலான நோய்களிலிருந்து விடுபடலாம். ஆரோக்கியமான பழக்கங்களே கல்லீரலின் சிறந்த மருந்து!

ஏப்ரல் 19 – உலக கல்லீரல் தினம். ‘Solid Habits, Strong Liver’ என்பது இந்த ஆண்டின் கருப்பொருள். சின்னச் சின்ன நல்ல பழக்கங்களே கல்லீரலைக் காக்கும் என்பதை நினைவுறுத்தும் இந்நாளில், கல்லீரல் நோய்களின் உண்மை நிலை, தடுப்பு வழிகள், மாற்று அறுவைசிகிச்சை என அனைத்தையும் அறிவோமா!

ஜீரணம், நச்சு நீக்கம், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு என 3,000-க்கும் மேற்பட்ட பணிகளை இடைவிடாமல் செய்யும் இந்த ரசாயன ஆலை, நோய் வந்தாலும் அமைதியாகவே இருக்கும். இதுவே மிகப் பெரிய ஆபத்து. இன்று இந்தியாவில் சராசரியாக 8 சதவிகிதம் பேருக்கு கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கிறது; 1 சதவிகிதம் பேர் ஏற்கனவே சிரோஸிஸ் நிலையை அடைந்திருக்கிறார்கள். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், தொற்று நோய்களால் வந்த கல்லீரல் பாதிப்பு குறைந்து, வாழ்க்கைமுறை காரணமான நோய்கள் அதிகரித்திருக்கின்றன. இளம் வயதினரும் அறிகுறியில்லாமல் பாதிக்கப்படுகின்றனர்; பலர் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரை அணுகுகிறார்கள்.

கல்லீரலைப் பாதிக்கும் முக்கிய நோய்கள் 

இன்று இந்தியாவில் மிகவும் அதிகரித்துவரும் கல்லீரல் நோய் NAFLD என்கிற Non-Alcoholic Fatty Liver Disease. மது அருந்தாதவர்களுக்கும், குழந்தைகளுக்கும்கூட இந்தக் கொழுப்புக் கல்லீரல் நோய் வருகிறது. நீரிழிவு, உடல் பருமன், அதிக சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடல் உழைப்பின்மை ஆகியவையே காரணம். ஆரம்பத்தில் கொழுப்பு சேருவது மட்டுமே இருக்கும், இது மாற்றியமைக்கக்கூடியது. கவனிக்காமல் விட்டால் வீக்கம், நார்ப்படிவு (Fibrosis) என முன்னேறி சிரோஸிஸாகி நிரந்தர சேதமாகிவிடும்.

மது சார்ந்த கல்லீரல் நோயும் இதே படிநிலைகளில் செல்லும். கொழுப்புக் கல்லீரல், மதுவால் வரும் ஹெபடைடிஸ், சிரோஸிஸ். தினசரி அல்லது அதிக அளவில் குடிப்பவர்களுக்கும், நீண்ட காலமாக குடிப்பவர்களுக்கும் நோய் வேகமாக முற்றும். இது இன்று இந்தியாவில் சிரோஸிஸுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

ஹெபடைடிஸ் B மற்றும் C வைரஸ்கள் ரத்தம், பாதுகாப்பற்ற ஊசிகள், பிரசவத்தின் மூலம் பரவுகின்றன. இவை பல ஆண்டுகள் அமைதியாக இருந்து திடீரென சிரோஸிஸ் அல்லது கல்லீரல் புற்றுநோயாக வெளிப்படும். ஹெபடைடிஸ் B-க்கு தடுப்பூசி உள்ளது. இது கல்லீரல் புற்றுநோயையும் தடுக்கும். இம்மூன்று நோய்களும் இறுதியில் சிரோஸிஸாக மாறலாம். அப்போது கல்லீரலில் நிரந்தர வடுக்கள் ஏற்பட்டு செயல்பாடு கடுமையாகக் குறைந்துவிடும்.

அலட்சியப்படுத்தப்படும் ஆரம்ப அறிகுறிகள் 

தொடர்ச்சியான சோர்வு, பசியின்மை, வலது பக்க வயிற்றில் லேசான அசௌகரியம் அல்லது கனம், விளக்கமில்லாத உடல் எடை மாற்றம், வயிறு உப்புசம், சின்னச் சிராய்ப்பிலேயே நீல மடக்கு வருவது… இவை கல்லீரல் அனுப்பும் மெல்லிய சமிக்ஞைகள். இவற்றைப் புறக்கணிக்காதீர்கள்.

வாழ்க்கைமுறையும் கல்லீரலும் 

மது அருந்தும்போது கல்லீரல் அதை உடைப்பதற்காக நச்சுப் பொருட்களை உருவாக்குகிறது. இவை கல்லீரல் செல்களை பாதிக்கின்றன. உடல் பருமன் மற்றும் நீரிழிவில் Insulin Resistance ஏற்படுகிறது. இதனால் கொழுப்பு உடல் முழுவதும் மட்டுமல்ல, கல்லீரலிலும் சேருகிறது. அதிக சர்க்கரை (குளிர்பானங்கள், இனிப்புகள்), அதிக வெள்ளை அரிசி, மைதா பொருட்கள், வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நேரடியாக கொழுப்புக் கல்லீரலுக்கு வழிவகுக்கின்றன.

இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு முக்கியமான நிலை – Metabolic Syndrome. வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேருவது, ரத்த சர்க்கரை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், அதிக Triglycerides / குறைந்த HDL கொழுப்பு… இந்நான்கும் ஒன்றாக வரும்போது அதை Metabolic Syndrome என்கிறோம். கொழுப்புக் கல்லீரல் நோய் என்பது இந்த நோய்க்கூட்டத்தின் கல்லீரல் வெளிப்பாடே. Insulin Resistance-தான் இந்த முழு சங்கிலியின் ஆணிவேர்.

கல்லீரலைக் காப்பாற்றுவது எப்படி

வீட்டுச் சமையல் உணவு, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள்… இவை கல்லீரலுக்கு நண்பர்கள். கீரை வகைகள், நட்ஸ், மிதமான காபி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள் கல்லீரலைப் பலப்படுத்தும். தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி உடல் எடையை கட்டுப்படுத்தி, Insulin Sensitivity-ஐ மேம்படுத்தி, கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். ரத்த சர்க்கரை, கொழுப்பு, உடல் எடை – இம்மூன்றையும் தொடர்ந்து கண்காணியுங்கள். மது மற்றும் புகையைத் தவிருங்கள். ஹெபடைடிஸ் B தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்… இது மிகவும் பாதுகாப்பானது, கல்லீரல் புற்றுநோயையும் தடுக்கக்கூடிய ஒரே தடுப்பூசி இது.

எப்போது மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது

கடுமையான சிரோஸிஸ், திடீர் கல்லீரல் செயலிழப்பு, ஆரம்பகட்ட கல்லீரல் புற்றுநோய்… இந்நிலைகளில் மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும். வயிற்றில் திரும்பத் திரும்ப நீர் கோத்தல், குணமாகாத மஞ்சள் காமாலை, ரத்த வாந்தி, மனக்குழப்பம் மற்றும் தூக்கமின்மை, அடிக்கடி மருத்துவமனை அனுமதி – இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் மருந்துகளால் மட்டும் சரிசெய்ய முடியாது… மாற்று அறுவைசிகிச்சையே ஒரே நம்பிக்கை.

யாருக்கு மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம் என்பதை MELD Score என்ற மதிப்பீட்டின் மூலம் நிபுணர்கள் தீர்மானிப்பார்கள். நோய் திரும்பப்பெற முடியாத அளவு சேதத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், கட்டுப்படுத்தப்படாத தொற்று இல்லாமல் இருக்க வேண்டும், புற்றுநோய் இருந்தால் மாற்று அறுவைசிகிச்சை வரம்புக்குள் இருக்க வேண்டும். நோயாளி பெரிய அறுவைசிகிச்சைக்கு உடல்ரீதியாக தயாராக இருக்க வேண்டும், மது அல்லது போதை பொருட்களை உபயோகிக்கக் கூடாது. இவற்றோடு குடும்பத்தின் சமூக ஆதரவும் முக்கியமான தகுதி அளவுகோலாக பார்க்கப்படுகிறது.

உயிரோடு இருக்கும் குடும்பத்தினர் ஒரு பகுதி கல்லீரலை தானம் செய்யும் Living Donor Transplant-ல் காத்திருக்கும் நேரம் குறைவு, திட்டமிட்ட அறுவைசிகிச்சை, சிறந்த முடிவுகள் என பல சாதகங்கள் உண்டு. தானம் செய்பவர் மற்றும் பெறுபவர் இரு பக்கமும் கல்லீரல் இயல்பான அளவை மீட்டெடுக்கும். மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து பெறும் Cadaver Transplant-ல் காத்திருக்கும் நேரம் அதிகமாகலாம், கிடைப்பதும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

காவேரி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான   கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன… வாழ்வு தர விகிதம் 85 முதல் 90 சதவிகிதம்.

மாற்று அறுவைசிகிச்சைக்கு பிறகு

ICU தங்கல், சில வாரங்கள் மருத்துவமனை எனத் தொடங்கும் குணமடைதல் பயணத்தில் 2 முதல் 3 மாதங்களில் படிப்படியாக வலிமை திரும்பும். Immunosuppressants என்கிற மருந்துகளை வாழ்நாள் முழுவதும் தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியம். புதிய கல்லீரலை உடல் நிராகரிக்காமல் இருக்க இது மட்டுமே வழி. சரிவிகித உணவு, தொடர் உடற்பயிற்சி, மது மற்றும் புகையிலையை முழுமையாகத் தவிர்ப்பது, தொற்று தடுக்க சுகாதாரம் கடைப்பிடிப்பது… இவை கட்டாயம். சரியான கவனிப்பில் பெரும்பாலான நோயாளிகள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை பல ஆண்டுகள் அனுபவிக்கிறார்கள். மருந்து நடைமுறை, சரியான உணவு, தொடர் மருத்துவர் சந்திப்புகளில் குடும்பத்தினர் உதவுவதும், உணர்வு ஆதரவு தருவதும் குணமடைதலில் மிகப் பெரும் பங்காற்றுகின்றன. உங்கள் கல்லீரல் ஒவ்வொரு நாளும் உங்களுக்காக அயராது உழைக்கிறது. அறிகுறி வரும்வரை காத்திருக்காதீர்கள். வருடம் ஒருமுறை Liver Function Test மற்றும் Ultrasound செய்துகொள்வது… இது கல்லீரலுக்கு நீங்கள் செய்யும் சிறந்த முதலீடு. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிரோஸிஸை தடுக்கலாம், உயிரைக் காக்கலாம்.

கல்லீரல் நோய் பற்றிய தவறான எண்ணங்கள் 

மது குடிப்பவர்களுக்கு மட்டுமே கல்லீரல் நோய் வரும்: தவறு. NAFLD மது அருந்தாதவர்களுக்கும், குழந்தைகளுக்கும்கூட வருகிறது. நீரிழிவு, உடல் பருமன், வாழ்க்கைமுறை பழக்கங்களும் முக்கிய காரணங்கள்.

கல்லீரல் நோய் ஆரம்பத்திலேயே தெரியும்: தவறு. பெரும்பாலான கல்லீரல் நோய்கள் நோய் முற்றும் வரை எந்த அறிகுறியும் காட்டுவதில்லை.

கல்லீரல் குணமடையாது: தவறு. ஆரம்பத்திலேயே கண்டறிந்து காரணத்தை நீக்கினால் (எடை குறைத்தல், மது தவிர்த்தல்) கல்லீரல் மீண்டும் வளரும். ஆனால், சிரோஸிஸ் நிலையில் சேதம் நிரந்தரமாகிவிடும்.

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை ஆபத்தானது, வெற்றிடையாது: தவறு. அனுபவமிக்க மையங்களில் வெற்றி விகிதம் 80 முதல் 90 சதவிகிதம். இது நன்கு நிரூபிக்கப்பட்ட உயிர்காக்கும் சிகிச்சை.

இந்தியாவில் உறுப்பு தானம் நம்பகமில்லாதது: தவறு. National Organ and Tissue Transplant Organization (NOTTO) மூலம் இந்தியாவில் உறுப்பு தானம் வளர்ந்துவருகிறது; தென்னிந்தியாவில் குறிப்பாக விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. ஆனால், தானம் செய்பவர்கள் இன்னும் குறைவாக இருப்பதால் காத்திருப்பு நீளமாக உள்ளது.

கல்லீரல் தானம் செய்த பிறகு சாதாரண வாழ்க்கை வாழ முடியாது: தவறு. Living Donor Transplant-ல் ஒரு பகுதி மட்டுமே தேவைப்படுகிறது. தானம் செய்பவரின் கல்லீரல் கிட்டத்தட்ட இயல்பான அளவுக்கு மீண்டும் வளரும்; அவர் ஆரோக்கியமான இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கலாம்.

 

டாக்டர் சுவாமிநாதன் சம்பந்தம்
MBBS, MS (General Surgery), MRCS (Edinburgh)
Abdominal Transplant Fellowship (USA)
சீனியர் கன்சல்டன்ட் & லீட்மல்டி ஆர்கன் டிரான்ஸ்பிளான்ட் (கல்லீரல், சிறுநீரகம், கணையம்)
காவேரி மருத்துவமனைசென்னை வடபழனி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011