இன்றைய பழக்கம்… நாளைய மூளை!

இன்றைய பழக்கம்… நாளைய மூளை!
July 15 10:15 2026 Print This Article

மூளை ஆரோக்கியம் என்பது வெறும் நோயின்மை அல்லசிந்திக்கவும் உணரவும் இயங்கவும், கற்கவும் வாழ்நாள் முழுவதும் உதவும் அடித்தளம். இது பல ஆண்டுகளாக உருவாவது. இளமையிலும் நடுவயதிலும் நாம் கடைப்பிடிக்கும் பழக்கங்களே பிற்கால மூளை வலிமையைத் தீர்மானிக்கின்றன.

பக்கவாதம் வந்தால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். அறிகுறிகளை விரைவில் அறிந்து உடனடியாகச் செயல்படுவதே உயிரையும் இயல்பு வாழ்வையும் காக்கும்.

நம் உடலின் மிக மதிப்புமிக்க சொத்து மூளை. ஒவ்வோர் எண்ணத்தையும் அசைவையும் உணர்வையும் இயக்கும் கண்ணுக்குத் தெரியாத இயந்திரம் இது. ஆனால், பெரும்பாலானோர், ஒரு பெரிய பிரச்னை வரும்வரை மூளையைப் பற்றி யோசிப்பதில்லை. மூளை ஆரோக்கியம் என்பது ‘நோயில்லாமல் இருப்பது’ மட்டும் அல்ல. நினைவாற்றல், கற்றல், சிந்தனை போன்ற அறிவுசார் திறன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன், சமநிலையும் இயக்கமும் கொண்ட உடல் செயல்பாடு, உறவுகளைப் பேணும் சமூகத் திறன் என நான்கு தளங்களிலும் சிறப்பாகச் செயல்படுவதே உண்மையான மூளை ஆரோக்கியம்.

இந்த ஆரோக்கியம் பல பத்தாண்டுகளாகக் கட்டியெழுப்பப்படுவது. மூளைக்கு வாழ்நாள் முழுவதும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தன்மை உண்டு; இதை நரம்பு நெகிழ்வுத்திறன் (நியூரோபிளாஸ்டிசிட்டி) என்கிறோம். நம் அன்றாடப் பழக்கங்களே இந்தத் திறனை வலுப்படுத்தவோ பலவீனப்படுத்தவோ செய்கின்றன.

பக்கவாதம், மறதி நோய் போன்ற பல நரம்பியல் நோய்கள் நீண்ட அமைதியான கட்டத்தைக் கொண்டவை. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், தரமற்ற தூக்கம் ஆகியவை எந்த அறிகுறியும் இல்லாமலேயே ஆண்டுக்கணக்கில் மூளையைச் சேதப்படுத்துகின்றன. அதனால்தான், ஆரோக்கியமான இளைஞர்களும்கூட இன்றே மூளையைப் பற்றிக் கவனம் செலுத்த வேண்டும்.

பக்கவாதத்தில் ‘நேரமே மூளை’ என்பது ஓர் உண்மை. சிகிச்சை பெறாமல் கடக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் லட்சக்கணக்கான மூளை செல்கள் இறக்கின்றன. எனவே, அறிகுறிகளை விரைவில் அடையாளம் காண்பது அவசியம். பக்கவாத சிகிச்சைக்குத் தயாராக உள்ள மருத்துவமனையை 4.5 மணி நேரத்துக்குள் அடைந்தால், ரத்தக்கட்டியைக் கரைக்கும் ஊசி மருந்து (த்ராம்போலிசிஸ்) கொடுக்க முடியும். பெரிய ரத்தக்குழாய் அடைப்பு இருந்தால், 24 மணி நேரத்துக்குள் கருவி மூலம் கட்டியை அகற்றும் சிகிச்சை (த்ராம்பெக்டமி) செய்யலாம். இந்தச் சரியான நேர சிகிச்சைதான், முழு குணம் பெறுவதற்கும் வாழ்நாள் ஊனத்துக்கும் இடையிலான வேறுபாடு.

Also Read: Types of Strokes

சில அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியம் செய்யக் கூடாது. உடலின் ஒரு பக்கம் திடீர் பலவீனம் அல்லது மரத்துப்போதல், பேசுவதிலோ புரிந்துகொள்வதிலோ சிரமம், திடீர் பார்வை இழப்பு, புதிதாக வரும் வலிப்பு, தொடர்ந்து அதிகரிக்கும் தலைவலி, நடுக்கம் அல்லது இயக்கம் மந்தமாதல், அன்றாட வாழ்வைப் பாதிக்கும் நினைவாற்றல் குறைபாடு, தொடர் தலைச்சுற்றல் அல்லது அடிக்கடி விழுதல் ஆகியவை இதில் அடங்கும். அறிகுறி திடீரெனவோ, கடுமையாகவோ, படிப்படியாக மோசமாகவோ இருந்தால் உடனே நரம்பியல் மருத்துவரை அணுகுங்கள்.

சில நோய்களைச் சுற்றி நிலவும் தவறான எண்ணங்களையும் களைய வேண்டும். வலிப்பு நோய் ஒரு நரம்பியல் நிலையே தவிர மனநோயோ சாபமோ அல்ல. பெரும்பாலானோர் மருந்தால் வலிப்பைச் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும். பார்கின்சன் நோய் வயதானதன் இயல்பான பகுதி அல்ல… இதற்கு முன்கூட்டிய சிகிச்சை இயக்கத்தையும் சுதந்திரத்தையும் மேம்படுத்தும். கடுமையான மறதியும் தவிர்க்க முடியாதது அல்ல; சில காரணங்களுக்குச் சிகிச்சை உண்டு, முன்கூட்டிய கண்டறிதல் நோயின் வேகத்தைக் குறைக்கும்.

சிகிச்சையைவிடத் தடுப்பே சிறந்தது. வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிட மிதமான உடற்பயிற்சி, தினமும் ஏழு முதல் ஒன்பது மணி நேரத் தரமான தூக்கம், படுக்கைக்கு முன் திரைப் பயன்பாட்டைக் குறைத்தல், பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், கொட்டைவகைகள் நிறைந்த உணவு, ரத்த அழுத்தம், சர்க்கரை கொலஸ்டிரால் ஆகியவற்றைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்துதல், படித்தல் மற்றும் உறவுகளால் மனதையும் சமூக வாழ்வையும் சுறுசுறுப்பாக வைத்திருத்தல், புகைப்பழக்கத்தைத் தவிர்த்து மதுவைக் கட்டுப்படுத்துதல், தியானம், யோகா மூலம் மனஅழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை மூளையைப் பாதுகாக்கும்.

காவேரி மருத்துவமனையில் 24 மணி நேர பக்கவாத அவசர சிகிச்சை, நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு, 3T எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன், ஈஈஜி, பார்கின்சன், வலிப்பு, மறதி நோய்க்கான தனிச் சிறப்புப் பிரிவுகள், த்ராம்பெக்டமி மற்றும் நரம்பியல் மறுவாழ்வு வசதிகள் உள்ளன.

மூளை உங்கள் விலைமதிப்பற்ற சொத்து; அதை நாளை அல்ல… இன்றே பாதுகாக்கத் தொடங்குங்கள்!

 

‘BE FAST’ — பக்கவாதத்தை நொடியில் அறியுங்கள்

பக்கவாத அறிகுறிகளை விரைவில் அடையாளம் காண ‘BE FAST’ என்பதை நினைவில் வையுங்கள்.
B (Balance): திடீர் சமநிலை இழப்பு அல்லது நடப்பதில் சிரமம்
E (Eyes): திடீர் பார்வை இழப்பு அல்லது மங்கல்
F (Face): முகத்தின் ஒரு பக்கம் சாய்தல்
A (Arm): கை அல்லது காலில் திடீர் பலவீனம்
S (Speech): பேச்சுத் தடைபடுதல் அல்லது புரியாமை
T (Time): நேரம் வீணாக்காமல் உடனடியாக அவசர மருத்துவ உதவியை அழைக்கவும்.

அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தோன்றினாலும் காத்திராதீர்கள். உடனடியாகச் செயல்படும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் மூளை செல்களைக் காக்கும்.

 

டாக்டர் சக்கேரா பிரியங்கா, MD (General Medicine),DM (Neurology)
நரம்பியல் நிபுணர்
காவேரி மருத்துவமனைசென்னை

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011