டைப் 3 நீரிழிவு அறியப்படாத அபாயம்!

டைப் 3 நீரிழிவு அறியப்படாத அபாயம்!
January 08 12:20 2026 Print This Article

டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு அல்சைமர் நோய் வாய்ப்பு 50-100% அதிகம். மூளையில் இன்சுலின் எதிர்ப்பை ‘டைப் 3 நீரிழிவு’ என்கிறோம்.

நீரிழிவு நோய் என்றால் டைப் 1, டைப் 2 மட்டுமே என்று நினைக்கிறோமா? இல்லை! ‘டைப் 3 நீரிழிவு’ என்கிற புதிய கருத்து இப்போது மருத்துவ உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மூளையில் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்புதான் இது… அல்சைமர் நோயுடன் நேரடி தொடர்பு கொண்டது.

டைப் 3 நீரிழிவு என்றால் என்ன

டைப் 1 நீரிழிவில் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதில்லை. டைப் 2-ல் உடல் செல்கள் இன்சுலினுக்கு எதிர்ப்பு காட்டுகின்றன. டைப் 3-ல் குறிப்பாக மூளைச் செல்கள் மட்டும் இன்சுலினுக்குப் பதிலளிப்பதை நிறுத்துகின்றன. மூளையின் ஆற்றல், நினைவாற்றல், கற்றல் திறனுக்கு இன்சுலின் மிக அவசியம். மூளைச் செல்கள் இன்சுலினுக்கு எதிர்ப்பு காட்டும்போது, அவை பட்டினி கிடக்கத் தொடங்குகின்றன. விளைவு: மெதுவான சிந்தனை, மறதி, நரம்பு சேதம், இறுதியில் அல்சைமர் நோய்.

எச்சரிக்கை அறிகுறிகள் 

ஆரம்பகால அறிகுறிகள் மிகவும் நுட்பமானவை: சமீபத்தில் நடந்த விஷயங்களை மறத்தல், பொருட்களைத் தொலைத்தல், கவனம் செலுத்துவதில் சிரமம், எளிதில் எரிச்சலடைதல், தூக்கப் பிரச்னைகள், மனரீதியாக ‘மந்தமாக’ உணர்தல். பலர் ‘வயசானால் இப்படித்தான்’ என்று நினைத்து இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள். இது பெரிய தவறு.

நீரிழிவுஅல்சைமர் தொடர்பு 

டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு அல்சைமர் அபாயம் 50 முதல் 100 சதவிகிதம் அதிகம் என ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. காரணங்கள்: அதிக ரத்த சர்க்கரைக் காரணமாக நரம்பு செல்களுக்கு நேரடி சேதம் ஏற்பட்டு, நாள்பட்ட வீக்கம் மூளையைப் பாதிக்கிறது, இன்சுலின் எதிர்ப்பு உடலிலிருந்து மூளைக்கும் பரவுகிறது, ரத்த நாள சேதம் காரணமாக மூளைக்கு ஆக்சிஜன் குறைகிறது.

தடுப்பு முறைகள் 

உணவு: பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள் (கேழ்வரகு, தினை), நட்ஸ் (பாதாம், வால்நட்), ஆளி விதைகள், மீன், மெலிந்த புரதம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். சர்க்கரை, வெள்ளை அரிசி, மைதா, பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்கவும்.

உடற்பயிற்சி: தினமும் 30-45 நிமிடங்கள் வேகமான நடை, ஜாகிங், நீச்சல் அல்லது சைக்கிளிங். உடற்பயிற்சி இன்சுலின் உணர்திறனை 30% வரை அதிகரிக்கிறது. மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, BDNF என்ற ரசாயனம் சுரக்கிறது. இது புதிய நரம்பு செல்கள் உருவாக உதவுகிறது.

தூக்கம்: 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூக்கத்தின்போது மூளை, நச்சுப் புரதங்களை அகற்றுகிறது. ஒரே ஓர் இரவு தூக்கமின்மை இன்சுலின் எதிர்ப்பை 30% அதிகரிக்கும்! தினமும் ஒரே நேரத்தில் உறங்குதல், படுக்கைக்கு முன் மொபைல் தவிர்த்தல், குளிர்ச்சியான அறை முக்கியம்.

மன அழுத்தம்: நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோனை அதிகரித்து இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்குகிறது. தியானம், யோகா, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், பொழுதுபோக்குகள் போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும்.

நோயறிதலும் சிகிச்சையும் 

முழுமையான மதிப்பீடு அவசியம். ரத்த சர்க்கரை, HbA1c, கொழுப்புப் பரிசோதனை, வைட்டமின் B12, D3, ஃபோலிக் அமிலம் அளவுகள், எம்.ஆர்.ஐ. மூளை ஸ்கேன், அறிவாற்றல் திரையிடல் (MMSE, MoCA), நரம்பியல் மதிப்பீடு.

சிகிச்சையில் நீரிழிவுக் கட்டுப்பாடு (மெட்ஃபார்மின், SGLT-2 inhibitors), தனிப்பயன் உணவுத் திட்டம், உடற்பயிற்சி அட்டவணை, தூக்க மேலாண்மை, அறிவாற்றல் பயிற்சி, குடும்ப ஆலோசனை ஆகியவை அடங்கும். பல துறை வல்லுநர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்.

நம்பிக்கை செய்தி 

டைப் 3 நீரிழிவு தடுக்கக்கூடியது, சிகிச்சையளிக்கக் கூடியது. ஆரம்ப கட்ட கண்டறிதல் மிக முக்கியம். நீரிழிவை நன்றாகக் கட்டுப்படுத்துதல், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, வழக்கமான பரிசோதனைகள் மூலம் உங்கள் மூளையைப் பாதுகாக்க முடியும். அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

 

உங்கள் மூளை உங்கள் கைகளில்!

மூன்று வகை நீரிழிவு
• டைப் 1: கணையம் இன்சுலின் உற்பத்தி செய்வதில்லை
• டைப் 2: உடல் செல்கள் இன்சுலினுக்கு எதிர்ப்பு
• டைப் 3: மூளைச் செல்கள் இன்சுலினுக்கு எதிர்ப்பு – அல்சைமர்

மூளைப் பாதுகாப்புக்கான ஐந்து தூண்கள்
• சர்க்கரைக் கட்டுப்பாடு – HbA1c < 7%
• ஆரோக்கிய உணவு – காய்கறிகள், முழு தானியம், ஒமேகா-3
• தினசரி உடற்பயிற்சி – 30-45 நிமிடங்கள்
• நல்ல தூக்கம் – 7-8 மணி நேரம்
• மன அழுத்த மேலாண்மை – தியானம், யோகா

எச்சரிக்கை அறிகுறிகள்
• தொடர் மறதி, பொருட்களைத் தொலைத்தல்
• கவனச் சிதறல், சிந்தனை மந்தம்
• எரிச்சல், கவலை, தூக்கப் பிரச்னை
• திசை திருப்பம், தினசரி பணிகளில் சிரமம்

முக்கிய புள்ளிவிவரங்கள்
• டைப் 2 நீரிழிவு – அல்சைமர் ஆபத்து 50-100%
• தூக்கம் குறைவு – இன்சுலின் எதிர்ப்பு 30%
• உடற்பயிற்சி – இன்சுலின் உணர்திறன் 30%
• ஆரம்ப கட்ட சிகிச்சை – மூளை பாதுகாப்பு சாத்தியம்!

 

Dr. ஆர். சண்முகசுந்தரம், MD (Gen. Med)
சீனியர் கன்சல்டன்ட்பொது மருத்துவம் மற்றும்
நீரிழிவு சிகிச்சைகாவேரி மருத்துவமனை, சேலம்

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011