தாத்தா, பாட்டிக்கு வேண்டும் தனிக் கவனிப்பு!

தாத்தா, பாட்டிக்கு வேண்டும் தனிக் கவனிப்பு!
November 18 07:55 2025 Print This Article

60 வயதுக்கு மேல் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் வித்தியாசமானவை. சாதாரண மருத்துவத்தைவிட சிறப்பு கவனம் தேவைப்படும் முதியோர் நல மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவது அவசியம்.

ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நம் உடலும் அதற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. 60 வயதைக் கடந்தவுடன் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல. அவற்றுக்கு சிறப்பு மருத்துவக் கவனம் தேவைப்படுகிறது. இதுதான் ஜெரியாட்ரிக்ஸ் எனப்படும் வயோதிக மருத்துவத்தின் அடிப்படை.

மறைந்திருக்கும் நோய்கள் 

‘காலையில் எழுந்திருக்கும்போது தலைச்சுற்றல், நடக்கும்போது சமநிலை இழப்பு, வெளியே சென்று வீடு திரும்பும் வழி மறந்துபோதல்’ – இப்படிப்பட்ட அறிகுறிகளை வயதானதால் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் என்று நாம் நினைத்துவிடுகிறோம். உண்மையில் இவை அனைத்துமே குறிப்பிட்ட நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம்.

60 வயதுக்கு மேல் நம் கண்களுக்குத் தெரியாத பல நோய்கள் உடலில் ஆரம்பமாகிவிடுகின்றன. இவற்றைக் கண்டுபிடிக்க சாதாரண மருத்துவப் பரிசோதனைகள் போதாது. சிறப்பான மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன. குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் பாராசிட்டமால் கொடுப்போம். ஆனால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதே நோய்க்கு வேறுவிதமான மருந்தும், வேறுவிதமான அளவும் தேவைப்படும்.

டி3 வைட்டமின் குறைபாடு 

அனைத்துச் சத்துக்களும் முக்கியம்தான். ஆனால், வயோதிகர்களுக்கு மிக முக்கியமானது வைட்டமின் டி3. இளமையில் வெளியே சென்று வருவோம், வேலை செய்வோம், சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்போம். இதனால் உடலில் டி3 சுரப்பு சரியாக இருக்கும். வயதாகும்போது வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் இருக்கிறோம். ‘வெளியே ஏன் போக வேண்டும்? சோர்வாக இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே நடந்துவிடுகிறேன்’ என்று நினைக்கிறோம்.

இதனால் டி3 குறைபாடு ஏற்படுகிறது. மேலும் உணவிலும் பல தவிர்ப்புகள் செய்கிறோம். ‘சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை ஏறும், முட்டை சாப்பிட்டால் கொழுப்பு ஏறும், பால் குடித்தால் வயிற்றுப் பிரச்னை’ என்று பல காரணங்கள் சொல்லி டி3 நிறைந்த உணவுகளையே தவிர்த்துவிடுகிறோம். இதனால் எலும்புத் தேய்மானம், பலவீனம், எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

புரதச்சத்து அவசியம் 

நம் உடலின் எல்லா செல்களும் தலை முதல் கால் வரை புரதத்தால் ஆனவைதாம். உடலைக் கட்டியெழுப்பும் முக்கிய சத்து புரதம். வயோதிகர்களுக்கு இது மிக அவசியம். ஆனால், பல்லில் பிரச்னை இருப்பதால் கடினமான உணவுகளை மெல்ல முடியாது. அதனால் சாம்பார் சாதம், தயிர் சாதம், கஞ்சி போன்றவற்றையே சாப்பிடுகிறார்கள். இவற்றில் மாவுச்சத்து மட்டுமே இருக்கும், புரதம் இருக்காது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து பிரச்னைகள் அதிகரிக்கின்றன.

பாலிபார்மசி பிரச்னை 

வயோதிகர்கள் ஒவ்வொரு பிரச்னைக்கும் தனித்தனியாக மருத்துவரிடம் செல்கிறார்கள். ஒவ்வொரு மருத்துவரும் தங்கள் துறைக்கான மருந்துகளைக் கொடுக்கிறார்கள். இதனால் ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கிறது. இதுதான் பாலிபார்மசி.

அதிக மருந்துகள் சாப்பிடும்போது மருந்துகளுக்குள் எதிர்வினை ஏற்படும். ஒரு மருந்தின் பக்கவிளைவுக்கு இன்னொரு மருந்து கொடுக்கப்படும். இப்படி மருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். இதனால் வாழ்க்கைத் தரம் குறையும்.

தீர்வு என்ன

60 வயதைக் கடந்தவுடன் ஆண்டுக்கு ஒருமுறை முழுமையான ஜெரியாட்ரிக் ஸ்கிரீனிங் செய்துகொள்வது நல்லது. இதில் சாதாரண ரத்தப் பரிசோதனைகளுடன், மருந்துகள் மதிப்பீடு, ஊட்டச்சத்து மதிப்பீடு, உடற்பயிற்சித் திட்டம் போன்றவை அடங்கும்.

எளிமையான நடைப்பயிற்சியே போதும். நடைப்பயிற்சி எல்லாவற்றையும் சரிசெய்யும். யோகா, தாய்ச்சி போன்ற நெகிழ்வுப் பயிற்சிகளும் நல்லது. வாரத்துக்கு மூன்று நாட்கள் செய்தாலே போதும்.

முக்கியமாக, ஜெரியாட்ரிஷியன் என்ற சிறப்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். அவர்கள் தலை முதல் கால் வரை முழுமையாகப் பரிசோதித்து, எல்லா பிரச்னைகளையும் ஒரே இடத்தில் தீர்த்துவைப்பார்கள். தேவையற்ற மருந்துகளைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவார்கள்.

வயோதிகம் என்பது நோய் அல்ல, வாழ்க்கையின் ஒரு பகுதி. சரியான கவனிப்பால் இந்தப் பருவத்தையும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்கலாம்!

ஜெரியாட்ரிக் எமர்ஜென்சி அறிகுறிகள்  

  • அடிக்கடி விழுதல் – சமநிலை இழப்பு, தசை பலவீனம் அல்லது மருந்துப் பக்கவிளைவு
  • திடீர் குழப்பம் – மூளையில் ஆக்ஸிஜன் குறைபாடு அல்லது தொற்று நோய்
  • சிறுநீர் கட்டுப்பாடு இழப்பு – சிறுநீரகப் பிரச்னை அல்லது நரம்பு மண்டலப் பாதிப்பு
  • உணவு உட்கொள்ளல் குறைதல் – மனச்சோர்வு அல்லது செரிமானப் பிரச்னை
  • தூக்கமின்மை – வலி, மருந்துகள் அல்லது மன அழுத்தம்

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஜெரியாட்ரிஷியனை (முதியோர் நல மருத்துவர்) அணுகுங்கள்!

Dr. எஸ். லாவண்யா
முதியோர் நல மருத்துவர்
காவேரி மருத்துவமனை
திருச்சி – கண்டோன்மென்ட்

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011