முகம் ஒரு பக்கம் கோணுகிறது, கை தளர்கிறது, பேச்சு குழறுகிறது. “கொஞ்சம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்” என்று குடும்பம் காத்திருக்கும் அந்த நேரத்தில்தான் மூளை அமைதியாகச் சேதமடைந்துகொண்டிருக்கிறது.
பக்கவாதம் (Stroke) சத்தமில்லாமல் வருகிறது; ஆனால், ஒவ்வொரு நிமிட தாமதமும் மூளையின் லட்சக்கணக்கான செல்களைப் பறிக்கிறது. அறிகுறிகளை உடனே அடையாளம் கண்டு, நேராக மருத்துவமனைக்கு வருவதே உயிரையும் உடல் இயக்கத்தையும் காக்கும் வழி என்கிறார் காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் அரவிந்த் கௌதம் வி.
‘பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் தொடங்கும்’ என்கிறார் டாக்டர் அரவிந்த் கௌதம். அதை அடையாளம் காண அவர் தரும் எளிய சூத்திரம்:
B, சமநிலை (Balance): திடீர்த் தலைச்சுற்றல், தள்ளாட்டம், சரியாக நடக்க முடியாமை.
E, கண்கள் (Eyes): திடீரென மங்கலான பார்வை, இரட்டைப் பார்வை, பார்வை இழப்பு.
F, முகம் (Face): சிரிக்கச் சொல்லுங்கள்; முகம் ஒரு பக்கம் கோணினால் எச்சரிக்கை.
A, கைகள் (Arms): இரு கைகளையும் உயர்த்தச் சொல்லுங்கள்; ஒரு கை கீழே இறங்கினால் அல்லது மரத்துப்போனால் எச்சரிக்கை.
S, பேச்சு (Speech): ஒரு சிறிய வாக்கியத்தைத் திரும்பச் சொல்லச் சொல்லுங்கள்; குழறினால் எச்சரிக்கை.
T, நேரம் (Time): இவற்றில் எது தென்பட்டாலும், உடனே அவசர உதவியை அழையுங்கள்.
திடீர்க் குழப்பம், கடுமையான தலைவலி, விழுங்குவதில் சிரமம் ஆகியவையும் எச்சரிக்கை அறிகுறிகள். ‘அறிகுறிகள் சில நிமிடங்களில் மறைந்தாலும் அலட்சியம் செய்யாதீர்கள். அது ‘சிறு பக்கவாதம்’ (TIA) ஆக இருக்கலாம்; பெரிய பக்கவாதத்தின் முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம்’ என்கிறார் அவர்.
‘ரத்தக் குழாயை உறைவு அடைக்கும்போது, மூளைச் செல்களுக்கு ஆக்சிஜனும் குளுக்கோஸும் கிடைப்பதில்லை. சில செல்கள் உடனே நிரந்தரமாகச் சேதமடைகின்றன; மற்றவை சிறிது நேரம் உயிருடன் இருக்கும். ரத்த ஓட்டத்தை விரைவாக மீட்டால் அவற்றைக் காப்பாற்ற முடியும்’ என்று விளக்குகிறார் டாக்டர் அரவிந்த் கௌதம். பெரிய ரத்தக் குழாய் அடைப்பால் வரும் பக்கவாதத்தில், சிகிச்சை இல்லாமல் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 19 லட்சம் நரம்பு செல்கள் இழக்கப்படுவதாகவும், ஒரு மணி நேரத்தில் இது சுமார் 12 கோடி செல்களாகி, மூளைக்கு ஏறக்குறைய 3.6 ஆண்டு மூப்பைத் தருவதாகவும் ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. இவை சராசரி மதிப்பீடுகள் மட்டுமே.
மருத்துவமனையில் ஸ்கேன் மூலம் பக்கவாதம் உறைவால் வந்ததா, ரத்தக்கசிவால் வந்ததா என்று கண்டறிந்து, பொருத்தமானவர்களுக்கு உறைவைக் கரைக்கும் மருந்து (Thrombolysis) அல்லது உறைவை நேரடியாக அகற்றும் சிகிச்சை (Mechanical Thrombectomy) அளிக்க முடியும். ‘சீக்கிரம் சிகிச்சை தொடங்கினால், பேச்சு, நடமாட்டம், சுயமாக வாழும் திறனைக் காக்க அதிக வாய்ப்பு’ என்கிறார் அவர்.
‘சரியாகிவிடுமா என்று காத்திருப்பது, காலை வரை தள்ளிப்போடுவது, முதலில் அருகிலுள்ள சிறு கிளினிக்குக்குச் செல்வது ஆகியவைதான் மிக அதிக விலை தரும் தவறுகள்’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் அரவிந்த் கௌதம். பக்கவாதம் விழுங்கும் திறனையும் பாதிக்கலாம் என்பதால், சாப்பாடோ, தண்ணீரோ, மாத்திரையோ, வீட்டு வைத்தியமோ வாய் வழியாகக் கொடுக்கக் கூடாது. ‘உணவோ நீரோ மூச்சுக்குழாய்க்குள் சென்று, மூச்சுத்திணறல் அல்லது நிமோனியா ஏற்படலாம்’ என்கிறார் அவர்.
‘பக்கவாதம் வயதானவர்களின் நோய் மட்டுமல்ல; இளைஞர்களுக்கும் வரலாம்’ என்கிறார் அவர். வயது, குடும்ப வரலாறு ஆகியவற்றை மாற்ற முடியாது. ஆனால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பழக்கம், அதிகக் கொழுப்பு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, அதிக மது, சீரற்ற இதயத் துடிப்பு (Atrial Fibrillation) ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியும். ‘இவற்றில் உயர் ரத்த அழுத்தமே கட்டுப்படுத்தக்கூடிய மிக முக்கியமான காரணி’ என்கிறார் டாக்டர் அரவிந்த் கௌதம்.
அவரது மூன்று அறிவுரைகள்: ரத்த அழுத்தத்தை அறிந்து கட்டுப்படுத்துங்கள்; புகையிலையையும் அளவுக்கு மீறிய மதுவையும் தவிருங்கள்; தினமும் நடந்து, சர்க்கரை, கொழுப்பு, எடையைக் கட்டுக்குள் வையுங்கள்.
108-ஐ அழைத்து, ‘இவருக்குப் பக்கவாதம் என்று நினைக்கிறேன்‘ என்று தெளிவாகச் சொல்லுங்கள். அறிகுறி தொடங்கிய நேரத்தை, அல்லது கடைசியாக இயல்பாகப் பார்த்த நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். சி.டி. ஸ்கேன், பக்கவாதச் சிகிச்சை வசதி உள்ள மருத்துவமனைக்கு நேராகச் செல்லுங்கள். நேரா வாங்க, நேரத்துக்கு வாங்க!
டாக்டர் அரவிந்த் கௌதம் வி MBBS, DNB (General Medicine), DM (Neurology), MRCP (SCE) Neurology (UK), Fellowship in Stroke and Interventional Neurology கன்சல்டன்ட் நரம்பியல் நிபுணர் மற்றும் பக்கவாத இன்டர்வென்ஷனல் நரம்பியல் சிறப்பு மருத்துவர் காவேரி மருத்துவமனை –திருநெல்வேலி
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011